சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 15, 2024

சாணக்கியன் 96

 

”நீங்கள் யார்?” என்ற கேள்விக்குப் பெயர், ஊர், தொழில் முதலான தகவல்களைச் சொல்லாமல் “நான் உன் தந்தையை அவர் இறந்த தருணத்தில் பார்த்தவன்” என்று அதிர வைக்கும் பதில் சொன்ன சாணக்கியரை ஜீவசித்தி திகைப்புடன் பார்க்க அவர் அவனைக் கூர்ந்து பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தார்.

 

ஜீவசித்தி இதயம் வேகமாகப் படபடக்க சுவரில் சாய்த்திருந்த பாயை விரித்துப் போட்டபடி மெல்லச் சொன்னான். “அமருங்கள்”. அவன் குரல் கிணற்றுக்குள்ளிருந்து பேசுபவன் குரல் போல் கேட்டது.

 

அவன் விரித்த பாயில் அமைதியாக அவர் அமர்ந்தார். ஜீவசித்தி எச்சரிக்கை உணர்வுடன் சென்று வாசற்கதவைச் சாத்திக் கொண்டு அவர் எதிரே அமர்ந்தான். அவனுக்கு அவரை எந்த அளவு நம்பலாம் என்று தெரியவில்லை. அவனுக்கு அவரை எங்கும் பார்த்த நினைவு வரவில்லை. ஆனால் அவர் கண்களும், குரலும் முன்பு எப்போதோ கண்டும், கேட்டும் இருப்பது போல் உணர வைத்தன. அவன் தந்தை இறந்த போது அவன் கைக்குழந்தை. அவனோ அவனுடைய தாயோ, மூத்த சகோதரனோ கூட அவர் அருகில் இருக்கவில்லை. அப்படியிருக்க இந்த மனிதர் அவர் இறந்த தருணத்தில் பார்த்தவன் என்று சொல்வது அவனைச் சந்தேகிக்க வைத்தது.  அவன் அவரைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “என் தந்தையைத் தாங்கள் எத்தனை காலமாக அறிவீர்கள்? அவரை அவர் மரண காலத்தில் தாங்கள் பார்த்தது எப்படி?”

 

“நான் அவரை அறிந்தவன் என்று சொல்லவில்லை. அவர் மரணமடைந்த தருணத்தில் அவரைப் பார்த்தவன் என்று மட்டும் தான் சொன்னேன்”

 

அவனுக்கு அவர் பூடகமாகப் பேசுவது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. வார்த்தைகளில் ஜாலம் புரியும் இவர் உண்மை அறிந்து சொல்கிறாரா இல்லை அனுமானத்தில் எதையாவது சொல்லி அவனிடமிருந்து செல்வம் எதையாவது பெறப் பார்க்கிறாரா என்று தெரியவில்லை.

 

அவனுடைய சந்தேகத்தை யூகித்த அவர் சொன்னார். “உன் தந்தை இறந்தது தீ விபத்தில். அது விபத்து என்று நீயும் உன் குடும்பமும் எண்ணிக் கொண்டு இருந்தாலும் உண்மையில் அது விபத்து அல்ல. அது திட்டமிட்ட கொலை.”

 

ஜீவசித்தி அதிர்ந்தான். அவன் தந்தையின் மரணத்தில் எத்தனையோ கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தாலும் கூட அவரை யாராவது கொன்றிருப்பார்கள் என்ற சந்தேகம் அவன் தாய்க்கும், மூத்த சகோதரனுக்கும் வந்திருக்கவில்லை. இது என்ன புதுக்கதை என்பது போல் அவரைப் பார்த்தபடி அவன் சொன்னான்.  “அவர் தனியாக இறக்கவில்லை. அவரை யாரும் கொலை செய்யக் காரணமும் இருக்கவில்லை.”

 

“அவர் இறக்கும் போது அங்கிருந்த நான் அவர் தனியாக இறக்கவில்லை, அவரோடு வேறு இரண்டு அரண்மனைப் பணியாளர்களும் சேர்ந்து தான் இறந்தார்கள் என்பதையும் தான் பார்த்தேன். ஆனால் காரணம் இல்லாமல் யாரும் கொல்லப்படுவதில்லை ஜீவசித்தி.”

 

”சாதாரண அரண்மனைப் பணியாளர்களை யாரும் கொல்ல என்ன காரணம் இருக்க முடியும்?”

 

“அந்த அரண்மனைப் பணியாளர்கள் பயண வண்டியில் நள்ளிரவில் அந்த விபத்து இடத்துக்குச் செல்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்வியில் இருந்து நீ யோசிக்க ஆரம்பித்தால் உனக்குப் பதில் கிடைக்கலாம்.”

 

அந்தக் கேள்வியை அவனும் அவன் சகோதரனும் பல முறை யோசித்து இருக்கிறார்கள். அதற்குப் பதில் கிடைக்கவில்லை. ஆனால் கொலை என்ற சந்தேகம் அவர்களுக்கு இது வரை வந்ததில்லை. அவன் சொன்னான். ”முன் விரோதம், பண ஆதாயம் இரண்டுமில்லாமல் எந்தக் கொலையும் நடப்பதில்லை. இறந்த மூவரும் பாவப்பட்ட பணியாளர்கள். மூவருக்குமாக சேர்ந்து முன்விரோதம் இருக்கக் காரணமில்லை. அந்த ஏழைகளைப் பண ஆதாயத்துக்காகக் கொன்றார்கள் என்று சொல்லவும் காரணமில்லை.”

 

“ஒரு வட்டத்தைத் தாண்டிச் சிந்திக்க முடியாதது தான் பெரும்பாலான மனிதர்களின் பிரச்சினையே.”

 

அவர் சொன்ன தத்துவம் உண்மை என்று தோன்றினாலும் தந்தையின் மரணம் பற்றிய ரகசியம் தெளியாமல் எந்தத் தத்துவத்தையும் ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. அவன் பொறுமையிழந்தவனாகச் சொன்னான். “ஐயா புதிர் போடாமல் சொல்லுங்கள். அது கொலையானால் கொன்றது யார்? நீங்கள் என்னிடம் ஏன் இத்தனை காலம் கழித்து இதை இப்போது சொல்ல வந்திருக்கிறீர்கள்?”  

 

“என் தந்தையும் இந்தப் பாடலிபுத்திர மண்ணில் தான் கொல்லப்பட்டார் ஜீவசித்தி. உன் தந்தை மரணத்திற்கும், என் தந்தை மரணத்திற்கும் காரணமானவன் ஒருவனே. உன் தந்தையின் மரணத்தைக் கண்ணால் பார்க்கும் கொடுமை எனக்கு நேர்ந்தது. அன்று இறந்தவர்களில் ஒருவரின் மகன் நீ என்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. அதனால் தான் இப்போது சொல்ல வந்தேன்.”

 

”சரி. கொன்றவன் யார்?”

 

“தனநந்தன்” என்று சொன்ன போது அவர் கண்களில் தீக்ககனல் தெரிந்தது. அவர் முகத்தில் உச்சக்கட்ட வெறுப்பு தெரிந்தது.

 

ஜீவசித்தி அதிர்ந்தான். கொலையாளி என்று அவர் மகத மன்னனின் பெயரைச் சொன்னது அவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. கூடவே அந்தக் கணத்தில் அவன் அவரை அடையாளம் கண்டுபிடித்தான். அவர் முன்பு மகத அரசவையில் மன்னனுக்கு எதிராகச் சபதமிட்ட அந்தணர். அவர் கண்களில் அதே தீக்கனலையும், அதே வெறுப்பையும் அரசவையில் சற்று அருகிலிருந்தே பார்த்த நினைவு அறிவுக்கு எட்டியது. அவன் கண்களில் அடையாளம் தெரிந்து கொண்ட திகைப்பையும் பார்த்த சாணக்கியர் மெள்ள தலைப்பாகையைக் கழட்டினார். அவரது அவிழ்ந்த குடுமி தொங்கியது.

 

ஜீவசித்தியின் அதிர்ச்சி குழப்பமாக மாறி சாணக்கியர் மீது சந்தேகத்தில் முடிந்தது. “அந்தணரே. மன்னரின் மீதிருக்கும் வெறுப்பினால் அவதூறாகக் குற்றம் சாட்டாதீர்கள். அவருடைய பணியாளர்களையே அவர் கொல்வதற்கு அவசியம் என்ன இருக்கிறது? அவர்கள் தவறு ஏதாவது செய்திருந்தால் வெளிப்படையாகவே தண்டிக்கும் அதிகாரம் படைத்தவரல்லவா அவர்? அப்படி இருக்கையில் ரகசியமாகக் கொல்லும் அவசியம் அவருக்கு என்ன இருக்க முடியும்?”

 

சாணக்கியர் சில வினாடிகளில் மறுபடி அமைதிக்குத் திரும்பியிருந்தார். அவர் அமைதியாகச் சொன்னார். “தவறு செய்திருந்தால் அவர்களை அவன் பகிரங்கமாகவே தண்டித்திருக்கலாம். ஆனால் தவறு செய்யாமலிருந்தால்?”

 

ஜீவசித்தி பொறுமை இழந்தான். எரிச்சலுடன் அவன் கேட்டான். “தவறு செய்யாமலிருந்தும் கொல்ல அரசர் என்ன பைத்தியமா?”       

 

“தவறு செய்யாதவர்களும் மன்னனின் சில இரகசியங்களை அறிய நேர்ந்திருக்கலாம். இரகசியம் அறிந்தவர்கள் உயிரோடிருக்கும் வரை அது அவர்கள் மூலம் என்றாவது வெளிப்படும் அபாயம் இருக்கிறதல்லவா?அந்த இரகசியங்கள் என்றுமே வெளிப்பட்டு விடக்கூடாது என்று மன்னன் நினைத்தால் அவன் என்ன செய்வான்? அவனால் சுலபமாகச் செய்ய முடிந்ததென்ன?”

 

ஜீவசித்தி பலவிதமான உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டான்.  தனநந்தன் நல்லவன் அல்ல என்ற போதும் சாணக்கியர் சொன்னதை நம்ப அவனுக்குக் கஷ்டமாகவே இருந்தது. இவர் மன்னருக்கு எதிரி. எதிரிகள் சொல்வதை எல்லாம் எப்படி நம்புவது?

 

சாணக்கியர் அவன் முகபாவனையிலிருந்து அவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டார். ”நீ பல ஆண்டுகளாக காவலர்களின் தலைவனாக இருப்பவன். அரண்மனை நிர்வாக விதிகள் உனக்கு கண்டிப்பாக அத்துப்படியாக இருக்கும். உன் தந்தையும் மற்ற இரண்டு பணியாளர்களும் தீ விபத்தில் இறந்தார்கள். அந்த விபத்து நேர்ந்த போது அவர்கள் பயண வண்டியில் இருந்தார்கள். அந்தப் பயண வண்டி அவர்களுக்குச் சொந்தமானதல்ல. அது அரண்மனைக்குச் சொந்தமானது. அதைப் பொதுவாக எதற்குப் பயன்படுத்துவார்கள்?”

 

ஜீவசித்தி யோசனையுடன் சொன்னான். “அரசர் அல்லது அரச குடும்பத்தினர் ரதங்களில் செல்லும் போது காவலர்கள் குதிரைகளிலும், பணியாளர்கள் அந்தப் பயண வண்டிகளிலும் செல்வது வழக்கம்”

 

“அந்தப் பயண வண்டியைப் பணியாளர்களே விரும்பும் போது பயன்படுத்த முடியுமா?”

 

“முடியாது. அரண்மனை வண்டிகளைப் பராமரிக்கும் அதிகாரி அதை அனுமதிக்க மாட்டார்.”

 

“அப்படி இருந்தும் நள்ளிரவிலும் அந்த அதிகாரி அனுமதி தந்திருக்கிறார் என்றால் அரசரோ, அரச குடும்பத்தினரோ எங்கோ போகிறார்கள் அதனுடன் பயண வண்டியில் போகும் அவசியம் பணியாளர்களுக்கு இருக்கிறது என்பதல்லவா அர்த்தம்?”

 

ஜீவசித்தி மெல்லச் சொன்னான். “ஆம்”

 

“பயண வண்டியும் குதிரையால் இழுத்துச் செல்லப்படுவது. அப்படி இருக்கையில் பயண வண்டி தீவிபத்தில் பற்றி எரிகிறது என்றால் குதிரையும் அல்லவா சேர்ந்து பற்றியெரிய வேண்டும். மூன்று மனிதப் பிணங்கள் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது போல குதிரையின் உடலும் அல்லவா அங்கு இருந்திருக்க வேண்டும்?”

 

ஜீவசித்தியின் கண்கள் விரிந்தன. மூச்சு விட அவன் சிரமத்தை உணர்ந்தான். நெஞ்சை ஏதோ அடைத்தது. ஆம் என்று சொல்ல முயற்சித்து, முடியாமல், தலையை மட்டும் அசைத்தான். குதிரை இல்லாமல் வண்டி மட்டும் எரிந்து கிடந்தது எப்படி என்ற கேள்வியை அவன் அண்ணனும் அடிக்கடி ஆச்சரியத்துடன் எழுப்பியிருக்கிறான். ஒருவேளை குதிரை எப்படியாவது தப்பித்திருக்குமோ என்ற சந்தேகம் வந்தாலும் வண்டியில் பாரம் இருக்கையில் அதோடு பூட்டப்பட்டிருக்கும் குதிரை தன்னை விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லை.

 

இதயத்தில் பாறை ஒன்று அழுத்துவதாக உணர்ந்த ஜீவசித்தி கஷ்டப்பட்டுச் சொன்னான். “என்ன நடந்தது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் அந்தணரே”

 

(தொடரும்)

என்.கணேசன்

1 comment:

  1. எப்போதும் ஒரே முறை படித்தால் புரிந்து விடும்... இந்த எபிசோடை இரண்டு முறை படித்தே புரிந்து கொள்ள முடிந்தது... புதிரான வசனங்கள் ....சாணக்கியரின் தெளிவு....ஜீவசித்தியின் மன குழப்பம்.... அனைத்தையும் எழுத்தில் கொண்டு வந்த விதம் அருமை....

    ReplyDelete