என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 22, 2026

யோகி 161

ஷ்ரவன் சொன்னதைக் கேட்டு தேவானந்தகிரி சற்று தைரியம் அடைந்தார். கத்த முற்படாமல், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்க அவர் தீர்மானித்தார். ஷ்ரவன் சுருக்கமாக சைத்ரா கொலை வழக்கைப் பற்றிச் சொன்னான். வாசுதேவன் கொலை, கிருஷ்ணசாமி தற்கொலை பற்றி எல்லாம் சொல்லி விட்டு விசாரணைக்கு அவனை அரசு நியமித்ததாய் சொன்னான். விசாரணையில் முதல்வரின் பங்கை அவன் சொல்லவில்லை. அதே போல் பரசுராமன் பெயரைச் சொல்லாமல் அவனுக்குத் தெரிந்த ஒரு சுவாமிஜி மாந்திரீகத்தில் பூஜை செய்து ஏவல் சக்திகளை ஏவி விட்டதைச் சொன்னான். அதன் பின் அவன் அங்கு துறவியாய் சென்று கண்டுபிடித்ததையும், அந்தக் கொலையைக் கூட அவர்கள் அடியாட்களின் மேல் போட்டு தப்பித்து, குற்றவாளிகள் பாதுகாப்பாய் இருப்பதையும் சுருக்கமாகச் சொன்னான்.

 

முடிவில் ஷ்ரவன் சொன்னான். “ஏவல்சக்தி அனுப்பி எனக்கு உதவி செஞ்ச சுவாமிஜி நல்லவங்க பாதிக்கக்கூடாதுங்கறதுல மட்டுமில்லாமல். கெட்டவங்களும் செஞ்ச தவறுக்குத் தகுந்த தண்டனையை மீறி அனுபவிச்சுடக் கூடாதுங்கறதுலயும் ரொம்ப கவனமாய் இருந்தார் சுவாமிஜி. தப்பான கர்மா தன் கணக்குல வந்துடக்கூடாதுன்னு சொல்வார். இப்ப இந்தக் கொலைகாரங்க லட்சக் கணக்குல தர்றாங்கன்னு அவங்களுக்குப் பாதுகாப்பு தர்ற வேலைகளைச் செய்ய நீங்க போறீங்க. உங்க பேங்க் அக்கவுண்ட்ல வர்ற பணத்தை மட்டும் பாக்கறீங்க. உங்க கர்மா அக்கவுண்ட்ல சேர்றதைப் பத்தி நீங்க ஏன் சுவாமிஜி யோசிக்க மாட்டேங்கறீங்க? நீங்க காப்பாத்தற ஆள்கள் இனியும் எத்தனையோ தப்புகளைச் செய்வாங்க. இதுவரைக்கும் நீங்க செஞ்சதை, அவங்க தப்பானவங்கன்னு தெரியாமல் செஞ்சதாய் எடுத்துக்கலாம். ஆனால் அயோக்கியங்க, கொலைகாரங்க, படுபாவிங்கன்னு தெரிஞ்சதுக்கப்பறமா கூட நீங்க அவங்களுக்கு உதவினா உங்க பாவக்கணக்குல அதெல்லாம் வரவு ஆயிடாதா?”

 

அவன் சொல்லச் சொல்ல தேவானந்தகிரியின் பேத்தி நொண்டி விளையாடிக் கொண்டே அவர்களைக் கடந்து போனாள். ஷ்ரவன் சொன்னான். “நீங்க குடும்பஸ்தர். இவங்களுக்கெல்லாம் பணத்தோட சேர்ந்து பாவத்தையும் சேர்த்து வைக்கிற மாதிரி ஆயிடாதா? எங்க சுவாமிஜி மாதிரி நீங்களும் நிறைய தெரிஞ்சவர். உண்மையெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேன். இனி முடிவு எடுக்கறது உங்க கைல. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இனி எங்க பக்கத்துல இருந்து சின்ன அசௌகரியம் கூட உங்களுக்கு வராது.”

 

தேவானந்தகிரி சிலை போல் அமர்ந்திருந்தார். ஷ்ரவன் பரசுராமனின் பெயரைச் சொல்லா விட்டாலும் அவனுக்கு உதவியது பரசுராமன் தான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை. யோகாலயத்தில் செய்த பூஜைகளின் போதே அந்த அளவு ஏவல்சக்தியை பரசுராமனைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது என்று அவர் அறிந்திருந்தார். ஷ்ரவன் சொன்ன குற்றங்கள் அவரை அதிர வைத்தன. மூன்று கொலைகளைச் செய்த பின்னும் குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல், திமிர் அடங்காமல். அலட்சியமாய்  இருந்த குற்றவாளிகள் பக்கம் இது  வரை நின்றதே அவரைக் கூச வைத்தது. இந்த இளைஞன் சொல்வது போல இதுவரை செய்தது அறியாமையால் என்ற கணக்கில் சேர்த்தலாம். ஆனால் இனியும் அவர்களுக்கு உதவுவது இவன் சொல்வது போல பாவக்கணக்கிலேயே அல்லவா சேரும்? குடும்பத்திற்குப் பணத்தைச் சேர்த்து வைத்துப் போகா விட்டாலும் பாவத்தைச் சேர்த்து வைத்து விட்டுப் போவது, குடும்பத்திற்குச் செய்யும் துரோகம் என்ற உண்மையும் அவரைச் சுட்டது.

 

அவர் பரிதாபமாகச் சொன்னார்.  யோகாலயம் பத்தின புகார்கள் வந்து அங்கே முன்னாடி கூட்டம் கூடினப்ப நானே விலகணும்னு முடிவு பண்ணியிருந்தேன். அப்பறம் அவங்களே தோண்டிப் பார்க்கச் சொன்ன பிறகு அது எனக்கு நியாயமான அணுகுமுறையாய் தோணுச்சு. ஆள்கள் கைதானவுடனே, வேலைக்காரங்க செய்யற தப்புக்கு அவங்க எப்படி பொறுப்பாவாங்கன்னு நினைச்சுட்டேன். நான் அவங்க கிட்ட பணம் வாங்கியாச்சு. வர்ற வியாழக்கிழமை வர்றதாய் வாக்கும் கொடுத்துட்டேன். இனி போகலைன்னா அந்த அயோக்கியங்க என்னை சும்மா விடுவாங்கன்னு எனக்குத் தோணலை…. என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?”

 

ஷ்ரவன் சொன்னான்.

 

பாண்டியன் ஷ்ரவன் யாரென்பதைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். அவனைக் கைது செய்ய வந்த ஹைத்ராபாத் போலீஸாரின் புகைப்படங்களை தெலுங்கானா போலீஸில் உள்ள, பிரம்மானந்தாவின் பக்தர் ஒருவருக்கு அனுப்பி அவர்கள் பெயர்களைக் கேட்டார். இவர்கள் எங்கள் போலீஸ் அதிகாரிகளே இல்லை என்ற பதில் உடனடியாக வந்தது. அசிஸ்டெண்ட் கமிஷனருக்கு அத்தகவலை பாண்டியன் அனுப்பி வைத்தார். அசிஸ்டெண்ட் கமிஷனர் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, உடனடியாக விசாரணைக்கு ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார். போலீஸையே அவர்கள் ஏமாற்றியிருப்பது அவருக்குப் பொறுக்கவில்லை என்பதைத் தெரிவித்த அவர், யோகாலயாவும் ஒரு மோசடி புகார் மனு தந்தால் விசாரணைக்கு இன்னும் அழுத்தம் கிடைக்கும் என்றும் சொன்னார்.

 

அதை சனிக்கிழமை அனுப்பி வைப்பதாக பாண்டியன் அவருக்கு உறுதியளித்தார். வெள்ளியோடு அவர் தாயத்தின் சக்தி முடிகிறது. முன்னெச்சரிக்கையாக ஒரு நாள் முன்பே மாற்று தாயத்துக்கு அவர் ஏற்பாடு செய்து விட்டார். வியாழன் அன்று தேவானந்தகிரி வருகிறார். வியாழன் இரவே பூஜை முடிந்து தாயத்தும் போட்டுக் கொண்டால் பின் நிம்மதியாக அடுத்த மண்டலம் முடியும் வரை அவர் செயல்படலாம். அதற்குள் ஷ்ரவனையும், அவர்களுடைய முக்கிய எதிரியையும் பற்றி எல்லாவற்றையும் கண்டுபிடித்து தண்டித்து அழித்து விட்டால் பின் பழையபடி நிம்மதியாக இருக்கலாம். அதனால் பூஜை முடிந்து தேவானந்தகிரி திரும்பப் போகும் வரை மற்ற வேலைகளை நிறுத்தி வைக்க பாண்டியன் தீர்மானித்திருந்தார். சுகுமாரனின் நிலைமை அவரை மிகவும் பயமுறுத்தி விட்டது.

 

நேற்று சுகுமாரனைப் பார்க்க அவர் சென்றிருந்தார். சுகுமாரன் இரண்டு நிமிடங்கள் அவரிடம் இயல்பாய் பேசினார். ஆனால் மூன்றாவது நிமிடம் மண்டை ஓட்டு பீதி சுகுமாரனை ஆட்கொண்டது. இடையிடையே வயிற்று வலியாலும் அவர் துடித்தார். குடிகாரன் கல்லெடுத்து எறிந்த காயங்கள் ஆறி விட்டன. ஆனால் பீதியும், வயிற்று வலியும் அவரைச் சித்திரவதை செய்வதை பாண்டியன் நேரடியாகப் பார்க்க முடிந்தது. அந்த ஒரு நிலைமை தனக்கு வருவதை அவரால் கற்பனை செய்து கூடப் பார்க்கப் பிடிக்கவில்லை.

 

செவ்வாய்க்கிழமை அன்று பாண்டியன் தேவானந்தகிரிக்குப் போன் செய்தார். அலைபேசியை தேவானந்தகிரியின் சீடன் ஒருவன் தான் எடுத்தான். “சுவாமிஜி ஆஸ்பத்திரியில் இருக்கார். காலைல தான் போய் சேர்ந்தார்.” என்றான்.

 

என்ன ஆச்சு?” பாண்டியன் சந்தேகத்தோடு கேட்டார்.

 

வலது கால் கட்டை விரல்ல கொஞ்ச நாளுக்கு முன்னாடி காயமாயிருந்துச்சு. குணமாயிட்டு வந்துகிட்டும் இருந்துச்சு. நேத்து ராத்திரியில் இருந்து அவருக்கு வலி ஜாஸ்தியாயிடுச்சு

 

அவன் சொன்னதில் பாண்டியன் அதிருப்தி அடைந்தார். உடனடியாக கண்ணனையும், கூட இரண்டு தடியர்களையும் காசர்கோடு அனுப்பி வைத்தார். ”உண்மையான்னு பாருங்க. பொய்யின்னா பேசாம அந்த ஆளைத் தூக்கிட்டு வந்துடுங்க.”

 

உடனடியாக விமானத்தில் சென்ற அவர்கள் காசர்கோடு போய் அவரை அழைத்தார்கள்.  ஆள் ஆஸ்பத்திரியில் தான் இருக்கார். அந்தக் காயம் செப்டிக் ஆயிருக்காம். விரலே எடுக்க வேண்டிய நிலைமைன்னு டாக்டர் சொல்றாங்களாம். பெருசா மாவுக்கட்டு போட்டுருக்காங்க.”

 

நீங்க அவர் கிட்ட பேசினீங்களா?”

 

பேசினோம். அவர் வருத்தம் தெரிவிச்சார். பத்து லட்சத்தை திருப்பி அனுப்பறாராம்.”

 

சொன்னது போல் பத்து லட்சம் ரூபாய் பாண்டியனுக்குத் திரும்பி வந்தது. பாண்டியன் நிலைமை பூதாகரமாய் வளர்வதை உணர்ந்து உடனடியாக பிரம்மானந்தாவிடம் பேசினார். நிலைமையைச் சொன்னார். “தேவானந்தகிரி மாதிரி வேற யாரையாவது நாம கண்டுபிடிச்சு சீக்கிரம் வரவழைக்கணும் யோகிஜி.

 

தேவானந்தகிரிக்கு இணையாக இன்னொரு மாந்திரீக விற்பன்னரை அவர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை விட மேலான நிலையில் இருக்கும் பரசுராமன்நமக்கு ஆகாத நபர்என்று பிரம்மானந்தா சொன்னாலும் அவரை வரவழைக்க பாண்டியன் தயாராய் இருந்தார். விஷயமுள்ளவன், வெற்றுவேட்டு இந்த இரண்டு ரகம் தான் அவர் கணக்கில் இருக்கிறார்கள். விஷயமுள்ளவனுக்கு எத்தனை தரவும் அவர் தயார். விஷயமுள்ளவனை அவர் ஆகாத நபராய்நினைப்பதில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாய் வெளிநாட்டில் இருக்கும் பரசுராமன் இந்தியா திரும்பி வரவே இரண்டு மாதங்கள் ஆகும் என்ற தகவல் கிடைத்தது.

 

பிரம்மானந்தா தனக்கு நெருக்கமான ஆட்கள் அனைவரிடமும் விசாரித்து முடிவில் இரண்டு மந்திரவாதிகளைஇருப்பவர்களில் பரவாயில்லைஎன்ற ரகமாகக் கண்டுபிடித்தார். ஒருவர் நாகப்பட்டிணத்து ஆசாமி. இன்னொருவர் ஹரித்வாரில் இருப்பவர்.  இருவரில் யார் மேல் என்று மறுபடியும் பலரிடமும் விசாரித்து ஹரித்வாரில் இருக்கும் மந்திரவாதி விஸ்வகீர்த்தி என்பவரை அவர்கள்  தேர்ந்தெடுத்தார்கள்.   


(தொடரும்)

என்.கணேசன்

 

புதிய நாவல் ச(க்)தி!



2 comments: