சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 25, 2023

யோகி 29


 சிறிது நேரத்தில் ரிப்போர்ட்டுடன் சதீஷ் வந்தான்.  “தேங்க் யூ சதீஷ்என்று சொல்லி  பொறுப்பாளர் அதை வாங்கி விட்டுஇனி நீ போகலாம்என்பது போலத் தலையசைத்தார். ’இந்த அதிகாரி சதீஷிடம் நேரடியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட வேண்டால் அது தேவையில்லாத பிரச்னைஎன்று அவர் நினைத்தார். சதீஷ் போய் விட்டான்.

 

முரளிதரன் அந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தார். மொத்தத்தில் 178 நபர்கள்.  அவர் கேட்ட விவரங்கள் அதில் இருந்தன. மேலோட்டமாய்ப் பார்த்து விட்டு அவர் கேட்டார். “கோவிட்டில் உங்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்ஸ்கள், அட்டெண்டர்கள் இறந்திருந்தால் அதையும் இதில் சேர்த்திருக்கிறீர்களா?”

 

பொறுப்பாளரின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று பின் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது. அதிகம் யோசிக்காமல் அவர் சொன்னார். “அப்படி யாரும் இறக்கவில்லை சார்

 

முரளிதரன் தலையசைத்து விட்டுச் சொன்னார். “அப்படின்னா கோவிட்ல உங்க ஆஸ்பத்திரில டாக்டர்களோ, ஸ்டாஃப்ஸோ இறக்கலைன்னு ஒரு லெட்டர் கொடுத்துடுங்க. நான் இதுல சில கேஸஸ் மட்டும் பார்க்கறேன்.”

 

பொறுப்பாளரின் முகத்திலிருந்த ரத்தம் வடிந்து போனது. அப்படி ஒரு கடிதம் அவர் எப்படித் தர முடியும்? பிரச்னை செய்யாத ஆளென்று நினைத்தால் இந்த ஆள் அலட்டிக் கொள்ளாமல் பிரச்னை செய்கிறாரே

 

பொறுப்பாளர் திடீர் என்று நினைவுக்கு வந்தவர் போலக் காட்டிக் கொண்டு போலிப் புன்னகையுடன் சொன்னார். ”நல்ல வேளையாய் ஞாபகம் வருது. எங்க டாக்டர் ஒருத்தரும், நர்ஸ் ஒருத்தரும் கூட கோவிட்ல இறந்து போனாங்க. எதோ யோசனையில யாரும் இல்லைன்னு சொல்லிட்டேன்….”

 

ஒன்னும் பிரச்னையில்லை…. இன்னும் வேற யாரையாவது ஞாபகம் வந்தாலும் அதையும் சேர்த்து தனியா இன்னொரு ரிப்போர்ட் கொடுங்க.” என்று சொல்லியபடியே சதீஷ் தந்திருக்கும் ரிப்போர்ட்டை முரளிதரன் பார்க்க ஆரம்பித்தார்.

 

தேங்க்யூ சார்என்று தலையசைத்துச் சொல்லி விட்டு இதயம் படபடக்க பொறுப்பாளர் எழுந்து வெளியே வந்தார்.

 

இனி இதை மேனேஜிங் டைரக்டரிடம் தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல என்று அவர் மனம் எச்சரித்தது. மறுபடியும் அந்தக் காலி அறைக்கு விரைந்து சென்ற அவர் மேனேஜிங் டைரக்டருக்குப் போன் செய்து விஷயத்தைத் தெரிவித்தார்.

 

மேனேஜிங் டைரக்டர் யோசித்து விட்டுச் சொன்னார்.  வேற ஏதாவது ஒரு கோவிட் பேஷண்டோட  ரெக்கார்ட்ஸ காபி எடுத்து அதுல ஒன்னு ரெண்டு சின்ன கரெக்ஷன் செஞ்சு வாசுதேவன் பேர்ல ரெகார்ட்ஸ் க்ரியேட் பண்ணிக் கொடுக்க சதீஷ் கிட்ட சொல்லுங்க. தேதில மட்டும் கூடுதல் கவனமாய் இருக்கணும். நீங்களும் அந்த ஆள் கிட்ட கொடுக்கறதுக்கு முன்னாடி தேதிகளை ஒரு தடவை செக் பண்ணிடுங்க.”

 

ஓக்கே சார்என்று சொல்லி விட்டு பொறுப்பாளர் சற்று பதற்றம் குறைந்தவராக சதீஷ் இருக்கும் அறைக்கு விரைந்தார். மேனேஜிங் டைரக்டர் சொன்னதை அவனிடம் தெரிவிக்க அவன் அப்படியே புதிய ஆவணங்களை வேகமாகத் தயார் செய்ய ஆரம்பித்தான். அவன் அருகே பொறுமையிழந்து நின்றிருந்த பொறுப்பாளருக்கு இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையில் ஏதாவது பிரச்னைகள் உருவாக வாய்ப்பிருப்பது போலத் தோன்றவில்லை என்றாலும் அவரால் முழுவதுமாக நிம்மதியாய் இருக்க முடியவில்லை.

 

மருத்துவமனைப் பொறுப்பாளர் மற்ற 178 கோவிட் நோயாளிகளின் ஒட்டு மொத்த விவரங்களைத் தந்தது போல் டாக்டர் வாசுதேவன், நர்ஸ் ரோஸ்மேரி இருவருடைய விவரங்களையும் முரளிதரனிடம் தனித்தாளில் தந்தார். அதே நேரத்தில் டாக்டர் வாசுதேவனின் மற்ற க்ளினிகல் ரிப்போர்ட்ஸை சதீஷ் அவசர அவசரமாகத் தயாரித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை முரளிதரன் டாக்டர் வாசுதேவனின் பெயரைத் தேர்ந்தெடுத்து எல்லா ரிப்போர்ட்ஸையும் பார்க்க வேண்டும் என்று சொன்னாலும் அவற்றை அவன் இனி கால் மணி நேரத்தில் தயாராகத் தந்துவிட முடியும்.

 

பொறுப்பாளர் தந்த தாளை வாங்கிப் பார்த்த முரளிதரன்இந்த இரண்டும் சேர்த்தால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 180 ஆகிறது. 150ல இருந்து 200 வரைக்கும் கேஸஸ் இருந்தா 5% செக் பண்ண சொல்லி இருக்காங்க. 5%ன்னா 9 ஆகுது…” என்று சொல்லியபடி அந்தத் தாள்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேர்ந்தெடுத்து அடிக்கோடிட ஆரம்பித்தார்.

 

டாக்டர் வாசுதேவன் மற்றும் ரோஸ்மேரி பெயர்கள் இருந்த மேல் தாளில் டாக்டர் வாசுதேவன் பெயரை அடிக்கோடிட்ட முரளிதரன் மீதமுள்ள எட்டு பெயர்களை மற்ற தாள்களில் தேர்ந்தெடுத்து அடிக்கோடிட ஆரம்பித்தார். அவர் அடிக்கோடிட்டதில் சைத்ரா பெயரும் இருந்தது.  முரளிதரன் இருவர் பெயரையும் அடிக்கோடிட்டது தற்செயலாகவே இருக்கலாம் என்றாலும் ஒரு கணம் பொறுப்பாளருக்குதிக்கென்றது. 

 

முரளிதரன் சொன்னார். “இந்த ஒன்பது பேருக்கும் தனித்தனி ஃபோல்டர் ஓப்பன் பண்ணி அதுல எல்லா ரிப்போர்ட்ஸும் அவங்கவங்க ஃபோல்டர்ல போட்டு ஒரு பென் ட்ரைவ்ல எனக்குக் கொடுங்க.”

 

பொறுப்பாளர் சரியென்று தலையசைத்து விட்டு திரும்ப சதீஷ் அறைக்கு வந்து அவன் வேலை முடியும் வரை அவனுடனே அமர்ந்திருந்தார். முரளிதரன் தேர்ந்தெடுத்திருந்த ஒன்பது பேரின் எல்லா ரிப்போர்ட்களும் தயார் என்று அவன் தெரிவித்தவுடன்வாசுதேவன் ரிப்போர்ட்ஸ ஒரு தடவைக்கு ரெண்டு தடவை செக் பண்ணிடுஎன்று சொல்ல சதீஷ் அவர் முன்பாகவே அந்த ரிப்போர்ட்களைச் சரிபார்த்து விட்டுசரியாய் இருக்குசார் என்றான்.

 

முக்கியமா தேதியில குழப்பம் இல்லை தானே?”

 

இல்லை. சார்என்ற சதீஷ் அந்த விவரங்களை ஒரு பென் ட்ரைவில் மாற்றித் தந்தான்.

 

பொறுப்பாளர் திருப்தியுடன் தனதறைக்குச் சென்று முரளிதரனிடம் அந்த பென் ட்ரைவை நீட்டினார். 

 

அந்த பென் ட்ரைவை வாங்கிக் கொண்ட முரளிதரன் அந்தப் பென் ட்ரைவிலிருந்து ரிப்போர்ட்களை தனது லேப்டாப்பிற்கு மாற்றியபடியே மருத்துவமனை பொறுப்பாளரிடம் கேட்டார். இந்த ஒன்பது பேரில் டாக்டர் தவிர மற்ற எட்டு பேர் உங்களுடைய வாடிக்கை நோயாளிகள் தானா, இல்லை புதியவர்களா?”

 

பொறுப்பாளர் இந்தக் கேள்வியின் உத்தேசம் என்னவாக இருக்குமென்று யோசித்தார். எதுவும் பிடிபடவில்லை.  பொறுப்பாளர் யோசிப்பதைப் பார்த்து முரளிதரன் சொன்னார். “அவங்க ஐடி போட்டுப் பார்த்தா உங்களுக்குத் தெரிஞ்சுடுமே

 

பொறுப்பாளர் சமாளித்தார். “அதுவும் சரி தான். இதோ பார்த்து சொல்றேன்

 

முரளிதரன் அந்த பென் ட்ரைவை அவரிடம் நீட்டினார். பொறுப்பாளர் அதை வாங்கிக் கொண்டு தன் கம்ப்யூட்டரில் போட்டு தேடிப் பார்த்து சொன்னார். ” அதுல ஒருத்தர் தான் எங்க வாடிக்கையாளர். மத்தவங்க எல்லாம் புதியவங்க தான். கோவிட் சமயத்துல ஆஸ்பத்திரிகள்ல இடம் கிடைக்காம எங்கெங்கேயிருந்தோ ஆள்கள் எங்கெங்கெயோ போய் அட்மிட் ஆனாங்க

 

முரளிதரன் சொன்னார். .”உண்மை தான். வாடிக்கையாளரான அந்த நோயாளி பெயரென்ன?”

 

தரம்சிங்

 

முரளிதரன் தரம்சிங் ஃபோல்டரைத் திறந்தபடி கேட்டார். “அவர் எப்போ எந்த நோய்க்காக இதுக்கு முன்னாடி வந்திருக்கார்.?”

 

ரெண்டு வருஷம் முன்னாடி டைபாய்டு காய்ச்சலுக்காக வந்து அட்மிட் ஆனவர்.”

 

டிஸ்சார்ஜ் ஆனப்ப அவர் ஷுகர், பிபி எல்லாம் எந்த அளவு இருந்துச்சுன்னு சொல்றீங்களா?”

 

இதை எதற்கு இந்த மனிதர் கேட்கிறார் என்று குழப்பத்துடன் யோசித்த பொறுப்பாளர் அந்த இரண்டின் அளவுகளையும் சொன்னார்.

 

அவர் சொன்னதைக் குறித்துக் கொண்டு அந்த ரிப்போர்ட் தேதியையும் கேட்டுக் குறித்துக் கொண்ட முரளிதரன் டாக்டர் வாசுதேவன் ஃபோல்டரைத் திறந்தபடி கேட்டார். “டாக்டர் வாசுதேவனோட இதுக்கு முந்தின ரிப்போர்ட்ஸ் எப்போ எடுத்ததுன்னு பார்த்துச் சொல்றீங்களா?”

 

பொறுப்பாளர் இந்தக் கேள்வியில் ஆபத்தை உணர்ந்தார். அவர் என்ன சொல்வது என்று யோசித்தார்.

 

முரளிதரன் சொன்னார். “இங்கே டாக்டர்ஸ்க்கு வருஷா வருஷம் மாஸ்டர் செக் அப் கண்டிப்பா இருந்திருக்குமே?”

 

அவர் உண்மையைத் தெரிந்து கொண்டு கேட்கிறாரா இல்லை அனுமானத்தில் இப்படிச் சொல்லிக் கேட்கிறாரா என்பதை பொறுப்பாளரால் கணிக்க முடியவில்லை. அவர் சொன்னது போல வருடா வருடம் அங்குள்ள டாக்டர்களுக்கு முழு மருத்துவ சோதனைகள் உள்ளன.

 

முரளிதரன் கேட்டார். “டாக்டர் வாசுதேவனோட கடைசி மாஸ்டர் செக்கப் தேதி?”

 

பொறுப்பாளர் வேறு வழியில்லாமல் பார்த்துச் சொன்னார். அது வாசுதேவன் இறப்பதற்கும் மூன்று மாதங்களுக்கு முந்தைய ஒரு தேதி. அதைக் குறித்துக் கொண்ட முரளிதரன்இவரோட ஷுகர், பிபி, இவருக்கு இருந்த வேறெதாவது பெரிய கோளாறுகள்?” என்று கேட்க, பொறுப்பாளர்  தடுமாறினார். 


(தொடரும்)

என்.கணேசன்




5 comments:

  1. முரளிதரன் பிரச்சினை செய்யதா ஆளாக இருந்தாலும்.... வில்லங்கமான ஆள்...

    ReplyDelete
  2. Is yogi novel in amazon kindle?

    ReplyDelete
  3. Dr. Vasudevan committed suicide in the hospital. His body was accepted by his family. The hospital created folders as if both Dr. Vasudevan and Nurse Rosemary died of Covid-19. The investigator succeeded.

    ReplyDelete