சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 20, 2024

சாணக்கியன் 114

 

னநந்தனுக்கு அன்றிரவும் அந்தக் கொடுங்கனவு வந்தது. அதில் ஒரு சின்ன மாற்றம். இந்த முறை கங்கைக் கரையில் அவன் ஒளித்துப் புதைத்து வைத்திருந்த புதையல் களவு போனது போல் கனவு. அவன் தன் பிறந்த நாள் வேள்விகளுக்காக அந்த யாகசாலை போன போது யாக குண்டம் உடைந்து சுரங்கப் பாதை தெரிந்தது. அவன் பதறிப்போய் இறங்கி உள்ளே போய் பார்க்கையில் புதைத்து வைத்த செல்வம் எதுவும் இருக்கவில்லை.  காலி வெற்றிடத்தைப் பார்த்து அவன் அலறுகிறான். உடனே விழிப்பு வந்து விட்டது. பின் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

 

அவனைத் தவிர அந்தப் புதையல் இரகசியத்தை அறிந்தவர்கள் யாருமில்லை. அறிந்தவர்கள் எல்லாம் பரலோகம் போய்ச் சேர்ந்து விட்டார்கள். உயிரோடிருக்கும் ஒருவருக்கும் அது தெரியாது. அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராக்‌ஷசரிடம் கூட அவன் அந்த இரகசியத்தை அவன் சொல்லியதில்லை.  முன்பாவது எதாவது ஒரு முட்டாள் கங்கைக் கரையில் எதற்காகவாவது ஒரு குழி தோண்டி புதையலைக் கண்டுபிடித்து விடும் மிகவும் குறைந்தபட்ச சாத்தியமாவது இருந்தது. அது அவனைப் பயமுறுத்திக் கொண்டே இருந்ததால் தான் அவன் யாகசாலையைக் கட்டினான். அந்த யாகசாலையின் அஸ்திவாரத்தில் அதுபற்றி அறிந்த கட்டிடப் பணியாளர்களுக்கு அந்த இரகசியம் பற்றி வெளியே யாரிடமாவது சொன்னால் மரண தண்டனை நிச்சயம் என்று சொல்லிப் பயமுறுத்தியிருந்தான். அலட்டிக் கொள்ளாமல் அவன் செய்திருக்கும் கொலைகள் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த அந்தப் பணியாளர்கள் அது குறித்து வாயே திறக்கவில்லை. என்றாலும் கூட அவன் அஸ்திவாரப்பணி முடிந்தவுடன் முதல் வேலையாக அவர்களைப் பாம்பு விஷத்தால் கொன்று விட்டான். தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்காலத்திற்கு விட்டு வைக்க அவன் விரும்பவில்லை.


அங்கு அவன் அதிக காவலர்களை நியமித்து அதைக் காவல் காக்க வைக்க முடியும் என்றாலும் காலியாக இருக்கும் யாகசாலைக்குக் காவல் எதற்கு என்று யாராவது யோசிக்க ஆரம்பித்தால் புதையல் இருக்கக்கூடும் என்று அனுமானித்து விடும் அபாயம் இருக்கிறது. அதனால் யாரும் உள்ளே நுழையாதபடி அதைப் பூட்டி மட்டும் வைத்திருந்தான்.  அரசனின் யாகசாலை என்பதால் மற்றவர்களும் பயன்படுத்த முடியாதபடி பூட்டி வைத்திருப்பதாக எல்லோரும் நினைப்பார்கள். காலி யாகசாலைக்குள் பூட்டை உடைத்துக் கொண்டு யாரும் போக வாய்ப்புமில்லை. இதையெல்லாம் யோசிக்கையில் அங்கு புதையல் களவு போக வாய்ப்பேயில்லை. இருந்த போதிலும் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

 

இதற்கெல்லாம் காரணம் நேற்று ராக்‌ஷசர் அவரிடம் சொன்ன செய்தி தான். கேகயமும் விஷ்ணுகுப்தரின் புரட்சிப்படையோடு இணைந்து கொண்டது என்றும் இரு படைகளும் சேர்ந்து புஷ்கலாவதியில் இருந்த யவன சத்ரப்பை போரில் வென்று கொன்று விட்டார்கள் என்றும் சொன்ன செய்தியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவரிடம் சபதம் போட்டு விட்டுப் போன ஒரு சாதாரண ஆசிரியன் இங்கு மாடு மேய்த்துக் கொண்டு இருந்த சிறுவனை வாஹிக் பிரதேசத்தின் அரசனாக முடிசூட்டியதையே அவனால் தாங்கியிருக்க முடியவில்லை. பர்வதேஷ்வரன் என்று பெருமையாக அழைக்கப்பட்ட புருஷோத்தமன் ஆண்ட கேகயம் அந்த ஆசிரியன் விரித்த வலையில் விழுகிறது என்றால் அது ஆபத்தை வளர்க்கிறது என்று தனநந்தன் உணர்ந்தான். அவனுடைய எதிரிகள் வளர்வதும், உயர்வதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. 


ஆனால் என்ன வளர்ந்தாலும், எத்தனை பேரோடு கூட்டு சேர்ந்தாலும் தனநந்தனை எதிர்த்து வெல்லும் வலிமையை அந்த அகங்கார ஆசிரியன் பெறப் போவதில்லை என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவனைப் பாதிக்காத வெற்றிகளைக் கூட அவனை எதிர்ப்பவர்கள் பெற்று விடக்கூடாது என்று அவன் ஆசைப்பட்டான். அந்த அற்ப வெற்றிகளைப் பற்றி எல்லாம் எண்ணி மனம் புழுங்குவது தவறு என்று பலவந்தமாக மனதை நேற்று மற்ற விஷயங்களுக்குத் திருப்பினான். அதனால் தான் இந்தப் பாழாய் போன கனவு வந்து தொலைத்ததோ? ஆனால் அந்த ஆசிரியன் இந்தப் புதையலை எடுத்துக் கொண்டு போய் விடுவான் என்று பயம் வரக் காரணமில்லையே...

 

விடிந்தவுடன் முதல் வேலையாக கங்கையில் குளிக்க விரும்புவதாகச் சொல்லி தனநந்தன் ரதத்தில் கிளம்பினான். சென்று கங்கையில் குளித்த போது மனம் யாகசாலை போய்ப் பார்க்க அவசரப்பட்டது. ஆனால் அப்படி கங்கையில் அவசர அவசரமாகக் குளித்து விட்டு யாகசாலைக்கு விரைவது கூட சிலர் சந்தேகத்தை கிளப்பலாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட தனநந்தன் இயல்பான நேரம் எடுத்துக் கொண்டு குளித்து உடை மாற்ற யாகசாலைக்குச் செல்வது போலக் காட்டிக் கொண்டான். யாகசாலையைப் பூட்டியிருந்த பெரிய பூட்டின் சாவியைக் கூட அவன் ஆரம்பத்திலேயே  அவனது தேரோட்டியிடம் கொடுக்கவில்லை. குளித்து விட்டு வந்த பின் தான் யாகசாலையின் சாவியை அவனிடம் தந்தான். தேரோட்டி அந்த யாகசாலைக் கதவின் பூட்டைத் திறப்பது கூட அவனுக்கு மிக நிதானமாக நிகழ்வதாகத் தோன்றியது. அவன் திறந்தவுடன் உள்ளே போன தனநந்தன் முதலில் சென்று பெரிய யாக குண்டத்தைப் பார்த்தான். அது உடைக்கப்பட்டிருக்கவில்லை. சேதாரமில்லாமல் அவன் முன் பார்த்தபடியே இருந்தது. அதைப் பார்த்த பிறகு தான் அவன் நிம்மதியடைந்தான். நிதானமாக உடை மாற்றிக் கொண்டு வெளியே வரும் போது தேவையில்லாத இந்தப் பயத்தை விட வேண்டும் என்று தன்னிடமே கடிந்து சொல்லிக் கொண்டான்.  

 

நீண்ட பயணம் சென்று வந்திருந்த போதும் க்ளைக்டஸ் முகத்தில் களைப்புக்குப் பதிலாக கம்பீரம் தெரிந்தது. சோகமே உருவாக காந்தாரத்தில் இருந்த க்ளைக்டஸை ஆம்பி குமாரனால் பார்க்க முடியவில்லை. அலெக்ஸாண்டர், பிலிப் காலத்தில் இருந்த நிலைக்கு க்ளைக்டஸ் மாறி இருந்தான். அவன் ஆம்பி குமாரனை சமமான நிலையில் இருப்பவனைப் பார்ப்பது போல் பார்த்தான். வணக்கத்தின் போது கூட அவன் அதிகம் வளையவில்லை என்பதை ஆம்பி குமாரன் கவனித்தான். வணக்கமும் சாதாரணமாகவே இருந்தது. சத்ரப் என்ற சொல்லை அவன் மறந்தும் சொல்லவில்லை.

 

அவன் கவனித்தவற்றை முகபாவனையில் வெளிப்படுத்திக் கொள்ளாத ஆம்பி குமாரன்   ”செல்யூகஸ் நலமா க்ளைக்டஸ்?” என்று கேட்டான்.

 

“தளபதி பூரண நலத்துடன் இருக்கிறார்.”

 

“நீ போய் வந்திருக்கும் வேகத்தைப் பார்த்தால் பாபிலோனில் அதிக நாட்கள் தங்கவில்லை போல் தெரிகிறது. அவ்வளவு தொலைவு சென்றவன் நன்றாகச் சில நாட்கள் ஓய்வெடுத்தபின் வந்திருக்கலாமே.” என்று ஆம்பி குமாரன் சொன்னான்.

 

“அவர் எனக்கு நிறைய முக்கிய வேலைகளைத் தந்திருக்கிறார். அதனால் தான் உடனே வந்து கிளம்பி விட்டேன். வழியிலும் நான் அதிகமாக ஓய்வெடுக்கவில்லை.” என்று மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவன் போல் க்ளைக்டஸ் சொன்னான்.

 

அப்படியென்ன முக்கிய வேலைகள் என்று கேட்பதை ஆம்பி குமாரன் தவிர்த்தான். சிலருக்கு முக்கியத்துவம் தருவது பெரிதல்ல; தந்தால் அவர்கள்  உச்சத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். அவர்களை கீழே இறக்குவது அத்தனை சுலபமாக இருக்காது.

 

ஆம்பி குமாரன் மௌனமாக இருந்ததைக் கண்டு க்ளைக்டஸ் தானாகவே சொல்ல ஆரம்பித்தான். “சத்ரப் பிலிப்பின் மறைவுக்குப் பின் இங்கு நடந்தவை குறித்து தளபதி செல்யூகஸ் மிக அதிருப்தியுடன் இருக்கிறார். வீரமுள்ள தலைமை செய்திருக்க வேண்டிய எதுவுமே செய்யப்படவில்லை என்பதுடன் இருப்பதையும் இழந்து நிற்கிற அவலத்தையும் அவரால் சகிக்க முடியவில்லை...”

 

உள்ளே எழுந்த கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத ஆம்பி குமாரன் சொன்னான். “தலைமைப் பொறுப்பில் புத்தி பேதலித்தவனை நியமித்தால் இப்படியெல்லாம் நிகழ்வது தவிர்க்க முடியாதது.  நடந்திருப்பது உனக்கும் வருத்தம், எனக்கும் வருத்தம் தான். என்ன செய்வது? யூடெமஸ் இப்படி எல்லாம் நடந்து கொள்வான் என்று நாம் நினைத்தோமா? இத்தனைக்கும் எல்லாம் தெரிந்த நீயும் கேகயத்தில் அவனுடன் இருந்தாய். அவனை உன்னாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. யவனனான நீ உடன் இருந்தும், அவனிடம் உங்கள் மொழியிலேயே உன்னால் பேச முடிந்தும் உன்னாலேயே அவனை எதுவும் செய்ய முடியாத போது, சத்ரப் பதவியை அவனோடு பகிர்ந்து வைத்திருந்த போதும், மொழி தெரியாத அன்னியனான நான் தூரத்தில் இருந்து கொண்டு என்ன தான் செய்ய முடியும்?”

 

க்ளைக்டஸும் உள்ளூர கோபத்தை உணர்ந்தான். ’சமீப காலமாக பேச்சுத் திறமையைத் தவிர வேறெதையும் வளர்த்துக் கொள்ளாத இந்த நயவஞ்சகன் என் மீது எவ்வளவு சாமர்த்தியமாகக் குற்றம் சாட்டுகிறான்’.

 

“இனி தகுதியில்லாதவர்களிடம் பதவி இருக்காது. தளபதி செல்யூகஸே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு எல்லாவற்றையும் சரி செய்வார்.” என்று க்ளைக்டஸ் காட்டமாகச் சொன்னான்.

 

(தொடரும்)

என்.கணேசன்






1 comment:

  1. தனநந்தனின் உள்ளுணர்வு 'புதையல் புதையல் களவாடப்பட போகிறது' என்பதை எச்சரிக்கிறது....

    ReplyDelete