சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 12, 2024

சாணக்கியன் 126


கத சேனாதிபதி பத்ரசால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தான். உலகின் கண்களுக்கு அவன் வலிமையும் செல்வச் செழிப்பும் கொண்ட மகத தேசத்தின்  சேனாதிபதி. போர்க்களத்தில் அவன் சிங்கம். அவனது உறவினர்களில் அவனைப் பார்த்து பொறாமைப் படுவோர் பலர். ஆனால் அவன் துயரம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

 

ஜீவசித்தி சின்ஹரனிடம் சொன்னது போல் தனநந்தனைப் பொருத்த வரையில் செல்வம் ஒருவழிப் பாதையில் மட்டுமே பயணிக்கக்கூடியது. அவன் வரி விதிக்காதது காற்று, நீர், நெருப்பு போன்றவற்றிற்கு மட்டும் தான். வரி வசூலிலும் கடுமையே காட்டுபவன் அவன். குடிமக்களின் கஷ்டநஷ்டங்களை அவன் பொருட்படுத்தியதில்லை. அவனுக்குக் கப்பம் செலுத்துபவர்களிடம் அவன் கறாராக இருக்கக்கூடியவன். அப்படியெல்லாம் அவனிடம் போய்ச் சேர்ந்து கொள்ளும் செல்வம் அவனிடமே சிறைப்பட்டுத் தங்கி விடும். பின் அது வெளியே வரமுடிவது மிக அபூர்வமே. அவனிடம் எத்தனை செல்வம் கொட்டிக் கிடந்தாலும் அதை மற்றவர்களுக்கு தரவேண்டி வரும் போது அவன் மகாகஞ்சன்.

  

ஆரம்ப காலங்களில் மிக மிகக் குறைந்த ஊதியம் தான் அவன் அனைவருக்கும் தந்து கொண்டிருந்தான். ராக்ஷசர் வந்த பிறகு தான் ஓரளவு கௌரவமான ஊதியம் கிடைத்து வருகிறது. ஆனால் அதுவும் கூட அவனுடைய கஜானா இருப்பைக் கணக்கிட்டுப் பார்த்தால் சுண்டைக்காய் தான். கிட்டத்தட்ட மற்ற எல்லோருமே முன்பை விடப் பரவாயில்லை என்ற மனநிலையில் நிம்மதி அடைந்தாலும் வகிக்கும் பதவிக்கு ஏற்ப உயர்ந்த வாழ்க்கையை அனுபவிக்கத் துடித்த பத்ரசாலுக்கு அது போதுமானதாக இருக்கவில்லை.

 

பல முக்கிய நிர்வாக விஷயங்களை தனநந்தனும், ராக்ஷசருமே முடிவு செய்வார்கள் என்ற போதும் சிலவற்றை அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யும் வழக்கம் இருந்தது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களைத் தவிர ராஜகுருவும் அவனும் கூட உறுப்பினர்களாக இருந்தார்கள். அதில் இந்த ஊதிய விஷயத்தைப் பேச அவன் கடந்த ஒரு வருடமாக ஆசைப்படுகிறான். ஆனால் அந்த ஆசை மற்றவர்களிடம் துரதிர்ஷ்டவசமாக இருக்கவில்லை. அவனிடம் கலகலப்பாகப் பழகும் அமைச்சர் வரருசியிடம் அவன் ஒரு முறை இது விஷயமாகப் பேசினால் என்னஎன்று கேட்ட போது அவர்மலைக் கல்லில் கிணறு தோண்ட முயற்சி செய்யக்கூடாதுஎன்று சொல்லி விட்டார். தனநந்தனிடம் அதிக ஊதியம் கேட்பது அதற்கிணையானது தானாம். ராக்ஷசர் மனம் வைத்தால் இதற்கு உதவ முடியும் என்று அவன் நினைத்தான். ஆனால் ராக்ஷசரிடம் பேசுவது தனநந்தனிடம் பேசுவதை விட சங்கடமானது. சிரிப்பில்லாத அந்த முகத்தைப் பார்த்துப் பேசும் போது நீதிபதியிடம் குற்றவாளி பேசும் பாவனையை அவர் ஏற்படுத்தி விடுவார்.  மறுத்துப் பேசினாலும் தனநந்தனே தேவலை.

 

பத்ரசாலின் வருமானம் வீட்டுச் செலவுகளுக்கும், மதுவுக்கும், அவனுடைய பிரிய தாசிக்கும் தரவே சரியாகி விடுகின்றது. வேலைகள் இல்லாத போது அசையாமல் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க மனிதன் கல் அல்லவே. அவன் சூதாட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். சில சமயங்களில் அவன் அதில் நன்றாக சம்பாதிக்கவும் செய்தான். ஆனால் சம்பாதித்ததை வெளியே கொண்டு போய் சேமிக்கவோ, சுபிட்சமாக இருக்கவோ சூது அனுமதிப்பதில்லை. அதனால் இன்னும் பலமடங்கு சம்பாதிக்க ஆசைப்பட்டு அந்தச் செல்வத்தை மறுபடியும் அதிலேயே போட்டு பத்ரசால் நிறைய இழந்திருக்கிறான். ஆனால் இப்போதெல்லாம் அந்தச் சூதாட்டச் சூட்சுமங்கள் அவனுக்கு நன்றாகவே பிடிபட்டு வருவதால் அவற்றைப் பயன்படுத்தி இழந்ததை எல்லாம் மீட்டெடுக்கத் துடிக்கிறான். ஆனால் இப்போதெல்லாம் பணயம் வைக்க அவனிடம் பணமிருப்பதில்லை.

 

முன்பெல்லாம் சேனாதிபதி என்ற மரியாதையுடன் சூதாட்ட விடுதியின் உரிமையாளர் அவனுக்குக் கடன் தந்து உதவி வந்தார். அந்த மரியாதை காலப் போக்கில் நீர்த்துப் போய் விட்டது. மூன்று நாட்களுக்கு முன் நிர்த்தாட்சண்யமாய் பழைய கடன் தீர்க்காமல் இனி வர வேண்டாம் என்று சொல்லி அவனை அவமானப்படுத்தி விட்டார். கடைசியில் தன் முத்துமாலையை அவருக்குக் கொடுத்து அவரைச் சமாளிக்க வேண்டி வந்தது. இப்போது நினைத்தாலும் அவனுக்கு அது அவமானமாக இருந்தது. மகத சேனாதிபதி சந்திக்க வேண்டிய நிலைமையா அது?

 

ஆனால் எந்த அவமானமும் கூட சூதாட்டத்தை நிறுத்துமளவு வலிமையாக இருப்பதில்லை என்பதால் தான் அவன் இந்த இரவு நேரத்திலும் சூதாட்ட விடுதியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும் என்று அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. போகும் போது எல்லா நாட்களிலும் இப்படித் தானே தோன்றுகின்றது என்று உள்மனதில் இருந்து ஒரு குரல் எழுந்த போது அதை அவன் அலட்சியப்படுத்தினான். மற்ற நாட்கள் போல் இன்று இருக்கப் போவதில்லை. இன்றைய தினம் அவன் அதிர்ஷ்டம் அவனுக்குக் கைகொடுத்து உதவப்போகிறது. நினைக்க நினைக்க உற்சாகம் அவனுக்குள் பெருக்கெடுத்தது.

 

அந்த உற்சாகத்தோடு அவன் சூதாட்ட விடுதியை அடைந்து உள்ளே போன போது அங்கே ஒரு சுவாரசியமான ஆட்டம் நடந்து கொண்டிருப்பதையும் ஒரு புதிய மனிதன் வந்து அதில் இணைந்திருப்பதையும் அவன் பார்த்தான். அந்தப் புதிய மனிதன் வெற்றியடைந்து கொண்டிருந்தான். நாலைந்து பேர் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தபடி அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது ஆரவாரத்தைப் பார்த்து விடுதியாளரும் அங்கு வந்து ஆட்டம் போகும் விதத்தை ரசித்துப் பார்த்தபடி நிற்கவே பத்ரசால் அவரிடம் மெல்லக் கேட்டான். “யாரிந்த புதிய ஆள்?”

 

விடுதியாளர் சற்று பின்னுக்கு வந்து மெல்லிய குரலில் பத்ரசாலிடம் சொன்னார். “சிந்து பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் புதிய வணிகர்

 

சின்ஹரன் விளையாடிக் கொண்டிருந்தாலும் பத்ரசால் கேட்டதையும், விடுதியாளர் பதில் சொன்னதையும் ஓரக் கண்களால் கவனித்தான். அவனைச் சுற்றி நின்று ஆரவாரம் செய்து உற்சாகமூட்டும் ஆட்களில் ஒருவன் ஒற்றன் என்பதையும் சின்ஹரன் முன்பே கவனித்திருந்தான். அதனால் மிகவும் எச்சரிக்கையுடன் தன் விளையாட்டிலேயே முழுக் கவனம் வைத்திருப்பது போலவே நடித்தான். ஒற்றனுக்கு அவன் மீது சந்தேகம் வருமானால் அவனைத் தொடர்ந்து வர ஆரம்பிப்பான். அது நல்லதல்ல. விரைவாகவே ஒற்றன் சந்தேகம் தெளிந்து அவனை விட்டு வேறு வேலையைப் பார்க்க ஆரம்பிப்பது நல்லது.

 

பத்ரசால் அந்தப் புதிய வணிகனைக் கூர்ந்து பார்த்தான். வணிகன் செல்வச் செழிப்பானவனாகவே தெரிந்தான். அவன் அணிந்திருந்த ஆபரணங்களும் அவன் பணயம் வைத்திருந்த தொகையும் ஒரு சாதாரண வணிகனின் சக்திக்கு எட்டியவை அல்ல. விளையாட்டின் முடிவில் சின்ஹரன் பெருந்தொகையைப் பெற்றிருந்தான். ஒரு வணிகனுக்கே உரிய கவனத்துடன் அவன் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டதை ஒற்றனும் பத்ரசாலும் கவனித்தார்கள்.

 

சின்ஹரனுடன் விளையாடியவர்களும், வேடிக்கை பார்த்தவர்களும் அடுத்த விளையாட்டிலும் கலந்து கொள்ளும்படி அவனை ஊக்குவித்தார்கள். சின்ஹரன் சிறு புன்னகையுடன் சொன்னான். “நான் இவ்விளையாட்டுக்குப் புதியவன். எப்போதும் ஆரம்பத்தில் விளையாடுபவர்களுக்கு அதிர்ஷ்டம் கண்டிப்பாக இருக்கும் என்று அனுபவம் மிக்க என் நண்பர்கள் சொல்லி இருந்தார்கள். ஆனால் இந்த அதிர்ஷ்டம் அடுத்த விளையாட்டுக்கு நிச்சயம் இருக்க வழியில்லை. இன்று இவ்வளவு போதும். நான் சில நாட்கள் இங்கே தான் இருப்பேன். அதனால் நாளையும் கண்டிப்பாக ஆட வருவேன். இனி இன்றைக்கு நீங்கள் ஆடுவதை வேடிக்கை பார்க்க விரும்புகிறேன்.”

 

சின்ஹரனுடன் விளையாடிய ஒரு இளைஞன் சிரிப்பும், சோகமுமாகக் கலந்த முகபாவனையுடன் சொன்னான். “இந்தத் தெளிவு ஆரம்ப நாளிலிருந்தே எனக்கு இருக்கவில்லை. அதனால் தான் நான் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறேனோ?”

 

அவர்களோடு விளையாடிய இன்னொருவன் இடிச்சிரிப்பு சிரித்தான். “சரியாகச் சொன்னாய் நண்பா. அவர் எத்தனை விவரமாக வென்றதைப் பத்திரப்படுத்திக் கொண்டார் பார்த்தாயா? மகாலட்சுமி பத்திரப்படுத்திக் கொள்பவனிடம் தான் குடியிருப்பாள். உன்னிடமும், என்னிடம் இருக்க விரும்ப மாட்டாள்

 

சின்ஹரன் நட்பு கலந்த புன்முறுவலுடன் சொன்னான். “அதெல்லாம் இல்லை நண்பர்களே. தினமும் ஒரு ஆட்டத்துக்கு மேல் ஆடுவதில்லை என்று என் மனைவிக்கு வாக்குக் கொடுத்து வந்திருக்கிறேன். தோற்றாலும் வென்றாலும் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் ஆடப் போகிறேன். நாளையும் வரத்தான் போகிறேன். இன்று வென்றது நாளைக்கு என் கையை விட்டுப் போகும். உங்களில் யாராவது ஒருவர் வென்று எடுத்துக் கொள்ளத் தான் போகிறீர்கள்.”

 

சொல்லி விட்டு விலகி உட்கார்ந்த அவனை அவர்கள் வித்தியாச மரியாதையோடு பார்த்தார்கள். அவன் விலகிய இடத்திற்கு பத்ரசால் நகர்ந்தான்.  அடுத்த ஆட்டம் ஆரம்பமானது. அருகருகே உட்கார்ந்திருந்தாலும் பத்ரசாலிடம் ஒற்றனோ பத்ரசாலோ சந்தேகப்படும்படியான ஆர்வத்தை சின்ஹரன் காட்டவில்லை. ஆட்களை விட அவன் ஆட்டத்திலேயே அதிக கவனம் காட்டினான்.

 

அந்த ஆட்டத்தில் பத்ரசாலும் வெற்றி அடைய ஆரம்பித்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் சொன்னான். “வணிகரின் அதிர்ஷ்டம் சேனாதிபதியை ஒட்டிக் கொண்டது போலிருக்கிறதே? இட ராசியா, இல்லை அவர் அருகிலிருக்கும் ராசியா?”

 

பத்ரசால் சின்ஹரனை திரும்பிப் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைக்க சின்ஹரனும் புன்னகைத்தான். மறுபடி அவன் கவனம், ஒற்றன் அங்கிருந்து நகர்கிற வரை, ஆட்டத்திலேயே தங்கியது.

 

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. சின்ஹரன் சூது விளையாட்டை கையாண்ட விதம் அருமை...

    ReplyDelete