சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 2, 2024

யோகி 65

பாண்டியன் தனது இரண்டாவது அந்தரங்க அலைபேசி மூலம் பிரம்மானந்தாவின் ரகசிய அலைபேசி எண்ணை உடனடியாக அழைத்தார். அலைபேசி ஒரு முறை அடித்த பின் இணைப்பைத் துண்டித்து விட்டுக் காத்திருந்தார்.

 

பாண்டியன் அழைத்த போது பிரம்மானந்தா மதுரையில் ஒரு மத்திய அமைச்சரோடு பேசிக் கொண்டிருந்தார். கைபேசியை எடுத்துப் பார்த்த பிரம்மானந்தாவுக்கு அதற்கு மேல் அந்த அமைச்சரின் பேச்சில் கவனம் செலுத்த முடியவில்லை. மிக மிக அவசியம் வந்தால் ஒழிய அந்த எண்ணிலிருந்து இந்த எண்ணுக்கு அழைப்பு வராது...

 

திடீரென்று பிரம்மானந்தா அமைச்சரிடம் சொன்னார். “சரி நண்பரே, இனி ஒரு நாள் சாவகாசமாய் பேசுவோம். என் தியான நேரம் நெருங்கி விட்டது.”

 

அமைச்சர் தான் பேச வேண்டியிருந்த முக்கிய விஷயத்தை இன்னும் பேச ஆரம்பித்திருக்கவில்லை. அதைச் சொல்ல அவர் வாயைத் திறப்பதற்குள் பிரம்மானந்தா எழுந்து நின்று விட்டார். அமைச்சரும் வேறு வழியில்லாமல் எழுந்து நின்றார். “உங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கு யோகிஜி. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் தியானத்திற்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் அசாத்தியம். உண்மையைச் சொன்னால், என்னால் அது முடிவதில்லை. காரணம் நேரமில்லைங்கறது தான்.”

 

பிரம்மானந்தா புன்னகையுடன் சொன்னார். “மூச்சு விட நேரமிருக்கும் வரையில் தியானம் செய்யவும் நேரமிருக்க வேண்டும்.”

 

அமைச்சர் சிரித்துக் கொண்டே, கைகூப்பி சொன்னார். “அருமையாய் சொன்னீங்க. இனி தியானம் செய்ய நேரமில்லைன்னு நான் சத்தியமாய்ச் சொல்ல மாட்டேன்... நான் இன்னும் சில விஷயங்களை உங்களிடம் பேச வேண்டியிருக்கிறது. அடுத்த தடவை வரும் போது சொல்கிறேன். வரட்டுமா யோகிஜி?”

 

பிரம்மானந்தா ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தினார். அமைச்சர் சென்றவுடன், தனதறைக்குத் திரும்பி வந்த பிரம்மானந்தா, அறைக்கதவைத் தாளிட்டு படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, தன் ரகசிய அலைபேசியில் பாண்டியனை அழைத்தார். “சொல்லு பாண்டியன் என்ன விஷயம்?”

 

யோகிஜி, நீங்க ஆவி இருக்கறதா நம்பறீங்களா?”

 

பிரம்மானந்தா திகைத்தார். இந்தக் கேள்வியை இந்த மனிதனிடமிருந்து அவர் நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் அவசர அழைப்பாய் அழைத்து இந்தக் கேள்வியை பாண்டியன் ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை. பாண்டியனிடம் பொய் பேச வேண்டிய அவசியமும் இல்லை. பிரம்மானந்தா லேசாய் சிரித்தபடி சொன்னார். “நான் பார்த்திருக்கறது நீராவி மட்டும் தான் பாண்டியன். அதனால அதை மட்டும் நான் நம்பறேன்.”

 

உங்களுக்கு கிடைக்காத பாக்கியம் டாக்டர் சுகுமாரனுக்கும், எனக்கும் கிடைச்சுருக்கு யோகிஜி. நாங்க சைத்ராவோட ஆவியைப் பார்த்தோம்.”

 

பிரம்மானந்தா திகைத்தார். இந்த அபத்தத்தை பாண்டியன் சொல்லிக் கேட்டது தான் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இதுநாள் வரை பாண்டியன் அபத்தமாகப் பேசி அவர் கேட்டதேயில்லை. மற்றவர்கள் அபத்தமாய்ப் பேசுவதையும் பாண்டியன் சிறிதும் சகிக்கக்கூடியவரல்ல. “பாண்டியன்?”

 

பாண்டியனுக்கு பிரம்மானந்தரின் அதிர்ச்சி புரிந்தது. அவர் சுகுமாரனின் அழைப்பு இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை நேரத்தில் வந்ததிலிருந்து நடந்ததை எல்லாம் சுருக்கமாகச் சொன்னார்.  தற்போது அவர் இருப்பிட வாசலில் ஒரு ஓநாயும், சுகுமாரன் வீட்டில் அந்தரத்தில் ஒரு மண்டை ஓடும் தெரிவது வரை அவர் சொல்லி முடித்த போது பல மடங்கு அதிர்ந்த பிரம்மானந்தா பாண்டியனிடம் கேட்டார். “நீ என்ன நினைக்கிறாய் பாண்டியன்?”

 

ஆவியோட வேலை தான் இதெல்லாம்னு எனக்கு முழுசா நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை. ஏன்னா நானும், டாக்டரும் பார்த்தது பிரமை இல்லைங்கறது நிச்சயம். எனக்கே நேரடி அனுபவம் கிடைக்கற வரைக்கும் நானே டாக்டரை கேலி தான் செஞ்சேன்.”

 

பிரம்மானந்தா யோசிக்க யோசிக்க பாண்டியன் தொடர்ந்து சொன்னார். “டாக்டருக்கு இது வீட்டுல தங்க முடியாத மூனாவது ராத்திரி. அவரு சிலுவை, மண்டை ஓட்டு மாலை போட்டிருக்கற காளிபடம் எல்லாம் வீட்டுல வெச்சிப் பார்த்துட்டார்.  எதுவும் உதவலை. இனி ஒரு நாள் இந்த மாதிரி ஆனா அவருக்குப் பைத்தியம் பிடிச்சுடறது நிச்சயம். அவரைச் சொல்லி தப்பில்லை. எனக்கே அமைதியாய் இருக்க முடியலை. அவருக்குப் பைத்தியம் பிடிக்கறது நமக்கு நல்லதல்ல.”

 

பிரம்மானந்தாவும் அதையே தான் நினைத்தார். பாண்டியன் கேட்டார். “இதோட பின்னணி என்னவாயிருக்கும்னு நினைக்கறீங்க யோகிஜி?”

 

பிரம்மானந்தா யோசித்து விட்டுச் சொன்னார். “ஆவிகள் இருக்கறதா நிறைய ஆள்கள் நம்பறாங்க. அதுல சில அறிவாளிகளும் அடக்கம். அதுக்கு ஆதாரம் அவங்களோட தனிப்பட்ட அனுபவமாய் இருக்கு. அனுபவப்படாதவங்களுக்கு நம்பக் கஷ்டம் தான் இப்ப உங்க ரெண்டு பேர் அனுபவத்தை வெச்சுப் பார்க்கறப்ப என்னாலும் நம்பாம இருக்க முடியலை. ஆனா என் மனசுல இப்ப ரெண்டு கேள்விகள். ஒன்னு, ஏன் சைத்ராவோட ஆவி மட்டும் வந்திருக்கு? இன்னொன்னு, ஏன் இறந்தவுடனே வராம இப்ப வர ஆரம்பிச்சிருக்கு?”

 

பாண்டியன் சொன்னார். “அதையே தான் நானும் ரெண்டு நாளாய் கேட்டுக்கறேன்.”

 

உனக்கு என்ன பதில் கிடைச்சுது?”

 

வந்தது சைத்ராவோட ஆவி தான்கிறது உண்மையாயிருந்தால், சைத்ராவுக்கு நெருக்கமாயிருக்கற யாராவது வரவழைச்சிருக்கலாம்...”

 

அவளுக்கு நெருக்கமாய் இருக்கிறவங்கன்னா, இப்ப உயிரோட இருக்கறது அவளோட தாத்தா ஒருத்தர் தான்.”

 

நானும் அதை தான் நினைச்சேன். யார், யார் மூலம், ஏன் செஞ்சாங்கன்னு பிறகு பார்க்கலாம். இப்போதைக்கு இந்த ஆவித் தொந்தரவுல இருந்து எப்படி தப்பிக்கறது யோகிஜி? கொஞ்சம் நேரத்துக்கு முன்னால சுகுமாரன்யோகிஜி ஆவி ஓட்டுவாரா?”ன்னு கேட்டார். இல்லைன்னா, உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது ஆவி ஓட்டறவங்க இருக்காங்களாங்கறது தான் அவரோட அடுத்த கேள்வி... ஏன்னா இன்னொரு ராத்திரி அவரால தாக்குப்பிடிக்க முடியாது

 

சிறிது யோசித்துவிட்டு பிரம்மானந்தா சொன்னார். “இந்த விஷயத்துல பரசுராமன்னு ஒருத்தர் ரொம்ப கெட்டிக்காரர்னு கேள்விப்பட்டிருக்கேன். அவர் தமிழ்நாட்டுக்காரரும் கூட. ஆனா அவர் அதிகமாய் வெளிநாடுகள்ல தான் இருக்கறவர். ஒருவேளை அவர் இந்தியால இருந்தாலும் நமக்கு உதவுவார்னு சொல்ல முடியாது. ஆள் சிக்கலானவர். வளையாதவர்....”

 

பாண்டியனுக்குப் புரிந்தது. அவருக்கு வளையாத ஆட்களைப் பிடிப்பதில்லை. அது போன்ற பிழைக்கத் தெரியாத ஆட்களால் எந்தப் பயனும் அவருக்கு இல்லை என்பதால் அவர்களை எண்ணுவதும், அவர்களைப் பற்றிப் பேசுவதும் கூட கால விரயம் என்பது தான் அவருடைய நிலைப்பாடு. முழுமையாக, பரசுராமனைப் புறக்கணித்தவராய் அவர் சொன்னார். “வேற யாராவது இருக்காங்களா யோகிஜி?”

 

கேரளால காசர்கோடுல ஒருத்தர் இருக்கார். பிரபல மந்திரவாதி. தேவானந்தகிரின்னு பேர். அவரோட நேரடியான பழக்கம் கிடையாது. ஆனால் அவர் இந்த மாதிரி விஷயங்கள்ல ரொம்பவும் கெட்டிக்காரர்னு கேள்விப்பட்டிருக்கேன். அவர் பணம் கொஞ்சம் அதிகமாய் எதிர்பார்த்தாலும், அவர் கிட்ட போனா, வேலை ஆகும்னு சொன்னாங்க.”

 

அது போன்ற ஆட்கள் தான் இப்போதைய தேவை என்று எண்ணிய பாண்டியன் சொன்னார். “அப்படின்னா அவர் கிட்ட நீங்களே பேசி அவரை நாளைக்கே இங்கே வரவழைச்சா நல்லா இருக்கும் யோகிஜி.”

 

வேண்டிய அளவு பணம் தருவதோடு, பணம் தந்து அழைப்பவர் உலகப்புகழ் பெற்ற யோகி பிரம்மானந்தா என்றால் தேவானந்தகிரி போன்றவர்கள் உடனடியாக உடன்படுவார்கள் என்பது பாண்டியனின் மனக்கணக்காக இருந்தது. இல்லா விட்டால் தாங்களிருக்கும் இடத்துக்கே வரவழைக்கும்ஈகோஅவர்களுக்கு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பாண்டியன் நினைத்தார்.

 

சற்று யோசித்து விட்டு, சரி என்றார் பிரம்மானந்தா. சிறிது நேரத்துக்கு முன்பு வரை இருந்த மன அமைதி அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டது. பாண்டியன் அவரிடம் வந்து சேரும் வரை மட்டுமே அவருக்குப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சுமை இருந்தது. பாண்டியன் வந்த பின் அனைத்தையும் பாண்டியனே கச்சிதமாகக் கையாண்டு வந்ததால்  அவர் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல் அவருடைய கவனத்துக்குக் கொண்டு வருவதைத் தன்னுடைய திறமைக்குறைவாக எண்ணுபவர் பாண்டியன். மேலும் பயமும், அதிர்ச்சியும், குழப்பமும், கலக்கமும் பாண்டியனிடம் இதுவரை அவர் கண்டதேயில்லை. உயிரோடு இருந்த போது கூட சைத்ரா அவர் தலையிடப்பட வேண்டிய பிரச்சினையாய் இருக்கவில்லை. இறந்த பின் அவள் பிரச்சினையாகி, பாண்டியனே குழம்பி, அவரிடம் அந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்தது மட்டுமல்ல, அதைத் தீர்க்க வெளியாள் ஒருவருடைய உதவி தேவைப்படுவது, பிரம்மானந்தாவுக்கு நெருடலாக இருந்தது.

 

தன்னுடைய உதவியாளனை அழைத்து தேவானந்தகிரியை உடனடியாக அழைக்கச் சொன்னார்.  

 

(தொடரும்)

என்.கணேசன்






1 comment:

  1. கடவுளின் அவதாரமான பிரம்மானந்தாவுக்கு ஆவி ஓட்டக் கூடிய ஆளின் உதவி தேவைப்படுகிறாதா? 🤣🤣🤣🤣🤣🤣🤣
    தேவானந்தகிரியிடம் செல்லாமல்... பரசுராமனிடம் உதவிக்கு வந்திருந்தால்... இன்னும் கூத்தாக இருந்திருக்கும்...

    ReplyDelete