சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 13, 2024

சாணக்கியன் 113

 


யூடெமஸைக் கொன்று சந்திரகுப்தனும், மலயகேதுவும் வெற்றியடைந்தார்கள் என்ற செய்தி காந்தாரத்திற்கு வந்து சேர்ந்தது. க்ளைக்டஸ் அதையறிந்து மனம் நொந்தான். பைத்தியக்காரனான யூடெமஸ் இறந்ததில் அவனுக்கு வருத்தமில்லை. ஆனால் யவனர்கள் தோற்று சரண் அடைந்ததை அவனால் தாங்க முடியவில்லை. அலெக்ஸாண்டர் தன் வீரத்தால் வென்ற ஒவ்வொரு பகுதியாக யவனர்களின் கைவிட்டுப் போவது அவனால் சகிக்க முடியாததாய் இருந்தது. ஆனால் ஆம்பி குமாரன் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தான். யூடெமஸ் தன் மரணத்தைத் தானே வரவழைத்துக் கொண்டான் என்பது அவன் கருத்தாக இருந்தது. ஒரு சத்ரப்பாக இருந்தும் ஆம்பி குமாரன் யவனர்கள் தோற்றுப் போனதைக் குறித்து எந்த வருத்தத்தையும், அவமானத்தையும் உணரவில்லை என்பதைக் கவனித்து க்ளைக்டஸ் கோபம் அடைந்தான். ஒரு பார்வையாளனாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கவா சத்ரப் பதவி? இப்படியே போனால் யவனர்கள் இங்கு ஆண்டார்கள் என்ற சுவடு கூட இல்லாமல் போய் விடுமே! இப்படிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த க்ளைக்டஸுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக மாசிடோனியாவில் இருந்து ஒரு தகவல் வந்து சேர்ந்தது. அவன் உடனடியாகச் சென்று ஆம்பி குமாரனைச் சந்தித்தான்.

 

ஆம்பி குமாரன் க்ளைக்டஸின் வரவில் ஒருவித சலிப்பை உணர்ந்தான். பிலிப்பின் மறைவில் ஆரம்பித்து, அலெக்ஸாண்டரின் மறைவில் அதிகமாகி, யூடெமஸின் மறைவில் முழுவதுமாகவே சோகத்தில் ஆழ்ந்து விட்ட க்ளைக்டஸ் அவனைப் பார்க்கும் போதெல்லாம் குற்றம் சாட்டுகிற பாவனை முகத்தில் தெரியும்...

 

“என்ன க்ளைக்டஸ்?” என்று ஆம்பி குமாரன் கேட்டான்.


க்ளைக்டஸ் சொன்னான். “மாசிடோனியாவில் இருந்து இப்போது தகவல் வந்திருக்கிறது சத்ரப். பாபிலோன், பாரசீகம், பாரதப் பகுதிகளைக் காக்கும் பொறுப்பு செல்யூகஸுக்குத் தந்திருக்கிறார்களாம். அலெக்ஸாண்டருடன் வந்து இங்குள்ள பகுதிகளை வென்றவர் என்பதாலும், இப்பகுதிகள் குறித்து நன்றாக அறிந்தவர் என்பதாலும் அவரை நியமித்திருக்கிறார்கள்.”

 

அலெக்ஸாண்டரின் மகன் சிறுவனாக இருந்தபடியால் மாசிடோனியாவில் அரியணையை அவன் பெயரில் காப்பது யார் என்ற குழப்பம் நிலவுவதாக க்ளைக்டஸ் தான் முன்பு அங்கிருந்து தகவல்கள் பெற்றுச் சொல்லியிருந்தான். மாசிடோனியாவிலேயே குழப்ப நிலையிருக்கும் போது அலெக்ஸாண்டர் வென்ற இந்த தூரத்துப் பகுதிகளுக்கு இனி யார் வரப் போகிறார்கள் என்று ஆம்பி குமாரன் கணக்கிட்டு யவனர்கள் குறித்து கவலையைத் தொலைத்து இருந்தான். அதனால் இப்போது களைக்டஸ் சொன்ன தகவல் ஆம்பி குமாரனுக்குக் கசந்தது.

 

இது வரை இருந்த சுதந்திரம் செல்யூகஸ் வந்தால் தொடர்ந்து கிடைக்க வாய்ப்பில்லை என்ற யதார்த்தம் உறைக்க ஏமாற்றத்தில் ஒரு கணம் பேச்சிழந்தான். அவனையே க்ளைக்டஸ் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருப்பதைக் கவனித்தவுடன் உடனே புன்னகை செய்தான். “நல்ல செய்தி சொன்னாய் க்ளைக்டஸ். முன்பின் தெரியாதவர்கள் இங்கு பொறுப்பேற்க வருவது அவர்களுக்கும் சிரமம், நமக்கும் சிரமம். நண்பர் செல்யூகஸ் எப்போது வருகிறார்?”

 

”அவர் இப்போது பாபிலோனில் இருக்கிறாராம். அங்கு அனைத்தையும் சீர்ப்படுத்தி விட்டு பாரசீகத்திற்கும், பின்பு இங்கும் வருவார் போல் தெரிகிறது. ஆனால் அவர் வரும் வரை புஷ்கலாவதியில் நடந்த நிகழ்வுகளைத் தெரிவிக்காமல் இருப்பது சரியல்லவே. நாம் அவருக்கு அனைத்தையும் தெரிவிப்பதற்கு முன்பே மற்றவர்கள் மூலம் அவருக்குத் தகவல்கள் தெரிந்தால் அவர் கோபித்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறதல்லவா?”

 

ஆம்பி குமாரன் க்ளைக்டஸை யோசனையுடன் பார்த்தான். க்ளைக்டஸின் இந்த மறைமுக மிரட்டல் அவனுக்குப் பிடிக்கவில்லை.  ஆனாலும் அதை அவன் வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சொன்னான். “செல்யூகஸ் தான் நம் தலைவர் என்று இப்போது தானே தெரிகிறது. கண்டிப்பாக இனி அவரிடம் சொல்வோம். யூடெமஸுடன் கேகயத்தில் இருந்தவன் நீ தான் என்பதால் நீயே நேரில் சென்று அங்கு நடந்தவற்றையும்,  போரின் பின்னணியையும், பின் நடந்ததையும் செல்யூகஸுக்குத் தெரிவித்து வருவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது களைக்டஸ்”

 

க்ளைக்டஸுக்கும் செல்யூகஸிடம் நேரடியாகச் சென்று பேசி எல்லாவற்றுக்கும் முடிவு கட்டுவது உத்தமம் என்று தோன்றியது. முன்பே  ஒரு முறை அவன் செல்யூகஸுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். அதற்குப் பின் இங்கே எத்தனையோ நடந்து விட்டது. இப்போதும் யவனர்கள் ஏதாவது செய்து தங்கள் வலிமையை நிலைநாட்டா விட்டால் பின் எப்போதும் அது நிகழ வாய்ப்பில்லை. அவன் உற்சாகமாகச் சொன்னான். “நான் உடனே கிளம்புகிறேன் சத்ரப்”

 

ஆம்பி குமாரன் தலையசைத்தான். க்ளைக்டஸ் அவசர அவசரமாகக் கிளம்பினான். பல நாட்கள் பயணித்து பாபிலோன் சென்று செல்யூகஸை நேரில் சந்தித்து அனைத்தையும் சொல்லி முடித்த போது தான் அவன் மன பாரம் குறைந்தது.

 

செல்யூகஸ் அவனை மரியாதை கலந்த அன்புடன் பார்த்தான். எந்தப் பெரிய பதவியில் இல்லாத போதும் அலெக்ஸாண்டர் மீதும் யவனர் பெருமை மீதும் இத்தனை அக்கறை கொண்ட மனிதனைப் பார்ப்பதரிது என்று அவனுக்குத் தோன்றியது. செல்யூகஸுக்கு இந்தப் புதிய பொறுப்பு கிடைக்கும் முன்பே கூட யூடெமஸும், ஆம்பி குமாரனும் சத்ரப்களாக இருந்தும் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்க்கிற வேலைகளைச் செய்யாமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என்று கவலையுடன் கடிதம் எழுதித் தெரிவித்தவன் க்ளைக்டஸ்.

 

க்ளைக்டஸ் அனைத்தும் சொன்ன பின், அங்கு நடந்திருக்கும் நிகழ்வுகளை யவனர்களுக்குப் பெரிய பின்னடைவாக செல்யூகஸும் நினைத்தான்.  அவன் மெல்லக் கேட்டான். “யூடெமஸுக்குப் புத்தி பேதலித்து விட்டதா என்ன? ஏனிந்த முட்டாள்தனமான வேலையைச் செய்தான்?”

 

“அது தான் எனக்கும் புரியவில்லை. அவன் கேட்டு புருஷோத்தமன் படைகளை அனுப்பவில்லை என்ற கோபம் இருந்திருக்கிறது. புருஷோத்தமன் இறந்த பின் கேகயம் பலமிழந்து விடும், அவர்கள் நம்மை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்று நினைத்ததும் அவன் பேச்சில் வெளிப்பட்டது.  அந்த தைரியத்தில் இப்படி செய்து விட்டது போல் தான் தெரிகிறது.”

 

செல்யூகஸ் கோபத்துடன் யூடெமஸைக் கடிந்து கொண்டான். “முட்டாள். முட்டாள்…. முடிவில் என்ன சாதித்தான்? கேகயத்தை சந்திரகுப்தனுடன் சேர்த்து விட்டு, தானும் செத்தது தான் அவன் சாதனை. பிலிப்பின் மரணச் செய்தி அலெக்ஸாண்டருக்கு வந்த போது அங்கே அனுப்புமளவு அருகிலிருந்தவன் அவன் தான். இப்படி புத்தி பேதலித்துப் போனவன் என்று அவனைப்பற்றித் தெரிந்திருந்தால் அலெக்ஸாண்டர் அவனை சத்ரப்பாக நியமித்திருக்க வாய்ப்பில்லை”

 

க்ளைக்டஸ் வருத்தத்துடன் தலையசைத்தான். செல்யூகஸ் சிறிது யோசனையில் ஆழ்ந்து விட்டுச் சொன்னான். ”எனக்கு மலயகேது யூடெமஸை வீழ்த்த சந்திரகுப்தனுடன் சேர்ந்து கொண்டதைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எதிலும் பட்டும் படாமலும் இருக்கும் ஆம்பி குமாரனைப் புரிந்து கொள்ள முடியவில்லை”

 

க்ளைக்டஸ் சொன்னான். “எனக்கென்னவோ பிலிப்பின் மரணத்திற்குப் பின்  ஆம்பி குமாரன் பயந்து புரட்சிப்படையினரிடம் சரணடைந்து விட்டதாகவே தோன்றுகிறது. அவர்களும் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாமல் இருக்கிறார்கள். சந்திரகுப்தன் இப்போது போருக்குச் செல்லும் போதும் கூட எங்குமே காந்தார எல்லையைத் தொடாமல் தான் படையைக் கொண்டு போயிருக்கிறான்.  எல்லாம் பார்க்கும் போது அவர்களுக்குள் ஏதோ ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். விஷ்ணுகுப்தர் முன்பு அவனுக்கு ஆசிரியராக இருந்தவர்…”

 

“ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே  நல்லுறவு இருந்ததில்லையே. அவரைக் கொல்லக்கூட அவன் ஒரு முறை முயன்றிருக்கிறான் என்றும் கேள்விப்பட்டேனே”

 

”அது உண்மை தான். ஆனால் இப்போது பழைய பகை போய் புதிய உறவு அவர்களிடையே ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. நீங்கள் உடனடியாக வந்து நிலைமையைச் சரி செய்யா விட்டால் நம்முடையது என்று அங்கு எதுவும் மிஞ்சியிருக்காது” க்ளைக்டஸ் ஆதங்கத்துடன் சொன்னான்.

 

”கண்டிப்பாக வருகிறேன்” என்று செல்யூகஸ் வாக்களித்தான். ”இங்கு சில வேலைகள் எனக்கு இன்னும் பாக்கியிருக்கின்றன. அதைச் சீக்கிரம் முடித்துக் கொண்டு அங்கு வருகிறேன். நாம் இழந்த பகுதிகள் அத்தனையும் கண்டிப்பாக எதிரிகளிடமிருந்து மீட்போம். நீ கவலைப்படாதே க்ளைக்டஸ். நம் எதிரிகளுடன் சமரசம் செய்து கொண்ட பின் காந்தாரத்தையும் ஆம்பி குமாரனிடம் விட்டு வைப்பதில் அர்த்தமில்லை. அங்கு புதியதொரு யவன ராஜ்ஜியம் படைப்போம்.”

 

அந்த வார்த்தைகளில் க்ளைக்டஸ் புத்தெழுச்சி பெற்றான். செல்யூகஸ் அலெக்ஸாண்டருக்கு அடுத்தபடியான மாவீரன் என்பதை அவன் அறிவான். செல்யூகஸின் வரவால் சரித்திரம் மாறும் என்ற நம்பிக்கை அவன் மனதில் உதிக்க, பல வருடங்கள் கழித்து முதல் முறையாக க்ளைக்டஸ் புன்னகைத்தான்.   

 

(தொடரும்)

என்.கணேசன்






 

1 comment:

  1. செல்யூகஸ் அல்ல தற்போது உள்ள சூழலில் அலெக்சாண்டரே திரும்ப வந்தாலும் தோல்வியடைவது உறுதி...
    முன்பு இருந்த நிலை வேறு...தற்போதைய நிலை வேறு...

    ReplyDelete