என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 11, 2026

சதுரங்கம் 22


 விமல் கேட்டதற்கு ராஜ்நாத் புன்னகையுடன் பதில் சொன்னார். “சுவாமி. இந்தக் காலத்தில் பணம் இருந்தால் போதும், ஆத்ம ஞானத்தைத் தவிர எல்லாம் கிடைக்க வழி இருக்கிறது, ஆத்ம ஞானம் ஒன்றை மட்டும் தான் பணம் கொடுத்து யாரும் பெற முடிவதில்லை. அதனால் தான் பணம் இருந்தும், வசதிகள் பல இருந்தும், எல்லாவற்றையும் விட்டு விட்டு நான் இங்கே வந்திருக்கிறேன்.”

 

விமலுக்கு ஆத்ம ஞானம் தேவையிருக்கவில்லை. ஆத்ம ஞானத்திற்காக உப்பு சப்பில்லாத வாழ்க்கை வாழவும் அவன் தயாராக இல்லை. அந்தத் துறவி எதைத் தேடி இங்கு வந்து சேர்ந்தார் என்று தெரிந்து கொள்ளும் அக்கறையும் அவனுக்கு இல்லை. அதனால் மனதிற்குள் விமல் சலித்துக் கொண்டான். ’ஏன்யா நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல், கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி என்னைச் சித்திரவதை செய்கிறாய்?’

 

ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் வேறாக இருந்தன. “உண்மை சுவாமி. நானும் ஏழரை கோடி ரூபாயை விட்டு இங்கே வந்திருப்பது அதற்காகத் தான். என்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் புதிய எண் சிம் வாங்க பணம் செலவு செய்ய வேண்டுமென்றாலும் நான் தயார் தான்.”

 

டெல்லி கரோல் பாக் மார்க்கெட்டில் ராஜா சிங் என்ற ஒருவன் ஒரு மொபைல் கடை வைத்து இருக்கிறான். அவன் புதிய சிம்களையும் விற்கிறான். வேறு பெயர் விலாசத்தில் வாங்க வேண்டும் என்றால் அவனே போலி டாக்குமெண்ட்கள் தயார் செய்து புதிய சிம் தருகிறான். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தான். இப்போது எவ்வளவு வாங்குகிறான் என்று தெரியவில்லை....”

 

விமல் அத்தகவலை மனதில் குறித்துக் கொண்டான். பின் சொன்னான். “நல்லது. இப்போதைக்கு எனக்குத் தேவையிருக்காது. ஏனென்றால் இங்கே வருவதற்கு முன் தான் அந்த ட்ரஸ்டீயிடம் எல்லாவற்றையும் நான் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். ஆறு மாதங்கள் கழித்து தான் எனக்கு அடுத்தது பேச வேண்டியிருக்கும். அதனால் அதற்கு முன் நான் வாங்கிக் கொள்கிறேன். மற்றபடி வேறு யாரிடமும் எனக்குப் பேச எதுவுமில்லை.”

 

ராஜ்நாத் தலையசைத்தார். அவனுக்குப் புதிய மொபைலும் சிம்மும் அவசரமாகத் தேவை என்பதால் சீக்கிரமாக வாங்கப் போகிறான் என்றாலும் அது அந்தத் துறவிக்கு அது தெரிய வேண்டாம் என்று விமல் நினைத்தான். நாளை ஏதாவது ஒரு பிரச்சினை ஆனால், அவன் புதிய சிம்மை ராஜா சிங்கிடமிருந்து வாங்கியதை இந்தத் துறவி நினவுகூர்வது அவனுக்கு ஆபத்தாக முடியலாம்...

 

ர்ஜுனிடம் யசோதாவும், ராஜாராமும் மாறி மாறி வாசுதேவனைக் குறித்த நினைவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

யசோதா சொன்னாள். “ஒரு காலத்துல இந்த வீட்டுல சாப்பிட கட்சிக்காரங்க குறைஞ்சது பத்து பேராவது இருப்பாங்க. நான் உன் தாத்தா கிட்ட கறாரா சொல்லிட்டேன். “உங்களுக்கும் ரெண்டு பசங்களுக்கும் வேணும்னா நான் சமைச்சுப் போடுவேன். கட்சிக்காரங்களுக்கும் சேர்த்து சமைக்கணும்னா நீங்க சமையலுக்குத் தனியா ஆளைப் போட்டுக்கோங்கன்னு. அப்பறமா தான் சமையலுக்கு ஒரு ஆளை வேலைக்குச் சேர்த்துகிட்டார் அவர். அதுவும் நாம என்ன சாப்பிடறோமோ அதைத் தான் தொண்டர்களுக்கும் போடணும்னு சொல்வார். அவங்க கூட சேர்ந்து தான் சாப்பிடுவார்…”

 

ராஜாராம் புன்னகையுடன் சொன்னார். “இந்த காலத்துல எல்லாம் தலைவர்கள் ஒரு போட்டோஷுட்டுக்காக வேணும்னா தொண்டர்களோட சேர்ந்து சாப்பிடுவாங்க. சரியாய் சொன்னா சாப்பிடறது மாதிரி நடிப்பாங்க. காமிரா நகர்ந்தவுடனே அவங்களும் நகர்ந்துடுவாங்க…”

 

அர்ஜுன் புன்னகைத்தான். இன்று அவருடைய செல்லப்பிள்ளையாக வலம் வரும் முதலமைச்சர் சரவணனும் அப்படித்தான். சமபந்தி போஜனங்கள் எல்லாம் புகைப்படங்களுக்காகத் தான். சென்ற வாரம் அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றின் ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து ஒரே ஒரு வாய் மட்டும் சாப்பிட்டு விட்டு சரவணன் புகைப்படம் எடுத்து முடித்தவுடன் எழுந்து போனதைப் பற்றி அர்ஜுன் கேள்விப்பட்டிருக்கிறான்.  இதை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கிற போது தினமும் தொண்டர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட தாத்தா வாசுதேவன் உண்மையான தலைவன் மட்டுமல்ல, மாமனிதனும் கூட என்று அர்ஜுன் எண்ணிக் கொண்டான்.

 

ஞானமூர்த்தியும் வெளியூர்களுக்குச் செல்லும் போது தொண்டர்களுடன் சேர்ந்து தான் சாப்பிடுவார். அவரும் இயல்பாகவே ஏற்ற தாழ்வுகள் பார்ப்பவர் அல்ல. ஆனால் தன் தந்தையைப் பற்றி இத்தனை உயர்வாகப் பேசும் ராஜாராம் அப்படி சாப்பிடக்கூடியவர் அல்ல. அவர் ஒரு கட்சித் தலைவர் அல்ல என்பதைக் காரணமாக அவர் சொல்லலாம். யோசித்துப் பார்த்தால், ராஜாராம் எந்தப் பதவியும் வகிக்காமலேயே, பதவிக்கு உரிய பிரச்சினைகளச் சந்திக்காமலேயே, பதவிக்குக் கிடைக்கும் அத்தனை பலன்களையும், கௌரவத்தையும் அனுபவித்து வருகிறார். வெளியே நிற்கும் இரண்டு போலீஸ்காரர்களின் காவல் கூட அப்படித்தான்.

 

எந்தக் கட்சியிலும், எந்தப் பொறுப்பிலும் இல்லாத அவரை அச்சுறுத்தி யாரோ ஒரு மொட்டைக்கடிதம் அனுப்பிய பின், அவருடைய பாதுகாப்புக்காக முதலமைச்சர் நிறுத்தியிருக்கும் போலீஸ் காவல் அது. ஆளும் கட்சிக்காரர் ஒருவரையே அப்படி ஒரு மொட்டைக்கடிதம் எழுதி அனுப்ப வைத்திருப்பார்கள் என்று நிருபர்கள் பேசிக் கொண்டது அர்ஜுன் காதிலும் விழுந்திருக்கிறது.

 

ராஜாராமின் பார்வை சூட்சுமமானது. “என்னடா யோசிக்கிறாய்?”

 

அர்ஜுன் கண்ணிமைக்காமல் சொன்னான். “தாத்தா எப்படிப்பட்ட உயர்ந்த மனுஷன்னு ஆச்சரியமாய் யோசிக்கிறேன் சித்தப்பா”.

 

யசோதா வறண்ட குரலில் சொன்னாள். “என்ன உயர்ந்த மனுஷன்? பிழைக்கத் தெரியாத மனுஷனாவே கடைசி வரைக்கும் வாழ்ந்துட்டு போயிட்டார்.”

 

ராஜாராம் சிரித்துக் கொண்டே சொன்னார். “டேய் இது. பாட்டி பேரன் கிட்ட தனிப்பட்ட முறையில் சொல்லும் கருத்து. இதையெல்லாம் பத்திரிக்கைல எழுதிடாதே.”   

 

அர்ஜுனும் சிரித்தான். “கவலைப்படாதீங்க சித்தப்பா. நீங்க என்ன சொன்னாலும் சென்சார் பண்ணி தான் பத்திரிக்கைல எழுதுவேன். ஒரு விதத்துல பார்த்தா உயர்ந்த மனுஷன்கிறதே பிழைக்கத் தெரியாத மனுஷனைத் தானே

 

அதைக் கேட்டு ராஜாராமும் சிரித்தார். ஆனால் யசோதா சிரிக்கவோ, பதில் கருத்து சொல்லவோ இல்லை. அவள் தன் கணவனைப் பற்றிய நினைவுகளில் தங்கி இருப்பதாக அர்ஜுனுக்குத் தோன்றியது.  என்ன யோசிக்கிறாள்?

 

இன்றைய தமிழக அரசியலில் ராஜாமாதா அவள். முதலமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களும், வாசுதேவனின் நினைவு நாளில் மட்டுமல்ல, அவரவர் பிறந்த நாளில் அங்கு வந்து அவளிடம் ஆசி வாங்கிக் கொள்வது, தவறாமல் சடங்கு போல் நடக்கிறது.  அப்படி வணங்குவது புகைப்படமும் எடுத்துக் கொள்ளப்பட்டு பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பப்படும். அவரவர் தாயையாவது அப்படி அவர்கள் வணங்குவார்களா என்பது சந்தேகமே. அடுத்ததாய் ராஜாராமிடம் ஆசி வாங்குவார்கள். இத்தனை பெருமையும் அவளுக்கு வாசுதேவனின் மனைவி என்ற வகையில் தான் கிடைக்கின்றது. அதைப்பற்றி அவள் நினைக்கிறாளோ?

 

அர்ஜுன் அவளிடம் விளையாட்டாய் கேட்டான். “பாட்டி நீங்க தாத்தா கிட்ட சண்டை போடுவீங்களா?”

 

யசோதா தன்னையும் மீறிப் புன்னகைத்தாள். “அது தினமும் நடக்கும். ஆனா என்ன, ஒரு பிரயோஜனமும் இருக்காது. என்ன சொன்னாலும் ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவார். சொல்றது ஒரு நிமிஷமும் உள்ளே தங்காது.”

 

உள்ளேயிருந்து மைதிலியின் குரல் கேட்டது. “இப்ப புரியுது. உங்க மகனுக்கு யார் கிட்ட இருந்து அந்த புத்தி வந்துருக்குன்னு.”  

 

ராஜாராம் புன்னகைத்தபடி அர்ஜுனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார்.  யசோதா சமையலறையைப் பார்த்தபடி சொன்னாள். “இவன் எத்தனையோ பரவாயில்லை. நானும் பார்க்கறேனில்ல, நீ சொன்னதை பாதியாவது கேட்டுக்கறான். இவங்கப்பா சுத்த மோசம். நாயா கத்தினாலும் எல்லாம் முடிஞ்சதுக்கப்பறம் சில சமயம், என்னவோ சத்தம் கேட்டுச்சேங்கற மாதிரி, யோசனையோட பார்ப்பார். அப்பவெல்லாம் அவர் கழுத்தை நெறிக்கலாமான்னு தோணும்.”

 

அர்ஜுன் சிரித்தபடி கேட்டான். “ஆனால் நீங்க அப்படி செஞ்சிடலயே பாட்டி?”

 

யசோதாவும் சிரித்தபடி சொன்னாள். “இல்லை. அந்தக் காலத்துல எத்தனை பேசினாலும் இந்தக் காலம் மாதிரி நாங்க அடாவடியாய் போனதில்லை.”

 

ராஜாராம் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஆனாலும் அப்பா உன்னை எதிர்த்து பேசி நான் கேட்டதேயில்லையேம்மா?”

 

நான் பேசினதை அவர் காது கொடுத்து கேட்டிருந்தா தானடா திருப்பி எதாவது பதிலுக்குச் சொல்ல முடியும்? கேட்டே இருக்கலைன்னா?”

 

அர்ஜுன் ராஜாராமிடம் கேட்டான். “நீங்களும் தாத்தா கூட சண்டை போட்டிருக்கீங்களா சித்தப்பா?”

 

அந்த ஒரு கேள்வியில் ராஜாராமின் புன்னகை அப்படியே உறைந்தது.


(தொடரும்)

என்.கணேசன்

No comments:

Post a Comment