சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 12, 2024

யோகி 36

 

குமரேசன் சொன்னான். “பெரும்பாலும் அவங்க பேசறது பிரம்மானந்தா தங்கியிருக்கிற கட்டிடத்துல தான். அதைச் சுத்தி அழகான தோட்டம் இருக்கு. அதுல வேலை தினமும் இருக்கும்னாலும், யாராவது பேச வர்ற நேரமாய் இருந்தா எங்களஅப்பறமா வந்து வேலை செய்யுங்கன்னு அனுப்பிச்சுடுவாங்க. அதனால அவங்க பேசறப்ப அந்தப் பக்கத்துல நாங்க இருக்கறதுக்கே வாய்ப்பில்லை.”

 

மிகவும் எச்சரிக்கையாகத் தான் இருக்கிறார்கள்!

 

ஷ்ரவன் சைத்ராவுடன் கோர்ட்டுக்கு வந்த இரண்டு துறவிகளின் புகைப்படங்களை குமரேசனிடம் காட்டி, அவர்களைப் பற்றிக் கேட்டான். குமரேசன் சொன்னான். “இவங்க ரெண்டு பேரும் காவியில இருந்தாலும் துறவிகள் மாதிரி தெரியல. இவங்க மாதிரி இன்னும் ஏழெட்டு பேர் இருக்காங்க. இவங்க எல்லாரும் பாண்டியன், பிரம்மானந்தாவோட எடுபிடிகள் மாதிரி தான் தெரியுது.”

 

இப்படிப்பட்ட ஒரு துறவி தான் யோகாலயத்தில் தியானம் செய்வது போல் அமர்ந்து கொண்டு, அதிகாலையில் நடப்பவர்களைக் கண்காணித்துக் கொண்டு இருந்தது ஷ்ரவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆண்டவனின் அடியவர்கள் வசிக்கும் இடத்தில் இது போன்ற அடியாட்கள் எதற்கு?

 

ஷ்ரவன் உள்பகுதியில் வசிக்கும் வெளிநாட்டுத் துறவிகளைப் பற்றி விசாரித்தான். குமரேசன் சொன்னான். “நிறைய பேர் இருக்காங்க. அவங்க தங்கியிருக்கற பகுதி கடைசில இருக்கு. அவங்க தங்கி இருக்கற அறைகள் எல்லாம் மத்த துறவிகள் இருக்கிற அறைகளை விட சொகுசானதாய் தான் தெரியுது.”

 

அவங்கள்ல யாராவது சட்டத்துக்குப் புறம்பானவங்களாகவோ, தீவிரவாதிகளாகவோ இருக்க வாய்ப்பிருக்கா?”

 

இருக்கு. அவங்க கூட நம்ம நாட்டுத் துறவிகள் கூட அதிகம் நெருங்கிப் பழகற மாதிரி தெரியலை. நான் கவனிச்சதுல அவங்க இவங்க இருக்கற பக்கம் அதிகமாய் வர்றதில்லை.”

 

ஷ்ரவன் யோசித்தான். நாடு, மொழி போன்ற வித்தியாசங்கள் அதற்குக் காரணமாயிருக்கலாம் என்றாலும், வேறு பிரத்தியேகக் காரணங்களும் இருக்கலாம். 

 

ஷ்ரவன் கேட்டான். “வெளியேயிருந்து சிலர் அடிக்கடி வர்றதுண்டு அல்லவா? அப்படி வர்றவங்க இங்கே சில நாள் தங்கியிருந்துட்டு போகிறதும் உண்டா?”

 

சரியாய் தெரியலை....”

 

அப்படி ஒரு வேளை வெளிநபர்களும் ஒருசில நாட்கள் தங்கி விட்டுப் போகும் வழக்கம் உண்டு என்றால் அதுவும் தீவிரமாய் ஆராயப்பட வேண்டிய விஷயம் என்று ஷ்ரவன் எண்ணிக் கொண்டான்.

 

ரசுராமனுடன் அரை மணி நேரமாக அருணாச்சலம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடன் கழிந்த ஒவ்வொரு நிமிடமும் சுவாரசியமும், உற்சாகமுமாய் இருந்தது. எந்தக் கவலையுமில்லாமல், மனதிற்குப் பிடித்தபடி சுதந்திரமாக எல்லாக் கட்டங்களிலும் வாழ முடிந்த பரசுராமனைப் பார்க்கையில் அருணாச்சலத்துக்குச் சிறிது பொறாமையாகவும் கூட இருந்தது.  எத்தனை தான் உயர்ந்த பதவியில் நீண்ட காலம் இருந்த போதிலும் இந்தச் சுதந்திரமும், கவலையின்மையும் அவர் வாழ்க்கையில் இல்லை. ஒவ்வொரு சொல்லும், செயலும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையோடு யோசித்துச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு என்றுமே இருக்கிறது...

 

இதை நினைக்க நினைக்க அருணாச்சலத்துக்கு நேற்று ஒரு பத்திரிக்கையில் ஒரு அரசியல் விமர்சகர் அவரை பேரதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டு இருந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. தமிழக அரசியலில் அவருக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சித் தலைவர்கள் யாருமில்லை என்று சுட்டிக் காட்டியிருந்த அந்த அரசியல் விமர்சகர், வேறெந்த மாநில முதல்வருக்கும் இந்தக் கொடுப்பினை இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். ஒரு விதத்தில் அதுவும் உண்மையே. யாரும் அடுத்தவர் அதிர்ஷ்டத்தை உணரும் அளவுக்கு அவரவர் அதிர்ஷ்டத்தை உணர்வதில்லை என்றும் தோன்றியது.

  

மாறுபட்ட சிந்தனைகளை யோசித்து ஒரு பெருமூச்சு விட்ட அருணாச்சலம் பரசுராமனிடம் ஏற்கெனவே பேச நினைத்திருந்த விஷயத்தை ஆரம்பித்தார். ”பரசு உன் கிட்ட ஒரு தடவை என் நெருங்கிய நண்பன் சேதுவைப் பத்தி நான் சொல்லி இருந்தேன் ஞாபகமிருக்கா?”

 

பரசுராமன் சில வினாடிகள் யோசித்து விட்டு முகம் பிரகாசமாகிச் சொன்னார். “உன்னோட கணக்கு வாத்தியார் தானே? தங்கமான ஆள். ரொம்ப காலமா ரெண்டு பேரும் சந்திக்கக்கூட இல்லைன்னு சொன்னாய். அவரா மச்சான்...”

 

அவரே தான். அந்தத் தங்கமான ஆளை விதி சமீபத்துல ரொம்பவும் சோதிச்சிடுச்சு பரசு. நான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாய்  சேது என்னைப் பார்க்க போன வாரம் வந்தார்....” என்று ஆரம்பித்து, சேதுமாதவன் சொன்ன அனைத்தையுமே அருணாச்சலம் பரசுராமனிடம் ஒன்று விடாமல் சொன்னார். 

 

அவர் சொல்லச் சொல்ல பரசுராமனும் அதிர்ந்தார். மனித உருவில் இருக்கும் சில அரக்கர்களின், அராஜகத்தால் அனைத்து உறவுகளையும் இழந்து, முதுமைக்காலத்தில் தனிமரமாக நிற்கும் சேதுமாதவனை நினைக்கையில் அவரும் மனமுருகினார். கூடவே, மிக நல்ல மனிதரான சேதுமாதவனுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநியாயத்தை எண்ணுகையில், பரசுராமனின் மனம் கொதித்தது. அவர் கோபத்தோடு கேட்டார். “ஏன் மச்சான் அனாவசியமாய் விதியை இதுல இழுக்கறே? மிருகங்களாய் கூட கணக்கில் எடுத்துக்க முடியாத சில கேவலமான ஆளுங்க செய்யற வேலையை ஏன் விதியோட வேலையாய் சொல்றே?”

 

உண்மை தான். இதுல குற்றவாளிகள் யாராயிருந்தாலும், அத்தனை பேரும் கண்டிப்பாய் தண்டிக்கப்படுவாங்கன்னு நான் சேது கிட்ட உறுதியாய் சொல்லியிருக்கேன். இதை ரகசியமாய் விசாரிக்க நான் ஏற்பாடு செய்திருக்கேன் பரசு. அது ஒரு பக்கம் நடக்கட்டும். நீ இதுல என்ன உதவி செய்ய முடியும்?”

 

பரசுராமன் கேட்டார். “நீ என்ன உதவியை எதிர்பார்க்கறே மச்சான்?”

 

உன்னால எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் எதிர்பார்க்கறேன்.. பேச்சு மட்டும் பெருசா பேசறே. செயல்ல எத்தனை ஆகுதுன்னு பார்ப்போம்.” என்று அருணாச்சலம் பரசுராமனைச் சீண்டினார்.

 

பரசுராமன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியம் காட்டிச் சொன்னார். “இதைச் சொல்றது யாரு? ஒரு அரசியல்வாதி! உனக்கு ஓட்டு போட்ட நானல்லவா உன் கிட்ட இதைச் சொல்லணும்?”

 

அருணாச்சலம் வாய் விட்டுச் சிரித்தார்.  பாவி நீ எங்கடா எனக்கு ஓட்டுப் போட்டாய்? நான் உன் தொகுதியில நிக்கவேயில்லை. சொல்லப் போனா உன் தொகுதில என் கட்சி கூட நிக்கல. எங்க கூட்டணிக்கட்சிக்காரன் தான் நின்னான். அவனையும் நீங்க தோக்கடிச்சிட்டீங்க.”

 

பரசுராமனும் சிரித்துக் கொண்டே சொன்னார். “இந்த நாக்கு தான் உங்களோட பலம் மச்சான். எப்படியும் மடக்கிப் பேசற இந்த நாக்கை மூலதனமாய் வெச்சு அரசியல்வாதிங்க எத்தனை சாதிச்சுடறீங்க.”

 

சரி நம்ம சண்டைய அப்பறம் வெச்சுக்குவோம். உன் கிட்ட சுற்றி வளைக்காமல் கேட்கறேன். நீ தான் ஆவிகள் விஷயத்துல எக்ஸ்பர்ட் ஆச்சே. சைத்ராவோட ஆவியை வரவழைச்சு என்ன நடந்துச்சுன்னு கேட்க முடியுமா?”

 

முயற்சி செய்து பார்க்கலாம் மச்சான். ஆனா மனுஷங்கள யூகிக்கிற மாதிரி ஆவிகளை நாம யூகிக்க முடியாது. முதல்ல ஒரு குறிப்பிட்ட ஆவியை நாம வரவழைக்க முடியும்கிறதே நிச்சயமில்லை. நாம முயற்சி செய்தாலும், அது வரலாம், வராமயும் இருக்கலாம். அப்படியே வந்தாலும், நாம கேட்டதுக்கு ஆவி பதில் சொல்லலாம். சொல்லாமயும் போகலாம். சில சமயம் அது என்ன தெரிவிக்க விரும்புதோ அதை வெளிப்படையாய் தெரிவிக்காமல், ஏதாவது சங்கேத பாஷையில்  தெரிவிச்சுட்டு போகவும் செய்யலாம். ஆனா நான் கண்டிப்பாய் முயற்சி செஞ்சு பார்க்கறேன்.”

 

அருணாச்சலத்துக்கு பரசுராமன் ஒரேயடியாக மறுக்காமல் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று ஒத்துக் கொண்டதே திருப்தியாக இருந்தது. ஆனால் அதே சமயத்தில், ஆவிகள் விஷயத்தில் எதுவும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை என்று பரசுராமனே சொன்னது முரண் போலத் தோன்றியது. “உன்னை எல்லாரும் ஆவிகளோட எக்ஸ்பர்ட்டுன்னு சொல்றாங்க. பல நாடுகள்ல நீ பிரபலமாயிருக்கே. நீயே மதில் மேல் பூனையாய் முடியலாம், முடியாமலும் போகலாம்கிற மாதிரி பேசறீயேடா

 

பெரிய படிப்பெல்லாம் படிச்ச டாக்டர்கள், ஆபரேஷன் செஞ்சா உயிர் பிழைக்கலாம், பிழைக்காமலும் போகலாம்னு சொல்றாங்க.. உடனே அவங்க கிட்டே, ‘பெரிய ஸ்பஷலிஸ்டுன்னு சொல்லிக்கறீங்க. ஆனா உயிர் பிழைக்க வைக்க முடியுமா, முடியாதான்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு தெளிவாய் சொல்ல மாட்டேங்கறீங்களேன்னு கேட்பியா? பிரச்சனை அந்த சயன்ஸ்ல இல்லை. பல முரண்பாடான நிலைமைகளை உருவாக்கி வெச்சிருக்கற மனுஷன் உடம்புல இருக்கு. இப்படி தான் எல்லாத் துறையிலயும், நிச்சயமாய் சொல்ல முடிஞ்சதும் இருக்கும். சொல்ல முடியாததும் இருக்கும்....”

 

அருணாச்சலம் புன்னகைத்தபடி கேட்டார். “மனுஷன் கிட்ட பிரச்சனைகள் இருக்குன்னு சொல்றே புரியுது. ஆவிகள் கிட்டயுமாடா?”

 

பரசுராமனும் சிரித்துக் கொண்டே சொன்னார். “மனுஷன் தானே செத்து ஆவியாகறான்?”

 

அருணாச்சலம் வாய்விட்டுச் சிரித்தார்.

 

(தொடரும்)

என்.கணேசன்





4 comments:

  1. Nice conversation.,

    ReplyDelete
  2. "ஆண்டவன் அடியார்கள் வசிக்கும் இடத்தில் அடியாட்கள் எதற்கு?"
    "ஆத்ம ஞானம் உபதேசிப்பவனுக்கு குண்டர்கள் பாதுக்காப்பு எதற்கு?"
    இந்த இரண்டு வசனங்களே போதும்...
    இது போன்ற யோகாலயங்களை எடை போடுவதற்கு.....

    ReplyDelete
  3. wow Super. Parasuram entry in saithra case. awaiting for thrilling..

    ReplyDelete
  4. Parasuraman becomes hero of this story.

    ReplyDelete