சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 21, 2023

சாணக்கியன் 88

 

டக்கில் நிகழ்ந்த புரட்சிகள் பற்றியும் வாஹிக் பிரதேசம் முழுவதும் சந்திரகுப்தன் என்ற இளைஞன் வசமானது பற்றியும் ஒற்றன் வந்து சொன்ன போது ராக்‌ஷசர் ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தார். இது போன்ற சம்பவம் அவர் இது வரை கேள்விப்படாத ஒன்று. மாளவம், ஷூத்ரகம் போன்ற மக்களாட்சிப் பகுதிகள் யவனர்கள் வசமாகி மீண்டும் கலவரம் ஏற்பட்டு பழைய தலைவர்களே அந்தப் பகுதிகளை மீட்பது என்பது வேறு, அலெக்ஸாண்டரின் சத்ரப் ஆன பிலிப்பைக் கொன்று யவனர்களைத் துரத்தி யாரோ ஒரு வெளியாள் தலைவனாவது வேறு. மேலும் அந்த இரண்டு பிரதேசங்களும் எப்போதுமே ஒன்று சேராமல் பகைமை பாராட்டும் பிரதேசங்களாக இருந்தது தான் வரலாறு. ஆனால் அவை இரண்டும் ஒரே தலைவன் கீழே வந்திருப்பது மட்டுமல்லாமல் கத் பகுதியும் சேர்ந்து அவன் வசமானதும் அருகிலிருக்கும் சிற்றரசர்கள் அவன் தலைமையை ஏற்றுக் கொண்டதும் அவருக்கு அதிசயமாகவே தோன்றின.

 

சந்திரகுப்தன் என்ற அந்த இளைஞனைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே. அவன் எந்த தேசத்தவன்?”    

 

அவன் தட்சசீலக் கல்விக்கூடத்தின் மாணவன் பிரபு

 

அந்தத் தகவல் ராக்ஷசரை மேலும் ஆச்சரியப்படுத்தியது. “தட்சசீல மாணவன் கல்வி கற்று விட்டு இந்தப் புரட்சியிலும் ஈடுபட்டு வென்றது ஆச்சரியம் தான். அவன் படிக்கும் இடத்தில் இப்படி ஏதாவது சாகசம் செய்திருந்தால் அதை என்னால் புரிந்து கொள்ள முடியும். அவன் இப்பகுதிகளுக்கு வந்து எப்படிப் புரட்சி செய்ய முடிந்தது? மக்கள் ஆதரவு அவனுக்கு எப்படிக் கிடைத்தது?”


“இதற்கெல்லாம் பின்னணியில் அவன் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார் என்று சொல்கிறார்கள் பிரபு. அவர் தான் மக்கள் மனநிலையை யவனர்களுக்கு எதிராக மாற்றும் வழியைக் காட்டியவர் என்றும் சொல்கிறார்கள். அரசியல் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் அவர் நிபுணர் என்றும் தட்சசீல கல்விக் கூடத்தில் மாணவர்களுக்கு அவ்விரண்டையும் கற்றுக் கொடுப்பதுடன் இந்தப் புரட்சி செய்ய தன் மாணவர்களைத் தூண்டி விட்டவர் அவர் தான் என்று சொல்கிறார்கள்”

 

ஆசிரியரும்  மாணவர்களும் அரசியலில் இறங்கி புரட்சியில் ஈடுபட்டதும், மக்கள் வெளிப்பகுதி ஆட்களான அவர்களுக்கு ஆதரவளித்ததும் எப்படி என்று இப்போதும் ராக்‌ஷசருக்கு விளங்கவில்லை. “அந்த ஆசிரியர் பெயர் என்ன?”

 

”விஷ்ணுகுப்தர் என்பது அந்த ஆச்சாரியரின் பெயர் என்றாலும் அவர் மாணவர்கள் அவரை இப்போது சாணக்கியர் என்ற புதுப்பெயரில் தான் அழைக்கிறார்கள்....”

 

ஒரு கணம் ராக்‌ஷசர் சிலையானார். முதலில் சாணக்கியர் என்ற அந்த விசித்திரப் பெயர் அவர் மூளையில் ஒரு பொறி தட்ட வைத்தது. அதனுடன் தட்சசீல கல்விக்கூட ஆசிரியர் விஷ்ணுகுப்தர் என்ற பெயரும் சேர்ந்து பழைய சம்பவங்களை நினைவுபடுத்த அவர் சிலையாய் சமைந்தார்.

 

பின் அவர் மெல்லக் கேட்டார். “அவர் தானே ஒரு காலத்தில் இங்கே.....?”  

 

அவர் கேள்வியை முழுவதுமாகக் கேட்கா விட்டாலும் ஒற்றன் கேள்வியைப் புரிந்து கொண்டு “ஆமாம் பிரபு” என்றான்.

 

ஆண்டுகள் பல கழிந்து விட்டதில் அந்த மனிதரை ராக்‌ஷசர் மறந்தே போயிருந்தார். சாணக்கின் மகன் சாணக்கியன்.  அன்றொரு நாள் மகத அரசவைக்கு வந்து சபதமிட்டுப் போன மனிதர்.... கடுங்கோபத்திலும், வெறுப்பிலும் கூடப் பறிபோய் விடாத அந்த மனிதரின் அமைதி ராக்‌ஷசருக்கு நினைவுக்கு வந்தது. அந்த அமைதி ஒரு நெருடலாக அவரை அன்று அசௌகரியப்படுத்தியதும் நினைவுக்கு வந்தது. ஆனால் தனநந்தன் அந்த மனிதரைத் துரும்பென அலட்சியப்படுத்தினான். துரும்பு இன்று தூணாக நிற்கிறது. அதுவும் வெறும் தூணாக அல்ல புரட்சியைத் தாங்கும் தூணாக!

 

ராக்‌ஷசர் சொன்னார். “எனக்கு அந்தப் புரட்சி குறித்த முழு விவரங்கள் வேண்டும்”

 

ஒற்றன் விரிவாகச் சொன்னான். கேட்ட பின் ராக்‌ஷசருக்குப் பிரமிப்பே மிஞ்சியது. தாயகமான பாரதத்தை அன்னியர்கள் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அன்று மன்றாடிக் கேட்டுக் கொண்ட மனிதர் அதே உணர்வை புரட்சிக்காரர்களிடமும் மக்களிடமும் விதைத்து யவனர்களின் சத்ரப்பைக் கொன்று அவர்களிடமிருந்த பகுதிகளை வென்றிருக்கிறார். ஒற்றன் சொன்னது அவர் காதுகளில் மறுபடி எதிரொலிக்கிறது. ”விஷ்ணுகுப்தர் என்பது அவர் பெயர் என்றாலும் அவர் மாணவர்கள் அவரை இப்போது சாணக்கியர் என்ற புதுப்பெயரில் தான் அழைக்கிறார்கள்....” அந்தப் பெயர் மகத அரசவையில் உருவான பெயர். ஆங்காரத்துடன் அந்த அந்தணரால் சொல்லப்பட்ட பெயர்...

 

ராக்‌ஷசர் கேட்டார். “காந்தாரம், கேகயம் என்ன செய்து கொண்டிருக்கின்றன? ஆம்பி குமாரனும், புருஷோத்தமனும் அலெக்ஸாண்டரின் ஆதரவாளர்களாக மாறியவர்கள் அல்லவா?”

 

“பிலிப் கொல்லப்பட்ட பிறகு அவர்கள் தங்கள் பகுதிகளில் புரட்சி வெடிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள் பிரபு. அதற்கு மேல் அவர்கள் எதுவும் செய்ய முற்படவில்லை.”

 

“இப்போது அந்த ஆச்சாரியர் எங்கிருக்கிறார்? எங்கே வசிக்கிறார்?”

 

“தெரியவில்லை பிரபு.”

 

ராக்‌ஷசர் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்து விட்டுப் பின்னர் ஒற்றன் செல்லலாம் என்று உத்தரவு கொடுத்தார். எப்போதோ அணைந்து போய் விட்டதாய் அவர் நினைத்திருந்த சிறு நெருப்பு இன்று பெரிதாய் தொலைவில் எரிந்து கொண்டு தானிருக்கிறது. அது மகதத்தைச் சுட்டு விடும் வலிமை படைத்தது அல்ல என்று அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றாலும் ஒரு காலத்தில் அந்தச் சிறு நெருப்பு தானாய் சில நாட்களில் அணைந்து விடும் என்ற நம்பிக்கை கூட அவர் மனதில்  முழுமையாகத் தான் இருந்தது. அதனால் அவருக்கு இப்போது அவருடைய நம்பிக்கையையே நம்ப முடியவில்லை…   

 

தட்சசீல வாசியாக மாறிய பின் பாடலிபுத்திரத்திற்கு சாணக்கியர் (சே.... அதே பெயரை நானும் ஏன் நினைக்கிறேன்?) அதாவது விஷ்ணுகுப்தர் இரண்டு முறை வந்திருக்கிறார். இரண்டு முறையும் மன்னருடன் பிரச்சினை செய்து விட்டுத் தான் போயிருக்கிறார். திரும்பத் திரும்ப அவரை இங்கே வரவழைப்பது அந்தப் பழைய கணக்கு தான் என்று ராக்‌ஷசருக்குத் தோன்றியது. இது போன்ற விஷயங்கள் காரணம் இல்லாமல் நடப்பதில்லை என்பதால் இப்போது சாணக்கிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் வரிசைப்படுத்திப் புரிந்து கொள்வது முக்கியம் என்று தோன்றியது. ஏற்கெனவே ஓரளவு தெரிந்து கொண்ட சம்பவங்கள் தான் என்றாலும் ஒரே ஒரு உண்மை அவருக்கு இன்னமும் பிடிபடாமல் இருக்கிறது. அதை தனநந்தனிடம் கேட்பதில் தர்மசங்கடம் இருந்தது. உண்மை என்னவாக இருக்கும் என்று அவரால் யூகிக்க முடிந்தாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்வது சாணக்கின் மகனுடைய தீவிரத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று தோன்றியது. அவர் காவலனை அழைத்தார்.

 

ருட்ட ஆரம்பித்திருக்கும் வேளையில் காவலன் வீட்டு வாசலில் வந்து நின்றது அந்த முதியவருக்குச் சரியான சகுனமாய் தெரியவில்லை. காவலனின் உடையையும், தோரணையையும் பார்த்தால் மன்னர் அல்லது பிரதம அமைச்சரின் காவலன் போல் தான் தெரிந்தது. இருவருடைய காவலர்களும் ஒரு வீட்டுக்கு அகால வேளைகளில் வருவது நல்லதற்கான அறிகுறி அல்ல. கயிற்றுக் கட்டிலில் இருந்து கஷ்டப்பட்டு எழுந்த அந்த முதியவர் சுவற்றைப் பிடித்துக் கொண்டே மெள்ள வாசலுக்கு வந்தார்.

 

“பிரதம அமைச்சர் உங்களை அழைத்து வரச் சொன்னார்.” என்று காவலன் அறிவித்தான்.

 

முதியவர் நெஞ்சை எதோ அடைப்பது போல் உணர்ந்தார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவருடைய மனைவி உள்ளிருந்து வந்தபடி சொன்னாள். “காவலனே. இப்போதெல்லாம் அவருக்குச் சில அடிகளுக்கு மேல் நடக்க முடிவதில்லை.”

 

காவலன் சொன்னான். “தெரியும். அதனால் தான் பல்லக்கோடு வந்திருக்கிறேன்.”

 

அவள் வெளியே எட்டிப் பார்த்தாள். வெளியே பல்லக்குடன் பல்லக்குத் தூக்கிகள் நின்று கொண்டிருந்தார்கள்.

 

முதியவர் மெல்லச் சொன்னார். “சிறிது பொறு காவலனே. தயாராகி விடுகிறேன்”

 

காவலன் தலையசைத்து விட்டு வெளியே சென்று நின்று கொண்டான். மூதாட்டி கணவரைக் கேட்டாள். “நீங்கள் ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்று வருடங்கள் பல ஆகி விட்டனவே. இப்போது என்ன விஷயமாக உங்களை பிரதம அமைச்சர் அழைக்கிறார்?”

 

முதியவர் ஏற்கெனவே பல பயங்களால் பீடிக்கப்பட்டவராக இருந்ததால் பேசப் பிடிக்காமல் கூரையை நோக்கிக் கையைக் காட்டினார். கடவுளுக்குத் தான் தெரியும் என்று அர்த்தம்.


(தொடரும்)

என்.கணேசன்      

4 comments:

  1. ராக்‌ஷசர் என்ற பெயரை நாங்களும் மறந்தே போனோம்....
    ராக்‌ஷசரின் மனநிலையை எழுத்தில் கொண்டு வந்த விதம் அருமை....
    அதிலும், தன்னை மறந்து சாணக்கியர் என்று சிந்திக்கும் இடம் சூப்பர்....

    ReplyDelete
  2. Great going sir. You maintain suspense and interest well even in historical novel.

    ReplyDelete