என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, November 5, 2026

சதுரங்கம் 43



இன்ஸ்பெக்டர் மதுசூதனுக்குக் கிடைத்த செய்திகள் நல்லதாக இருக்கவில்லை. நாட்டு நடப்பு பத்திரிக்கையின் பெண் நிருபர் விமலின் அண்ணன் தங்கையையும், அவனுடைய நண்பர்களையும் போய்ச் சந்தித்துப் பேசியிருக்கும் தகவல் புதிய தலைவலியாக இருந்தது. அதற்கு முன் நர்மதாவின் அடுத்த வீட்டுக்காரரை, விடிவெள்ளி பத்திரிக்கையின் நிருபர் ஒரு பூங்காவில் சந்தித்துப் பேசியிருக்கிறான். இந்த இரண்டினாலும் இப்போதைக்குப் பெரிய பிரச்சினை எதுவும் வந்துவிடப் போவதில்லை என்ற போதும், எதிர்காலத்திலும் பிரச்சினை வராமல் இருக்கும் என்ற உத்திரவாதம் இல்லை.

 

நடப்பதை எல்லாம் அவர் அனுமதித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அதே சமயத்தில் அந்த இரண்டு நிருபர்களையும் தடுக்கவும் வழியில்லை. ஏனென்றால் விடிவெள்ளி நிருபர் தமிழகத்தின் முக்கியக் குடும்பத்து ஆள். பெருந்தலைவர் வாசுதேவனின் பேரன். நாட்டு நடப்பு பத்திரிக்கையின் நிருபரோ அவனுடைய சினேகிதி. அவள் அவனது காதலியாகக் கூட இருக்க வாய்ப்புண்டு.

 

பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் பிரச்சினை ஆகும் நிருபர்களைக் கண்டிக்கவும், செயலிழக்க வைக்கவும் போலீஸுக்கு எத்தனையோ வழிகள் உண்டு.  நல்ல விதமாகவும் தடுக்கலாம். மிரட்டியும் அவர்களைப் பணிய வைக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் சாதாரண நிருபர்களாக இருக்க வேண்டும். செல்வாக்கு உள்ளவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருக்கக்கூடாது.

 

பெருந்தலைவர் வாசுதேவன் பேரன் என்பதையாவது அலட்சியப்படுத்தலாம். இப்போதைய அரசியல்கட்சி ஒன்றின் தலைவரின் மகன் என்பதையும் கூட அலட்சியப்படுத்தலாம். ஆனால் இன்றைய அரசியலில் பெரும் சக்தியாகவும், நிழல் முதல்வராகவும் கருதப்படும் ஒருவரின் அண்ணன் மகன் என்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது. சமீபத்தில் ஒரு நாள் அவனிடம் நிழல் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைச் சொல்லச் சென்ற இந்த மாநில நிதியமைச்சரே கூட ஐந்து நிமிடம் அவரிடம் பேசி விட முடியவில்லை என்றும் கூட மதுசூதன் கேள்விப்பட்டிருந்தார். அன்றைய தினம் ராஜாராமின் வீட்டில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர்கள் மூலம் அது தெரியவந்திருக்கிறது. அந்த அளவு ராஜாராமுக்கு அர்ஜுன் முக்கியமானவன் என்பதால் அவனை வழக்கமான முறைகளில் கட்டுப்படுத்திவிட வழியில்லை. அவனையும், அவன் காதலியையும் தடுக்காமல் இருந்தாலோ, நாளைக்குப் பிரச்சினையானால் அதற்கும் மதுசூதனைத் தான்  குற்றப்படுத்துவார்கள்….

 

யோசித்து விட்டு, இந்தத் தகவல்களை மேலிடத்தில் தெரிவித்து விடுவது தான் நல்லது என்ற முடிவுக்கு மதுசூதன் வந்தார். மேலிடமே என்ன செய்வதென்று முடிவெடுக்கட்டும், அதன்படி செய்வோம் என்று எண்ணியவராக, அவர் பதில் சொல்ல வேண்டியவராக இருக்கும் டி.எஸ்.பிக்கு மதுசூதன் போன் செய்தார்.

 

“சொல்லுய்யா” என்றார் டி.எஸ்.பி.

 

மதுசூதன் தற்போதுள்ள சிக்கலைச் சொன்னார். டி.எஸ்.பி முழுவதையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டாலும் அதுகுறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கவில்லை.

 

“விமல் இப்போ எங்கேயிருக்கான்கிறதை கண்டுபிடிக்க முடிஞ்சுதாய்யா?”

 

‘அவன் இங்கே இருந்து டெல்லி போகிற ரயிலில் ஏறியிருக்கறது செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சிசிடிவி கேமிரால பதிவாயிருக்கு. அவன் டெல்லிக்குப் போய் சேர்ந்தானா, இல்லை போகிற வழியில் பாதியிலேயே ஏதாவது ஊர்ல இறங்கிகிட்டானா, இல்லை டெல்லி போய் அங்கேயிருந்து வேற எங்கயாவது போனான்னு தெரியலை. ஆனா இங்கேயிருந்து போனவன் நமக்குத் தெரிஞ்ச வரை யாரையும் தொடர்பு கொள்ளலை. எந்த ஏ.டி.எம்லயும் அவன் அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுக்கலை. டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட் பயன்படுத்தலை....”

 

”சரி. வேறெந்த முக்கியத் தகவலும் இல்லையே”

 

“இல்லை சார்”

 

அதோடு அவர்கள் பேச்சு முடிந்தது. இந்தத் தகவலை டி.எஸ்.பி தெரிவிக்க வேண்டிய இடத்தில் தெரிவிப்பார். அவராவது குற்றவாளியிடம் நேரடியாகத் தொடர்பு கொள்வாரா, இல்லையா என்பதை மதுசூதனாலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. யாரைக் காப்பாற்ற இந்த வேலையை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரியவில்லை.  

 

டி.எஸ்.பி ஒரு எண்ணிற்குப் போன் செய்தார். மறுமுனையில் போன் எடுக்கப்பட்டாலும் ஹலோ என்ற வார்த்தை கூட வரவில்லை. மதுசூதன் சொன்னதை எல்லாம் டி.எஸ்.பி அப்படியே ஒப்பித்தார்.  மறுமுனை மிகவும் கவனமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டாலும், எந்தக் கருத்தையும் கூறவில்லை. முடிவில் “அவ்வளவு தான் சார்” என்று அவர் சொன்ன பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

 

தன்னுடைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றோ, குற்றவாளிக்கு அவை தெரிவிக்கப்பட்டிருக்கின்றன என்றோ அறிந்திருக்காத அர்ஜுன் ஞானமூர்த்தி தெரிவித்த விஷயங்களையும், ராஜாராம் சொன்ன விஷயங்களையும் பற்றி ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான்.  ஞானமூர்த்தி அரசியலில் நுழைந்ததற்குக் காரணமே அவர் சந்தித்த மகானின் அறிவுரையாக இருந்திருக்க வேண்டும் என்று ராஜாராம் சொன்னது சரியாக இருக்கவும் கூடும். பேச்சோடு பேச்சாக அதைப் பற்றியும் அவன் கேட்டிருந்தால் ஞானமூர்த்தி பதில் அளித்திருக்கவும் கூடும். உடனடியாக அதைக் கேட்க அவனுக்குத் தோன்றியிருக்கவில்லை. அதற்குள் அவர் கைகழுவ எழுந்து விட்டார். இனி அந்த ஒரு கேள்வியை மட்டும் தனியாக அவன் கேட்க முடியாது. இனி அதைக் கேட்க வேண்டுமென்றால் அதற்கான இயல்பான சூழ்நிலை அமைய வேண்டும்.

 

ஆனால் அதை யார் சொல்லியிருந்தாலும், ஞானமூர்த்தியாகவே முடிவெடுத்திருந்தாலும் அரசியல் களம் என்பது அவரைப் போன்ற நேர்வழி மனிதர்களுக்கானதல்ல. ராஜாராம் சொன்னது போல, சிந்தித்து முடிவெடுக்கத் தெரியாத ஆட்டுமந்தை மனிதர்கள் ஞானமூர்த்தியை ஆதரிக்கப் போவதில்லை. அதைச் சொன்னாலும் அவர் பின்வாங்கப் போவதில்லை என்றாலும் அவன் மனம் வேதனைப்பட்டது. பணமும் சம்பாதிக்காமல், பெயரும் சம்பாதிக்காமல், அதிகாரத்திலும் அமராமல் அவனுடைய தந்தை அரசியல் கோமாளியாவது அவனுக்கும் பிடிக்கவில்லை.

 

அன்றெல்லாம் அவனுக்கு அதே யோசனையாய் இருந்தது, அவன் பத்திரிக்கைத் துறையில் இருந்தாலும் அரசியல் ஈடுபாடு குறைவு என்பதால் அவனிடம் விரல்நுனியில் தகவல்கள் இல்லை. அதில் அனுபவமும், ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட அரசியல் விமர்சகர் அலெக்ஸ் விடிவெள்ளி பத்திரிக்கையில் இருபது வருடங்களுக்கும் மேலாக வேலை பார்க்கிறார். மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் என்று அவரை அவனுடைய பத்திரிக்கை ஆசிரியர் தேவசகாயம் அடிக்கடி சொல்வதுண்டு.  

 

அர்ஜுன் அவரிடம் பேசுவதென்று முடிவு செய்தான். என்ன தான் சித்தப்பா அவனிடம் சொன்ன அரசியல் நிலவரம் சரியென்று அவனுக்குத் தோன்றினாலும் அலெக்ஸ் கருத்தையும் கேட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது என்று அவன் நினைத்தான். அப்படி ஒப்பிட்டுப் பார்த்து அவன் என்ன நினைத்தாலும், எப்படிப் புரிந்து கொண்டாலும் அவன் ஞானமூர்த்தியை மாற்ற வழியில்லை என்றாலும் அலெக்ஸ் கருத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வது மிக முக்கியமாக அவனுக்குத் தோன்றியது.

 

அவர் மேஜைக்குச் சென்ற போது அவர் அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். “பிசியா சார்?” என்று அவன் கேட்க, தலை நிமிர்ந்த அவர் புன்னகைத்தார். “அப்படியெல்லாம் இல்லை. இந்த மொபைல் நம்மளைப் பிடிச்சு ஆட்டற சைத்தானாக்கும். இதை எடுத்துக் கையில வெச்சிகிட்டா நம்மளை ரொம்ப பிசியாக்கிடும். ஆனால் இதைக் கீழே வைக்கிறப்ப நேரம் தான் போயிருக்குமேயொழிய எந்த ஒரு உருப்படியான பிரயோஜனமும் இருக்காது. இது என்னோட அனுபவம். ஆனாலும் இதை ஏன் எடுத்து நான் பார்த்துகிட்டிருக்கேன்னு கேட்டால், நான் ஏற்கெனவே உனக்கு பதில் சொல்லிட்டேன். இது ஒரு சைத்தான். பேருக்குத் தான் நம்ம கையில இது இருக்கேயொழிய உண்மைல இது கையில தான் நாம இருக்கோம். வா உட்கார்.”

 

அர்ஜுன் புன்னகைத்தபடி அவர் எதிரில் உட்கார்ந்தான். மிகவும் கலகலப்பான புத்திசாலியான மனிதர் அவர். மிகவும் தெளிவானவர். இவரிடம் பேசினால் அப்பாவின் அரசியல் விஷயத்தில் கண்டிப்பாகத் தெளிவு கிடைக்கும்.  

 

“நம்ம மாநில அரசியல் நிலவரம் எப்படி சார் இருக்கு?”

 

“எப்பவும் போல மட்டமாய் தான் இருக்கு. இந்த நிலைமை மாறணும்னா மக்கள் அதுக்கு தீவிரமாய் ஆசைப்படணும். அவங்களுக்கு எத்தனையோ விஷயங்கள் முக்கியமாய் இருக்கு. ஆனா அந்த லிஸ்ட்ல இந்த மாற்றத்துக்கான ஆசை இல்லை. அரசியல்வாதிகளுக்கோ எத்தனை சம்பாதிச்சாலும் போத மாட்டேங்குது. இந்த மக்களை ஏமாற்ற அடுத்ததாய் என்ன செய்யலாம்னு தான் யோசிக்கறாங்க. அடுத்தவங்க கிட்ட ஏமாந்தா மக்களைத் திட்டறாங்க. கரிச்சுக் கொட்டறாங்க. ஏமாற்றுகிற விஷயத்துல முதலிடத்துல இருக்கணும்னு தான் ஒவ்வொரு கட்சியும் இருக்கு. மன்னிக்கணும் உங்கப்பாவோட கட்சி மக்கள் நல்வாழ்வுக் கழகம் அதுல ஒரு அதிசய விதிவிலக்கு. ”

 

அவன் பேச வந்த விஷயத்திற்கு அவராகவே வந்ததை அர்ஜுன் பயன்படுத்திக் கொண்டான். ”உண்மைல அவர் கட்சி இங்கே எந்த நிலைமைல சார் இருக்கு?”


(தொடரும்) 

என்.கணேசன்

(வரும் தீபாவளியை முன்னிட்டு போனசாக ரட்சகன் நாவலின் அடுத்த பகுதி சனிக்கிழமை (7.11.2026) மாலையே வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கும் அடுத்த பகுதி வழக்கம் போல் திங்கள் அன்று தொடரும்)

1 comment:

  1. Thanks for the episode. Advance happy Deepavali to Mr. N.G and all readers.

    ReplyDelete