சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 25, 2024

சாணக்கியன் 119


விஜயன் சாரங்கராவிடம் சொன்னான். “ஆச்சாரியர் இங்கே இருந்திருந்தால் அவரிடம் கேட்டிருக்கலாம்”

 

“எதைக் கேட்டிருக்கலாம்”

 

“நமக்கு உறக்கம் வராதது பற்றி. இத்தனை அதிகமான செல்வம் பார்த்து நமக்குப் பழக்கப்படாததால் இதை வைத்துக் கொண்டு நம்மால் உறங்க முடியவில்லையா? இந்த அளவு செல்வம் வைத்திருந்தால் யாருக்குமே உறக்கம் வராதா? என்று கேட்டிருக்கலாம்.”

 

சாரங்கராவ் புன்னகைத்தான். “தனநந்தன் எப்படி தினமும் தூங்குகிறானோ தெரியவில்லை. அதுவும் இத்தனை செல்வமும் அவனுக்குத் தொலை தூரத்தில் இருக்கையில் திருடப்பட்டு விடலாம் என்ற பயம் இல்லாமல் எப்படி நிம்மதியாக இருக்கிறானோ?”

 

“இந்தப் புதையல் குறித்துத் தெரிந்தவர்களை எல்லாம் கொன்று விட்டோம், இதைப் பற்றித் தெரிந்தவர்கள் யாருமில்லை என்ற நினைப்பில் நிம்மதியாக அவன் இருக்கிறான் என்று நினைக்கிறேன். முன்பாவது யாராவது ஏதோ ஒரு காரணத்தால் தோண்டித் தெரிந்து கொண்டால் என்ற பயம் இருந்திருக்கும். பிறகு அதன் மேல் ஒரு கட்டிடமும் கட்டி அந்தக் கட்டிடப் பணியாளர்களையும் கொன்று விட்ட பின் கவலையை விட்டிருப்பான். ஆச்சாரியர் சிறுவராக இருந்த போதே பார்த்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியவில்லை பாவம்.... ஆனால் ஆச்சாரியர் போன்ற அழுத்தமான ஆசாமியை நான் பார்த்ததில்லை. இத்தனை காலம் அதைப் பற்றி யாரிடமும் வாயைத் திறக்காமல் இருந்திருக்கிறார் என்றால் பாரேன். நீயோ நானோ அவர் நிலையில் இருந்திருந்தால் ”உன்னிடம் மட்டும் சொல்கிறேன்” என்று சொல்லியே ஒருசிலரிடமாவது சொல்லியிருப்போம்”

 

விஜயன் சொல்வது உண்மையென்றே சாரங்கராவுக்கும் தோன்றியது. ஆச்சாரியருக்கு இணையாக இன்னொரு மனிதனை அவர்கள் பார்க்கப் போவதேயில்லை. சாரங்கராவ் புன்னகையுடன் சொன்னான். “ஜீவசித்திக்கு தனநந்தன் இந்தப் புதையல் திருட்டுப் போனதை அறியும் சமயத்தில் அருகில் இருந்து அவன் அதிர்ச்சியையும், ஆர்ப்பாட்டத்தையும் பார்க்க ஆசையாம்.”

 

விஜயன் சொன்னான். “முதலில் நாம் இந்தப் புதையலோடு இங்கிருந்து தப்பித்துப் போவோம். பிறகு அந்த ஆசையெல்லாம் வைத்துக் கொள்வது நல்லது. எனக்கு உள்ளூர இப்போதும் நடுக்கமாகத் தான் இருக்கிறது. பாடலிபுத்திரத்தைக் கடப்பது மட்டும் பிரச்சினை அல்ல. இந்தச் செல்வத்தைக் கொண்டு போய் ஆச்சாரியரிடம் சேர்க்கும் வரை பிரச்சினை எந்த திசையில் இருந்தும் வரலாம்.”

 

சாரங்கராவ் சொன்னான். “நன்றாக கடவுளைப் பிரார்த்தித்துக் கொள். உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதல்லவா?”

 

விஜயன் தன் மனதை மறைக்காமல் சொன்னான். “கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது. ஆனால் நாம் வேண்டிக் கொண்டால் அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்று நம்பி நிம்மதியாக இருக்க முடியவில்லை. தனந்தந்தனும் நிறைய கடவுள் நம்பிக்கை இருப்பவன் தான். அவனும் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பான்.”

 

சாரங்கராவ் தைரியமளித்தான். “கடவுள் எப்போதும் தர்மத்தின் பக்கமும் , நல்லவர் பக்கமும் தான் இருப்பார். பயப்படாதே”

 

விஜயன் யோசனையுடன் சொன்னான். “ஆனால் அவர் தர்மத்தையும், நல்லவர்களையும் காப்பாற்ற கடைசி கணத்தில் தான் வருகிறார். அது வரை வேடிக்கை பார்க்கும் கெட்ட பழக்கம் அவரிடம் இருக்கிறது”

 

சாரங்கராவ் வாய் விட்டுச் சிரித்தான். விஜயன் சிரிக்காமல் தன் சிந்தனையைத் தொடர்ந்து சொன்னான். “சிரிக்காதே. நீயே நன்றாக யோசித்துப் பார். நம் ஆச்சாரியர் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்திருந்தாலும், எல்லாவற்றையும் ஆழமாய் அலசிப் பேசியிருந்தாலும் கடவுளைப் பற்றியோ, கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ அதிகம் பேசியதே இல்லை. பாரதம், கர்மம், தர்மம், தத்துவம் பற்றியெல்லாம் நிறைய சொல்லித் தந்திருக்கும் ஆச்சாரியர் கடவுள் பற்றி மட்டும் அதிகம் சொன்னது கிடையாதல்லவா? அது ஏன்?”

 

“உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் நானும் நாத்திகனாகி விடுவேன் என்று எனக்கே பயமாக இருக்கிறது. ஆச்சாரியர் சொல்வது போல உன் அறிவு வேண்டாத விஷயங்களில் ஆழமாக வேலை செய்கிறது.” என்று சொல்லியபடி சாரங்கராவ் வேகமாய் எழுந்தான்.

 

விஜயன் கேட்டான். “நான் ஏதாவது தவறுதலாகச் சொல்லி விட்டேனா?”

 

“விடிந்து விட்டது. புனித கங்கைக் கரையில் இருக்கிறோம். எழுந்து நீராடி, முடிந்தால் பிரார்த்தனை செய். பிரார்த்தனை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. பேசாதே” என்று கண்டிப்பான குரலில் சொல்லி விட்டு சாரங்கராவ் கங்கையில் குளிக்கப் போனான்.

 

விஜயன் சற்று தள்ளிப் படுத்திருந்த வீரனிடம் சொன்னான். “நான் என்ன சொல்லி விட்டேன் என்று இவன் கோபித்துக் கொண்டு போகிறான் என்று தெரியவில்லை”

 

அந்த வீரன் வேகமாக எழுந்து “என்னை விட்டு விடுங்கள் நண்பரே” என்று சிரித்துக் கொண்டே சொல்லியபடி கூடாரத்தை விட்டு வெளியேறினான்.

 

விஜயன் முணுமுணுத்தான். “உண்மை யாருக்கும் கேட்கப் பிடிப்பதில்லை. எனக்கோ உண்மையைப் பேசாமல் இருக்க முடிவதில்லை” பின் மெல்ல எழுந்து குளிக்கப் போனான்.

 

சாரங்கராவ் சந்தியாவந்தனம் செய்து விட்டு ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். அவன் கிருஷ்ண பக்தன். இங்கிருந்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய் விடவேண்டும். வழியிலும் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளாமல் இந்தச் செல்வத்தை ஆச்சாரியரிடம் சேர்த்து விட வேண்டும் என்று மனமுருக அவன் பிரார்த்தித்தான்.  எல்லாம் முடிந்து விட்டுத் திரும்பிய போது விஜயன் அப்போது தான் குளித்து முடித்திருப்பது தெரிந்தது. சாரங்கராவ் அவன் கடவுளைப் பிரார்த்திக்கிறானா என்று ஓரக் கண்ணால் பார்த்தான்.

 

விஜயன் ஒரு கணம் இரு கைகளையும் உயர்த்திக் கூப்பினான். அவ்வளவு தான். பின் அவன் கரையேறினான். அந்தக் கும்பிடு கடவுளுக்கா, கங்கைக்கா, எதிரே உதித்துக் கொண்டிருக்கும் சூரியனுக்கா என்று தெரியவில்லை. ஆச்சாரியர் இருந்திருந்தால் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் அவருக்கு அதை யூகிக்க முடிந்திருக்கும்.

 

சிறிது நேரத்தில் கூடாரத்தைக் கழற்றி விட்டு சாரங்கராவ் தன் பயண வண்டியிலும், விஜயனும், வீரனும் புதையல் பெட்டிகளை ஏற்றியிருந்த தங்கள் வண்டியிலும் ஏறிப் பயணத்தை ஆரம்பித்தார்கள். முன்னால் விஜயன் வண்டி போக பின்னால் சாரங்கராவ் தன் வண்டியில் போனான். போகும் வழியில் பாடலிபுத்திரத்துக் காவலர்கள் எதிர்ப்பட்டார்கள். சில காவலர்கள் விஜயனைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். இரண்டே நாட்களில் விஜயன் பிரபலமாகி விட்டான் என்று சாரங்கராவ் தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான். விஜயனும் நீண்ட நாட்கள் பழகியவன் போல அந்த வீர்ர்களைப் பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்தான்.

 

பெரும்பாலும் ஒரு நகருக்குள் நுழையும் போது இருக்கும் சோதனைகள் அங்கிருந்து செல்லும் போது இருப்பதில்லை. நகருக்குள் நுழையும் போது அங்கு ஆபத்தை விளைவிக்க முடிந்த எதிரிகளா, அந்த உத்தேசத்தோடு ஆயுதங்கள் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறார்களா என்று சந்தேகப்படும் ஆட்களை நகரக் காவலர்கள் சோதித்துப் பார்ப்பதுண்டு. ஆனால் வந்தவர்கள் திரும்பிச் செல்லும் போது அந்த வகைப் பயங்களுக்கு அவசியம் இருப்பதில்லை என்பதால் மிக அபூர்வமாக சந்தேகத்தை ஏதாவது வகையில் எழுப்பினால் ஒழிய சோதனைக்குட்படுத்துவதில்லை.

 

இருந்த போதிலும் பாடலிபுத்திரத்தின் நகரவாயிலை நெருங்கும் போது சாரங்கராவும், விஜயனும், வீரனும் தங்களுக்குள் பதற்றத்தை உணர ஆரம்பித்தார்கள். அதற்கேற்றாற்போல் சற்று தூரத்தில் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த  நகரக் காவல் அதிகாரி அவர்களை நோக்கி குதிரையில் முன்னால் வர ஆரம்பித்தான்.

 

சாரங்கராவின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று போனது. கிருஷ்ணா… கிருஷ்ணா… என்று மனம் சொல்ல ஆரம்பித்தது. விஜயனும் உள்ளூர நடுங்கினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நட்புடனே புன்னகைத்தபடி சத்தமாகச் சொன்னான். “வணக்கம் ஐயா”

 

நகரக் காவல் அதிகாரி விஜயனின் வண்டியருகே வந்தவுடன் புன்னகையுடன் கேட்டான். “என்ன வணிகரே. பாடலிபுத்திரத்தில் உங்கள் வியாபாரம் நன்றாக நடந்ததா”

 

விஜயன் நிம்மதியடைந்தான். சந்தேகத்தோடு இந்த ஆள் வரவில்லை. விஜயன் சொன்னான். “சொல்லுமளவுக்கு சிறப்பாக வியாபாரம் நடக்கவில்லை ஐயா.     முதல் முயற்சி வெற்றிகரமாக முடியாத போது பின் அங்கு தொடர்பவையும் மந்தமாகவே நடக்கின்றன என்பது எனதனுபவம்.”

 

நகரக் காவல் அதிகாரி வாய்விட்டுச் சிரித்தான். இப்போதும் ராக்‌ஷசர் முன் எல்லாப் பெட்டிகளையும் திறந்து காட்டி மலிவு விலையில் அவனிடம் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி இந்த வணிகன் அவரிடம் விற்பனை செய்ய முயன்ற காட்சி அவன் கண்முன் விரிந்தது.   

 

விஜயன் சொன்னான். “சரி ஐயா. விடைபெறுகிறேன். அடுத்தது கலிங்கம் செல்லவிருக்கிறோம். அங்காவது வியாபாரம் சிறப்பாக நடக்கும் என்று நான் நம்புகிறேன். பார்ப்போம்”

 

நகரக் காவல் அதிகாரி புன்னகையுடன் தலையசைத்தான். இ

ரு வண்டிகளும் நகரவாயிலைக் கடக்க ஆரம்பித்தன.

 

(தொடரும்)

என்.கணேசன்



1 comment:

  1. எப்படியோ...! குறைவான நேரத்தில் புதையலை கொள்ளையடித்ததோடு விரைவாக வெளியேறியும் விட்டார்கள்.... அங்கு சென்றதும் ஆச்சாரியார் அவர்களிடம் 'உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் ' என கூறுவர்.....

    ReplyDelete