மகளுடைய குரலைக் கேட்டதும் ஒரு கணம் ராஜேஷ்வருக்குத் தொண்டையை
அடைத்தது. பின் சொன்னார். “அப்பா பேசறேன்ம்மா. நான் காரை
அனுப்பறேன். நீயும் குழந்தையும் இங்கே வந்து சேருங்க.”
திடீரென்று அவர் வீட்டுக்கு வரச் சொன்னதால்
நிர்ப்பயா மேலும் உணர்ச்சிவசப்பட்டாள். வேகமாக தன்னை சுதாரித்துக்
கொண்டு அமைதியாக அவள் சொன்னாள். ”ஒன்னும் பிரச்சனை இல்லப்பா. நான் பார்த்துக்கறேன்.”
”இந்த சந்தர்ப்பத்துல
நீ தனியாய் இருக்கறது நல்லதல்ல நிர்ப்பயா.”
“நான் இப்ப
நிர்ப்பயா யுவராஜ்ப்பா. யுவராஜ் இல்லாதப்ப நான் தனியாய் தான் இருந்தாகணும். நான் சமாளிச்சுக்குவேன்ப்பா. கூப்பிட்டதுக்கு
தேங்க்ஸ்”
ராஜேஷ்வர் பெருமூச்சு விடும் சத்தம்
நிர்ப்பயாவுக்குக் கேட்டது. அவர் அவளுடைய பிடிவாதத்தை அறிவார்.
“நீ நிர்ப்பயா
யுவராஜாவே இரு. ஆனா நிர்ப்பயா யுவராஜ், ராஜேஷ்வரோட
மகள்ங்கறதை உலகத்துல எதுவுமே மாத்திட முடியாதும்மா. அவன் திரும்பி
வந்தவுடனே நீ போய்க்கோ. அது வரைக்கும் நம்ம வீட்டுல இரு. நீ அங்கேயே
இருக்கறது உன் குழந்தைக்கும் ஆபத்தாய் முடியலாம்.”
அவர் சொன்னதில் நிர்ப்பயா மனம் நெகிழ்ந்தாள். அவர் நீலேஷுக்கும்
ஆபத்து என்று சொன்னதை அவளால் அலட்சியப்படுத்த முடியவில்லை. இதையே தான்
அந்த இன்ஸ்பெக்டரும் சூசகமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவள்
சொன்னாள். “நான் நிர்ப்பயா யுவராஜாய் அங்கே வர்றதுல ஒரு சிக்கல் இருக்குப்பா. நீங்க ஏற்றுகிட்ட
மாதிரி அம்மாவும், தம்பியும் ஏற்றுக்கலை. நான் அங்கே
வந்தால் அவங்க எதாவது அவரைப் பற்றி சொன்னால் அதைக் கேட்டுகிட்டு நான் அங்கே இருக்கறது
சரியாயிருக்காது.”
“உன் புருஷனைப்
பற்றி உன் அம்மாவும், உன் தம்பியும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் வாக்கு
தர்றேன். அதனால சும்மா சாக்கு போக்கு சொல்லாம வந்து சேரு. உனக்கு
கிளம்பத் தயாராக எத்தனை நேரம் தேவைப்படும்?”
நிர்ப்பயா தந்தையின் வீட்டுக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த
போது நீலேஷ் மழலைக்குரலில் கேட்டான். “நாம் எங்கே போறோம். அப்பா கிட்டயா?”
நிர்ப்பயா மகனைப் பார்த்து புன்னகைத்தாள். “உன் அப்பாவுக்கு
இன்னும் வேலை முடியல இல்லையா. அதனால நாம அங்கே போக முடியாது. அதனால நாம
எங்கப்பா வீட்டுக்குப் போறோம்.”
நீலேஷ் ஆச்சரியத்துடன் கேட்டான். “உனக்கும்
அப்பா இருக்கா?”
“ஆமா”
“அம்மா?”
“இருக்காங்க.”
அம்மாவின் அப்பா அம்மாவை அவன் இதுவரை
பார்த்திருக்காதது அவனை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும். “நான் பார்க்கல”
“அதுக்காகத்
தான் பார்க்க போறோம்.”
குழந்தை தலையசைத்தான். நிர்ப்பயாவுக்கு
அவளுடைய கணவனை ஏற்றுக் கொள்ளாத இடத்திற்குப் போவதில் உடன்பாடில்லை. ஆனால் வறட்டுப்
பிடிவாதத்தில் அவள் இங்கு இருந்து கொண்டு தன் மகனுக்கும் ஆபத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அரை மனதோடு
தான் அவள் அங்கு செல்ல சம்மதித்திருக்கிறாள்.
அவள் தன்னுடைய கணவனின் சகோதரிகளிடமும், எப்போதும்
வீட்டுக்கு வந்து நலம் விசாரிக்கும் இன்ஸ்பெக்டரிடமும், தந்தை வீட்டுக்குப்
போவதைத் தெரிவித்து விட்டு தந்தை அனுப்பும் காருக்காகக் காத்திருந்தாள். அவர் அனுப்பிய
ரோல்ஸ் ராய்ஸ் கார் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தது. பின்னாலேயே
வேறு ஒரு வாகனத்தில் ஐந்து தனி பாதுகாவலர்கள் வந்து சேர்ந்தார்கள். அதற்குள்
பல நிருபர்கள் அங்கே கூடி விட்டார்கள். பாதுகாவலர்களின்
பாதுகாப்புடன் வேகமாக இரண்டு சூட்கேஸ்களுடன் நிர்ப்பயா மகனையும் அழைத்துக் கொண்டு ரோல்ஸ்
ராய்ஸில் ஏறினாள்.
ராஜேஷ்வர் நிர்ப்பயாவின் நிபந்தனையை மனைவியிடமும், மகனிடமும்
சொன்ன போது அவர்கள் இருவர் முகங்களும் இறுகின. அவர்கள்
கோபமாக எதோ சொல்ல வாயைத் திறப்பதற்குள் ராஜேஷ்வர் சொன்னார். “நான் அவளுக்கு
வாக்கு கொடுத்துட்டேன். அதனால நீங்க அவள் இங்கே இருக்கிற வரைக்கும் அவள் புருஷனைப்
பற்றி எதுவும் சொல்லக்கூடாது. அவ்வளவு தான்.”
தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொண்டார்கள். நிரஞ்சன் கோபத்துடன் கேட்டான். “அவ்வளவு
கவுரவம் பார்க்கிறவளை நீங்கள் இங்கே கூட்டிகிட்டு வர என்ன காரணம்?”
ராஜேஷ்வர் சொன்னார். “அவளோட அப்பா
இன்னும் சாகாமல் உயிரோட இருக்கேன்கிறது தான் காரணம்.”
அவருடைய வார்த்தைகளின் காரத்தால் நிர்மலாவும்
நிரஞ்சனும் பயந்து போய் அதற்குப் பின் ஒரு வார்த்தையும் பேசாமல் பின்வாங்கினார்கள்.
நிரஞ்சனுக்கு அக்காவை நினைக்கும் போது
பொறாமையாக இருந்தது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவள் தனது வாழ்க்கையைத்
தன் வழியிலேயே வாழ்ந்திருக்கிறாள். அடுத்தவர்களுடைய
அபிப்பிராயங்கள் அவளை லேசாக அசைத்தது கூடக் கிடையாது. அவளைப்
போல் வேறு யாரையும் அவன் பார்த்தது கிடையாது. மிகவும்
சக்தி வாய்ந்தவராய் அவன் அடிக்கடி வியந்து பார்க்கும் தந்தையும் கூட ஓரளவு அப்படித்
தான் என்றாலும் அவர் பல சமயங்களில் பலரிடம் வளைந்து போவதை அவன் பார்த்திருக்கிறான். அவருடைய
மிகப்பெரிய வெற்றிக்கு அது மிக முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாலும்
அவரும் கூட வளைந்து கொடுக்கின்ற சந்தர்ப்ப சூழ்நிலைகள் இருந்தன. ஆனால் நிர்ப்பயா
எதிலும் வளைந்து சமரசமாய் போனதில்லை.
அதை அவள் சாதிக்க முடிந்ததற்குக் காரணம்
அவள் ஒருசில விஷயங்களில் மட்டுமே உறுதியாக முடிவெடுப்பாள், அதற்கு
மட்டுமே அவள் அதிக முக்கியத்துவம் தருவாள் என்பதாகவும் இருக்கலாம். மற்ற விஷயங்களில்
என்ன நடந்தாலும் அவளால் பாதிக்கப்படாமல் விலகியிருக்க முடியும். அவனால்
அதுவும் முடிந்ததில்லை. பல நேரங்களில்
அவன் மனம் நேர் எதிரான இரண்டு முடிவுகளிலும் கூடத் தங்கும். ஒரு சமயம்
ஒன்று சரியென்று தோன்றும். இன்னொரு சமயம் அதற்கு நேர் எதிரான இன்னொன்று சரியென்று தோன்றும். இரண்டில்
எதை முடிவெடுப்பது என்று அவனுக்குத் தடுமாற்றம் ஏற்படும். ஆனால் அவளுக்கு
மட்டும் அது போன்ற குழப்பங்கள் கிடையாது. ஏதோ ஒரு முடிவை
எடுத்து அதில் அவள் உறுதியாக இருப்பாள்.
அவளுடைய அந்த தெளிவு அவனைப் பல சமயங்களில்
அசத்தும். அவளைப் போன்ற புத்திசாலி தன் திருமண விஷயத்திலும் அப்படி
ஒரு தடாலடி முடிவை எடுத்து, பணம் மட்டுமல்லாமல் அவர்கள் அனைவரையும் உதறித் தள்ளி விட்டுப்
போனது அவனால் இன்று வரை ஜீரணிக்க முடியாத செயலாய் இருந்தது.
சிலர் “அந்தப்
பையன் ஒன்னுமில்லாத குப்பனோ சுப்பனோ இல்லையே. ஒரு ஐபிஎஸ்
அதிகாரி தானே.” என்று அவனிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவன்
அரசியல்வாதிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பல இடங்களில்
பார்த்தவன். அதனால்
அக்காவின் கணவன் ஐபிஎஸ் அதிகாரி என்பதில் அவனுக்குத் துளியும் பெருமை இல்லை. அன்றே அந்த
ஆளைத் தீர்த்துக் கட்டச் சொல்லி அவன் தந்தையிடம் மன்றாடி இருக்கிறான். அவர் அதற்கு
ஒத்துக் கொள்ளவில்லை.
“ஏன்ப்பா?”
“அவள் அவன்
செத்தாலும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா.”
அவர் சொன்னதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை. அவன் அக்கா
அப்படிப்பட்டவள் தான். அன்றைக்கும் இந்த வீட்டில் அவள் வாழ்க்கை அவள் சொன்னபடி தான்
நடந்தது. இன்றைக்கும் அவள் விஷயத்தில் அவள் சொன்னபடி தான் இந்த வீட்டில்
எல்லாம் நடக்கப் போகிறது. அதை உறுதிப்படுத்திக் கொண்ட பின் தான் இங்கே வர அவள் சம்மதித்திருக்கிறாள்.
‘அவள் புருஷனை
ஒன்றும் சொல்லக்கூடாதாம்’ கோபத்தில் அவன் மனதிற்குள் பொறுமியபடி அம்மாவைப் பார்த்தான். யுவராஜ்
விஷயத்தில் நிர்மலாவும்
அவனும் ஒரே நிலைப்பாடுடையவர்கள் தான் என்றாலும், ராஜேஷ்வர்
நிபந்தனையைச் சொன்ன போது அவளும் அவனைப் போலவே கோபப்பட்டாள் என்றாலும், அவள் சில
நிமிடங்களில் கோபத்தைத் தொலைத்திருந்தாள். மூன்று
வருடங்கள் கழித்து மகளைப் பார்க்கப் போகும் ஆவல் அவள் முகத்தில் தெரிந்தது. மகளை மட்டுமல்ல பேரனைப் பார்க்கப் போகும் ஆர்வமாகவும் இருக்கலாம்.
சில நாட்களுக்கு முன்பு தான் யுவராஜின்
மகன் புகைப்படத்தை அவனிடம் காட்டி விட்டுச் சொன்னாள். “பாரு நீயும்
சின்னதில் இப்படி தான் இருந்தாய்”
நிரஞ்சன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான். இன்னமும்
அந்தப் பொடியனை அவனால் அக்காவின் மகனாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் அம்மா
சொல்கிறபடி புகைப்படத்தில் அந்தப் பொடியனின் பக்கவாட்டுச் சாயல் அவனைப் போல் தான் இருந்தது.
ஆனால் அவன் மனம் கனிந்து விடவில்லை. வீட்டில்
இருந்து கொண்டு அவர்களை வரவேற்கும் மனநிலையில் அவன் இல்லை. அவர்கள்
வருவதற்குள் கம்பெனிக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்து அவசரமாக அவன் கிளம்பிப்
போனான்.
(தொடரும்)
என்.கணேசன்

Many thanks
ReplyDelete