சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 11, 2022

சாணக்கியன் 17

 

நாளை பௌர்ணமி!   

 

மைனிகாவும் அவளுடைய தாதியும் நாளை தட்சசீலத்தை விட்டுப் போவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் காலையில் இருந்தே செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.   மூட்டை முடிச்சுகளை மறைவாக வைத்து முடிக்கையில் மாலை நேரமாகி விட்டது. குளித்து அலங்காரம் செய்து கொண்டு சேனாதிபதி சின்ஹரனின் வரவுக்காகக் காத்திருக்கையில் சின்னதாய் ஒரு வருத்தம் அவள் மனதின் ஒரு மூலையில் எழத்தான் செய்தது. சேனாதிபதி சின்ஹரன் மிக நல்லவன். மாவீரன். ஆம்பி குமாரன் போல அவன் தரம் கெட்டவனல்ல.   அவளை ஒரு தாசியைப் போல சின்ஹரன் எப்போதுமே நடத்தியதில்லை. ஒரு காதலியைப் போலத் தான் நினைத்திருந்தான். அப்படித்தான் அவளிடம் அவன் பழகவும் செய்தான். அவள் நாளை போனபின் அவள் அவனை ஏமாற்றியதற்கு அவன் கண்டிப்பாக வேதனை அடைவான். அவளை அவன் வெறுக்கவும் செய்வான். அதை நினைக்கையில் அவளுக்குச் சிறிது வருத்தமாகத் தான் இருந்தது என்றாலும் அவள் இதைச் செய்யாமல் இருக்க முடியாது. அவளுடைய தாய்நாட்டை விட எதுவும் அவளுக்குப் பெரிதல்ல. தாசியாக அவள் ஆனது விதி என்றாலும் அவளுடைய பெண்மையைத் தனிப்பட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்தாமல் தாய்நாட்டுக்காகப் பயன்படுத்துவதில் அவள் பெருமையையே உணர்கிறாள்.

 

இன்று இரவு எதாவது காரணம் சொல்லி அவன் அவள் வீட்டுக்கு வராமல் போனால் அவர்களுடைய திட்டம் நிறைவேறாது.  ஆனால் எத்தனை நேரமானாலும் அவன் வராமல் இருக்க மாட்டான். அந்த அளவு அவள் அவனை மயக்கி இருக்கிறாள்.

 

கேகய அரசர் புருஷோத்தமன் தன் அமைச்சர் இந்திரதத்திடம் சந்தேகத்துடன் கேட்டார். “இந்தச் சிறிய படை போதுமா இந்திரதத்?”

 

காந்தார நாட்டின் படை பலம் கேகய நாட்டின் படைபலத்திற்குச் சரிசமமானது தான். அதனால் பெரிய படையுடன் போய்ப் போராடுவது தான் சரியாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. இந்தப் போரே அவர் சிறிதும் விரும்பாதது தான். காந்தார அரசர் அவருக்கு நண்பர்.  ஆம்பி குமாரன் ஆட்சி விஷயங்களில் தலையிடாத வரை அந்த இரு நாடுகளுக்கு இடையே எந்தப் பெரிய பிரச்சினையும் வந்ததில்லை. சில சில்லறைத் தகராறுகள் அண்டை நாடுகளுக்கு இடையே வருவது சகஜம். அந்தச் சில்லறை விஷயங்களை அவர்கள் பேச்சு வார்த்தைகளிலேயே சரி செய்து வந்திருந்தார்கள். ஆம்பி குமாரன் நடந்து கொண்ட முதலிரண்டு அத்துமீறல்களை சிறுபிள்ளைத்தனமாகவே எடுத்துக் கொண்டு அவர் பெரிதுபடுத்தாமல் இருந்தார். ஆனால் இனியும் பொறுத்துக் கொண்டே போனால் அது கோழைத்தனமாகத் தோன்ற ஆரம்பித்து விடும் என்பதால் தான் அவர் அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தார். அமைச்சர் இந்திரதத் போட்டிருக்கும் திட்டம் மிக புத்திசாலித்தனமாகவே இருக்கிறது என்றாலும் இந்திரதத் அழைத்துப் போகும் சிறிய படை போதுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.

 

அவர்கள் தயார் நிலையில் இல்லாத சமயம் இது என்பதால் இச்சிறு படை கண்டிப்பாகப் போதும் அரசே. என்ன நடக்கிறது என்று புரிந்து தலைமை பொறுப்பேற்கக் கூடியவர்கள் தயாராவதற்குள் நம் படை அனைத்தையும் சாதித்து விடும். சின்ஹரன் களத்திற்கு வர மாட்டான். ஆம்பி குமாரன் தயாராவதற்குள் நம் ஆக்கிரமிப்பு பூரணமாகி விடும். மேலும் பெரிய படையுடன் போவதானால் வேகமாகப் போகவும் முடியாது. காந்தார ஒற்றர்கள் அதை அறியாமல் இருக்கும் வாய்ப்பும் குறைவு. அதனால் தான் இந்தத் திட்டத்தைப் போட்டோம்...”


கேகய அரசர் இந்திரதத்தை மனதிற்குள் பாராட்டினார். இந்திரதத் மிகச் சிறந்த அறிவாளி. அறிவாளி என்று நினைக்கையில் இந்திரதத் தட்சசீல கல்விக்கூடத்தில் படித்தவர் என்பதும் நினைவுக்கு வந்தது. ”கல்வி கற்ற நகருக்குப் படையோடு போரிடப் போவது உனக்குச் சங்கடமாக இல்லையா இந்திரதத்?” என்று அவர் புன்னகையோடு கேட்டார்.

 

ஆம்பி குமாரன் சமாதான வழிக்கு உடன்பட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறானே அரசரே. என்ன செய்வதுஎன்று இந்திரதத் புன்னகையுடன் பதில் அளித்தாலும் மனதில் அவருக்கு ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்தது.   அவருடைய நண்பர் விஷ்ணுகுப்தருக்கு இந்தச் செயல் அதிருப்தியைத் தரும் என்பதில் சந்தேகமேயில்லை.  விஷ்ணுகுப்தர் காந்தார நாட்டுக்கும் கேகய நாட்டுக்கும் இடையே தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இதைப் பார்க்க மாட்டார்.  பாரதம் என்ற தேசத்தின் இரு பகுதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது அந்த தேசத்தைப் பலவீனப்படுத்தும் என்று தான் பார்ப்பார். நண்பரை எண்ணுகையில் மனம் லேசானது. அவர் நண்பர் சாதாரண மனிதர் அல்ல. அறிவின் உச்சத்தை எட்டியவர். அதுமட்டுமல்ல. விஷ்ணுகுப்தரைப் போல அறிவின் உச்சத்தின் படியே முழுக்கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள முடிந்த ஒரு மனிதனை இந்திரதத் இது வரை பார்த்ததில்லை. எத்தனை பெரிய அறிவாளியையும் சமயங்களில் மனம் கவிழ்த்து விடும். ஆனால் விஷ்ணுகுப்தருக்கு அறிவும், மனமும் ஒன்று தான். தனிப்பட்ட லாபம் அடைய நினைத்தால் என்னவாகவும் உயர முடிந்த அந்த மனிதர் தனக்காக எதையும் விரும்பி இந்திரதத் கண்டதில்லை. நண்பனை அவர் சந்தித்துப் பல காலம் ஆகிறது. இந்தச் சூழலில் சந்திக்க நேர்வது துர்ப்பாக்கியம் தான்....

 

சேனாதிபதி சின்ஹரன் வானில் ஜொலித்த முழு நிலவின் அழகை அண்ணாந்து ரசித்துப் பார்த்தான். வழக்கத்தை விட நிலவு கூடுதல் அழகோடு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. நிலவை நன்றாக ரசித்து விட்டு மைனிகாவைச் சந்திக்கக் கிளம்பிய  அவன் மனதில் எதோ ஒரு நெருடல் ஏனோ திடீர் என்று எழ ஆரம்பித்தது. போகாதே என்று எதுவோ தடுப்பது போலத் தோன்றியது. ஏன் இந்தத் திடீர் உணர்வு என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவனால் மைனிகாவை இன்று சந்திக்காமல் இருக்க முடியாது. இன்று ஏதோ ஒரு விசேஷ விருந்து படைப்பதாக அவள் சொல்லி இருந்தாள். அது என்ன என்று அவன் கேட்ட போது அதை முன்கூட்டியே சொல்ல மாட்டேன் என்று அவள் சொல்லி விட்டாள். அது என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே போர்வையைப் போர்த்திக் கொண்டு அவன் நடக்க ஆரம்பித்தான். மைனிகாவைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விருந்து குறித்த கற்பனைகளையும் விரிய விட்ட பிறகு அந்த நெருடல் உணர்வு உள்ளே தள்ளப்பட்டது.

 

அது மைனிகாவின் வீட்டுக் கதவைத் தட்டுவதற்கு முன் மறுபடி ஒரு முறை மேல் எழுந்து எச்சரித்தது. மறுபடியும் ஏன் இந்த உணர்வு என்று அவன் யோசித்தாலும் அவன் கை அவள் வீட்டுக் கதவைத் தட்டுவதை அது நிறுத்தவில்லை.

 

கதவைத் திறந்த மைனிகா அவன் ஏதோ யோசனையுடன் உள்ளே நுழைவதைப் பார்த்து ”என்ன யோசனை என் காதலரே” என்று கொஞ்சும் குரலில் கேட்டாள்.

 

அவளைப் பார்த்தவுடன் அவள் அழகில் மயங்கி அவளை அணைத்தவனாக அவன் சொன்னான். “ஏனென்று தெரியவில்லை மைனிகா. வீட்டிலிருந்து கிளம்பும் போதே இனம் புரியாத ஒரு நெருடல். எதையோ எச்சரிப்பது போல் ஒரு தோன்றல்….”

 

ஒரு கணம் மைனிகா திகைத்தாலும் அவள் மறு கணம் சுதாரித்துக் கொண்டாள்.பௌர்ணமி, அமாவாசை இரண்டு நாட்களின் நெருக்கத்திலும் இப்படி நமக்குத் தோன்றுவதுண்டு அழகனே. எனக்கும் சில முறை அப்படித் தோன்றியிருக்கிறது. ஆனால் மறுநாளே அதற்கு அர்த்தமில்லை என்று நான் உணர்ந்திருக்கிறேன்…”

 

“எனக்கு இது தான் முதல் முறை” என்று சொன்ன அவனை அவள் அதற்கு மேல் சிந்திக்க விடவில்லை.  அவன் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தவள் அவனை எல்லாவற்றையும் மறக்க வைத்தாள்.

 

விடிவெள்ளி கீழ்வானில் பிரகாசமாகத் தெரிய ஆரம்பித்த வேளையிலும் அதிகமாக அருந்திய மதுவின் போதையாலும் அவள் அந்த மதுவில் கலக்கியிருந்த மயக்க மருந்தினாலும் சேனாதிபதி சின்ஹரன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். எவ்வளவு தாமதமானாலும் அவன் இந்த நேரம் கண்டிப்பாக அங்கிருந்து கிளம்பி விடுவான். சூரிய உதயத்திற்குள் தன் மாளிகையை அவன் எட்டி விடுவான். ஆனால் இன்று மட்டும் இருட்டும் வரை அவன் மயக்கம் தெளிந்து எழப்போவதில்லை..

 

அவன் தலையை அன்போடு கோதி விட்ட மைனிகா மெல்ல முணுமுணுத்தாள். “நான் கிளம்புகிறேன் சேனாதிபதி. என்னை மன்னித்து விடு”

 

(தொடரும்)

என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

2 comments:

  1. கேகய நாட்டின் திட்டம் என்ன... காந்தாரத்திற்கு எப்படி பாடம் புகட்ட போகிறார்கள்... என்பதை அறிய ஆவலாக உள்ளது....

    ReplyDelete