சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 11, 2024

சாணக்கியன் 117

 

விஜயன் வருவதற்கு முன்பாகவே சாரங்கராவ் கங்கைக் கரையில் யாகசாலைக்கு சில அடிகள் தொலைவிலேயே பெரிய கூடாரம் அமைத்திருந்தான். நிறைய பொருள்களோடு வரும் வணிகர்கள் இப்படி நதிக் கரையில் கூடாரம் அமைத்து சில நாட்கள் தங்கி விட்டுப் போவது இயல்பு. பொருள்களோடு பயணியர் விடுதியில் தங்குவது முடியாது என்பதால் இப்படி நதிக்கரையில் தங்க வணிகர்களுக்கு எல்லா தேசங்களிலும் அனுமதி இருந்தது. இப்படி பலமுறை சாரங்கராவும், விஜயனும் கூடாரம் அமைத்து தங்கி விட்டுச் சென்றிருந்ததால் ஆரம்ப காலங்களில் தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து பிரச்சினை இல்லாத ஆட்கள் என்று ஒற்றர்கள் தெளிந்திருந்தார்கள்.

 

ஆனாலும் ராக்‌ஷசர் சொல்லி இருந்ததால் பாடலிபுத்திரத்தில் நகருக்குள்ளே தினந்தோறும், நகரின் சுற்றுப்புறங்களில் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் காவலர்கள் சென்று சந்தேகத்திற்கு இடம் தரும் அம்சங்களோ, செயல்பாடுகளோ உள்ளனவா என்று இரவு நேரங்களில் சோதித்துப் பார்த்து விட்டுச் செல்லும் வழக்கம் இருந்தது.   அந்த வகையில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை காவலர்கள் கங்கைக் கரைக்கும் வந்து போவது உண்டு. அந்த சமயங்களில் வணிகர்களின் கூடாரங்களுக்குள்ளேயும் வந்து அவர்கள் பார்த்து விட்டுப் போவது உண்டு.

 

இது போன்ற இரவுக் காவல் பணிகளுக்கும் காவலர்களை அனுப்புபவன் ஜீவசித்தி தான். அவன் சாரங்கராவின் வேண்டுகோளின்படி விஜயன் வந்த நாள் இரவே காவலர்களை கங்கைக் கரைப் பகுதிக்கு அனுப்பி வைத்தான். அன்று காவலர்கள் வந்து போனால் பின் அடுத்த இரண்டு நாட்கள் இரவுகளில் தங்கள் வேலைக்குத் தொந்தரவு இருக்காது என்று சாரங்கராவ் கணக்குப் போட்டான்.


அன்று நள்ளிரவு சோதனைக்கு கங்கைக் கரைக்கு வந்த காவலர்கள் சாரங்கராவின் கூடாரத்திற்கு உள்ளேயும் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். விஜயனைப் பார்த்து ஒரு காவலன் “நீ தானா சோதனைக்கு அமைச்சர் ராக்‌ஷசர் அழைத்த போது அவரிடமே பொருள்களை விற்கப் பார்த்தவன்?” என்று கேட்டுச் சிரிக்க மற்ற காவலர்களும் சிரித்தார்கள்.

 

விஜயன் அசடு வழிந்தபடி நடித்துவிட்டுச் சொன்னான். “எப்படியும் சோதனைக்குப் பொருட்களைக் காட்டியாகி விட்டது. அவரும் பொருட்களைப் பார்த்தாகி விட்டது. பிடித்திருந்தால் வியாபாரம் ஆகுமே என்று பார்த்தேன். ஆனால் அவர் எதையும் வாங்கவில்லை”

 

மறுபடியும் காவலர்களிடையே குபீர் சிரிப்பு எழுந்தது. ஒரு காவலன் சாரங்கராவிடம் சொன்னான். “உன் நண்பன் இன்று பாடலிபுத்திரத்தில் பிரபலமாகி விட்டான்.” அனைவருக்கும் சிம்ம சொப்பனாக இருக்கும் ராக்‌ஷசரிடம் ஒரு வணிகன் சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே பொருளை விற்பனை செய்யவும் முயன்றான் என்ற தகவலை பாடலிபுத்திரத்தில் பலரும் ஒருவருக்கொருவர் நகைச்சுவைச் செய்தியாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று ஜீவசித்தியும் சாரங்கராவிடம் சொல்லியிருந்தான்.

 

மறுநாள் அவர்கள் பொருள்களை வேறு வணிகர்களுக்கு விற்றும், வேறு இடங்களுக்கு மாற்றியும் சாரங்கராவும் விஜயனும் முக்கால் பாகத்திற்கும் மேல் தங்கள் பெட்டிகளைக் காலி செய்தார்கள்.

 

ஜீவசித்தி அன்றிரவு காவலர்களைக் கண்காணிக்கும் வேலையில் ஈடுபவன் போல் வெளியே வந்தான். நகரில் சில இடங்களில் காவலர்கள் செய்யும் பணிகளைப் பார்த்துக் கொண்டு நின்றவன் பின் மெல்ல கங்கைக் கரைப் பக்கம் தன் குதிரையைச் செலுத்தினான். நகரின் ஓரிடத்தில் ஒரு ஒற்றன் அவன் பார்வையில் தென்பட்டிருந்தான். கங்கைக் கரை நோக்கி செல்கையில் அவனோ, வேறு ஒற்றர்களோ தென்படுகிறார்களா என்று ஜீவசித்தி எச்சரிக்கையுடன் கவனித்தான். யாரும் அவனைப் பின் தொடர்ந்து வரவில்லை. நிம்மதி அடைந்த ஜீவசித்தி வேகமாக கங்கைக் கரையை அடைந்தான்.

 

அன்று பௌர்ணமி என்பதால் நிலவொளி அவர்களுக்கு அனுகூலமாக இருந்தது. கங்கைக் கரையில் வேறு எந்தக் கூடாரமும் இருக்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள்நடமாட்டமும் இல்லை. சற்று முன் தான் சாரங்கராவும், விஜயன் இரு பக்கமும் நடந்து வேறெந்த ஆட்களும் அந்தப் பகுதியில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வந்திருந்தார்கள். விஜயனின் பணியாள் வேடத்தில் இருந்த வீரன் நதிக்கரைக்கு வரும் பாதைகளில் சென்று பார்த்து விட்டு வந்தான். ஒருவேளை சிறுவன் விஷ்ணு போல் வேறெந்த வேலைக்கோ வந்து அங்கே தங்கியிருந்து மறைவிடத்தில் இருந்து இன்று நடப்பதையும் பார்த்துக் கொண்டு இருந்தால் அது ஆபத்தாகி விடலாம் என்ற அச்ச உணர்வு அவர்களுக்கு இருந்தது. பாறை அல்லது மரங்களுக்குப் பின்னாலும் யாரும் இருக்கவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

 

ஜீவசித்தி வந்தவுடன் அவர்கள் பரபரப்புடன் யாகசாலையை நோக்கி நடந்தார்கள். மூவர் கைகளிலும் கடப்பாரைகளும், மண்வெட்டிகளும், மண்ணை அள்ளும் சட்டிகளும், இருந்தன. பணியாளாக நடித்த வீரன் தன் இரு கைகளிலும் தீப்பந்தங்கள் பிடித்துக் கொண்டான். யாகசாலையை அடைந்ததும் ஜீவசித்தி தான் முன்பே தயார்ப்படுத்தி வைத்திருந்த சாவியால் யாகசாலைக் கதவில் தொங்கிக் கொண்டு இருந்த பெரிய பூட்டைத் திறந்தான். மூவரும் உள்ளே நுழைந்தவுடன் அவர்களிடம் தீப்பந்தங்களைத் தந்து விட்டு வீரன் வெளியே காவலுக்கு நின்று கொள்ள, மூவரும் கதவை முன் போல் மூடினார்கள்

 

ஜீவசித்தி மெல்லக் கேட்டான். “தனநந்தன் எங்கே வைத்திருப்பான் என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?”  

 

சாரங்கராவ் சொன்னான். “நம் காலடிச் சத்தம் காட்டிக் கொடுத்து விடும்”

 

சொல்லி விட்டு சாரங்கராவ் சற்று அழுத்தமாகக் கால்களைத் தூக்கி வைத்து அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தான். விஜயன் பரிசோதனையில் ஈடுபடாமல் ஓரமாக இருந்த ஒரு யாக குண்ட விளிம்பில் உட்கார்ந்து கொண்டான்.

 

ஜீவசித்திக்கு அவனைப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. ”ஏன் நீங்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லையா நண்பரே?”

 

விஜயன் சொன்னான். “அந்த வேலையை என்னை விட அவன் நன்றாகச் செய்வான். அவன் காதுகளும் சூட்சுமம்”

 

சாரங்கராவ் நண்பனைப் பார்த்துப் புன்னகைத்தபடி காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு நடந்தான். நடுநாயகமாக இருந்த பெரிய யாக குண்டத்தை நெருங்கிய போது யாக குண்டத்தின் விளிம்பில் சத்தம் வித்தியாசமாகக் கேட்டது. அவன் மிகவும் கவனமாக அந்தப் பெரிய யாக குண்டத்தைச் சுற்றி விளிம்பில் நடந்தான். பின் அவன் சொன்னான். “இதன் அடியில் தான் இருக்கிறது”

 

விஜயனும், ஜீவசித்தியும் பரபரப்புடன் அவனருகே சென்றார்கள். ஜீவசித்தி சாரங்கராவிடம் சொன்னான். “நாம் மிக ஜாக்கிரதையாகத் தான் உடைக்க வேண்டும். வெளியேயிருந்து மரக்கட்டைகளுக்கு இடைவெளியில் பார்த்தால் கூட நாம் உடைத்திருப்பது தெரியாமலிருப்பது முக்கியம். அப்படி இருந்தால் தான் தனநந்தன் அவனாக இங்கு வந்தால் ஒழிய இது தெரிய வராது. பல நாட்கள் ஒன்றும் நடக்காதது போலவே போய்விடும். வெளியே இருந்து பார்க்கையிலேயே தெரிந்தால் அவனுக்கு யார் மூலமாவது தகவல் போய் அவன் ஓடி வந்து விடுவான்.”  

 

விஜயன் சொன்னான். “சில நாட்களுக்குத் தெரியாமல் இருந்தால் போதும். பின் நமக்குக் கவலையில்லை.”

 

சாரங்கராவ் கடப்பாரையால் யாக குண்டத்தின் ஒரு ஓரத்தை மெல்ல கவனமாகப் பெயர்த்தான். விஜயன் கேட்டான். “ஏன் இப்படி பூ போல் பிரித்து எடுக்கிறாய்?”

 

சாரங்கராவ் சொன்னான். “அப்படி எடுத்தால் தான் கடைசியில் அப்படியே திருப்பி வைக்க முடியும். யாராவது தூரத்திலிருந்து பார்க்கையில் மாற்றமில்லாமல் இருப்பது போல் தோன்றும்.”

 

விஜயன் ஜீவசித்தியிடம் சொன்னான். “இந்த முன்யோசனை எங்கள் ஆச்சாரியருடையது. இவர்களுக்கெல்லாம் நிறைய வந்திருக்கிறது. எனக்குச் சில சமயங்களில் இந்தக் கவனம் போதாது.”

 

சாரங்கராவ் தன் வேலையை நிறுத்தாமல் கவனமாகச் செய்து கொண்டே சொன்னான். “ஆனால் ராக்‌ஷசரிடமே வியாபாரம் பேசி அவரைத் துரத்தி இங்கு பிரபலமாகும் அளவு சமயோசிதம் இருக்கிறதல்லவா. அது போதும்.”

 

ஜீவசித்திக்கு நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசியது பிடித்திருந்தது. சாரங்கராவ் ஒரு பெரிய துளையை ஏற்படுத்திக் கொண்டே ஜீவசித்தியிடம் சொன்னான். “ஒரு தீப்பந்தத்தைக் கொடுங்கள்  நண்பரே.”  

 

ஜீவசித்தி நீட்டிய தீப்பந்த ஒளியில் பார்த்த போது யாக குண்டத்தின் கீழே படிக்கட்டுகள் தெரிந்தன. உள்ளே இருந்த கட்டமைப்பு தெளிவாக மனதில் பதியும் வரை தீப்பந்த ஒளியில் துளை வழியாக உள்ளே பார்வையிட்டு விட்டு எப்படித் தோண்ட வேண்டும் என்று விஜயனிடமும், ஜீவசித்தியிடமும் விளக்கினான்.

 

ஜீவசித்திக்கு அவன் சின்னச் சின்ன விஷயங்களையும் அறிவுபூர்வமாக யோசித்துச் சொன்ன விதம் வியப்பாக இருந்தது. அவன் ஏற்கெனவே ஆச்சாரியர் வந்த போது நேரடியாக உணர்ந்தது போல், விஜயன் சொன்னது போல், ஆச்சாரியரின் பேரறிவு அவருடைய சீடர்களுக்கு நிறையவே வந்திருக்கிறது. தானும் அவரது மாணவனாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று ஜீவசித்திக்குத் தோன்றியது.

 

மூவரும் கவனமாகத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

 

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. இக்கால திரைப்படங்களில் திறமையாக கொள்ளையடிக்கும் திரைக் காட்சிகளை ஆச்சரியப்படுத்துவதுண்டு.... அக்காலத்திலும் இதே போன்று திறமையானவர்களும் இருத்திருக்கிறார்கள்....

    ReplyDelete