சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 26, 2024

சாணக்கியன் 128

 

த்ரசாலைப் பல பேர் மாவீரன் என்று புகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இது வரை யாரும் சூதாட்டக் கலையில் நிபுணர் என்று புகழ்ந்தது கிடையாது. அவனே தன்னை சூதாட்டக் கலையில் நிபுணராக என்றைக்குமே இது வரை நினைத்ததும் கிடையாது. அதனால் சின்ஹரன் அப்படிச் சொன்னதும் வியப்பு கலந்த மகிழ்ச்சியுடன் சிரித்தபடி சொன்னான். “என்னை அதில் நிபுணர் என்று சொன்ன முதல் ஆள் நீங்கள் தான். இந்த ஆட்டத்திற்குப் புதியவர் என்பதால் தெரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.”

 

“இல்லை சேனாதிபதி அவர்களே. நான் எதையும் மிக நுட்பமாகக் கவனிப்பவன். நேற்றும் இன்றும் மற்றவர்கள் ஆடியதையும் பார்த்திருக்கிறேன். நீங்கள் பல நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை என்னால் கவனிக்க முடிந்தது.”

 

பாராட்டுக்குத் தகுதியில்லாதவனாக இருந்தாலும் அது கிடைக்கும் போது யாருக்கும் இனிக்கவே செய்கிறது. அதுவும் தகுதியில்லாத போது அது கூடுதல் இனிமையாக இருக்கிறது.   ’நான் அதற்குத் தகுதியானவன் தானோ? எனக்குத் தான் தெரியவில்லையோ’ என்று சந்தேகம் வந்துவிடுகிறது. பத்ரசாலுக்கும் அப்படித் தோன்றியது. யோசிக்கையில் அவன் சமீப காலங்களில் ஆட்ட நுணுக்கங்களை நிறையவே கற்றுக் கொண்டிருப்பதும், அதற்குத் தகுந்தபடி ஆடியிருப்பதும் கூட நினைவுக்கு வந்தது. அவன் இலேசான வருத்தத்துடன் சொன்னான். “இருக்கலாம். ஆனால் இந்த விளையாட்டுகளில் நான் இதுவரை தோற்றது தான் அதிகம். ஏதோ அதிசயமாக நேற்றும் இன்றும் தொடர்ந்து ஒரு ஒரு ஆட்டத்தில் சம்பாதித்திருக்கிறேன். மற்றபடி இங்கு வந்து இழந்தது தான் அதிகம்”  

 

சின்ஹரன் சிரித்தபடியே சொன்னான். “அதனாலென்ன சேனாதிபதி அவர்களே. செல்வச் செழிப்பில் இருக்கும் உங்களுக்கு அதெல்லாம் ஒரு பெரிய தொகையாகவா இருக்கப் போகிறது? மகிழ்விக்கும் இந்தப் பொழுதுபோக்குக்கு எத்தனை இழந்தாலும் அது உங்களைப் பாதிக்கப் போவதில்லை”  

 

பத்ரசால் மனம் நொந்து சொன்னான். “நான் செல்வச் செழிப்பில் இருப்பதாகச் சொல்லி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள் கார்த்திகேயன்”

 

சின்ஹரன் சிரித்துக் கொண்டே சொன்னான். “செழிப்பான மகத தேசத்தின் சக்திவாய்ந்த சேனாதிபதியிடம் செல்வம் இல்லை என்பது கங்கையில் தண்ணீர் இல்லை என்று சொல்வது போலல்லவா சேனாதிபதி. ஒருவேளை நான் உங்களிடம் கடன் ஏதாவது கேட்டு விடுவேன் என்று இப்படி எச்சரிக்கையுடன் சொல்கிறீர்களா என்ன?”

 

பத்ரசால் பெருமூச்சு விட்டான். அவன் வகிக்கும் பதவியை வைத்து அவனைச் செல்வந்தனாகப் பலரும் எண்ணி விடுவது அடிக்கடி நடக்கும் அவலம் தான். என்ன செய்வது? அப்படி நினைப்பவர்கள் தனநந்தனைப் பற்றித் தெரியாதவர்கள். வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு அவன் சொன்னான். “மகதத்தின் செழிப்பு மன்னனிடம் இருக்கலாமே தவிர சேனாதிபதியிடமும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லையே. உரிமையாளனின் செல்வம் ஊழியனுக்கும் கிடைத்து விடுமா என்ன? ஊழியனுக்கு ஊதியம் மட்டுமல்லவா கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் ஊதியமும் ஊழியனின் விருப்பப்படி அல்லாமல் உரிமையாளனின் விருப்பப்படி அல்லவா இருக்கும்?”

 

சின்ஹரன் முகத்தில் திகைப்பைக் காட்டினான். பின் விளையாட்டுக்காக பத்ரசால் சொல்கிறானா என்று கண்டுபிடிக்க முயல்பவன் போல கூர்ந்து அவனைப் பார்த்து விட்டு மெல்லத் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் சொன்னான்.   ”இந்தப் பிரச்சினை பல இடங்களில் இருக்கிறது என்று இப்போதல்லவா தெரிகிறது. இதனால் தான் பாதிக்கப்படுக்கப்படுவர்கள் குறுக்கு வழிகளில் வருமான வழிகளைத் தேடிக் கொள்கிறார்கள்”

 

அவன் சொன்னது பத்ரசாலின் கூர்மையான காதுகளுக்குத் தெளிவாகவே கேட்டது. “என்ன சொன்னீர்கள் கார்த்திகேயன்?” என்று ஆவலுடன் கேட்டான்.

 

சின்ஹரன் அப்போது தான் சத்தமாகப் பேசி விட்டோம் என்று உணர்ந்தவன் போலக் காட்டிக் கொண்டான். பின் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கும் பாவனையை முகத்தில் காட்டி விட்டு முடிவில் தயக்கத்துடன் மெல்லச் சொன்னான். “எனக்குத் தெரிந்த  ஒரு நண்பர் அவர் பெயரையும், ஊரையும் நான் சொல்ல விரும்பவில்லை.  அவர் மிக நல்ல மனிதர். பல காலமாக அந்த தேசத்தில் உயர் பதவியில் இருக்கிறார். அங்கும் இதே பிரச்சினை தான். ஊதியம் மிகவும் குறைவு. ஒரு காலத்தில் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அவர் பின் தன் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைத் தானே தேடிக் கொண்டார்....”

 

பத்ரசால் சுற்றியும் பார்த்தான். யாரும் அவர்கள் பேச்சை செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டு ஆர்வத்துடன் கேட்டான். “அவர் எப்படி அந்த வழியைத் தேடிக் கொண்டார்?”

 

சின்ஹரன் தர்மசங்கடத்துடன் சற்று நெளிந்தான். பின் தேவையில்லாமல் அதிகம் சொல்லி விட்டோமோ என்று  யோசிப்பவன் போலக் காட்டிக் கொண்டு விட்டு அவனும் சுற்றியுள்ள சூழ்நிலையை ஒரு முறை பார்த்து விட்டு தாழ்ந்த குரலில் சொன்னான். “அதிகாரமும், பொறுப்பும் உள்ள இடத்தில் அதை மூலதனமாக வைத்து சம்பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். அதை அவன் பயன்படுத்திக் கொண்டான். அதை அவன் நேரடியாகச் செய்து விட முடியாததால் என் உதவியை நாடினான். நானும் அவனுக்கு உதவினேன். சொல்லப் போனால் அதுவும் ஒரு விதமான வணிகம் தான். இப்போது இருவரும் மிக நன்றாகச் சம்பாதிக்கிறோம். தயவு செய்து யார் என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள். அந்த இரகசியத்தைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால் அடையாளங்களை நான் என்றும் வெளிப்படுத்த முடியாதவனாய் இருக்கிறேன்”

 

சின்ஹரன் சொன்னதைக் கேட்டு பத்ரசாலின் ஆர்வம் அதிகமாகியது. அவனும் சின்னச் சின்ன தில்லுமுல்லுகளைச் செய்து சம்பாதிக்கிறவன் தான் என்றாலும் அதற்கும் அதிகமாக சின்ஹரன் சொல்வது போல ‘மிக நன்றாகச் சம்பாதிக்க’ அவனுக்கு முடியவில்லை. காரணம் ராக்‌ஷசரின் கடுமையான சோதனை முறைகள் அதற்கு எதிராக இருந்தன. அவனுக்கு மிக நன்றாகச் சம்பாதிக்க முடிந்த அவன் நண்பனின் அடையாளம் தெரிய வேண்டியிருக்கவில்லை. ஆனால் அந்தச் சம்பாதிக்கும் வழி பற்றி பத்ரசால் அறிய விரும்பினான். முக்கியமாக சிக்கிக் கொள்ளாமல் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது உதவும் என்று தோன்றியது. அதை வெளிப்படையாகக் கேட்க சங்கோஜமாக இருந்தாலும் பத்ரசால் சுற்றி வளைத்தாவது அறிந்து கொள்ள விரும்பிக் கேட்டான். “அங்கு கண்காணிப்பு, கடுமையான சோதனைகள் எல்லாம் இல்லையா?’

 

சின்ஹரன் புன்னகையுடன் அலட்சியமாகச் சொன்னான். “அது வேண்டுமளவு இருக்கிறது. ஒற்றர்களின் கண்காணிப்பும் கூட இருக்கிறது. ஆனால் எல்லாவற்றில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வழிகள் அறிவாளிக்குத் தெரியாமல் இருப்பதில்லை”

 

பத்ரசாலுக்கு உள்ளுக்குள் பரபரப்பு கூடியது. அந்த வழிகளை அவனும் அறிந்து கொள்ளத் துடித்தான். இந்த வணிகன் வந்ததிலிருந்து அவனுக்கு பணவரவு அதிகரித்திருக்கிறது. ஒரு விதத்தில் யோசித்தால் அதிர்ஷ்டம் அனுப்பி வைத்த நபராகவே கார்த்திகேயன் தெரிந்தான். அவனுக்குத் தெரிந்திருக்கும் வழிகள் கூடுதல் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவன் பேச்சு வாக்கில் சொன்னதை வைத்து தீவிரமாக விசாரிப்பதற்கு பத்ரசால் தயங்கினான். பின் மெல்லச் சொன்னான். “இங்கு போல் நிலவரம் இருந்தால் அங்கு உங்களுக்கு முடிந்திருக்காது. இங்கு ஒற்றர்கள் கண்காணிப்பும், அமைச்சர்கள் சோதனையும் தீவிரமாக இருக்கும்.”

 

சொல்லி விட்டு என்ன பதில் வருகிறதென்று ஆவலுடன் பத்ரசால் சின்ஹரனைப் பார்த்தான்.

 

சின்ஹரன் புன்னகையுடன் சொன்னான். “அந்தக் கண்காணிப்புகள், சோதனைகள் எல்லாம் பெரிய விஷயமல்ல. எதையும் கூர்ந்து கவனிக்க முடிந்தவர்களுக்கு அதில் உள்ள பலவீனங்களும், குறைபாடுகளும் புலப்படாமல் இருப்பதில்லை. அதெல்லாம் எங்களுக்குப் பழகி விட்டது. சொல்லப் போனால் எங்கள் எச்சரிக்கை எங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது என்று கூடச் சொல்லலாம். உதாரணத்திற்கு நாம் சூதாடிக் கொண்டிருக்கையில் ஒரு ஒற்றன் வேவு பார்ப்பதை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை. அதே ஒற்றன் நாம் இங்கு வந்தமர்ந்த பிறகு சற்று தள்ளி அமர்ந்து என்ன பேசுகிறோம் என்பதையும் கவனித்தபடி சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டுப் போனான். அதையும் கவனித்தேன்.”

 

பத்ரசால் திகைப்புடன் சின்ஹரனைப் பார்த்தான். சின்ஹரன் சொன்னான். “அறிவாளி ஆபத்தான வழிகளில் போனால் தான் அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறான். அந்த வழிகளில் போவது என்று முடிவெடுத்த பின் அவன் சிறிதும் அலட்சியமாகவோ, கவனக்குறைவாகவோ இருப்பதில்லை..... சரி சேனாதிபதி. நேரம் மிக நீண்டு விட்டது. தங்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. நாளை சந்திப்போம்.”

 

பேசிக் கொண்டிருக்கையிலேயே திடீர் என்று எழுந்து கிளம்பிய சின்ஹரனைப் பார்த்து பத்ரசால் தலையசைத்தான். அந்த வணிகன் அவன் மனதில் ஒரு கனலை மூட்டி விட்டுப் போய் விட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்





No comments:

Post a Comment