தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, August 22, 2022
யாரோ ஒருவன்? 99
Thursday, August 18, 2022
சாணக்கியன் 18
வரப் போகின்ற ஆபத்தை உணராமல் தட்சசீல நகர வாயிற்கதவு அதிகாலை எப்போதும் போல திறக்கப்பட்டது. வாயிற்கதவின் மேல் மாடப்பகுதியில் இரண்டு வீரர்கள் தங்கள் வழக்கமான இடங்களில் நின்று கொண்டிருந்த போதும் அவர்களும் எந்த ஆபத்தையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்று எப்போதும் போல ஒரு நாள் என்ற எண்ணமே அவர்களிடமும், கீழே வாயிற்பகுதியில் நின்று கொண்டிருந்த காவல்வீரர்களுக்கும் இருந்தது. தட்சசீல நகரத்தின் உள்ளே நுழைய முந்தைய இரவிலிருந்து காத்துக் கொண்டிருந்தோரும், நகரத்தின் வெளியே செல்ல அதிகாலைக்கு முன்பே வந்து காத்திருந்தோரும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் ஆரம்பிக்க வாயிற்காவலர்களின் கவனம் எல்லாம் பயணிகளின் மீதே தங்கியிருந்தது. நகரின் தலைமைக் காவல் அதிகாரி குதிரை மீதமர்ந்து தன் கூர்மையான பார்வையைப் பயணிகள் மீது வைத்திருந்தான். அவர்கள் எல்லோருக்கும் அது வழக்கமான ஒரு சாதாரணமான நாளாய் தான் ஆரம்பித்தது.
அப்போது தான் மூன்று மாட்டு வண்டிகள்
நகரத்தின் உள்ளேயிருந்து வெளியேற வாயிற்கதவை நோக்கி வந்து கொண்டிருந்தன. பொதுவாக
உள்ளே இருந்து வெளியே போவோர் மீது காவலர்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. வருபவர்கள்
மீதே அவர்கள் கவனம் மிகுதியாக இருக்கும். புதியவர்களாக இருந்தால்
அவர்கள் யார் என்று அறிந்து கொள்ளும் வேலை தலைமைக் காவல் அதிகாரிக்கு உண்டு. வருபவர்கள்
சரியான அடையாளச்சான்று வைத்திருக்கிறார்களா என்று சோதித்து அவர்களால் நகருக்கு எந்த
ஆபத்துமில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய வேலை அவனுடையது. அதனால்
அவனும் உள்ளேயிருந்து வெளியேற வந்து கொண்டிருக்கும் மூன்று மாட்டு வண்டிகள் குறித்து பெரிய அக்கறை காட்டவில்லை. மற்ற காவலர்களும்
வெளியே செல்வதற்காக வந்து கொண்டிருக்கும் அந்த மாட்டு வண்டிகள் மீது சந்தேகம்
கொள்ள எந்தக் காரணமும் இருக்கவில்லை.
வாயிற்கதவை எட்டுவதற்கு சுமார்
120 அடிகள் இருக்கும் போது மாட்டு வண்டிகள் பின்னால் வருபவர்களுக்கு வழிவிட்டு ஓரமாக
நின்றன. மூன்றாவதாக இருந்த மாட்டு வண்டியிலிருந்து ஒருவன் அவசரமாக
இறங்கி வந்த வழியே ஓடிச் சென்றான். முதல் மாட்டு வண்டியை
ஓட்டி வந்தவன் கத்தினான். “சீக்கிரம் வா. அதிக நேரம் காத்திருக்க
முடியாது.”
அந்த ஓடிப் போனவனுக்காக மூன்று மாட்டு
வண்டிகளும் காத்துக் கொண்டிருப்பது போல் பார்வையாளர்களுக்குத் தோன்றுவது போலத் தான்
காவலர்களுக்கும் தோன்றியது. சிறிது நேரத்தில் வேறு சில வணிகர்கள் நகரை
விட்டு வெளியேற வருபவர்கள் போல் வந்தார்கள்.
மாட்டு வண்டிகள் அருகே வந்ததும் அவர்கள் அந்த வண்டியில் இருப்பவர்களுடன்
எதோ பேசிக் கொண்டு நின்றார்கள். இதிலும்
காவலர்கள் சந்தேகப்படக் காரணமிருக்கவில்லை.
திடீரென்று தொலைவில் ஒரு படை வந்து கொண்டிருப்பதை வாயிற் கதவின்
மேல் மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன் கவனித்தான். அவனுக்குத் தன் கண்களை
ஒரு கணம் நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும்
பார்த்தவன் பிறகு கத்தினான். “ஆபத்து. ஒரு
படை நம் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது”
மற்ற காவலர்களும்,
தலைமைக் காவல் அதிகாரியும் ஒரு கணம் சிலையாகி மறுகணம் சுறுசுறுப்பானார்கள்
தலைமைக் காவல் அதிகாரி கத்தினான். “வாயிற் கதவை மூடுங்கள்”
வாயிற்காவலர்கள் வாயிற்கதவை மூடத் தயாராக வாயிற்கதவை ஒட்டி, அகழிக்கு
மேல் இருந்த மரப்பாலத்தை
எதிர்ப்புற சாலையிலிருந்து பின்னுக்கு இழுத்துக் கொள்ள வேக வேகமாக
வாயிற்கதவருகே இருந்த சக்கர வளையத்தைச் சுற்ற ஆரம்பித்தார்கள்.
ஆபத்து வருகிறது என்றால் முதலில் வாயிற்காவலர்கள்
செய்யும் வேலை அது தான். அந்த மரப்பாலம் பின்னுக்கு இழுத்துக் கொள்ளப்பட்டால் யாரும்
ஆழமான அந்த அகழியைத் தாண்டி நகருக்குள் நுழைய முடியாது.
ஆனால் பெரிய வாயிற்கதவை மூடவும், மரப்பாலத்தை பின்னுக்கு இழுக்கவும் காவலர்கள் அவசரமாக முயன்று கொண்டிருக்கையில், அவர்கள்
அதைச் செய்ய விடாதபடி மூன்று மாட்டு வண்டிகளிலிருந்தும் வாள்கள், ஈட்டிகள், ஆயுதங்கள் எடுத்துக் கொண்டு
பயணிகள், வணிகர்கள் வேடங்களில் இருந்த கேகய நாட்டு வீரர்கள் காந்தார
நாட்டுக் காவலர்களைத் தாக்கப் பாய்ந்தார்கள். தலைமைக் காவலனும்
மற்ற காவல் வீரர்களும் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. மிக வீரமாகவும், ஆக்ரோஷமாகவும் சண்டையிட்ட கேகய நாட்டு வீரர்கள் தங்கள் படை வரும் வரை காந்தார வீரர்கள் வாயிலை மூடி
விடாதபடியும், மரப்பாலத்தை அகழி மேலிருந்து விலக்கி விடாதபடியும்
பார்த்துக் கொண்டார்கள்.
கேகயப் படை நெருங்கி விட்டதைப் பார்த்த தலைமைக் காவல் வீரன்
இன்னொரு வீரனை ஆம்பி குமாரன் மாளிகைக்கு அனுப்பி விட்டு, சேனாதிபதி மாளிகைக்குத்
தான் முதலில் விரைந்தான். சின்ஹரன் மாவீரன் மட்டுமல்லாமல் வேகமாகச்
செயல்படுபவன். சேனாதிபதி முந்தைய இரவில் வெளியே சென்றவன் இன்னும்
திரும்பி வரவில்லை என்ற செய்தி பேரிடியாய் அவன் மேல் இறங்கியது…
ஆம்பி குமாரன் முந்தைய இரவுக் களியாட்டங்களில்
களைத்துப் போய் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். அவனுடைய காவல் வீரன் அவனை எழுப்பிச் சொன்ன செய்தி
காதிலிருந்து மூளை வரை செல்ல சிறிது நேரம் ஆயிற்று. மூளைக்கு
எட்டிய செய்தியை அவனால் உடனே நம்ப முடியவில்லை. “என்ன சொல்கிறாய்
வீரனே?” என்று கேட்டு மறுபடியும் தகவல் பெற்றுக் கொண்ட ஆம்பி குமாரன் அதன் பின் தாமதிக்காமல் துள்ளி எழுந்தான்.
“சின்ஹரனுக்குத் தகவல் தெரிவித்தாகி விட்டதா?” என்று குறுவாளை இடையில் சொருகிக் கொண்டு, பெரிய வாளைக்
கையில் உருவிக் கொண்டு கேட்டான்.
“சேனாதிபதி நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே போனவர் இன்னும் வீடு திரும்பவில்லையாம்.”
என்ற வீரனின் பதில் ஆம்பிகுமாரனையும் திகைக்க வைத்தது. கேகயப்படை தட்சசீலத்திற்குள் நுழைந்த தகவல் மற்ற சிறு படைத்தலைவர்களையும் வீரர்களையும்
சென்றடைந்து அவர்கள் அனைவரும் தயாராகி ஒன்று கூடுவதற்குள் கேகய நாட்டுப்படையின் ஒரு
பகுதி காந்தார அரசரின் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டது.
இந்திரதத் ஆரம்பத்திலிருந்தே இந்த முயற்சியில்
வேகமும் காந்தார அரண்மனையை ஆக்கிரமிக்கும் கவனக்குவிப்பும் மட்டுமே முக்கியம் என்று தன் படைவீரர்களிடம் சொல்லியிருந்தார். ஆம்பிகுமாரன்
தயாராகி படை திரட்டுவதற்குள் இது நடந்து விட வேண்டும் என்று கேகயப்படை ஒரே குறிக்கோளோடு
வேகமாக முன்னேறியது அவர்கள் வெற்றியை மிக எளிதாக்கி விட்டது. காந்தாரம்
போரைத் துவக்குவதற்கு முன்பே கேகயம் அங்கு வெற்றிக் கொடி நாட்டி விட்டது.
காந்தார அரசர் முன் வந்து தலை தாழ்த்தி நின்ற
வீரன் சொன்னான். “கேகய அமைச்சர் இந்திரதத் தங்களைக் காண அனுமதி
கேட்கிறார் அரசே”
காந்தார அரசர் விரக்தியுடன் சொன்னார். “தோற்றவர்களிடம் வென்றவர்கள்
என்றும் அனுமதி கேட்க வேண்டியதில்லை என்று சொல் வீரனே. அவர்களது
கைதி அவர்கள் கட்டளை என்னவென்று அறிந்து கொள்ளக் காத்திருப்பதாகச் சொல்”
வீரன் கண்கள் ஈரமாக அங்கிருந்து தயக்கத்துடன் நகர்ந்தான். சிறிது நேரத்தில் கூப்பிய
கரங்களுடன் இந்திரதத் நுழைந்தார். “காந்தார அரசருக்கு இந்த அடியவனின்
வணக்கங்கள். இந்தச் சூழலில் தங்களைக் காண்பதில் தங்களை விட அதிகமாக
அடியவன் வருந்துகிறேன் அரசரே. ஆனால் தங்கள் மகன் எல்லா அமைதிப்
பாதைகளையும் அடைத்து விட்டதால் எங்களுக்கு இந்த வழியிலேயே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு
விட்டது….”
இந்திரதத் மிகுந்த பணிவுடன் தலை தாழ்த்தி வணங்கி நிற்க காந்தார
அரசர் வருத்தத்துடன் சொன்னார்.
“நான் அறிவேன் கேகய அமைச்சரே. பிள்ளைகள் சரியில்லாமல்
இருக்கையில் முதுமை மனிதனுக்குப் பெரிய பாரமே. அந்த மனிதன் அரசாள்பவனாக
இருந்தால் அது அவனுக்குக் கூடுதல் துர்ப்பாக்கியம். அதை விடுங்கள்.
எங்களை வென்று வந்திருக்கும் நீங்கள் எனக்கு என்ன கட்டளை வைத்திருக்கிறீர்கள்
என்று சொன்னால் நலமாயிருக்கும்”
இந்திரதத் சொன்னார்.
“தயவு செய்து கட்டளை போன்ற பெரிய வார்த்தைகளைத் தாங்கள் பயன்படுத்த வேண்டாம்
என்று அடியவன் தங்களை வேண்டிக் கொள்கிறேன். தங்கள் நண்பரான எங்கள் மன்னர் உங்களுக்குத்
தன் மரியாதை வணக்கத்தை என் மூலம் அனுப்பி இருப்பதுடன் தங்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்
காந்தார அரசே. நட்பு ரீதியாகவும், அமைதி மார்க்கத்திலும் அனுப்பிய செய்திகள்
தங்கள் மகனிடம் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறி விட்டதால் எங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக்
கொள்ள நாங்கள் எடுக்க வேண்டியிருந்த இந்த நிர்ப்பந்த முடிவில் எங்களுக்கும் வருத்தமுண்டு
அரசே….”
பெருந்தன்மையின்
காரணமாகச் சொல்லப்படும் வார்த்தைகளில் காந்தார அரசரின் மனம் தங்கவில்லை. அடுத்தவர்
கருணையிலும் தயவிலும் கிடைக்கும் மரியாதைகள் மனக்காயங்களுக்கு மருந்தாகி விடுவதில்லை.
கேகய நாட்டின் இந்த அதிர்ச்சி வைத்தியமாவது
அவர் மகனை மனம் மாற வைக்குமானால் கடைசி காலத்தை அவர் சிறிது நிம்மதியுடன் கழிப்பார்.
ஆம்பி குமாரன் மாறுவானா?
(தொடரும்)
என்.கணேசன்
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
Wednesday, August 17, 2022
Monday, August 15, 2022
யாரோ ஒருவன்? 98
Thursday, August 11, 2022
சாணக்கியன் 17
நாளை பௌர்ணமி!
மைனிகாவும் அவளுடைய தாதியும் நாளை தட்சசீலத்தை
விட்டுப் போவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் காலையில் இருந்தே செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மூட்டை முடிச்சுகளை மறைவாக வைத்து முடிக்கையில்
மாலை நேரமாகி விட்டது. குளித்து அலங்காரம் செய்து கொண்டு சேனாதிபதி சின்ஹரனின் வரவுக்காகக்
காத்திருக்கையில் சின்னதாய் ஒரு வருத்தம் அவள் மனதின் ஒரு மூலையில் எழத்தான் செய்தது. சேனாதிபதி
சின்ஹரன் மிக நல்லவன். மாவீரன். ஆம்பி குமாரன் போல
அவன் தரம் கெட்டவனல்ல. அவளை ஒரு
தாசியைப் போல சின்ஹரன் எப்போதுமே நடத்தியதில்லை. ஒரு காதலியைப்
போலத் தான் நினைத்திருந்தான். அப்படித்தான் அவளிடம் அவன் பழகவும் செய்தான். அவள் நாளை
போனபின் அவள் அவனை ஏமாற்றியதற்கு அவன் கண்டிப்பாக வேதனை அடைவான். அவளை அவன்
வெறுக்கவும் செய்வான். அதை நினைக்கையில் அவளுக்குச் சிறிது வருத்தமாகத் தான் இருந்தது
என்றாலும் அவள் இதைச் செய்யாமல் இருக்க முடியாது. அவளுடைய
தாய்நாட்டை விட எதுவும் அவளுக்குப் பெரிதல்ல. தாசியாக
அவள் ஆனது விதி என்றாலும் அவளுடைய பெண்மையைத் தனிப்பட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்தாமல்
தாய்நாட்டுக்காகப் பயன்படுத்துவதில் அவள் பெருமையையே உணர்கிறாள்.
இன்று இரவு எதாவது காரணம் சொல்லி அவன்
அவள் வீட்டுக்கு வராமல் போனால் அவர்களுடைய திட்டம் நிறைவேறாது. ஆனால் எத்தனை நேரமானாலும் அவன் வராமல் இருக்க மாட்டான். அந்த அளவு
அவள் அவனை மயக்கி இருக்கிறாள்.
கேகய அரசர் புருஷோத்தமன் தன் அமைச்சர் இந்திரதத்திடம் சந்தேகத்துடன்
கேட்டார். “இந்தச் சிறிய படை போதுமா இந்திரதத்?”
காந்தார நாட்டின் படை பலம் கேகய நாட்டின்
படைபலத்திற்குச் சரிசமமானது தான். அதனால் பெரிய படையுடன் போய்ப் போராடுவது தான் சரியாக இருக்கும்
என்று அவருக்குத் தோன்றியது. இந்தப் போரே அவர் சிறிதும் விரும்பாதது தான். காந்தார
அரசர் அவருக்கு நண்பர். ஆம்பி குமாரன்
ஆட்சி விஷயங்களில் தலையிடாத வரை அந்த இரு நாடுகளுக்கு இடையே எந்தப் பெரிய பிரச்சினையும்
வந்ததில்லை. சில சில்லறைத் தகராறுகள் அண்டை நாடுகளுக்கு
இடையே வருவது சகஜம். அந்தச் சில்லறை விஷயங்களை அவர்கள் பேச்சு வார்த்தைகளிலேயே
சரி செய்து வந்திருந்தார்கள். ஆம்பி குமாரன் நடந்து கொண்ட முதலிரண்டு அத்துமீறல்களை சிறுபிள்ளைத்தனமாகவே
எடுத்துக் கொண்டு அவர் பெரிதுபடுத்தாமல் இருந்தார். ஆனால் இனியும்
பொறுத்துக் கொண்டே போனால் அது கோழைத்தனமாகத் தோன்ற ஆரம்பித்து விடும் என்பதால் தான்
அவர் அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தார். அமைச்சர்
இந்திரதத் போட்டிருக்கும் திட்டம் மிக புத்திசாலித்தனமாகவே இருக்கிறது என்றாலும் இந்திரதத்
அழைத்துப் போகும் சிறிய படை போதுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.
“அவர்கள்
தயார் நிலையில் இல்லாத சமயம் இது என்பதால் இச்சிறு படை கண்டிப்பாகப் போதும் அரசே. என்ன நடக்கிறது
என்று புரிந்து தலைமை பொறுப்பேற்கக் கூடியவர்கள் தயாராவதற்குள் நம் படை அனைத்தையும்
சாதித்து விடும். சின்ஹரன் களத்திற்கு வர மாட்டான். ஆம்பி குமாரன்
தயாராவதற்குள் நம் ஆக்கிரமிப்பு பூரணமாகி விடும். மேலும்
பெரிய படையுடன் போவதானால் வேகமாகப் போகவும் முடியாது. காந்தார ஒற்றர்கள்
அதை அறியாமல் இருக்கும் வாய்ப்பும் குறைவு. அதனால்
தான் இந்தத் திட்டத்தைப் போட்டோம்...”
கேகய அரசர் இந்திரதத்தை மனதிற்குள்
பாராட்டினார். இந்திரதத் மிகச் சிறந்த அறிவாளி. அறிவாளி
என்று நினைக்கையில் இந்திரதத் தட்சசீல கல்விக்கூடத்தில் படித்தவர் என்பதும் நினைவுக்கு
வந்தது. ”கல்வி கற்ற நகருக்குப் படையோடு போரிடப் போவது உனக்குச் சங்கடமாக
இல்லையா இந்திரதத்?” என்று அவர் புன்னகையோடு கேட்டார்.
“ஆம்பி குமாரன்
சமாதான வழிக்கு உடன்பட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறானே அரசரே. என்ன செய்வது” என்று இந்திரதத்
புன்னகையுடன் பதில் அளித்தாலும் மனதில் அவருக்கு ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்தது. அவருடைய
நண்பர் விஷ்ணுகுப்தருக்கு இந்தச் செயல் அதிருப்தியைத் தரும் என்பதில்
சந்தேகமேயில்லை. விஷ்ணுகுப்தர்
காந்தார நாட்டுக்கும் கேகய நாட்டுக்கும் இடையே தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இதைப்
பார்க்க மாட்டார். பாரதம்
என்ற தேசத்தின் இரு பகுதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது அந்த தேசத்தைப் பலவீனப்படுத்தும்
என்று தான் பார்ப்பார். நண்பரை எண்ணுகையில் மனம் லேசானது.
அவர் நண்பர் சாதாரண மனிதர் அல்ல. அறிவின் உச்சத்தை எட்டியவர். அதுமட்டுமல்ல. விஷ்ணுகுப்தரைப் போல அறிவின் உச்சத்தின்
படியே முழுக்கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள முடிந்த ஒரு மனிதனை இந்திரதத்
இது வரை பார்த்ததில்லை. எத்தனை பெரிய அறிவாளியையும் சமயங்களில் மனம் கவிழ்த்து
விடும். ஆனால் விஷ்ணுகுப்தருக்கு அறிவும், மனமும் ஒன்று தான். தனிப்பட்ட
லாபம் அடைய நினைத்தால் என்னவாகவும் உயர முடிந்த அந்த மனிதர் தனக்காக
எதையும் விரும்பி இந்திரதத் கண்டதில்லை. நண்பனை அவர் சந்தித்துப்
பல காலம் ஆகிறது. இந்தச் சூழலில் சந்திக்க நேர்வது துர்ப்பாக்கியம்
தான்....
சேனாதிபதி சின்ஹரன் வானில் ஜொலித்த முழு நிலவின் அழகை அண்ணாந்து
ரசித்துப் பார்த்தான். வழக்கத்தை விட நிலவு கூடுதல் அழகோடு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
நிலவை நன்றாக ரசித்து விட்டு மைனிகாவைச் சந்திக்கக் கிளம்பிய அவன் மனதில் எதோ ஒரு நெருடல் ஏனோ திடீர் என்று எழ
ஆரம்பித்தது. போகாதே என்று எதுவோ தடுப்பது போலத் தோன்றியது. ஏன் இந்தத் திடீர் உணர்வு
என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவனால் மைனிகாவை இன்று சந்திக்காமல் இருக்க முடியாது.
இன்று ஏதோ ஒரு விசேஷ விருந்து படைப்பதாக அவள் சொல்லி இருந்தாள். அது என்ன என்று அவன்
கேட்ட போது அதை முன்கூட்டியே சொல்ல மாட்டேன் என்று அவள் சொல்லி விட்டாள். அது என்னவாக
இருக்கும் என்று யோசித்தபடியே போர்வையைப் போர்த்திக் கொண்டு அவன் நடக்க ஆரம்பித்தான்.
மைனிகாவைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விருந்து குறித்த கற்பனைகளையும் விரிய விட்ட பிறகு
அந்த நெருடல் உணர்வு உள்ளே தள்ளப்பட்டது.
அது மைனிகாவின்
வீட்டுக் கதவைத் தட்டுவதற்கு முன் மறுபடி ஒரு முறை மேல் எழுந்து எச்சரித்தது. மறுபடியும்
ஏன் இந்த உணர்வு என்று அவன் யோசித்தாலும் அவன் கை அவள் வீட்டுக் கதவைத் தட்டுவதை அது
நிறுத்தவில்லை.
கதவைத் திறந்த மைனிகா
அவன் ஏதோ யோசனையுடன் உள்ளே நுழைவதைப் பார்த்து ”என்ன யோசனை என் காதலரே” என்று கொஞ்சும்
குரலில் கேட்டாள்.
அவளைப் பார்த்தவுடன்
அவள் அழகில் மயங்கி அவளை அணைத்தவனாக அவன் சொன்னான். “ஏனென்று தெரியவில்லை மைனிகா. வீட்டிலிருந்து
கிளம்பும் போதே இனம் புரியாத
ஒரு நெருடல். எதையோ எச்சரிப்பது போல் ஒரு தோன்றல்….”
ஒரு
கணம் மைனிகா திகைத்தாலும் அவள் மறு கணம் சுதாரித்துக் கொண்டாள். “பௌர்ணமி, அமாவாசை இரண்டு நாட்களின் நெருக்கத்திலும்
இப்படி நமக்குத் தோன்றுவதுண்டு அழகனே. எனக்கும் சில முறை அப்படித் தோன்றியிருக்கிறது.
ஆனால் மறுநாளே அதற்கு அர்த்தமில்லை என்று நான் உணர்ந்திருக்கிறேன்…”
“எனக்கு
இது தான் முதல் முறை” என்று சொன்ன அவனை அவள் அதற்கு மேல் சிந்திக்க விடவில்லை. அவன் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தவள் அவனை எல்லாவற்றையும்
மறக்க வைத்தாள்.
விடிவெள்ளி
கீழ்வானில் பிரகாசமாகத் தெரிய ஆரம்பித்த வேளையிலும் அதிகமாக அருந்திய மதுவின்
போதையாலும் அவள் அந்த மதுவில் கலக்கியிருந்த மயக்க மருந்தினாலும் சேனாதிபதி சின்ஹரன்
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். எவ்வளவு தாமதமானாலும் அவன் இந்த நேரம் கண்டிப்பாக
அங்கிருந்து கிளம்பி விடுவான். சூரிய உதயத்திற்குள் தன் மாளிகையை அவன் எட்டி விடுவான்.
ஆனால் இன்று மட்டும் இருட்டும் வரை அவன் மயக்கம் தெளிந்து எழப்போவதில்லை..
அவன் தலையை அன்போடு
கோதி விட்ட மைனிகா மெல்ல முணுமுணுத்தாள். “நான் கிளம்புகிறேன் சேனாதிபதி. என்னை மன்னித்து
விடு”
(தொடரும்)
என்.கணேசன்
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.












