அலட்சியம் என்றும் எதையும் சாதித்ததில்லை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibtJaSbQDO0XHNYdJnbpehculDGigI9cA35tzon4mjsnp_4fRA3INHOF11VyuXFU9G7AJ9FNn9NR0K78Pn3lRuhZlWzatObnpPxeG75k_ao5aZcc9TdTIJ_XgBMzszlTgnSHVSGBYaa0Da/s1600/indif.jpg)
அலட்சியம் எதையும் முக்கியம் என்று நினைப்பதில்லை. புதியதாக முயற்சிகள் எடுப்பதில்லை. எதிலும் சீரிய கவனம் வைப்பதில்லை. எண்ணங்களையும், செயல்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை. திட்டமிடுவதிலை. கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராவதில்லை. குறிக்கோள் வைத்துக் கொள்வதில்லை. உற்சாகம் கொள்வதில்லை. ஆனால் சாதனைகளும் சரித்திரங்களும் இதற்கு எதிர்மறையான குணங்களினாலாயே சாத்தியமாகின்றன.
ஒரு வயல்வெளியைப் பாருங்கள். உழுது, பயிரிட்டு, கதிர்கள் அரும்பி நிற்கும் அந்த அழகுக் காட்சி ஒரு லட்சியத்தின் விளைவு. அதில் ஒரு திட்டமுண்டு. காலம் பார்த்து முறைப்படி செய்த உழைப்புண்டு. அதில் ஒரு பயனுண்டு. அந்த வயல்நிலம் இலட்சியத்தின் விளைவு.
முள்களும், பார்த்தீனியமும், சகட்டுமேனிக்கு வளர்ந்து ப்ளாஸ்டிக் காகிதங்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் ஒரு கண்காணிக்கப்படாத நிலத்தைப் பாருங்கள். அதில் குறிக்கோளும் இல்லை. எந்த மனித முயற்சியும் இல்லை. எல்லாம் தானாக வளர்ந்தது. தானாக வந்து சிக்கியது. அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பாழ்நிலம் அலட்சியத்தின் விளைவு.
எது எக்கேடோ கெட்டுப் போனால் எனக்கென்ன என்பது அலட்சியம். தானாக எது நடந்தாலும் சரி என்று இருப்பது அலட்சியம். முக்கியமான முடிவுகளைத் தானாக எடுக்காமல் இருப்பது அலட்சியம். போகின்ற வழி எது என்று அறியாதிருப்பது அலட்சியம். தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு எடுக்காமல் இருப்பது அலட்சியம்.
எதையும் லட்சியம் செய்யாமல் வாழ்பவர்கள் யாரும் லட்சியம் செய்யாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அறியாமலேயே, வாழ்ந்த சுவடு தெரியாமலேயே மறைந்து போவார்கள். வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களில் காட்டும் அலட்சியத்திற்கு மனிதர்கள் தரும் விலை மிக அதிகம்.
'அன்னியன்' திரைப்படத்தில் சமூக அலட்சியம் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதாநாயகன் அலட்சியக்காரர்கள் ஒவ்வொருவரையும் கருட புராணத்தில் சொல்லியிருக்கும் சித்திரவதைக்கு உள்ளாக்குவான். அது கற்பனை. அது போல மனிதன் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விட்டால் வேறு ஒரு நபர் வந்து தண்டிப்பதில்லை. மோசமான விளைவுகளை சந்தித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். எனவே வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
- என்.கணேசன்