என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, February 4, 2021

இல்லுமினாட்டி 88



”நீங்கள் தொழுத இடம் போய்ச் சேரும்....”

வாங் வே அனுப்பியிருந்த அந்த ரகசிய ஆவணச் செய்தியின் கடைசி வரியை வைத்து அந்த இடத்தைக் கண்டுபிடிக்க சாமுவல் பல முயற்சிகள் எடுத்து விட்டார். டேனியல் உடலில் இருக்கும் விஸ்வம் இன்னும் ஜெர்மனியை விட்டு வெளியேறவில்லை என்பதில் இல்லுமினாட்டி உளவுத் துறைக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. தரைவழி எல்லைகளிலும், விமானநிலையங்களிலும் கடுமையான தளராத பரிசோதனை இருந்ததால் விஸ்வம் தப்பிச் சென்றிருக்க வழியேயில்லை என்பதை இல்லுமினாட்டியின் உளவுத்துறை அறிந்திருந்தது. அதனால் அவர்கள் போய்ச் சேர்ந்திருக்கக்கூடிய தொழுத இடம் ஜெர்மனிக்குள் தான் இருக்க வேண்டும் என்றும் தவறில்லாமல் யூகித்தது. அதற்குப் பிறகு ஜெர்மனியில் இல்லுமினாட்டியினர் தொழுத இடங்களின் பட்டியல் எடுக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் அப்படிப்பட்ட தொழும் இடங்கள் நிறைய இருந்தன. பிறகு ஹிட்லரின் கெடுபிடியால் இல்லுமினாட்டியினர் பகிரங்கமாகத் தொழும் இடங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. அதன் பின்னர் வழிபாட்டு ஆர்வமும் குறைந்து போனதால் இல்லுமினாட்டியினர் வழிபாட்டு இடங்கள் எதையும் பெரிதாகக் கட்டவில்லை.  பழைய கோயில்கள் எல்லாம் நூலகங்கள், காட்சியகங்கள், அவர்கள் கூடுமிடங்களாக மாறின. வழிபாடு என்பதே வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சம்பிரதாயமாக மாறிவிட்டது. அப்படி மாறிய இடங்களில் எல்லாம் ஒளிந்து கொள்ளும் வசதி இருக்கவில்லை. என்றாலும் தனக்கு மிக நம்பிக்கையான ஊழியர்கள் ஐந்தாறு பேரை அந்த இடங்களுக்கெல்லாம் சாமுவல் அனுப்பி ஏதாவது வகையில் அங்கே விஸ்வம் ஒளிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று முழு சோதனைகள் செய்து பார்த்தார்.  விஸ்வம் அங்கெல்லாம் இல்லை என்று உறுதியாகத் தெரிந்து விட்டது.

ஜெர்மனியில் பழைய இரண்டு வழிபாட்டு இடங்கள் இப்போது சர்ச்கள் ஆகியிருந்தன. அதில் ஒரு சர்ச்சில் இப்போது வழிபாடு எதுவும் நடப்பதில்லை. அங்கு முதலிலேயே ஆட்கள் சென்று பார்த்து யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். பூட்டிய இடங்கள், காலியாக இருக்கும் பொது இடங்கள் எல்லாம் பார்க்கும் போது அதையும் பார்த்து புகைப்படம் கூட எடுத்து ஃபைலில் வைத்திருந்தார்கள். இன்னொரு சர்ச்சில் இப்போது வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆட்கள் தினசரி போய் வரும் சர்ச்சில் விஸ்வம் ஒளிந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த நிலைமையை வாங் வேக்கு சாமுவல் போன் செய்து சொன்னார். வாங் வே ஏமாற்றத்தோடு சொன்னார். “நான் அந்த ஒரு வரியிலேயே விஸ்வம் இருக்கும் இடத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியும் என்று நிறையவே நம்பி இருந்தேன்...”

சாமுவல் வருத்தத்துடன் சொன்னார். “தொழுத இடங்கள் எல்லாம் பார்த்தாகி விட்டது. அவன் இல்லை....இன்னும் கூடுதலான தகவல்கள் கிடைத்திருந்தால் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்திருக்கும்.”

வாங் வே யோசனையுடன் சொன்னார். “அந்த ரகசிய ஆவணத்தில் இனி வரும் வரிகளில் ஏதாவது கூடுதல் தகவல்கள் இருக்கலாம்”

“அப்படி ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று சாமுவல் சொன்னார்.
”கர்னீலியஸிடம்  கூடுதலாக தகவல்கள் எதாவது கிடைத்திருக்கிறதா என்று தினமும் விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அந்த ஆளும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்... பார்ப்போம்”

எர்னெஸ்டோவை மிக அருகில் இருந்து கவனிக்க முடிந்த அக்‌ஷய்க்கு அவர் அறிவுகூர்மையும், மன உறுதியும், முடிவுகள் எடுப்பதில் இருந்த தெளிவும் அசத்தின. நள்ளிரவை நெருங்காமல் உறங்கப் போகும் பழக்கம் அவரிடம் இல்லாததால் காலை மிகவும் தாமதமாகத் தான் எர்னெஸ்டோ கண்விழிப்பார். கண்விழித்து, காலைக்கடன்கள் முடித்த பின், பால் கலக்காத காபி ஒரு கோப்பை குடித்து விட்டு அவர் வேலைகள் ஆரம்பமாகும். ’அவசரம், அதிமுக்கியம்’ என்று அவர் பார்வைக்கு உளவுத்துறையும், மற்றவர்களும் அனுப்பிய செய்திகளைப் படிக்க ஆரம்பிக்கையில் அவர் முழுக்கவனமும் அவற்றில் தான் இருக்கும். ஒவ்வொன்றையும் படித்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டியதில் முடிவெடுக்க அவர் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை என்பதை அக்‌ஷய் கவனித்தான். சில சமயங்களில் முடிவெடுப்பதற்கு முன் கூடுதல் தகவல் ஏதாவது தேவையிருந்தால் உடனடியாகச் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்துப் பேசுவார்.  அதைக் கேட்டு உள்வாங்கிக் கொண்டு முடிவுகளை எடுத்து கட்டளை பிறப்பித்து விடுவார். சில சமயங்களில் சிலர் போன்கால்களில் அதிஅவசரமாக அவரை அழைப்பதுண்டு. பேசுபவர்கள் யாரும் மூன்று நிமிடங்களுக்கு அதிகமாக அவரிடம் பேசுவதில்லை என்பதையும் அக்‌ஷய் கவனித்தான். அதற்கு அதிகமாகப் பேசுபவர்களை அவர் முன்பே தவிர்த்து அதற்குள் சுருக்கிச் சொல்லுமாறு பழக்கியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பல நாடுகளின் அரசியல், பொருளாதாரம் முதல் தீவிரவாதிகளின் இயக்கங்கள் வரை அவருடைய முடிவுகள் பாதிப்பதாகவும், இருக்கும் நிலைமைகளை மாற்றுவதாகவும் இருந்தது.

”உடனடியாகக் கொன்று விடு. விபத்து போல் தெரிய வேண்டும்”, “இப்படிச் செய்யச் சொல்.....”, “இந்த அறிவிப்பு நாளைக்குள் வெளியாக வேண்டும்” “இப்போதைக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். இரண்டு நாள் பொறுப்போம்” “ஒரு மில்லியன் யூரோவை அவர்களுக்கு அனுப்பு” ”பத்து மில்லியன் அமெரிக்க டாலர் இல்லுமினாட்டிக்கு அனுப்பு. பிறகு பார்ப்போம்” ”உடன்படிக்கையில் இந்த ஷரத்தைச் சேர்த்து விட்டு அறிவிக்கச் சொல்” என்றெல்லாம் ஓரிரண்டு வாக்கியங்களில் அறிவித்து ஒவ்வொரு பிரச்னையாக அவர் முடித்து வைக்கும் விதம் அவனை ஆச்சரியப்படுத்தியது.

அதன் பின் காலை உணவு சாப்பிட்டு விட்டு முன்பே அப்பாயின்மெண்ட் கொடுத்திருக்கும் மிக முக்கியமான மனிதர்களை அவர் சந்திப்பார். அவர்களும் அவரிடம் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அவரிடம் பேச அனுமதி இல்லை. அதனால் வருபவர்கள் தாங்கள் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லக் கற்றுக் கொண்டே அவரிடம் வந்திருப்பதையும் அவனால் கவனிக்க முடிந்தது. சிலரிடம் மிகவும் நட்புணர்வுடன் பேசி, சிலரிடம் கண்டிப்புடன் பேசி, சிலரிடம் ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசி அனுப்பி வைத்தார். ஒருவரிடம் நடந்து கொண்டது போல இன்னொருவரிடம் அவர் நடந்து கொள்ளாததை அக்‌ஷய் கவனித்தான். அதே போல அவரைச் சந்திக்க வந்த ஒவ்வொருவரும் அவரிடம் உள்ளுக்குள் பயந்து நடுங்கியபடி தான் பேசியதாகவும் அவனுக்குப் பட்டது. பலரிடம் பல விதமாக நடந்து கொண்டு விட்டு மதிய உணவு உட்கொண்டு சுமார் ஒரு மணி நேரம் அவர் இளைப்பாறுவார்.  பின் பழையபடி சந்திப்புகள் தொடரும். சாயங்காலம் ஐந்து மணி முதல் எட்டு மணி வரை அக்‌ஷயிடம் அவர் பேசிக் கொண்டிருப்பார். அவனிடம் பேசும் போது எந்த விதமான பந்தாவும் அவரிடம் மறைமுகமாகக் கூட இருக்கவில்லை. ஒரு நண்பர் போலவே பேசிக் கொண்டிருப்பார்.

எட்டு மணிக்கு மேல் நள்ளிரவு வரை ஒயினும், பிதோவன் இசையும் மட்டுமே அவர் நேரத்தை ஆக்கிரமிக்கும். அவர் மூலம் பிதோவன் இசை அக்‌ஷய்க்கும் அறிமுகமாகியது. போகப் போக அவனும் அந்த இசையை ரசிக்க ஆரம்பித்தான். பிதோவனின் ஒன்பது சிம்பனிகளும், கன்சர்ட்களும், மற்ற இசைகளும் அவனுக்கும் பிடிக்க ஆரம்பித்தது. அவன் ரசிப்பதைக் கவனித்த அவர் அந்த இசையில் பொதிந்திருந்த சூட்சுமங்களை அவனுக்கு விளக்க ஆரம்பித்தார். அவை புரிந்த பின் அவனுக்கு பிதோவன் இசை மேலும் பிடிக்க ஆரம்பித்தது.  சில நேரங்களில் அந்த இசை அவனைத் தியான நிலைக்குக் கொண்டு போனது. அந்த நேரங்களில் அவன் சம்மணமிட்டுத் தரைவிரிப்பில் அமர்ந்து கொண்டு ஒரு பரவசநிலையில் அமர்ந்திருப்பான். அந்தச் சமயங்களில் எர்னெஸ்டோவுக்கு அவனைப் பார்க்கப் பொறாமையாக இருக்கும்.

பிதோவனை அறிமுகப்படுத்தியபடி ஒயினையும் அக்‌ஷய்க்கு அறிமுகப்படுத்த அவரால் முடியவில்லை. அவரிடம் உலகின் பல பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பழமையானதும், விலையுயர்ந்ததுமான ஒயின்கள் பல வகைகள் இருந்தன. ஆனால் அவர் எவ்வளவு சொல்லி ஒயினைக் குடிக்க அவன் மறுத்தான். சிறிய அளவில் கூட அவன் மூளை மற்றும் உடலின் சக்திகள் தளர்வதை விரும்பவில்லை. சில வகை ஒயின்கள் உடலுக்கு மிக நல்லது என்று சில ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டிருப்பதை அவர் சொன்னார். அதெல்லாம் அவனைச் சிறிதும் மாற்றவில்லை. “எங்கள் யோகாவை விட இதெல்லாம் உடலுக்கு அதிக நல்லதைச் செய்து விட முடியாது” என்று அவன் சொல்லி மறுத்தான்.

எர்னெஸ்டோவுக்கு விஸ்வம் நினைவுக்கு வந்தான். இவன், அவன் எல்லாம் ஒருவிதத்தில் ஒரே ரகம் என்று அவருக்குத் தோன்றியது.... இப்போது நிறைய நேரமாக எந்த விதமான அசௌகரியத்தையும் உணராமல் தொடர்ந்து அவனால் தரைவிரிப்பில் சம்மணமிட்டு உட்கார முடிவதும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனை ஆச்சரியத்துடன் அவர் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று அவருடைய அறைக்கு வெளியே ஹாலில் ஏதோ பொருட்கள் உருளும் சத்தம் கேட்டது.

அடுத்த கணம் அக்‌ஷய் அவருடைய அறைக்கதவருகே இருந்தான். அவரை அமைதியாக இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும்படி சைகையால் தெரிவித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்





Monday, February 1, 2021

யாரோ ஒருவன்? 17


சஞ்சய் ஷர்மா நாளுக்கு நாள் உடல் பலவீனமாகிக் கொண்டே போவதை உணர்ந்தான். அவனுக்குப் பிறந்ததில் இருந்து, விதிவசமாக இவர்களிடம் பிடிபடும் வரையில், ஒரு நாளும் உணவுப் பிரச்னை இருந்ததில்லை. இப்படி நாளுக்கு மூன்று ஆறிய சப்பாத்திகள் சாப்பிட்டு உயிர்பிழைக்கும் துர்ப்பாக்கியம் இருக்கவில்லை. அவன் ‘உண்மையைச் சொல்கிறேன்’ என்றவுடன் நரேந்திரன் அது என்ன என்று அறிந்துகொள்ள எதிரில் வந்து நிற்பான் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை. அவன் சொன்ன விஷயம் நரேந்திரன் காதை எட்டவேயில்லை என்பது அவனை மனம் புழுங்க வைத்தது.  

”அவராகப் போன் செய்தால் சொல்கிறேன்” என்று சொல்லியிருந்த தடியனிடம் ஒவ்வொரு வேளை அவன் வரும் போதும் சஞ்சய் கேட்டான். “சார் போன் செய்தாரா?”

“இல்லை” என்று ரத்தினச்சுருக்கமாகச் சொல்லி விட்டுப் போகும் தடியன் ஒரு நாள் எரிச்சலோடு கேட்டான். “சார் கேட்கறப்பவே எல்லாத்தையும் சொல்லியிருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” 

இப்படிக் கண்டவன் எல்லாம் கேட்கும் நிலைமை நமக்கு வந்து விட்டதே என்று மனம் நொந்தாலும் அசடு வழிந்தபடி சஞ்சய் அமைதி காத்தான். மூன்று நாள் கழித்து தடியன் “இன்றைக்கு சாயங்காலம் ஐந்து மணிக்கு நீ சொல்வதைக் கேட்பதாகச் சொல்லியிருக்கிறார் சார்” என்று சொல்லி அவன் வயிற்றில் பால் வார்த்தான். எந்த உண்மையை இன்று சாயங்காலம் எப்படித் திரித்துச் சொல்வது என்று சஞ்சய் சந்தோஷமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். இன்று நரேந்திரன் வரும் போது அவன் பின்னாலேயே மாமனின் ஆட்களோ, அந்தத் திவீரவாதிகளின் ஆட்களோ பின் தொடர்ந்து வந்து இந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டால் தேவலை. இந்த இரண்டு நாய்களையும் எட்டி உதைத்து விட்டு இதே சித்திரவதையை இவர்களுக்குத் தரலாம். அந்தச் சித்திரவதை ஜென்மத்திற்கும் அவர்களுக்கு மறக்கக்கூடாது. இவர்களுக்கு மூன்று சப்பாத்திகளும் அதிகம் தான். ஒரு நாளைக்கு ஒரு சப்பாத்தி தந்தால் போதும். இதை விடத் தடிமனான சங்கிலியில் கட்டிப் போட வேண்டும்.

குறைந்தபட்சம் அந்த அறையில் ஒரு சுவர்க்கடிகாரமாவது வைத்திருக்கலாம். நேரம் என்ன என்றாவது தெரியும். அதைச் செய்யவும் இவன்களுக்கு மனம் இல்லை. நேரம் ஆமையை விட மெள்ள நகர்ந்தது. சஞ்சய் என்ன சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துப் பின் ஆவலாகக் காத்திருக்கையில் தடியன் ஒரு லாப்டாப்போடு வந்தான். ‘என்ன இவன் படம் காண்பிக்கப் போகிறானா?’

லாப்டாப்பைத் திறந்து ஒரு நிமிடம் எதோ செய்தவன் பிறகு “பேசு” என்று சொல்லி விட்டு லாப்டாப்பை அவன் பக்கம் தள்ளி விட்டான்.

லாப்டாப் திரையில் நரேந்திரன் கேட்டான். “எதோ சொல்ல வேண்டும் என்று சொன்னாயாமே.. சீக்கிரம் சொல்”

சஞ்சய் திகைப்பில் வாயடைத்துப் போய் சில வினாடிகள் பேந்தப் பேந்த முழித்து விட்டுச் சொன்னான். “நேரில் வந்தால் தான் சொல்வேன். இப்படிப் பேசுவது எனக்கு ஆபத்து”

அவன் அப்படிச் சொன்னதுமே நரேந்திரன் “சரி” என்று சொன்னான். அடுத்த வினாடி வெற்றுத் திரை தான் சஞ்சய் முன் தெரிந்தது. சஞ்சய் கோபம் தாங்காமல் ”ஆ ஆஆஆ” என்று உச்சக்குரலில் அலறினான். அடுத்த கணம் அவன் வலது கன்னத்தில் இடி போல் தடியனின் அறை விழுந்தது. அண்டசராசரங்களும் சுற்றி ஒரு விதமாய் நிற்பதற்குள் தடியன் லாப்டாப்பை எடுத்துக் கொண்டு போயிருந்தான்.  


அன்றிரவு கல்யாண் உறங்கவில்லை. பழையதும் புதியதுமாகப் பல சிந்தனைகள் அவனைத் தூங்க விடாமல் தடுத்தன. பக்கத்து வீட்டுப் புதிர் விடுபடும் வரை அவனுக்கும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது என்று தோன்ற ஆரம்பித்தது. மறுநாள் அதிகாலையிலிருந்தே தந்தையும் மகனும் வீட்டின் முன்பக்கப் புல்வெளியில் பக்கத்து வீட்டுக்காரனின் பார்வை தங்கள் மீது பட வேண்டும் என்று தவம் இருந்தார்கள்.

ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் கண்களுக்குக் காப்பு கட்டிய குதிரை போல நேர்பார்வை பார்த்துக் கொண்டே போய் வாசல் கூட்டி விட்டுத் திரும்ப உள்ளே போனவன் பிறகு திரும்பவும் வரவில்லை. கல்யாணுக்குத் தானாகப் போய் பேச கவுரவம் தடுத்தது. தேவைப்படும் நேரங்களில் கவுரவம் என்றால் ஆள் பெயரா, சினிமா பெயரா என்று கேட்க முடிந்த வேலாயுதம் “நான் போய்ப் பேசட்டுமா” என்று மகனைக் கேட்டார்.

“பொறுங்கப்பா. பார்ப்போம். இன்னைக்கு எப்படியாவது சாயங்காலமாவது வெளியே வராமல் இருக்க மாட்டான். அப்போது போய்ப் பேசுவோம். அப்படி வரலைன்னா வேணும்னா நாளைக்கு நாமளே போய்ப் பேசலாம்” என்று கல்யாண் அவரைக் கட்டுப்படுத்தினான்.

அன்று கல்யாண் ஆபிசுக்குப் போகவில்லை. அப்பா அல்லது மகன் மாறி மாறி வீட்டின் முன் இருந்தார்கள். காலை சுமார் பதினோரு மணிக்கு பக்கத்து வீட்டின் முன் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் நின்றது. அதிலிருந்து ஒரு வட இந்தியர் போலத் தெரிந்தவர் கோட்டும் சூட்டுமாக இறங்கினார்.  குல்லா அணிந்திருந்த அவர் உள்ளே போனார். கல்யாண் அந்தக் கார் ரிஜிஸ்ட்ரேஷனைக் கூர்ந்து பார்த்தான். மும்பை!

அந்த வட இந்தியரும் அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார். கார் ஏறிப் போய் விட்டார். அவரை வழியனுப்பக் கூட நாகராஜ் வெளியே வரவில்லை. நேற்று அந்த மில் அதிபரையும் வழியனுப்ப அவன் வெளியே வரவில்லை என்பதை வேலாயுதம் கல்யாணிடம் சொன்னார். இவர்கள் எல்லாம் எதற்கு இங்கே வந்து போகிறார்கள் என்பது தெரிந்தால் ஓரளவு பக்கத்து வீட்டு நாகராஜை அனுமானித்து விடலாம் என்று கல்யாண் எண்ணினான்.

கல்யாணுக்கு மதியம் மூன்று மணிக்கு ஒரு முக்கிய மனிதரிடம் அப்பாயின்மெண்ட் இருந்ததால் மதியத்திற்கு மேல் இப்படிக் காத்திருக்க முடியவில்லை. “நீ போ. இன்னைக்கு எப்படியாவது அவனை நான் பார்த்துப் பேசி விட்டுத் தான் மறுவேலை.” என்று வேலாயுதம் சொன்னார்.

மகன் போன பிறகு மிகவும் பொறுமையாக வெளியே காத்திருந்த வேலாயுதம் சிறுநீர் கழிக்க உள்ளே போவதற்குக் கூட மிகவும் தயங்கினார். அந்த நேரத்தில் அந்த நாகராஜ் வெளியே போய் விட்டால் இந்த நாளும் சந்தித்துப் பேச முடியாதே என்று யோசித்து இரண்டு தடவை அவசரமாகப் போய் இரண்டு நிமிடங்களுக்குள் வெளியே வந்து காத்திருந்தார்.

நாகராஜ் அன்று மாலை ஐந்தரை மணிக்கு வெளிப்பட்டான். சாதாரண உடை அணிந்து இருந்த அவன் மாலை நடைப்பயிற்சிக்குக் கிளம்பியவன் போலத் தோன்றினான்.  வேலாயுதம் தன் வயதுக்கு மீறிய ஓட்டமும் நடையுமாய் போய் தெருவில் அவனை எட்டினார். ”நமஸ்காரம்”

நாகராஜ் திரும்பி அவரைப் பார்த்து “நமஸ்காரம்” என்று சொன்னான். ஆனால் நடப்பதை அவன் நிறுத்தவில்லை.

வேலாயுதம் அவனுடன் சேர்ந்து நடந்து கொண்டே சொன்னார். “நான் உங்க பக்கத்து வீடு. பேர் வேலாயுதம்”  

நாகராஜ் தலையசைத்து விட்டு மவுனமாக நடந்தான். ஒரு புன்னகையோ, மறு கேள்வியோ எதிர்பார்த்து வேலாயுதம் ஏமாந்தார். ஆனால் வேலை ஆக வேண்டியிருக்கும் போது இதை எல்லாம் அவமரியாதையாக நினைக்கும் நபர் அல்ல அவர். வேகமாக நடக்கும் அவனுடன் மூச்சு வாங்க நடந்து கொண்டே ”உங்க பேர்?” என்று கேட்டார்.

“நாகராஜ்” என்றான் அவன். அவன் முகத்தில் புன்னகையும், வாயில் கேள்வியும் வரவில்லையே தவிர அவன் முகத்தில் அலட்சியமோ, அவரைத் தவிர்க்க நினைக்கும் முனைப்போ கூடத் தெரியவில்லை என்பது அவருக்கு ஆறுதலாக இருந்தது.

அவர் ”எங்களுக்குத் தொழில் டெக்ஸ்டைல்ஸ் மெஷினரி ஸ்பேர் பார்ட்ஸ். எக்ஸ்போர்ட் அதிகமா பண்றோம்” என்றார்.

அதற்கும் அவன் பொறுமையாகத் தலையசைத்து வேகம் குறைக்காமல் நடந்து கொண்டேயிருந்தான். அவனாகத் தன் தொழிலையும் சொல்வான் என்று எதிர்பார்த்து விட்டு அவன் சொல்லாமல் போகவே அவராகவே கேட்டார். “உங்க தொழில்?”



(தொடரும்)
என்.கணேசன்

தற்போது விற்பனையில்