சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 4, 2024

சாணக்கியன் 116

ந்திரகுப்தனின் சமீபத்திய வெற்றி தனநந்தனையும் விட அதிகமாக ராக்‌ஷசரை அதிருப்தியடைய வைத்தது. அவர் அந்த வெற்றியில் சந்திரகுப்தனைப் பார்க்கவில்லை. ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரைத் தான் பார்த்தார். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும் ஒரு பூதத்தைப் பற்றி சிறுவயதில் கேட்டிருந்த கதை ஒன்று அவருக்கு நினைவுக்கு வந்தது. பூதம் அவர்களை விழுங்கி விடுமா? என்ன தான் வளர்ந்தாலும் அவர்களை விழுங்கி விடுமளவு பூதம் வலிமை பெறுவது சாத்தியமில்லை என்று அறிவு சொன்னாலும் எச்சரிக்கையுணர்வை புறக்கணித்து அவரால் இருக்க முடியவில்லை. தனநந்தனும் தெரிந்து வைத்திருப்பது நல்லது என்று அவர் சொன்ன போது அவன் முகமும் களையிழந்தது. அதன் பின் அவன் ஒரு மாதிரியாகவே இருந்தான். மறுநாள் கங்கைக்கு சென்று குளித்து விட்டு வந்த பின் அவன் இயல்பு நிலைக்கு அவன் வந்து விட்டான். ஆனால் அவரால் அப்படி இயல்பு நிலைக்கு வர முடியவில்லை. எதிர்பாராத இடங்களில், எதிர்பாராத விதங்களில் வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கும் விஷ்ணுகுப்தர் இங்கே சபதமிட்டுச் சென்றிருக்கிறார் என்பதை மறக்க முடியவில்லை.

 

புதியவர்கள் வருகை குறித்தும், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்தும் எச்சரிக்கையும் கண்காணிப்பும் அவசியம் என்று அவர் இப்போதும் ஒற்றர்களிடமும், காவலர்களிடமும் அடிக்கடி சொல்லி வருகிறார். ஒற்றர்கள் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையிலும், பயப்படும் வகையிலும் ஒன்றும் இல்லை என்று தான் சொல்லி வருகிறார்கள். மகத எல்லைகளில் இருந்து வரும் தகவலும் அப்படியே இருக்கிறது. அது சரியாகவே இருக்கவும் கூடும்.  விஷ்ணுகுப்தரின் கவனம் இப்போதைக்கு இங்கில்லாமல் மற்ற இடங்களில் இருக்கக்கூடும். கேகயத்திற்கு அடுத்தபடியாக யாரைத் தங்கள் பக்கம் இழுப்பது என்ற நினைப்பில் இருக்கக்கூடும். ஆனால் அந்த மனிதர் தங்களை முழுமையாக வலுப்படுத்திக் கொண்ட பிறகு கண்டிப்பாக இங்கே வருவார் என்பது நிச்சயம். வெறுமனே வார்த்தைகளை வீசக்கூடியவர் அல்ல அவர்.

 

இந்த யோசனை தான் அவர் மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. அவர் சில சமயங்களில் நேரடியாகவே முக்கிய இடங்களுக்குச் சென்று சோதனைகள் மேற்கொண்டார். பயணியர் தங்கும் விடுதிகளிலும், முக்கியத் தெருக்களிலும், பாடலிபுத்திர வாயிலிலும் பொதுவாகக் கண்காணிப்பதும், சந்தேகப்படுபவர்களை அழைத்து விசாரிப்பதும் அவர் திடீர் திடீரென்று செய்யும் வேலைகளாக இருந்தன. அந்தச் சமயங்களிலும் அவரால் சந்தேகப்படும்படியான எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதிலும் முக்கியமான எதையோ கண்டுபிடிக்காமல் நழுவ விடுவதாய் அவருக்குத் தோன்றும் நெருடலை அவரால் அலட்சியப்படுத்த முடியவில்லை.

 

இன்றும் அவர் திடீரென்று கண்காணிக்கும் உத்தேசத்துடன் நகர வாயிலருகே சென்றடைந்த போது விஜயன் வணிக வேடத்தில் பொருள்களை நிரப்பிய பயண வண்டியில் உள்ளே வந்து கொண்டிருந்தான். சாரங்கராவ் தான் அவனை வரவழைத்திருந்தான். விஜயனையும் அந்த வண்டியையும் பார்த்த ராக்‌ஷசர் சந்தேகமடைந்து நிறுத்தினார். அவர் அப்படி நிறுத்தியதைப் பார்த்த பின் நகரக் காவல் அதிகாரியும் விரைவாக அங்கே வந்தான்.

 

வணிகனின் வேடத்தில் இருந்த விஜயன் பணிவின் மறுவுருவமாக வண்டியில் இருந்து இறங்கி ராக்‌ஷசரை வணங்கி நின்றான்.

 

ராக்‌ஷசர் அவனிடம் கேட்டார். “உன் பெயர் என்ன? எங்கேயிருந்து வருகிறாய்?”

 

“பிரபு என் பெயர் விஜயன். நான் மதுராவிலிருந்து வருகிறேன்.” என்று விஜயன் பணிவுடன் சொல்லி விட்டுத் தன் அடையாளச் சீட்டை அவரிடம் நீட்டினான்.

 

அவர் வாங்கிப் பார்த்து விட்டு “உன் வண்டியில் என்ன பொருள்கள் இருக்கின்றன?” என்று கேட்டார்.

 

விஜயன் சொன்னான். “எல்லாப் பொருள்களும் இருக்கின்றன பிரபு. தானியங்கள், கைவினைப்பொருள்கள், புலித்தோல், மான்தோல் போன்ற பொருள்கள்….”

 

ராக்‌ஷசருக்கு அவனிடம் எதோ கள்ள லட்சணம் இருப்பது போல் பட்டதால் அவன் சொல்லும் பொருள்கள் தானிருக்கிறதா என்று சந்தேகம் வந்தது. “பொருள்களைக் காட்டு பார்ப்போம்” என்று ராக்‌ஷசர் சொன்னார்.

 

பொதுவாக இது போன்ற நகரவாயில் சோதனைகள் வணிகர்களை எரிச்சலூட்டுவது வழக்கம். அந்தப் பொருள்களை இறக்கிக் காட்டி விட்டு மறுபடியும் வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டு போவதை அவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் வேலையாக உணர்வார்கள். ஆனால் விஜயன் உற்சாகமாக வண்டியிலிருந்து பொருள்களை எடுத்துக் கீழே வைக்க ஆரம்பித்தான். அவனுடைய பணியாளன் ஒருவன் வண்டியில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க விஜயன் அவனைக் கடிந்து கொண்டான். “பொருள்களைக் காட்டச் சொல்லிய பின்னரும் உன்னைப் போல் சிலை போல் உட்கார்ந்திருந்தால் வியாபாரம் எப்படி ஆகும் மூடனே. நாம் இங்கே வந்திருப்பது வாணிபம் செய்யவா, இல்லை வேடிக்கை பார்க்கவா?”

 

விஜயன் கடிந்து கொண்டவுடன் அந்தப் பணியாளன் வேகமாக வண்டியிலிருந்து இறங்கி தானும் பொருள்களை இறக்கிக் கீழே வைத்துத் திறந்து காட்ட ஆரம்பித்தான்.

 

நகரக் காவல் அதிகாரிக்கு விஜயன் ராக்‌ஷசரை வாடிக்கையாளர் போல் நினைத்துப் பேசிய பேச்சு வேடிக்கையாக இருந்தது. “மூடனே. மகத நாட்டு பிரதம அமைச்சர் உனக்கு வாடிக்கையாளர் போல் தெரிகிறாரா?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு மிரட்டும் தொனியில் கேட்டான்.

 

விஜயன் இவர் மகத நாட்டு பிரதமஅமைச்சரா என்று அதிசயிக்கும் முகபாவனை காட்டி விட்டுச் சொன்னான். “எங்கள் பொருள்களை அரசர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் விரும்பி வாங்குவார்கள். சில நாட்களுக்கு முன் காசி நகரத்தில் கூட ஒரு அமைச்சர் என் பொருள்கள் வாங்கியதுடன் அடுத்த முறை வரும் போதும் கட்டாயம் வந்து பொருள்களைக் காட்டச் சொன்னார். காரணம் என்னிடம் எல்லாம் குறைந்த விலை தான் பிரபு.” சொன்னதுடன் சலிக்காமல் எல்லாப் பெட்டிகளையும் திறந்து காட்டவும் செய்தான்.

 

அவன் சொன்னது போலவே தானியங்களும் கைவினைப் பொருள்களும் இருப்பதைப் பார்த்த ராக்‌ஷசர் “சரி சரி போதும் பெட்டிகளை எடுத்து வைத்துக் கொள்” என்று சொன்னார்.

 

விஜயன் இன்னும் திறக்காமல் வைத்திருந்த இரண்டு பெட்டிகளையும் திறந்து காட்டும் வேலையில் ஈடுபட்டான். “அமைச்சர் பிரபு. இவற்றைப் பார்த்தால் நீங்கள் அசந்து போவீர்கள். சிறப்பான முறையில் பதன் செய்யப்பட்ட புலித்தோலும் மான் தோலும்.... பார்த்த பின் வாங்காமல் போகத் தங்களுக்கு மனம் வராது”

 

அவன் அசராமல் ராக்‌ஷசரிடம் புலித் தோலையும், மான் தோலையும் காட்டி விற்க முயன்றது நகரக் காவல் அதிகாரிக்கு வேடிக்கையாக இருந்தது.  அவன் அளவுக்கு நகைச்சுவை உணர்வு இல்லாத ராக்‌ஷசர் விஜயனைக் கடுமையாகப் பார்த்து விட்டு நகர்ந்தார்.

 

விஜயன் நகர்ந்து செல்லும் ராக்‌ஷசரை ஏமாற்றத்துடன் பார்த்து விட்டு நகரக் காவல் அதிகாரியிடம் சொன்னான். “ஐயா நீங்களாவது ஏதாவது வாங்குங்கள்”

 

நகரக் காவல் அதிகாரி சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு விஜயனை மிரட்டினான். “வழியை அடைத்துக் கொண்டிருக்கும் உன் பொருள்களை வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டு சீக்கிரம் இடத்தைக் காலி செய். வணிகம் செய்யும் இடமா இது?”

 

விஜயன் தன் பணியாளனைக் கடிந்து கொண்டான். “ஏன் இப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறாய். அதிகாரி சொன்னது உன் காதில் விழவில்லையா? எல்லாவற்றையும் மூடி சீக்கிரம் தூக்கி வை.”

 

பணியாளன் சுறுசுறுப்பாக இயங்க நகரக் காவல் அதிகாரி புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான். விஜயன் திருப்தியடைந்தான். இந்த இடத்தில் இன்று ராக்‌ஷசரிடமும், நகரக் காவல் அதிகாரியிடமும் இந்தப் பொருள்களைக் காட்டி அவன் வணிகன் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்தது நல்லதாயிற்று என்று எண்ணிக் கொண்டான்.

சற்று தொலைவில் நின்று கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாரங்கராவும் திருப்தியடைந்தான். இது போன்ற சூழ்நிலைகளை அனாயாசமாகச் சமாளிக்க விஜயனுக்கு ஈடு இணை யாருமில்லை. சாணக்கியரே கூட விஜயன் கல்விக்கூடத்தை விட வெளியிடங்களில் நன்றாக சோபிக்கிறான் என்று சொல்வதுண்டு, அங்கெல்லாம் அவன் அறிவு கூர்மையடைந்து விடுகிறது என்று சிலாகிப்பதுண்டு.

 

இன்றிரவு அவர்கள் முக்கிய வேலை ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார்கள். அதனால் தான் அவன் விஜயனை வரவழைத்திருக்கிறான். ராக்‌ஷசரின் வருகை விஜயனின் வருகையின் போதில்லாமல் போகும் போது இருந்திருந்தால் சிக்கலாக இருந்திருக்கும். எல்லாம் நன்மைக்கே என்று இப்போதைக்குத் தோன்றினாலும் இனி எத்தனை சிக்கல்கள் இதில் வரக்கூடும் என்பதை அவனாலும் கூற முடியாது. ஆனால் சிக்கல்களும் சிரமங்களும் இல்லாமல் மகத்தான சாதனைகளை யாரும் சாதித்து விட முடியாதல்லவா?

 

(தொடரும்)

என்.கணேசன்  

1 comment:

  1. புதையலை தற்போது பார்த்து சென்றதால், தனநந்தன் சிலகாலம் அங்கு வர மாட்டான்....
    விஜயனை, ராக்ஷஸர் சோதனை செய்ததால், அவன் திரும்பிச் செல்லும் போது பிரச்சினை குறைவு...தற்போதும் சாணக்கியருக்கு சாதகமான சூழலே....

    ReplyDelete