சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 24, 2024

யோகி 55

 

ஷ்ரவனுக்கு உண்மையில் இந்த அமானுஷ்ய சக்திகளின் இயல்பையும், செயல்படும் விதத்தையும் அவரிடமிருந்து அறிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தது. அதை அவன் அவரிடம் சொன்னவுடன், அவர் எப்படி விளக்கிச் சொல்வது என்று சிறிது யோசித்து விட்டு, பிறகு சொன்னார். “இந்த அமானுஷ்ய சக்திகள், மந்திரப்பிரயோகங்களைப் புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி சில அடிப்படை உண்மைகளை நீ புரிஞ்சுக்கணும் ஷ்ரவன். யாரேயானாலும் ஒரு செயலைச் செஞ்ச பிறகு அதோட விளைவில் இருந்து தப்ப முடியாது. அதைத் தான் கர்மான்னு சொல்றோம். ஒரு செயலைச் செஞ்சு முடிச்சவுடன அந்த கர்மா அவன் வாழ்க்கைல ஒரு பகுதியாயிடும். சரியான விளைவைத் தர்ற வரைக்கும் அது கூடவே இருக்கும். விளைவைத் தர்றதுக்கு முன்னாடி, செயலைச் செஞ்சவனோட உடம்பு அழியலாம், அவனோட வாழ்க்கை முடிஞ்சு போகலாம், ஆனால் கர்மா விளைவைத் தராம விலகிப் போகாது. அடுத்த பிறவிக்கும் அவனைத் தொடர்ந்து போகும். தன் சமயத்துக்காக அது காத்துகிட்டு இருக்கும். அதனால அவனவன் கர்மால இருந்து யாரும் தப்பிச்சுட முடியாது. சரியாய் சொன்னா, குற்றவாளிகளை நிச்சயமாய் கவிழ்க்கப் போறதும், தண்டிக்கப் போறதும் போலீஸோ, சட்டமோ, கோர்ட்டோ அல்ல. அவங்களோட கர்மா தான். அது தன் வேலையைச் செய்யறதுக்கு சட்டத்தையும், போலீஸையும், கோர்ட்டையும் பயன்படுத்திக்கலாம். இல்லை குற்றவாளி சக்தி வாய்ந்தவனாய் இருந்து சட்டத்தையும், போலீஸையும், கோர்ட்டையும் செயல்பட விடாமல் செஞ்சா, கர்மா வேற வழியைக் கண்டுபிடிச்சுக்கும். அந்த வழியில் அவனைத் தண்டிக்கும். அந்த தண்டனை எப்ப இருக்கும், எப்படியிருக்கும்கிற விவரங்கள் பலருக்கும் தெரியாமயும் போகலாம். அதனாலேயே நல்லதுக்குக் காலமில்லை, தப்பு செய்யறவன் எவ்வளவு விவரமா தண்டனைல இருந்து தப்பிச்சுட்டான் பார்த்தியான்னு புலம்பலாம். ஆனா அது அறியாமை தான்.”

 

இப்ப சைத்ரா கேஸையே எடுத்துக்கோ. குற்றவாளிகள் தண்டனைல இருந்து தப்பிச்சுட்டாங்க. ஆனா அவங்க கர்மா முதலமைச்சரோட சேதுமாதவனுக்கு இருந்த நட்பை வெச்சு அடுத்த ஆயுதமாய் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கு. இதுல ஒரு சின்னக்கருவியாய் என்னையும் தேர்ந்தெடுத்திருக்கு. வெளிப்பார்வைக்கு உன் திறமையும், முதலமைச்சரோட அதிகாரமும், போலீஸ் பலமும், என்னோட சக்திகளும் வேலை செய்யறதாய் தோணலாம். ஆனால் இதெல்லாம் கூட அடிப்படைல குற்றவாளிகளோட கர்மாவோட விளைவுகள் தான். இப்ப நாமளும் கிடைக்காட்டியும் கர்மா வேற வழிகளைப் பார்த்துக்கும். அதுக்கு ஆயிரம் கோடி வழிகள்!”

 

அடுத்ததாய் ஆவிகள், குட்டிச்சாத்தான் மாதிரி ஏவல் தேவதைகள். இந்த சக்திகள் நிஜம். நம்ம பகுத்தறிவுக்கு எட்டாத சக்திகள். ஆனால் பயன்படுத்தற வித்தை தெரிஞ்சால், எல்லாரும் அற்புதம்னு நினைக்கற விஷயங்களைக் கூட அலட்டாமல், ரொம்ப சுலபமாய் பண்ணலாம். இந்த வித்தையைக் கத்துக்கறதும், இந்த சக்திகளைக் கட்டுப்படுத்தறதும், இதில் ஆளுமை அடையறதும் சுலபம் அல்ல. ஆனாலும் முறையாய் தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் எடுத்துக்கறவங்களுக்கு முடியாததும் அல்ல. நான் என் குருமார்கள் கிட்ட இருந்து இதைக் கத்துக்க பல வருஷங்கள் ஆகியிருக்கறதாய் உன் கிட்ட சொல்லியிருக்கேன். ஆனால் இந்த சக்திகளும் கர்மாவுக்குக் கட்டுப்பட்டது தான். சக்திகள் கிடைச்சதுன்னு  தப்பாய் பயன்படுத்தினா அது தப்பான கர்மாவாய் மாறி தண்டிக்காம விட்டுடாது. என்னோட ரெண்டு குருவும் எனக்குத் திரும்ப திரும்ப சொல்லி மனசுல பதிய வெச்ச உண்மையிது.”

 

ஷ்ரவன் சொன்னான். “எனக்கு ஆவிகள் இருக்கறதாய் இப்பவும் நம்ப முடியலை சுவாமிஜி. என் அறிவுக்கு அது எட்டாத விஷயமாய் இருக்கு. ஆனாலும் நீங்க சொன்னதை சைத்ராவோட குரல்லயே கேட்டதாய்  சேதுமாதவன் சார் சொன்னதுக்கப்பறம் நம்பாம இருக்கவும் முடியல.”

 

பரசுராமன் சொன்னார். “நம்ம அறிவுக்கு எட்டாத விஷயங்கள் நிறைய இருக்கு ஷ்ரவன். நேரடி அனுபவம் கிடைக்காத எதையும் அது அவ்வளவு சீக்கிரமாய் ஒத்துக்கறதில்லை. மனிதன் இறந்து உடம்பு அழிஞ்சாலும், அவனோட ஆழமான உணர்வுகள், நிறைவேறாத தீவிர ஆசைகள், தீவிரமான எண்ணங்கள் எல்லாம் உடனடியாய் கலைஞ்சு போயிடறதில்லை. சில சமயங்கள்ல சூட்சும ரூபத்துல பிரபஞ்ச வெளில தனி யூனிட்டா தங்கிடறதும் உண்டு. அப்படி தங்கறதுக்குக் காரணம் பலதிருக்குன்னாலும் முக்கியமான காரணம் உணர்வளவுல அது செய்யாமல் விட்டதாய் அழுத்தமாய் உணர்ற சில விஷயங்கள் தான். அப்படி தனி யூனிட்டாய், சூட்சும சரீரத்தில் தங்கி இருக்கிறதை ஆவின்னு சொல்றதாய் எடுத்துக்கலாம். ஆனால் உயிரோடு இருந்த போதிருந்த குணாதிசயங்கள், அபிப்பிராயங்களோடவே, இறந்த பின்னும் அந்த ஆவி இருக்கும்னு சொல்லவும் முடியாது. உயிரோடு இருந்தப்ப தெரியாத எத்தனையோ விஷயங்களை இறந்தபின் தெரிஞ்சுகிட்டும், புரிஞ்சுகிட்டும் சில மாற்றங்களை அடைஞ்சிருக்கலாம். அதோட முக்கியத்துவம் மாறியிருக்கலாம். சைத்ராவோட ஆவி தன் கொலையாளி பற்றின தகவலை விட முக்கியமாய் ஒரு யோகியைப் பத்தி தாத்தாவுக்குத் தெரிவிக்கிறது முக்கியம்னு நினைச்சதை இதுக்கு உதாரணமாய்ச் சொல்லலாம். இன்னொரு விஷயம், எல்லா ஆவிகளையும் நாம் வரவழைச்சுட முடியாது. இறந்த பின்னும் தன் தனித்துவம் கலையாமல் சூட்சும சரீரத்தோடு உலாவும் ஆவிகளை மட்டும் தான் நாம் தொடர்பு கொள்ளவும், பயன்படுத்திக்கவும் முடியும். அது ஒரு அமானுஷ்யக்கலை. ரொம்ப கவனமாய் தான் அதைச் செய்யணும். அதைக் கட்டுப்படுத்தும் ஆளுமை இல்லாட்டி அது நம்மைக் கட்டுப்படுத்தி, ஆட்டி வைக்கிற நிலைமையும் வர்றதுண்டு. அது செயல்பட, தற்காலிகமாய் கிடைச்ச உடம்பை அது விட்டுப் போகாமல் ஆதிக்கம் செலுத்தறதும் உண்டு. அதனால  எச்சரிக்கையோடு தான் கையாளணும். எந்தக் கணத்திலும் நம் கட்டுப்பாடு இல்லாமல் போயிடக்கூடாது.”


அவர் சொன்ன தகவல்கள் ஷ்ரவனுக்கு மிகவும் பொருள் பொதிந்ததாகவும், சுவாரசியமாகவும் இருந்தன. ஷ்ரவன் கேட்டான். “சைத்ராவோட ஆவி தாத்தாவுக்கு சொல்ல ஆசைப்பட்ட தகவலைச் சொல்லிட்டு போனதோட, அதுக்குப் பழைய வாழ்க்கைல இருந்த எல்லா தொடர்பும் முடிஞ்சுடுச்சுன்னும், பழைய வாழ்க்கையோட கணக்குல எதுவும் பாக்கியில்லாமல், பூஜ்ஜியம் ஆயிடுச்சுன்னும் சொல்லி அதனால இனிமே தொடர்பு கொள்ள முடியாதுன்னும் நீங்க சொன்னதாய் சேதுமாதவன் சார் சொன்னார். பின் எப்படி நீங்க அந்த ஆவியை மறுபடியும் பயன்படுத்தி சுகுமாரனைப் பயமுறுத்துனீங்க?”

 

பரசுராமன் புன்னகையுடன் சொன்னார். “நான் சுகுமாரனைப் பயமுறுத்தினது சைத்ராவின் ஆவியை வெச்சு அல்ல. வேற சில அமானுஷ்ய சக்திகளை வெச்சு. சில பூஜைகள், பிரயோகங்கள் மூலம் சிலதை ஒருத்தருக்குக் காட்டலாம். அந்த ஆளைச் சில விதமாய் உணர வைக்கலாம்.  இப்படி மெல்ல மெல்ல ஒருத்தரோட உள்ளுணர்வை நாம் வசப்படுத்த முடியும். இது மூலமாய் ஒருத்தரோட உள்ளுணர்வை ஆக்கிரமிச்சு, நாம் விரும்பும் உணர்வை அவங்க கிட்ட உருவாக்கி அதை அதிகப்படுத்தவும் முடியும். அப்படி தான் சுகுமாரன் கிட்ட பயத்தை உருவாக்கியிருக்கோம். இனியும் ரெண்டு தடவை நாம சின்ன முயற்சிகள் எடுத்தால் போதும். கூடுதலாய் சில அனுபவங்களை அவனுக்கு ஏற்படுத்தினால் அவன் நூறு சதவீதம் இது அவளோட ஆவியோட வேலைகள்னு நம்ப ஆரம்பிப்பான். அப்படி அவன் நம்ப ஆரம்பிச்ச பிறகு மீதியை அவன் கற்பனை வளம் பார்த்துக்கும். கண்டவிதமாய் யோசிக்க வெச்சு அவன் மேல் இருக்கற கட்டுப்பாட்டை அதிகப்படுத்திக்கும். அவன் வித விதமாய் பயக்க ஆரம்பிப்பான்...”

 

ஷ்ரவனுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவன் சொன்னான். “சுகுமாரன் அளவுக்கு பாண்டியன் பயப்பட மாட்டார்னு சொன்னீங்களே சுவாமிஜி. அவருக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க?”

 

ஷ்ரவன். இந்தப் பிரயோகங்கள்ல பல நிலைகள் இருக்கு. உதாரணத்துக்கு, பாதிப்பை ஐந்து சதவீதத்துல இருந்து, நூறு சதவீதம் வரைக்கும் கூட ஏற்படுத்தலாம்.  சுகுமாரனுக்கு பாதிப்பை ஏற்படுத்த சுமார் பத்து சதவீதம் போதும்னு வெச்சுக்கோயேன். பாண்டியனுக்கு பத்து சதவீதம் போதாது. அவனுக்கு இயற்கையாவே இருக்கிற தைரியத்தில் அவன் அதுல சுதாரிச்சுக்குவான். அதனால நாம அவனுக்கு இருபது இருபத்தஞ்சு சதவீத பாதிப்பை ஏற்படுத்த வேண்டி இருக்கும். அந்த அளவு பிரயோகம் தான் அவனோட சமநிலையைப் பாதிக்க முடியும்....”

 

மிகுந்த சுவாரசியத்துடன் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்ட ஷ்ரவன் தன் சந்தேகத்தைக் கேட்டான்ஏன் இப்படி பத்து சதவீதம், இருபத்தஞ்சு சதவீதம்கிற கம்மியான அளவுல நாம பாதிப்பை ஏற்படுத்தணும்? ஏன் ஐம்பது அறுபது சதவீத பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது?” 


(தொடரும்)

என்.கணேசன்




13 comments:

  1. You have answered our questions too..very interesting conversation.

    ReplyDelete
  2. நுணுக்கமான விஷயங்களை விவரித்து இருக்கிறீர்கள். பிரமிப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  3. Very interesting

    ReplyDelete
  4. வணக்கம் ஸார். இதுவரை கர்மா பற்றி சரிவர புரியாமல் இருந்த எனக்கு இன்று உங்கள் இந்த அத்தியாயத்தில் இருந்த விளக்கம் மிக எளிமையாகவும், அருமையாக இருக்கிறது. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  5. மேலும் உங்களுடைய ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுப்புது விஷயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது. மிக்க நன்றி. 🙏

    ReplyDelete
  6. I committed a very few bad things in my teenage days without knowing the consequences. Later on during my growth, I did an enormous amount of good things to others in order to compensate my bad things committed to others in my teenage days. Still I am suffering for the bad things I committed to others in my teenage days. I am not at all exempted from my bad actions in spite of my enormous amount of good actions to others in my later years. This episode is the best one dealing with karma.

    ReplyDelete
  7. ஹலோ sir, பரம ரகசியம் முதல் சதுரங்கம் வரைக்கும் எல்லாம் வாங்கி படிச்சிட்டேன். இப்போ எதுவும் புதுசா வெளியிடறீங்களா?

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் அமானுஷ்யனை கதாநாயகனாகக் கொண்டு ”ரட்சகன்” நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இவ்வருட இறுதியில் வெளிவரும்.

      Delete
    2. அமானுஷ்யனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நன்றி ஐயா.

      Delete
    3. சூப்பர் சார், அமனுஷ்யன் என் கனவு நாயகன் சார், அவரை வைத்து இனி நாவல் எழுத மாட்டிங்களோ னு நினைச்சிருந்தேன். Thank you sir, சீக்கிரமா வெளியிடுங்க சார், பட் உங்க சமீப books ல spelling mistakes வருது, அது இல்லாம type பண்ண சொல்லுங்க sir, நான் வேணும்னா proof reading பண்ணி, நானே type பண்ணி தரேன் sir, இது என் விருப்பத்துக்குரிய கதையா சிரியற்கு என்னால் முடிந்த காணிக்கை யா இந்த வாய்ப்பு கிடைக்கணும் னு விரும்புறேன் sir. 🙏 நன்றி.

      Delete
  8. Parasuraman says that we would be punished for our bad karma or ku karma and we would be rewarded for our good karma or su karma in this life, and if not, they would be carried over in our next life. When we had a zero ku karma, then we will have no next life.

    ReplyDelete
  9. கர்மா மற்றும் ஆவி ...ஆவிப் பிரயோகம் போன்ற விசயங்களை எளிமையாக விளக்கியது அருமை.... நிறைய புரிந்துகொள்ள முடிகிறது.... அற்புதம் ஐயா....

    ReplyDelete