சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 17, 2024

யோகி 54

 

பாண்டியனின் பூர்விகம் பற்றிய தகவல்கள் ஷ்ரவனுக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தன. மதுரைக்கு அருகே இருக்கும் கிராமத்தில் பெரிய விவசாயக் குடும்பம் அவருடையது. அவரது தந்தைக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள். பாண்டியன் மூன்றாவது மகன். வீட்டிலேயே படிப்பு வராதவர் அவர் தான். பத்தாம் வகுப்பு வரையாவது எப்படியாவது பாண்டியனைப் படிக்க வைத்து விட வேண்டும் என்று பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் ஆசைப்பட்டது நடக்கவில்லை.  ஏழாம் வகுப்பு படிக்கையில் கண்டித்த ஒரு ஆசிரியர் மீது கல்லெடுத்து எறிந்து விட்டு வந்தவர் பின் பள்ளிக்குச் செல்லவில்லை.

 

படிப்பு வராதது போலவே அவருக்கு கடவுள் நம்பிக்கையும் வரவில்லை. அவருடைய நுண்ணறிவுக்கு கடவுள் என்ற நம்பிக்கை மிகவும் அபத்தமாகப் பட்டது. அப்படி ஒரு கடவுள் இருந்து அவர் இந்த உலகை உருவாக்கி, சகல ஜீவராசிகளையும் உருவாக்கி, ரட்சித்துக் கொண்டிருப்பாரானால் அது மகா முட்டாள்தனமான, பயனற்ற, அபத்தமான வேலை என்று தான் அவருக்குப்பட்டது. அதை அவர் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருந்த அத்தனை ஆட்களிடமும் தயக்கமில்லாமல் சொன்னார்.

 

யாரும் சந்தோஷமாய் இல்லை, எவனும் திருப்தியாய் இல்லை, எதுவும் ஒழுங்காய் இல்லை, எதிலும் அர்த்தமில்லைங்கறது தான் நிலைமைன்னா, இந்த மாதிரி உலகை உருவாக்கிப் பராமரிச்சுகிட்டு வர்ற கடவுள் தன்னோட வேலைய ஒழுங்காய் செய்யலன்னு தானடா அர்த்தம். அதை விட ஒன்னுமே பண்ணாம உக்காந்துகிட்டிருக்கற நானே தேவலையேடா, நீ என்ன சொல்றே?” – இது இளமையில் அவர் அடிக்கடி சொல்லும் வசனமாய் இருந்திருக்கிறது.

 

படிக்கையில் ஷ்ரவனால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

 

வீட்டிலும் சரி, வெளியேயும் சரி, அவரிடம் யாரும் எதையும் விவாதித்து வெல்ல முடிந்ததில்லை. பலரும் தங்கள் வீட்டுக் குழந்தைகள் பாண்டியனுடன் சேர்ந்து பழகி குட்டிச்சுவராகி விட்டதாய் பாண்டியனின் தாயிடமும், தந்தையிடமும் புகார் சொன்னதுண்டு. அவர்கள் மகனைத் திட்டுவதுமுண்டு. “எவன் சொன்னான்? உன் கிட்ட சொன்னதை என் கிட்ட வந்து சொல்லச் சொல்லு. நான் பேசிக்கறேன்என்று பாண்டியன் அலட்சியமாய் சொல்வதுண்டு. யாரும் அவரிடம் நேரில் வந்து எதையும் சொல்லத் தயங்கினார்கள். வேலியில் போகும் ஓணானைப் பிடித்து வேட்டிக்குள் வைத்துக் கொள்ள யாரும் தயாராயில்லை.

 

பள்ளிப் படிப்பு வராவிட்டாலும், அவருக்கு அபார அறிவு இருந்தது. மனிதர்களை எடை போடுவதிலும், யாரை எப்படிப் பயன்படுத்துக் கொள்ளலாம் என்று யோசிப்பதிலும் அவர் சமர்த்தராக இருந்தார். பயம் சிறிதும் இல்லாதவராகவும் இருந்தது அவருடைய இன்னொரு தனிச்சிறப்பாக இருந்தது.

 

அவர் கடவுளை மட்டுமல்லாமல், எல்லா மூட நம்பிக்கைகளையும் மறுத்தார். ஆவி, பேய், பிசாசு எல்லாமே மனப்பிரமைகள் என்று அழுத்தம் திருத்தமாய் நினைத்த அவர் சுடுகாட்டில் நள்ளிரவில் படுத்துறங்கிய நாட்கள் அதிகம். அதெல்லாம் இருந்தால் சந்தித்து விட்டுப் போகலாம் என்று ஆசைப்பட்டுப் போனதாக அனைவரிடமும் சொன்னார்.  உண்மையில் அப்படியே பல நாள் தங்கியும் பார்க்க முடியாமல், அவர் இதெல்லாம் பொய் என்று தெளிந்திருக்கிறார். ஆனால் ஊர்ப் பெரியவர்களோ, ”பேய், ஆவி கூட இவனை அண்டாம இருக்கணும்னா இவன் எப்படிப் பட்டவன்னு நாம தான் புரிஞ்சுக்கணும்என்று சொன்னார்கள்.

 

அப்படி குடும்பத்தினரும், ஊர்க்காரர்களும் பயங்கரமான நாத்திகவாதியாக எண்ணி ஒதுக்கி வைத்த பாண்டியன் எப்படி பிரம்மானந்தாவுடன் வந்து சேர்ந்தார் என்ற தகவல் மட்டும் ஷ்ரவனுக்குத் தெரியவில்லை. யோகாலயம் ஆரம்பித்து சிறிது காலத்திற்குள் அவர் எப்படியோ பிரம்மானந்தாவுடன் வந்து சேர்ந்து விட்டார் என்பது மட்டும்  தெரிந்தது.

 

ஆனால் பிரம்மானந்தாவுடன் வந்து சேர்ந்து கொண்ட பின்பும் பாண்டியன் கடவுளை வணங்கியதோ, ஆன்மீகக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதோ, பேசியதோ இல்லை என்பதும் தெரிந்தது. நடிப்புக்காகக் கூடத் தன்னை வேறு விதமாக வெளிப்படுத்திக் கொள்ளாத பாண்டியன் வித்தியாசமானவராகவும், தன் நிலையில் உறுதியானவராகவும் தான் ஷ்ரவனுக்குத் தெரிந்தார்.

 

பாண்டியன் பிரம்மானந்தருடன் போய்ச் சேர்ந்த பின் குறுகிய காலத்திலேயே யோகாலயத்தின் நிர்வாகப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார் என்று தகவல்கள் தெரிவித்தன. பெயருக்குப் பல பெரிய பதவிப் பெயர்களுடன் யோகாலயத்தில் பலர் இருந்த போதும், வெறும் மானேஜர் பதவியில் இருக்கும் பாண்டியன் தான் அதிகார மையமாக இருக்கிறார் என்பதும், பல நிர்வாக விஷயங்களில் அவர் வைத்தது தான் அங்கு சட்டமாக இருக்கிறது என்பதும் அங்கு முன்பு வேலை செய்தவர்கள் தந்த தகவலாக இருந்தது.

 

பாண்டியன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற போதும் யோகாலயத்திற்கு வரும் முன்னும், வந்த பின்பும் பல பெண்களுடன் உறவில் இருந்தார் என்பதும் தெரிந்தது. ஆனால் அவர் யோகாலயத்திற்கு உள்ளே உள்ள எந்தப் பெண்ணிடமும் தவறாக நடந்து கொள்ள முற்பட்டது இல்லை என்பது அனைவருடைய ஏகோபித்த கருத்தாக இருந்தது. அண்ணா நகரில் ஒரு தனி வீட்டிற்கு அவர் அடிக்கடி போய் வருவது தெரிந்தது. அந்த வீட்டில் வசிக்கும் பெண் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு புதிய பெண் வந்து சேர்வாள். யாரும் அதற்கு மேல் அங்கு இருக்கவோ, அங்கு இருக்கையிலும் அவரிடம் ஆதிக்கம் செலுத்தவோ அவர் அனுமதிக்கவில்லை. உடன் இருக்கையில் அவர்களுக்கு, பணத்தைத் தாராளமாகத் தந்தாரே தவிர, அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க அவர் இடம் தரவில்லை. அதனால் அவர்களுக்கும் அவர் பற்றி அதிகத் தகவல்கள் தெரிந்திருக்கவில்லை.

 

பாண்டியனின் பெற்றோர் தற்போது உயிரோடில்லை. உடன் பிறந்தவர்கள் அனைவரும் நல்ல நிலைகளில் தற்போது இருக்கிறார்கள். அனைவருக்கும் அவருடைய பண உதவி கிடைத்திருக்க வழியுண்டு. ஆனால் அவர்களிடமும் கூட அவர் மிக நெருக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. குடும்பத்தில் நிகழும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு உறவை நிறுத்திக் கொள்கிறார். இதையெல்லாம் பார்க்கையில் அவர் அதிகமாக யோகாலயத்திற்கே தன் முக்கிய கவனத்தைத் தருபவர் போலத் தான் தோன்றினார். ஆனால் அங்கே அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது மூடுமந்திரமாகத் தான் இருந்தது. அங்கே முன்பு வேலை செய்தவர்கள் கூட வெளிப்படையாக எதையும் சொல்ல பயந்தது போல் தோன்றியது

 

 

 

பாண்டியனின் டவல் பரசுராமனிடம் அவர் சொன்ன நேரம் காலை 9.51 மணிக்குத் தரப்பட்டது.  அவருடைய அனுமதி பெற்று ஷ்ரவன் அவரை காலை 11.00 மணிக்குச் சென்று சந்தித்தான்.

 

ஷ்ரவன் இன்ஸ்பெக்டர் செல்வத்தின் விஷயத்தில் செய்துள்ளவற்றை  பரசுராமனிடம் விவரித்து விட்டுத் தொடர்ந்து சொன்னான். “இன்னும் கொஞ்சம் செய்ய வேண்டியிருக்கு. அதையும் செஞ்சுடறோம். அதுக்குப் பிறகு அவன் சந்திக்கப் போகிற வேலை சூழ்நிலையும், அவன் கற்பனையும், அதுல பிறக்கிற பயங்களும் சேர்ந்து இனி அவனை கதிகலங்க வைக்கும்.”

 

பரசுராமன் புன்னகைத்தார்.

 

அவரிடம் ஷ்ரவன் கேட்டான். “சுவாமிஜி சுகுமாரன் மாதிரியே பாண்டியனையும் ஆவி மூலம் பயமுறுத்த முடியும்னு நீங்க நினைக்கறீங்களா?”

 

பரசுராமன் சொன்னார். “சுகுமாரன் அளவுக்கு பாண்டியன் நிலைகுலைய மாட்டான் ஷ்ரவன். அவனோட டவல் மூலமாய் நான் உணர்ந்த உணர்வுகள் அவனை அதிகம் பயப்படாதவனாயும், அதிபுத்திசாலியாயும் தான் அடையாளம் காட்டுது.”

 

ஷ்ரவனுக்கு பிரமிப்பாய் இருந்தது. அவன் பெற்றிருக்கும் தகவல்களும் அதையே அல்லவா சொல்கின்றன. ஆனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டு இவர் எந்த அளவு துல்லியமாக எதையும் உணர்ந்து விடுகிறார்!


(தொடரும்)

என்.கணேசன்




 

2 comments:

  1. Expecting thrill moment next week

    ReplyDelete
  2. பாண்டியன் விசயத்தில் பரசுராமன் கூடுதலாக மெனக்கெட்டு ஏதாவது செய்வார் என்று நினைக்கிறேன்... அல்லது... பாண்டியனின் வேறு ஏதாவது பலவீனத்தை பயன்படுத்தி அவரை பயமுறுத்தலாம்,.

    ReplyDelete