என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 11, 2021

இல்லுமினாட்டி 89


எர்னெஸ்டோ அடைந்த திகைப்பிற்கு அளவேயில்லை.  அவருடைய திகைப்பு ஹாலில் கேட்ட சத்தத்தின் விளைவாக இருக்கவில்லை. அக்‌ஷயின் அதிவேகத்தைப் பார்த்துத் தான் அவர் திகைத்திருந்தார். ”இப்போது தானே சம்மணமிட்டு தரை விரிப்பில் அக்‌ஷய் அமர்ந்திருந்தான். எப்படி இவன் கதவருகே போனான்?” என்று திகைப்புடன் அவர் தனக்குள்ளே கேட்டுக் கொண்டார். அவன் சம்மணம் கலைத்ததையோ, நின்றதையோ, கதவை நோக்கித் தாவியதையோ அவர் பார்த்திருக்கவில்லை. காற்றின் வேகத்தில் நகரக்கூடியவன் என்று அவன் ஃபைலில் இருந்தது உயர்வு நவிற்சியாக அவருக்கு இப்போது தோன்றவில்லை. விஸ்வம் கணப்பொழுதில் தாக்கக்கூடியவன் என்று அறிந்த பின் அவனிடமிருந்து அவரைக் காப்பாற்றப் பொருத்தமானவன் என்று அக்‌ஷயை ஏன் இம்மானுவல் தேர்ந்தெடுத்தான் என்பது இப்போது விளங்கியது.

அவர் அவனிடம் அமைதியாகச் சொன்னார். “நீ பயப்படும்படி எதுவும் இருக்க வழியில்லை. என்னிடம் 96 வயது வேலையாள் ஒருவர் வேலை பார்க்கிறார். அவர் அடிக்கடி இப்படி எதையாவது கீழே நழுவ விட்டு விடுவது வழக்கம். அவராகத் தான் இருக்கும்”

அக்‌ஷய் பாதி இறுக்கம் தளர்ந்தாலும் எச்சரிக்கையுடன் மெல்ல கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான். எர்னெஸ்டோ சொன்னபடியே ஒரு முற்றிய முதியவர் ஹாலில் தவறு செய்து விட்ட குழந்தை போல் நின்று கொண்டிருக்க இரண்டு வேலையாட்கள் கீழே விழுந்திருந்த பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டும், தரையைத் துடைத்தும் கொண்டும் இருந்தார்கள்.

கதவைச் சாத்திவிட்டுத் திரும்பும் போது தான் அக்‌ஷய் இயல்பான நிலைக்கும் திரும்பினான். எர்னெஸ்டோ மென்மையான குரலில் சொன்னார். “அவர் ஆர்லாண்டோ. நான் பிறந்த போதே ஆர்லாண்டோ என் தந்தையிடம் வேலையில் இருந்தார். அப்போது அவர் பத்து வயதுப் பையன். நான் என் தாய் தந்தை தோளில் இருந்த காலத்தை விட அவர் தோளில் இருந்த காலம் அதிகம். நான் விளையாடியதும் அவரிடம் தான் அதிகம். அன்றிலிருந்து இன்று வரை என்னிடம் இருக்கிறார். வேலை பார்த்தது போதும், ஓய்வில் இருங்கள், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன், ஒரு ராஜாவைப் போல் இருங்கள் என்று பல முறை சொல்லி விட்டேன். அவர் கேட்பதாயில்லை. சில நாட்கள் உடம்புக்கு முடியாமல் படுத்திருப்பார். திடீரென்று ஒரு நாள் எழுந்து வேலை செய்வார். எனக்கு எதாவது சாப்பிடக் கொண்டு வந்து கொடுப்பார். நான் சாப்பிட்டு முடியும் வரை என் பக்கத்தில் அமர்ந்திருப்பார். பின் போவார். இரண்டு மூன்று நாள் இப்படி வேலை செய்வார். பழையபடி முடியாமல் சில நாட்கள் படுத்துக் கொள்வார். பின் மெல்ல எழ முடிந்தால் இப்படி வந்து விடுவார். அவருக்கு இப்போதெல்லாம் கைபலம் இருப்பதில்லை. சாமான்களைக் கீழே போட்டு விடுகிறார்....”

மெல்ல கதவைத் திறந்து அந்த முதியவர் எட்டிப் பார்த்தார். “நான் உனக்கு சில காய்கறிகளை வெட்டி சாலட் செய்து கொண்டு வந்தேன். அது கீழே விழுந்து விட்டது. மறுபடி கொண்டு வருகிறேன்.”

எர்னெஸ்டோ புன்னகைத்தார். “சரி ஆர்லாண்டோ.”

ஆர்லாண்டோவின் முகத்தில் குற்றவுணர்ச்சி போய் பேரன்புடன் புன்னகை விரிந்தது. “சரி சீக்கிரம் வருகிறேன். காத்திரு” என்று சொல்லி விட்டு மெல்லக் கதவை மூடினார்.

எர்னெஸ்டோ நெகிழ்ச்சியுடன் சொன்னார். “எந்த எதிர்பார்ப்பும், காரணமும் இல்லாமல் என்னை எனக்காகவே நேசிக்கின்ற ஒரே மனிதர் இவர் தான் அக்‌ஷய். எனக்கு முன் அவர் இறந்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் என் மரணத்தைப் பார்க்கும் சக்தி அவருக்கு இருக்காது. நான் முன்னால் போய் விட்டால் அவருக்கு நேசிக்கவும் யாருமில்லை, அவரை நேசிக்கவும் யாருமில்லை...”

அக்‌ஷய் எர்னெஸ்டோவின் புதிய பரிமாணத்தைப் பார்க்கிறான். அந்த மனிதரை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.

அவன் திரும்பி வந்து அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்த பிறகு எர்னெஸ்டோ அவனிடம் ஆச்சரியத்துடன் கேட்டார். “உன்னால் எப்படி உட்கார்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்து அவ்வளவு சீக்கிரம் அந்தக் கதவுப் பக்கம் போக முடிந்தது”

அக்‌ஷய் சொன்னான். “இதெல்லாம் பயிற்சி தான்”

எர்னெஸ்டோ சொன்னார். “நீ எழுந்ததையோ, நின்றதையோ, அங்கே போனதையோ நான் பார்க்கவில்லை... நான்கைந்து வினாடியில் அத்தனையும் நடந்து முடிந்தது எப்படி? ”

அக்‌ஷய் சிறு புன்முறுவல் பூத்து மௌனமாகவே இருந்தான். எர்னெஸ்டோ அவனை மௌனமாக இருக்க விடுவதாக இல்லை. அது எப்படி என்று அறிந்து கொள்ள அவர் ஆர்வமாக இருந்தார். அக்‌ஷய் சொன்னான். “நீங்கள் ஒரு வினாடி என்று சொல்கிறீர்களே அது ஒன்றும் குறைந்த கால அளவு அல்ல. ஒரு வினாடியை ஒரு ஆயிரத்தால் வகுத்து அதை ’மில்லி செகண்ட்’ என்கிறார்கள். அந்த மில்லி செகண்டை ஆயிரத்தால் வகுத்து அதை மைக்ரோ செகண்ட் என்கிறார்கள். அந்த மைக்ரோ செகண்டை ஆயிரத்தால் வகுத்து அதை’நானோ செகண்ட்’ என்கிறார்கள்.  அந்த அளவுகளில் பார்த்தால் வினாடி என்பதே நீண்ட காலம் தான், அப்படி மில்லி செகண்ட், நானோ செகண்ட்களில் கூட நம்மால் இயங்க முடியும். நம் உடலில் எத்தனையோ வேலைகள் அந்த அளவுகோல்களில் தான் நடக்கிறது...”

எர்னெஸ்டோவுக்குத் தலைசுற்றியது. பிரமிப்புடன் அக்‌ஷயைக் கேட்டார். “அப்படி இயங்க நீ எங்கே கற்றுக் கொண்டார்.”

அக்‌ஷய் சொன்னான். “திபெத்தில்”        
         

சினிமா பார்த்து விட்டு உதய் வீடு திரும்பிய போது க்ரிஷும் பத்மாவதியும் பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மாவதி இன்று போலவே வாரம் ஒரு முறையாவது ஹரிணியை வெளியே கூட்டிக் கொண்டு போக வேண்டும், அது அவனது கடமை என்று இளைய மகனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தாள். க்ரிஷ் தலையாட்டிக் கொண்டிருந்தான். உதயைப் பார்த்தவுடன் தாயிடமிருந்து தப்பிக்க அவன் கேட்டான். “சிந்து என்ன சொல்கிறாள்?”

“பாவம்டா அவள்” என்று சொன்னபடி தம்பியருகே உட்கார்ந்த உதய் சிந்து அவனிடம் ““யார் பேச்சையாவது கேட்டு என்னை நீங்கள் கைவிட்டு விடுவீர்களோ, வெறுத்து விலகி விடுவீர்களோ என்று பயம்?” என்று கண்கலங்கச் சொன்னதையும் அதற்கு அவன் “யார் என்ன சொன்னாலும் சரி. நீ தான் என் மனைவி. நான் என்றுமே உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். இது சத்தியம்” என்று வாக்கு கொடுத்திருப்பதையும்   மிகவும் உருக்கமாகச் சொன்னான்.

பத்மாவதி கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள். “பாவம் அந்தப் பொண்ணு. அந்த அளவு வாழ்க்கைல அன்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கு. அதனால் தான் அப்படி பயப்படுது”

க்ரிஷ் தானும் முகத்தில் அனுதாபத்தைக் காட்டினான். சிந்து தன் நிலைமையைக் கூடுமானவரை ஸ்திரப்படுத்திக் கொள்ள முயல்வது அவனுக்குப் புரிந்தது. அம்மா சொல்லும் அந்தப் பாவப்பட்ட பெண் மிகவும் விவரமாகத் தான் நடந்து கொண்டு வருகிறாள்... நாளுக்கு நாள் உதய்க்கு சிந்து மேல் உள்ள காதலும் நெருக்கமும் கூடிக் கொண்டே போகிறது என்பதிலும், இனி உண்மையெல்லாம் தெரிய வந்தால் கூட அவனால் அவளைப் பிரிவது மிகவும் கஷ்டம் என்பதிலும் க்ரிஷுக்குச் சந்தேகமில்லை. ஒருவிதத்தில் எல்லாமே அவன் கையை மீறித் தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் அவன் இன்னொரு விதத்தில் முயன்று கொண்டிருக்கிறான். கத்தி மேல் நடப்பது போல் ஆபத்து நிறைந்தது தான் அந்த இன்னொரு விதம்.... ஆனால் துணிந்து இறங்கி விட்டதிலிருந்து அவன் பின்வாங்க முடியாது.


அன்றிரவு சிந்துவுக்கு உறக்கம் வரவில்லை. இப்போதும் க்ரிஷின் பார்வை அவள் மனதோடு பதிந்திருப்பது போல் தோன்றியதை அவளால் அலட்சியப்படுத்த முடியவில்லை. க்ரிஷ் விஸ்வம் இந்த இரண்டு பேர் தவிர வேறு யாராவது பார்ப்பது போல் தோன்றியிருந்தால் அவள் பொருட்படுத்தியிருக்க மாட்டாள். பிரமை என்று ஆரம்பக் கணமே அலட்சியப்படுத்தியிருப்பாள். ஆனால் விஸ்வத்திடமும், க்ரிஷிடமும் அவள் உணர்ந்திருந்தது பிரமை அல்ல என்பதை அவள் அறிவாள். இப்போது அவளுக்கு ஒரு புதிய பயம் வேறு ஏற்பட்டிருந்தது. க்ரிஷ் ஹரிணி சொன்னது போல் ஏதோ ஆராய்ச்சி மாதிரி அவள் மனதிலிருப்பதை கவனித்துக் கொண்டிருப்பது உண்மையானால் எப்போதாவது விஸ்வம் எங்கிருந்தாவது அவள் மனதின் மீது அதே முயற்சியை எடுத்தால் என்ன ஆகும்?

விஸ்வம் அந்த சமயத்தில் க்ரிஷ் அவள் மனதைக் கவனித்துக் கொண்டிருப்பதை உடனடியாகக் கண்டுபிடித்து விடுவானல்லவா? அதன் பின் என்ன ஆகும்?  

(தொடரும்)
என்.கணேசன்



Monday, February 8, 2021

யாரோ ஒருவன்? 18


“கன்சல்டிங்” என்றான் நாகராஜ். அவன் நடையின் வேகம் குறையவில்லை.

“என்ன மாதிரி கன்சல்டிங்?” என்று மூச்சு வாங்க நடந்து கொண்டே  வேலாயுதம் கேட்டார்.

“எல்லாமே” என்று அவன் சொன்னான்.

எல்லாமே என்றால் என்னவெல்லாம் என்று கேட்க அவர் வாயைத் திறந்தார். அதற்குள் அவனுடைய செல்போன் அடித்தது. அதை எடுத்து “ஹலோ” என்றான். அவன் நடைவேகம் கூடியது. அவரால் அதை விட வேகமாக அவனோடு நடக்க முடியவில்லை. மூச்சு வாங்க அவர் நின்று விட்டார். அவர் நின்று விட்டதைக் கூட அவன் கவனிக்காமல் செல்போனில் பேசிக் கொண்டே போனான்.

வேலாயுதம் மெல்ல திரும்பி நடக்க ஆரம்பித்தார். நாகராஜ் திரும்பி வரும் போது முடிந்தால் பார்த்துப் பேச்சைத் தொடரலாம் என்று நினைத்தார். அவர் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு கிழவர் எதிரே வந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். நேற்று நாகராஜைப் பார்க்க வந்த மில் அதிபரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்ப்பவர் அந்த ஆள். அந்த மில்களுக்கும் அவர்களுடைய கம்பெனி தயாரிக்கும் உதிரி பாகங்கள் விநியோகிப்பது உண்டு என்பதால் அந்த ஆளை அவர் நன்றாக அறிவார். நாற்பதாண்டு காலமாக அந்த மில் அதிபரிடமே வேலை பார்ப்பதால் அந்த ஆள் முதலாளியோடும், முதலாளி குடும்பத்தோடும் மிகவும் நெருக்கமானவர் என்பது அவருக்குத் தெரியும்.

ஆனால் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் கீழ்நிலை ஊழியர்களுடன் பேசுவது கவுரவக்குறைவு என்ற எண்ணம் உடையவர்கள் வேலாயுதமும், அவர் மகனும். அவர்கள் அந்த ஊழியர்களை நேர் பார்வை பார்க்கவும் மாட்டார்கள். ஆனால் இந்த அவசிய நேரத்தில் வேலாயுதம் அன்பே வடிவானார். “என்ன நீங்களும் தினம் வாக்கிங் போக ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று அந்த ஆளிடம் கேட்டார்.

அந்தக் கணக்குப் பிள்ளைக்கு வேலாயுதம் அவருடன் தான் பேசுகிறாரா, இல்லை பின்னால் வேறு யாருடனாவது பேசுகிறாரா என்ற சந்தேகம் வந்து திரும்பிப் பார்த்தார். பின்னால் சில அடிகள் தூரம் வரை ஆட்கள் யாரும் இல்லை என்பதால் தன்னிடம் தான் அவர் பேசுகிறார் என்பது அவருக்கு உறுதியாகியது. “ஆமாம் சார். ரெண்டு வருஷமாய் போறேன்” என்றார்.

இரண்டு வருடமாய் இந்த மனிதர் அவருடைய வீட்டைக் கடந்து போவதை வேலாயுதம் கவனித்திருந்தாலும் “அப்படியா” என்று கேட்டு விட்டு “நேத்து உங்க முதலாளி பக்கத்து வீட்டுக்கு வந்துட்டுப் போனதைப் பார்த்தேன்...” என்று வரவேண்டிய விஷயத்துக்கு வந்தார்.

“ஓ உங்க வீட்டுக்குப் பக்கத்துல தான் மகராஜ் வந்திருக்காரா? முதலாளி இடம் சொன்னாரு. எனக்குச் சரியா விளங்கல. இப்ப தான் புரியுது. அந்த வீடு தானா அது”

வேலாயுதம் இது என்ன புதுக்குழப்பம் என்று திகைத்தார். நாகராஜ் என்று தான் பக்கத்துவீட்டுக்காரன் சொன்னான், வீட்டு புரோக்கரும் அப்படித் தான் சொன்னதாய் நினைவு. இந்த ஆள் மகராஜ் என்று புதுப் பெயர் சொல்கிறாரே. இருக்கிற குழப்பங்கள் போதாதா? இது வேறா?. “அவர் பேரு நாகராஜ்னு சொன்ன மாதிரியில்ல ஞாபகம்” என்றார்.

“அவர் பேரு நாகராஜ் தான். ஆனா அவரை எல்லாரும் மகராஜ்னு மரியாதையா கூப்பிடறது வழக்கம். பார்க்க ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும் பெரிய ஆளு சார் அவர். அஞ்சு மாசத்துக்கு முன்னாடி புக் பண்ணின அப்பாயின்மெண்ட் சார். நேத்து தான் எங்க முதலாளிக்கு அவரைப் பார்க்க முடிஞ்சுது... பார்த்ததுக்குக் கைமேல அவருக்குப் பலன் கிடைச்சுடுச்சு. நேத்து வந்து அவர் மகராஜைப் பார்த்தார். இன்னைக்கு காலைல ஆஸ்திரேலியால இருந்து எங்க எக்ஸ்போர்ட் ஆர்டர் ஓக்கே ஆயிடுச்சு. நல்ல கைராசியான மனுஷன்...”

“ஓ அவர் எக்ஸ்போர்ட்ஸ்ல கன்சல்டண்டா இருக்காரா?” என்று வேலாயுதம் கேட்டார்.

“சேச்சே நான் அப்படிச் சொல்லலைங்க. மகராஜ் ஒரு சித்தர். நாகசக்தியை வசப்படுத்தினவரா பலரும் சொல்றாங்க. சிலர் அவர் கிட்ட பல நாகரத்தினக் கல்கள் இருக்குன்னு சொல்றாங்க. எது எவ்வளவு உண்மைன்னு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் அவர் சொன்னா பலிக்குது. அவர சந்திச்சுட்டு வந்தா அதிசயம் நடக்குது...”

“அப்படியா?” என்று ஆச்சரியத்தோடு வேலாயுதம் கேட்டார். நாகசக்தியை வசப்படுத்தினவன் அந்த நாகராஜ் என்பதும், பல நாகரத்தினக் கல்களை அவன் வைத்திருக்கிறான் என்பதும் அவர் ஆர்வத்தை மிக அதிகப்படுத்தியது. நேற்று இரவு கேட்ட சத்தங்கள் இந்த ஆள் சொல்வதற்குப் பொருத்தமாய் தான் இருக்கிறது. அவர் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை உடனடியாகக் கேட்டார்.

 “அவரு இப்ப தான் இங்கே வந்திருக்கார். நீங்க அஞ்சு மாசம் முன்னாடி அப்பாயின்மெண்ட் வாங்கினதா சொல்றீங்க. ஒன்னுமே புரியலயே”

“அவர் வடக்குல டெல்லிக்குப் பக்கத்துல எங்கேயோ இருக்கிறவர். எப்பவுமே எங்க முதலாளி அவரை அங்கே போய்ப் பார்த்துட்டு வருவார். மகராஜ் ஒரு நாளைக்கு ஒரு ஆளைத்தான் பார்ப்பார், எவ்வளவு கோடி தந்தாலும் ஒரு நாள்ல ரெண்டாவது ஆளுக்கு அப்பாயின்மெண்ட் கிடைக்காது. ஏதோ ஒரு வேலையா கோயமுத்தூர் வந்து கொஞ்ச நாள் தங்கறதால இந்த மாச அப்பாயின்மெண்ட்ஸ மட்டும் இங்கே பார்க்கறதா தகவல் வந்துச்சு. எங்க முதலாளிக்கு இது வசதியாயிடுச்சு.…”

”நீங்க வடநாட்டுக் காரர்னு சொல்றீங்க. ஆனா அவர் தமிழ் நல்லா பேசறாரே?”

“அவர் தமிழர் தான். வடக்குல செட்டில் ஆனவர். நீங்க அதிர்ஷ்டக்காரர். மகராஜ் உங்க பக்கத்து வீட்டுக்கே குடிவந்திருக்கார். உங்க கிட்ட பேசியும் இருக்கார். ”

நாகராஜ் அவரிடம் பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணி விட முடியும் என்றாலும் அந்தக் கணக்குப்பிள்ளையின் உயர்ந்த அபிப்பிராயத்தை வேலாயுதம் குறைத்து விட விரும்பவில்லை.

கணக்குப்பிள்ளை தொடர்ந்து சொன்னார். “.... முதலாளியோட தம்பிக்கு நாலு மாசம் கழிச்சு ஒரு தேதி கிடைச்சிருக்கு.  எப்படியும் கோயமுத்தூர் வந்திருக்காரே சந்திச்சுட்டா தேவலைன்னு நினைச்சு அவரோட ஆசிரமத்துல பேசியிருக்கார். அஞ்சு லட்சத்துக்குப் பதிலா பத்து லட்சம் ரூபாய் தர்றேன்னு சொல்லியும் ஒத்துக்கலையாம்...”

“என்னது அந்த ஆளைப் பார்க்க அஞ்சு லட்சம் ரூபாயா?” வேலாயுதம் வாயைப் பிளந்தார். அந்த ஆளுக்கு ஒரு ஆசிரமமும் இருப்பது இன்னொரு ஆச்சரியம்.

“ஆமா. நேத்து அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்த என்  முதலாளிக்கு இன்னைக்குக் காலைல கிடைச்ச ஆஸ்திரேலியா எக்ஸ்போர்ட் மூலமா கிடைக்கப் போற லாபம் ரெண்டே கால் கோடி. அதனால யாருமே அவர் கிட்ட கணக்குப் பாக்கறதில்லை.... அஞ்சு லட்சத்தைப் பத்து லட்சம் பண்ணினாலும், பதினைஞ்சா பண்ணினாலும் பார்க்க தவமாயிருக்காங்க”

“அப்படிப்பட்ட ஆள் வீடு கூட்டித் துடைக்கக்கூட ஏன் ஆளு வெச்சுக்கல. எல்லாத்தையும் அவரே செய்யறாரு?”

அந்தத் தகவல் அவரையும் ஆச்சரியப்படுத்தியது போலிருந்தது. “அப்படியா? அது ஏன்னு எனக்குத் தெரியலையே!. சரி சார் வர்றேன். நேரமாச்சு.” அந்த ஆள் கும்பிட்டு விட்டுப் போனார்.

வேலாயுதம் யோசனையுடன் நடந்தார். எல்லோரும் வியாபாரத்தில் பெருந்தொகையை முதலீடு செய்து எத்தனையோ பிரச்னைகளைச் சந்தித்து, சமாளித்துப் பணம் சேர்க்க வேண்டியிருக்க நாகராஜ் மாதிரியான ஆட்கள் அரை மணி நேரம் ஒருவனைச் சந்திக்க ஐந்து லட்சம் ரூபாய் வாங்குவது தொழிலதிபர்களைக் கேலி செய்வது போன்ற விஷயமாக அவர் நினைத்தார். அதில் பத்து லட்சம் ரூபாய் தந்தாலும் வரிசை மாறிச் சீக்கிரம் அப்பாயின்மெண்ட் கிடைக்காதாம். நாடு எங்கே போகிறதோ?

ஆனால் எவனுமே வந்து பயன் கிடைக்காமல் சும்மா திரும்பவும் வர மாட்டானே. இந்தக் கிழவன் சொல்வதைப் பார்த்தால் அவனிடம் போகிறவர்களுக்கு அவனால் பெருந்தொகைகள் லாபமாகக் கிடைக்கிறது போலிருக்கிறதே.  அதற்கெல்லாம் இந்தக் கிழவன் சொல்கிற மாதிரி நாகசக்தி தான் காரணமோ? கல்யாண் நேற்று இரவு உறங்குவதற்கு முன் சொன்ன அந்த அமானுஷ்ய சம்பவம் அங்கே நடக்கிறதோ?  ஆனால் இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டு கேட்ட அந்தப் பாம்புச் சீறல்கள் இப்போதும் அவரை லேசாக நடுங்க வைத்தது. என்ன இருந்தாலும் அது அபாயம் தான்....




(தொடரும்)
என்.கணேசன்  



Saturday, February 6, 2021

கர்மயோகி கிருஷ்ணர்!

கீதை காட்டும் பாதை 12

உபதேசித்ததோடு மட்டுமல்லாமல் கர்மயோகியாக வாழ்ந்து காட்டிய கிருஷ்ணர்!