என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 8, 2026

யோகி 159

 

ஷ்ரவனின் தனிப்பட்ட வாழ்க்கை சந்தோஷமும், நிறைவும் கொண்டதாகவே இருந்தது. ஸ்ரேயா அவன் ஆபத்தில்லாமல் யோகாலயத்திலிருந்து தப்பி வந்ததில் நிம்மதியடைந்தாள். அவன் அவள் மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்த வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடிந்ததில் அவளுக்குத் திருப்தி இருந்தது. அவள் அதைக் கண்டுபிடித்துக் கொடுத்ததை வைத்து தான், புதைக்கப்பட்டது சந்திரமோகனாகத் தானிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்ததாய் அவன் அவளைப் பாராட்டிச் சொன்ன போது அவளுக்கு சர்வதேச விருது கிடைத்தது போலிருந்தது. அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து அவனுக்குச் சந்தோஷமாய் இருந்தது. அவனுடைய பெற்றோர் அவளுடைய பெற்றோரிடம் பேச ஆரம்பித்து விட்டார்கள். திருமண நிச்சயம் செய்ய இரண்டு வாரம் கழித்து ஒரு நல்ல நாளும் குறித்து விட்டார்கள்.

 

ஷ்ரவன் சேதுமாதவனுடன் அலைபேசியில் பேசினான். அவரிடம் அவன் கண்டுபிடித்த உண்மைகளைச் சொன்னான். கிருஷ்ணசாமியையும், அவரையும் எதாவது செய்து விடுவோம் என்று பயமுறுத்தி தான் அவர்கள் நீதிமன்றத்தில் சைத்ராவைத் தங்களுக்கு ஆதரவாகப் பேச வைத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்ன போது சேதுமாதவன் கண்கலங்கினார். என்ன நடந்திருக்கிறது என்று தெரியாமல் இருந்ததே அவருக்கு ஒரு வகையில் சித்திரவதையாக இருந்தது. இப்போது ஷ்ரவனின் உதவியால் அது தெளிவாகி விட்டது. குற்றவாளிகளை எதுவும் செய்ய முடியாவிட்டாலும் அவன் பாதுகாப்பாகத் தப்பித்து வந்தது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்த நல்ல இளைஞனுக்கு அங்கு ஏதாவது ஆபத்து வந்திருந்தால் அவரால் தாங்கியிருக்க முடியாது. அவருக்கு அந்த யோகியைப் பற்றி அவன் சொன்னதெல்லாம் பிரமிப்பாக இருந்தது. அந்த யோகி சொன்ன வார்த்தைகள் அவரை மெய் சிலிர்க்க வைத்தன. அவர் சீக்கிரத்தில் ஒரு நாள் அந்த யோகியைப் போய்ச் சந்திப்பதாகச் சொன்னார்.

 

உண்மைக் குற்றவாளிகள் எந்த தண்டனையும் இல்லாமல் பாதுகாப்பாய் இருப்பது அவனுக்கு உறுத்திக் கொண்டு தான் இருக்கிறது என்பதை ஷ்ரவன் சொன்ன போது அவர் அமைதியாகச் சொன்னார். “தெய்வம் நின்று கொல்லும், ஷ்ரவன். யாரும் அவரவர் கர்மாவில் இருந்து தப்ப முடியாது. உன்னால முடிஞ்சதை எல்லாம் நீ செஞ்சிருக்காய். அந்த யோகி சொன்ன மாதிரி மீதி எல்லாம் கடவுள் தீர்மானம்.”

 

ஷ்ரவன் ஒரு நாள் பரசுராமனுடன் அலைபேசியில் பேசினான். அவன் வெற்றிகரமாக உண்மைகளைக் கண்டுபிடித்து யோகாலயத்திலிருந்து தப்பி வந்ததை அவரும் பாராட்டினார். அவருடைய மந்திரோபதேசத்தை அவன் முறையாகப் பயன்படுத்திக் கொண்ட விதம் அவரைக் கவர்ந்தது. உபதேசங்கள் சுலபம். ஆனால் விடாமல் தொடர்ந்து முயற்சி செய்வது சிலருக்கே சாத்தியப்படும்... உண்மைக் குற்றவாளிகள் பாதுகாப்பாக இருப்பதில் அவன் உணர்ந்த அதிருப்தியை ஷ்ரவன் அவரிடமும் சொன்ன போது அவரும் கர்மா தன் வேலையைச் செய்யும் என்றார்.

 

அவன் சொன்னான். “இருக்கலாம் சுவாமிஜி. ஆனால் குற்றவாளிகள் பாதுகாப்பாய் இருக்கறதைப் பார்க்கறப்ப எனக்கு என் வேலை  பாதி மட்டும் தான் முடிஞ்ச மாதிரி தோணுது.”

 

பரசுராமன் சொன்னார். “அப்படின்னா உன் திருப்திக்காக, நீ இது வரை பயன்படுத்தின மந்திர ஜபத்தை விடாமல் தொடர்ந்து செய். இத்தனை செஞ்ச அது மீதியையும் பார்த்துக்கும்….”

 

ஷ்ரவன் அவர் சொன்னபடியே தினமும் அந்த மந்திர ஜபத்தைத் தொடர்ந்து செய்தான். செய்த நாட்களில் முன்பு போலவே அவனால் அந்த மந்திரத்துடன் ஒன்றுபட முடிந்தது.  அதுவே அவனுக்கு ஒரு நல்ல அறிகுறியாகத் தோன்றியது. அந்த யோகி சொன்னதும் அவன் நினைவுக்கு வந்தது. எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது. எதை நம் மூலம் செய்ய வேண்டுமோ, அதை அவனே செய்ய வைத்துக் கொள்கிறான்.” யோகி சொன்னபடி இறைவன் பார்த்துக் கொள்வானோ, இல்லை சேதுமாதவனும், பரசுராமனும் நம்பும்படி கர்மா பார்த்துக் கொள்ளுமோ, முடிந்ததை எல்லாம் செய்து கொண்டிருப்பதோடு அவன் பொறுப்பு முடிகிறது. கடவுளோ, கர்மாவோ பலன் தரும் வரை அவன் காத்திருக்கத் தான் வேண்டும்அவன் மனம் சற்று அமைதி அடைந்தது. 

 

டாக்டர் சுகுமாரனின் மனைவியிடம் அவளுடைய நெருங்கிய தோழி அலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தாள். ”நான் சொன்னப்போ நீ நம்பலை இப்ப என்னாச்சு பார்த்தாயா? அந்த பிரம்மானந்தாவுக்கு யோகாலயத்துக்கு உள்ளேயே அவரைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியலை. இந்த லட்சணத்துல அவர் பேசறது மட்டும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி. அவரே அப்படின்னா அவர் சிபாரிசு பண்ற மந்திரவாதி எப்படியிருப்பார்? யோசிச்சு பார். நாய்க்கு தாயத்து கட்டற ரகத்துல தான் இருப்பார். உன் கணவர் அந்த தாயத்தை இப்பவாவது கழட்டி விட்டாரா இல்லையா?”

 

நல்ல வேளையாக அந்த நேரத்தில் டாக்டர் சுகுமாரன் வீட்டில் இருக்கவில்லை. அவர் இருந்திருந்தால் உடனே அருகில் வந்து நின்று அவர்கள் பேச்சிற்கு காது கொடுப்பார். பிரளயமே அங்கு வந்திருக்கும். அதனாலேயே அவள் தன் தோழியிடம், அவர் ஆஸ்பத்திரி போயிருக்கும் நேரமாகப் பார்த்துப் பேசச் சொல்லியிருக்கிறாள்.  இப்போது அவளல் மனம் விட்டுப் பேச முடிந்தது.

 

அதையேன் கேட்கறே? இவரும் கழட்ட மாட்டேங்கறார். டாமியோட தாயத்தையும் கழட்ட மாட்டேங்கறார். கழட்டச் சொன்னா சாமி வந்தவர் மாதிரி ஆடறார்.”

 

அது அவராய் ஆடறதில்ல. அந்த தாயத்து அப்படி ஆட வைக்குதாம். அப்படித் தான் எங்க சுவாமிஜி சொல்றார். நாய்க்கும் தாயத்து கட்டியிருக்குன்னு சொன்னவுடனே அவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்என்று சொல்லி தோழி தானும் சிரித்தாள்.

 

சுகுமாரன் மனைவிக்கு அவமானமாக இருந்தது. ”என்ன பண்றது. ஒரு காலத்துல நாத்திகனாய் இருந்த ஆளா இதுன்னு எனக்கு ஆச்சரியமாய் இருக்கு. இதுக்கெல்லாம் எப்ப விடிவுகாலம் வருமோ தெரியலை.”

 

இருண்ட காலமும், விடிவு காலமும் அவங்கவங்களாய் ஏற்படுத்திக்கறது தான்.  அவர் தூங்கிட்டு இருக்கறப்ப தாயத்தை வெட்டி விட்டுடு. அதே மாதிரி அந்த நாயோட தாயத்தையும் கழட்டி விட்டுடு. எல்லாம் சரியாயிடும். விடிவுகாலம் தானாய் பிறந்துடும்.”

 

இவர் இந்த வீட்டுல ஏதோ ஆவி உலாவிகிட்டு இருக்கு. தாயத்தை எடுத்தா அது தாக்க ஆரம்பிச்சுடும்னு சொல்றாரே?”

 

அப்படி ஆவி உலாவிகிட்டு இருந்தா அது ஏன் உன்னை எதுவும் செய்யாமல் இருக்கு. நீ என்ன அந்த ஆவிக்கு ஃப்ரண்டா? அப்படியும் ஏதாவது பிரச்சினை இருக்கற மாதிரியிருந்தால், மந்திரிச்ச தகடு ஒன்னை உன் வீட்டு வாசல்ல புதைச்சு வெச்சுட்டால் ஆவிகள் நெருங்கவே நெருங்காதுன்னு எங்க சுவாமிஜி சொல்றார். வேணும்னா அவரே மந்திரிச்ச தகட்டை புதைச்சுக் குடுப்பார்.”

 

இவர் பயப்படறாரே!”

 

பயம் போகணும்னா ஒன்னும் ஆகாதுங்கற நம்பிக்கை வேணும். அந்த நம்பிக்கை வரணும்னா தாயத்தைக் கழட்டணும். தாயத்தைக் கழட்டினாலும் ஒரு தொந்தரவும் இல்லைங்கறது உறுதியாயிட்டா, ‘அட தேவையில்லாமல் பயந்துட்டோம்கிறது அவருக்குப் புரியும். அது தான் ஒரே வழி

 

அந்த ஒரே வழியை அன்று சாதித்து விட வேண்டும் என்று சுகுமாரனின் மனைவி மனதில் உறுதியெடுத்துக் கொண்டாள்.

 

அன்றிரவு களைப்புடன் வந்த சுகுமாரன் சீக்கிரமே உறங்கி விட்டார். அவர் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போகும் வரை காத்திருந்த அவள், பின் மெல்ல அந்த தாயத்தை கத்திரியால் வெட்டி விட்டாள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவர் தொடர்ந்து உறங்குவதைப் பார்த்து அவள் மெல்ல முணுமுணுத்தாள். “இவ்வளவு தான் மனுஷா. சொன்னால் புரிஞ்சுக்கணும்.”

 

பின் மெல்ல வீட்டின் பின்புறம் போனாள். டாமி அவளைப் பார்த்து எழுந்து நின்று வாலாட்டியது. கட்டியிருந்த டாமியை அவிழ்த்து விட்டவள் அதன் கழுத்தில் இருந்த தாயத்தையும் மெல்ல வெட்டி விட்டாள்.  பின் அவள் சென்று உறங்கி விட்டாள்.

 

நள்ளிரவில் டாமி ஆக்ரோஷமாகக் குரைக்க ஆரம்பித்தது. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் கண்விழிக்கவில்லை. சுகுமாரன் தான் கண்விழித்து எழுந்து போனார். டாமி தோட்டத்தில் எதையோ பார்த்து குரைப்பது தெரிந்தது. “என்னடா பழைய ஞாபகமா?” என்று புன்னகையுடன் கேட்டார். அவர் பார்வை டாமியின் கழுத்தில் நிலைத்தது. அதன் கழுத்தில் தாயத்து இல்லை. அவர் திகைப்புடன் அது பார்த்துக் குரைக்கும் இடத்தைப் பார்த்தார்.   ஒரு மண்டை ஓடு அந்தரத்தில் தெரிந்தது. பீதியுடன் அவர் தன் கையைத் தடவினார். அங்கேயும் தாயத்து இல்லை. இரண்டு தாயத்துகளையும் களைந்தவள் அவர் மனைவி தான் என்பது அவருக்குத் தெரிந்து விட்டது. அவர் கடுங்கோபத்துடன் வீட்டுக்குள் பாய்ந்து ஓடினார். அப்போது தான் டாமி குரைக்கும் சத்தம் கேட்டு அவர் மனைவி எழுந்திருந்தாள். “அடிப்பாவிஎன்று சத்தமிட்டபடி அவர் ஓடி வருவதைப் பார்த்தவுடன் அவளுக்கு ஆபத்து விளங்கி விட்டது. அவள் ஓடி குளியலறைக்குச் சென்று கதவைத் தாளிட்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டாள்.

 

குளியலறைக் கதவைப் பலமாகத் தட்டியபடியே அவர் திரும்பிப் பார்த்தார். அவர் முகத்துக்கு எதிரே அந்த மண்டை ஓடு அந்தரத்தில் நின்றிருந்தது. வேகமாக அவர் வெளியே ஓடினார்  


(தொடரும்)

என்.கணேசன்





No comments:

Post a Comment