சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 29, 2024

சாணக்கியன் 98

 

சாணக்கியர் ஜீவசித்தியிடம் வந்து பேசுவதற்குச் சில காலம் முன்பிருந்தே அவனைப் பற்றி நிறைய விவரங்கள் சேர்த்திருந்தார். அவற்றை வைத்து அவனுடைய குணாதிசயங்களைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தார். ஒரு சிலையைச் செதுக்கும் முன் அந்தச் சிலை செய்ய அந்தக் கல் தகுந்தது தானா என்று ஆராய்ந்து பார்த்த பின்பே சிலை செய்ய ஆரம்பிக்கும் சிற்பி போல அவனை ஆராய்ந்திருந்தார். அவன் மிகவும் திறமையானவன், நாணயமானவன், குடும்பத்தினரிடம் பாசமானவன் என்பது அவருக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவன் அவசர முடிவுகள் எடுப்பவன் அல்ல என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவனுடைய குணாதிசயங்களும், உத்தியோகமும் அவருடைய இலக்குக்கு மிகவும் உதவக்கூடியதாக இருந்தபடியால் தான் அவர் அவனிடம் பேச வந்திருந்தார்.   அவன் குடும்பத்தினர் வெளியூர் சென்று அவன் தனியாக இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவனைச் சந்தித்துப் பேசுவது வசதியாக இருந்தது.  

 

அறிவாளிகளுக்குச் சந்தேகமும் அதிகமாக இருப்பது இயற்கை. அவர்கள் எந்தத் தீர்மானமும் எடுப்பதற்கு முன்பே அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு விடுவார்கள். ஒரு விஷயத்தை நம்பிய பிறகும், ஒரு காரியத்தில் இறங்கிய பிறகும் அவர்களுக்கு அடிக்கடி சந்தேகங்கள் வந்து கொண்டிருக்காது. முட்டாள் பிறகு யோசிக்க ஆரம்பிப்பதை அறிவாளி முதலிலேயே யோசித்து தெளிந்து விடுவான். அந்த வகையில் தனநந்தன் மீது கடுங்கோபமும் வெறுப்பும் அவனுக்கு ஏற்பட்டிருந்தாலும் மகதத்தை தனநந்தனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறதுஎன்று சாணக்கியர் சொன்னது நடக்கக்கூடிய எதிர்பார்ப்பாக அவனுக்குத் தோன்றவில்லை.  

 

அவன் சொன்னான். “நீங்கள் என்னிடம் வந்து இந்த உண்மையைத் தெரிவித்ததற்கு நன்றி அந்தணரே. ஆனால் உண்மையைத் தெரிந்து கொண்டும் மன்னனை எதிர்த்து என்னால் என்ன செய்ய முடியும்? குற்றவாளி வேறு யாராவது இருப்பின் மன்னனிடம் சென்று முறையிடலாம். மன்னனே குற்றவாளியானால் எங்கு சென்று முறையிடுவது? தாங்கள் மகதத்தை மன்னனிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதற்கான வலிமை இல்லாத நாம் இருவர் என்ன செய்து விட முடியும்?”

 

இது போன்ற காரியங்கள் தனிமனிதர்களால் சாத்தியமல்ல என்று நீ நினைக்கிறாய் ஜீவசித்தி. தனிமனிதர்கள் தனித்தனியாக முயற்சித்தால் கண்டிப்பாக அது சாத்தியமல்ல தான். ஆனால் நிறைய தனிமனிதர்கள் கூட்டாகச் சேர்ந்தால் அவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் முடிந்ததைச் செய்தால் போதும். ஒரே நோக்கமுள்ள அனைவரும் அப்படிச் செய்வார்களேயானால் அவர்கள் உத்தேசிக்கும் காரியம் கண்டிப்பாக எளிதில் முடியும். வரலாறு அப்படித்தான் படைக்கப்படுகிறது. இந்த இலக்கோடு நிறைய பேர் இருக்கிறோம். நீயும் எங்களுடன் சேர்ந்து கொள்கிறாயா?”

 

ஜீவசித்தி எச்சரிக்கையுடன் சொன்னான். “இப்போது வீட்டில் நான் தனியாக இருந்தாலும் எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது அந்தணரே. அவர்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியம்.. தந்தை இழந்து பல கஷ்டங்கள் அனுபவித்த நான், மன்னருக்கு எதிராகப் போராடி இறந்து, அந்தக் கஷ்டங்களை என் பிள்ளைகளும் அனுபவிப்பதை விரும்பவில்லை.  என் தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி என் இரத்தத்தைக் கொதிக்க வைத்தாலும் என் குடும்பத்திற்காக நான் அவசர முடிவுகள் எடுக்க முடியாதவனாகவும், யோசிக்க வேண்டியவனாகவும் இருக்கிறேன்

 

ஜீவசித்தி! நான் உன்னைப் போராட்டத்தில் இணைந்து கொள்ள அழைக்கவில்லை. அதற்கு வேண்டுமான ஆட்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நீ இங்கேயே இருந்து எங்களுக்கு சில தகவல் உதவிகளும், வெளியே தெரியாதபடியான உதவிகளும் செய்தால் போதும். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” 

 

ஜீவசித்தி யோசித்தான். சாணக்கியர் அவன் என்ன யோசிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டு சொன்னார். “இரகசியம் காப்பதில் வல்லவர்கள் நாங்கள். நாங்களும் சிக்கிக் கொள்ள மாட்டோம். எங்களுக்கு உதவியவர்களையும் சிக்க விட மாட்டோம்

 

நாங்கள் என்றும் நிறைய பேர் என்றும் பன்மையில் சொல்கிறீர்கள் அந்தணரே. உங்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொண்டால் முடிவெடுக்க எனக்குச் சுலபமாக இருக்கும்

 

சாணக்கியர் ஜீவசித்தியைச் சந்திக்கச் சென்றது அலெக்ஸாண்டர் பாரதத்திலிருந்து சென்ற பின்பு யவனர்களுக்கு எதிராக சாணக்கியர் படைகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலம். தாக்குதலுக்கான திட்டங்கள் தயாராகிக் கொண்டிருந்தனவே ஒழிய இன்னமும் அவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருக்கவில்லை. அது நூறு சதவீதம் வெற்றியில் முடியும் என்று நம்பியிருந்த சாணக்கியர் அதற்கு முன் அடுத்த இலக்குக்கான ஆரம்ப வேலைகளைச் செய்ய வேண்டி தான் ஜீவசித்தியைக் காண வந்திருந்தார்.

 

அவர் தங்களைப் பற்றி அவனிடம் சுருக்கமாகச் சொன்னார். ஜீவசித்தி அவர் சொன்னதைக் கேட்டு பிரமித்தான். தனநந்தனிடம் தைரியமாகச் சபதமிட்டுப் போன இந்த அந்தணர் வெற்று மனிதரல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. அவர் பேச்சிலும், சிந்தனைகளிலும் உணர்ச்சிப் பிரவாகங்கள் இருக்கவில்லை. மாறாகத் தெளிவும், நிதானமும், ஆழமான புரிதலும் இருந்தன. அவரிடம் வெறும் பழிவாங்கும் உணர்வை விட அதிகமாக ஒருங்கிணைந்த பாரதத்தை யவனர்கள் போன்ற அன்னியர்களிடமிருந்தும், தனநந்தன் போன்ற கொடுங்கோலர்களிடமிருந்தும் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வு வெளிப்பட்டது.  ஜீவசித்தி அது வரை மகதம் தான் தன் தாயகம் என்று நினைத்திருந்தான். அதையும் தாண்டிய தேசபக்தியை அவர் உணர்வு பூர்வமாகப் பேசினார்.  அவர் மீது அவனுக்கு பெரும் மரியாதையும்,  முழு நம்பிக்கையும் பிறந்தன.   

 

அவன் அவரிடம் உறுதியாகச் சொன்னான். “அந்தணரே, உங்களுடன் இணைவதில் நான் பெருமைப் படுகிறேன். என்னால் என்ன ஆக வேண்டும் என்று சொல்லுங்கள்

 

அவர் அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு என்ன விதமான உதவிகள், தகவல்கள் இப்போதைக்குத் தங்களுக்குத் தேவைப்படுகின்றன என்று அவனுக்கு விளக்கினார். அத்தனையும் செய்வதாய் அவன் வாக்களித்தான்.

 

பின் அவன் தன் மனதில் விடை கிடைக்காத அந்தக் கேள்வியைக் கேட்டான். “அந்தப் பெட்டிகளில் என்ன இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் அந்தணரே?”

 

சாணக்கியர் சொன்னார். ”பொன்னும், செல்வமும் இருக்கக்கூடும். புதைக்க தனநந்தனுக்குப் பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் புதைத்த ஆட்கள் அதை நினைவில் வைத்திருப்பது எதிர்காலத்தில் ஆபத்தை விளைவிக்கலாம் என்று பயந்து அவர்களைக் கொன்றிருக்கலாம் என்பது என் அனுமானம்

 

ஜீவசித்தி கேட்டான் அதை கங்கைக் கரையில் புதைத்து வைக்கும் அவசியம் தனநந்தனுக்கு என்ன இருக்கிறது? கஜானாவில் இடமில்லையா? அப்படியே கஜானாவுக்கு வெளியே எங்காவது புதைத்து வைக்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தாலும் அதை அந்தப்புரத்திலோ, அரண்மனைக்குள் எங்காவது இரகசிய இடத்திலோ கூடப் புதைத்து வைத்திருக்கலாமே

 

சாணக்கியர் சொன்னார்.  எனக்கும் அந்தச் சந்தேகம் வராமல் இல்லை. ஏதோ ஒரு காரணத்தால்  தனநந்தன் அங்கே புதைத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன என்பதை தனநந்தன் மட்டுமே அறிவான். ஆனால் நடந்த சம்பவத்தை என் கண்களால் நான் பார்த்திருப்பதால் அந்தச் சம்பவம் நடந்திருப்பது மட்டும் உறுதி. அது மட்டுமல்ல தனநந்தனின் அந்தச் சாரதி ஆறே மாதங்களில் இன்னொரு விபத்தில் குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்து போனான் என்பது பல வருடங்கள் கழித்து எனக்குத் தெரிய வந்தது. ஆக இப்போது அந்தப் புதையலைப் பற்றி அறிந்தவன் தான் மட்டுமே என்ற நம்பிக்கையில் தனநந்தன் இருக்கிறான். விஷ்ணுகுப்தன் என்ற சிறுவனும் அதை அறிந்திருக்கிறான் என்ற சந்தேகம் அவனுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக அவன் என்னையும் கொல்ல முயற்சி செய்திருப்பான்.”

 

ஜீவசித்தியை தனநந்தனின் சாரதியும் இன்னொரு விபத்தில் இறந்து போனான் என்கிற செய்தி அதிர வைத்தது.  தனநந்தன் யோக்கியன் அல்ல என்பதை அவன் முன்பிருந்தே அறிவான். ஆனால் அவன் மனசாட்சி சிறிதும் இல்லாத இவ்வளவு பெரிய அயோக்கியனாய் இருப்பான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

 

ஜீவசித்தி கேட்டான். “இப்போதும் கங்கைக் கரையில் அந்தப் புதையல் இருக்கிறதா?”

 

அப்படித்தான் தோன்றுகிறது. தனநந்தனைப் பொருத்த வரை அவனைத் தவிர வேறு யாருக்குமே அந்தப் புதையல் பற்றித் தெரியாது. அதனால் அதை இடம் மாற்றும் அவசியம் அவனுக்கு இல்லை. எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. அந்தக் குழியில் கூடுதலாக வேறு பெட்டிகளும் தனநந்தன் பிற்காலத்தில் வைத்திருக்கலாம். அந்தச் சமயத்தில் வேறு விபத்துகளும் நடந்திருக்கலாம். விபத்துகள் எப்படி நடந்தன என்று எல்லோரும் குழம்புவார்களே ஒழிய யாரும் தனநந்தனைச் சந்தேகிக்க மாட்டார்கள்.”

 

அது எந்த இடம் அந்தணரே?”

 

சாணக்கியர் புன்னகையுடன் சொன்னார். “உன்னால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என்று முயற்சி செய்து பார். கண்டுபிடித்தாலும் யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தித் தெரியப்படுத்தி விடாமல் மனதிற்குள்ளேயே வைத்திரு. நான் நாம் செயல்பட வேண்டிய நேரம் வரும் போது தெரிவிக்கிறேன்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 

 இன்னும் பத்து நாட்களில் வெளிவரவிருக்கிறது புதிய நாவல்!




 

3 comments:

  1. சாணக்கியர் மகதத்தின் செல்வத்தை எடுக்கப் போகிறோம் என சந்திரகுப்தனிடம் பேசிக்கொண்டிருந்தார்... அது இந்த புதைக்கப்பட்ட செல்வமாக தான் இருக்கும்...

    ReplyDelete
  2. 'Sathurangam'- to create something more exciting. By Sudhakar

    ReplyDelete
  3. சதுரங்க ஆட்டத்திலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete