சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 11, 2023

யோகி 27

 

ப்போதும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விடும் பழக்கம் இருந்த ஷ்ரவன் மறுநாள் காலையும் அதே நேரத்தில் எழுந்து விட்டான். ஸ்ரீகாந்த் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சிறிது நேரம் காலார நடந்து வரலாமென்று நினைத்து  ஷ்ரவன் வெளியே வந்த போது அடுத்த அறையிலிருந்த இளம் பெண் ஒருத்தியும் அதே நோக்கத்துடன் வெளியே வந்தாள். இருவரும் காலை வணக்கம் சொல்லிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். அவள் யோகா வகுப்பு பற்றியும், நேற்று செய்து பார்த்த தியானப்பயிற்சி அனுபவம் பற்றியும் ஏதோ சொல்லிக் கொண்டு வர அதைக் கேட்டுக் கொண்டே ஷ்ரவன் சுற்றுப் புறத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தான்.

 

யோகாலயாவில் சிறிய சிறிய அழகான தோட்டங்கள் நிறைய இருந்தன. ரசித்துக் கொண்டே இருவரும் நடந்தார்கள். அவர்களைப் போலவே யோகா பயிற்சிக்கு வந்திருந்த வேறு இரண்டு முதியவர்களும் சிறிது தொலைவில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வலது புறம் ஒரு துறவி தரையில் ஒரு துணி விரிப்பில் அமர்ந்தபடி தியானம் செய்து கொண்டிருந்தார். முன்னால் சென்று கொண்டிருந்த முதியவர்கள் அடுத்த ஒரு பெரியகேட்டை நெருங்கி அங்கிருந்த காவலாளியிடம் ஏதோ பேசுவது தெரிந்தது.

 

அவர்கள் பேசுவது என்ன என்பது காதில் விழா விட்டாலும் அந்த இரண்டாம்கேட்டைத் தாண்டி உள்ளே செல்ல அனுமதியில்லை என்று காவலாளி சொல்லியிருக்க வேண்டும் என்று ஷ்ரவன் ஊகித்தான்.  அவனுடன் நடந்து வந்து கொண்டிருந்த இளம் பெண் சொன்னாள். “யோகி பிரம்மானந்தாவும், மற்ற துறவிகளும் அது தாண்டி தான் வசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.”

 

ஷ்ரவன் மெல்லத் தலையசைத்தபடி சொன்னான். “அப்படித் தான் தோணுது. நேத்தே க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியும் சொன்னாங்களே

 

அந்தகேட்தாண்டி உள்புறம் ஏழெட்டு துறவிகள் அவர்களைப் போலவே நடந்து கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது. உள்ளேயும் நிறைய சிறிய, அழகான தோட்டங்கள் இருந்தன. அங்கே சில துறவிகள் சில இடங்களில் தியானம் செய்தபடி அமர்ந்து இருப்பதும் தெரிந்தது. அந்தத் துறவிகளில் இரண்டு வெளிநாட்டுத் துறவிகளும் இருந்தார்கள். அவர்களைப் பார்க்கையில் சட்டத்துக்குப் புறம்பாக சில வெளிநாட்டினர் அங்கே தங்கி இருப்பதாகச் சிலர் புகார் சொல்வது ஷ்ரவனின் நினைவுக்கு வந்தது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், பாதுகாப்பான ஒரு கோட்டைக்குள் அவர்கள் இருப்பது போன்ற நிலை தான் என்பதில் சந்தேகமில்லை.

 

முன்னால் சென்ற இரண்டு முதியவர்களும் திரும்பி வர ஆரம்பித்தார்கள். ஷ்ரவனுக்கும், அந்த இளம் பெண்ணுக்கும் காலை வணக்கம் தெரிவித்தபடி கடந்தார்கள். இவர்களும் பதில் வணக்கம் சொல்லி விட்டு கேட் வரை சென்று விட்டுத் திரும்பி வருகையில் தான் ஷ்ரவனுக்கு ஒரு வித்தியாசம் உறைத்தது.

 

துறவிகள் அனைவரும் இரண்டாம் கேட் தாண்டி உள்ளே வசிப்பவர்களாக இருக்கையில், பலர் அங்கேயே நடப்பதும், தியானம் செய்வதுமாக இருக்கையில் ஏன் ஒரு துறவி மட்டும் வெளியேயுள்ள இந்தப் பகுதிக்கு வந்து தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்? இப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருக்கும் துறவியை அவன் ஓரக் கண்ணால் கூர்ந்து பார்த்தான். அந்தத் துறவி தியானத்தில் இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் இப்பகுதியில் என்ன நடக்கிறது என்று கண்காணிக்க அமர்ந்திருப்பவர் போல் தெரிந்தார். அவர் அமர்ந்திருந்த வெட்டவெளிப் பகுதி காமிராக்கள் இல்லாத பகுதி. காமிராவுக்குப் பதிலாக இவர் அமர்ந்திருக்கிறார் என்பது புரிந்தது. மிக எச்சரிக்கையாக இவர்கள் இருப்பது, யார் மூலமாவது ஆபத்து வந்து விடலாம் என்பதற்காகவா, அல்லது இவர்கள் வேறெதையோ ரகசியமாய்ப் பாதுகாக்கிறார்களா?

 

ன்றைய வகுப்புகளும் முந்தைய நாள் வகுப்புகளைப் போலவே நல்ல முறையிலேயே நடந்தன. கற்றுக் கொடுக்க வந்த துறவிகள் கால் மணிக்கு ஒரு முறை யோகி பிரம்மானந்தா பெயரை ஏதாவது ஒரு வழியில் வலுக்கட்டாயமாய் வரவழைத்து, பயபக்தியுடன் மறக்காமல் குறிப்பிட்டதைத் தவிர குறை சொல்ல ஷ்ரவனுக்கு ஒன்றும் இருக்கவில்லை. ஆரம்பத்தில் ஓரிரு முறை இந்த யோகப் பயிற்சிகளை உருவாக்கியதே யோகி பிரம்மானந்தா தான் என்பது போலச் சொன்னதை ஸ்ரீகாந்த் அவ்வப்போதே மறுத்துச் சொல்லியதால், பின் அந்த வகை அதிகபட்சக் கருத்துகளை அந்தத் துறவிகள் தவிர்த்தாலும் ஒரு அவதார புருஷரைச் சொல்வது போல் அந்தப் பெயரை அவர்களால் சொல்லாமல் இருக்கவில்லை. பின் ஸ்ரீகாந்தே சலித்துப் போய் அதற்கு விமர்சனம் செய்வதைக் கைவிட்டான்.

 

ஸ்ரீகாந்த் யாருடன் பேசினாலும் யோகாலயத்து ஆட்கள், பேச்சைக் கேட்கும் தூரத்தில் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருப்பது தொடர்ந்தது. ஸ்ரீகாந்த் வெளிப்படையாகத் தன்னுடைய எதிர்க்கருத்துகளைச் சொன்னதால் அவனை ஒரு பிரச்சினைக்குரிய ஆளாகவும், கண்காணிக்கப்பட வேண்டிய ஆளாகவும் யோகாலயத்தினர் முடிவு செய்து விட்டது ஷ்ரவனுக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது. யோகா, தியானம் போன்ற உயர்ந்த விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் இடத்தில், சாதாரண எதிர்மறைக் கருத்துகளையே சகிக்க முடியாதது பெரிய முரண்பாடான விஷயம். இங்கு வந்த பின் சைத்ரா எதையாவது எதிர்க்கத் துணிந்திருப்பாளோ? இயல்பாகவே நியாய உணர்வு மிக்க அவள் அப்படி எதிர்த்தது தான் அவள் உயிரிழக்கக் காரணமாகி விட்டதோ?

 

யோகாலயத்தில் ஒட்டு மொத்தமாக எத்தனை துறவிகள் வசிக்கிறார்கள் என்ற துல்லியமான தகவல் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஆயிரம் வரை இருக்கலாம் என்பது தான் குமரேசனின் கருத்தாக இருந்தது. யோகாலய இணைய தளத்தில் கூட அந்தத் தகவல் இருக்கவில்லை. சரியாகச் சொல்வதானால் அந்த இணைய தளத்தில் பிரம்மானந்தாவின் தெய்வீகத் தன்மை, பெருமைகள், பிரதாபங்கள் தவிர வேறு எதுவும் அதிகமில்லை.

 

முக்கியமான எல்லாமே தெளிவில்லாத மூடுமந்திரமாகவே இருக்கையில், ஏகப்பட்ட தவறுகள் நடக்க சாத்தியமிருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவே யோகாலயம் முக்கியமானவற்றை தெளிவில்லாத மூடுமந்திரமாக வைத்திருக்கிறது என்று தோன்றியது.

 

கரின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் அன்று காலையிலேயே கூட்டம் அதிகமிருந்தது. ரிசப்ஷனிலும், பணம் கட்டும் இடத்திலும் ஆட்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். வெளி நோயாளிகளும், அவர்களுடன் வந்தவர்களும் உட்காருமிடம் நிரம்பி வழிந்தது. அமர்ந்திருப்பவர் யாராவது எழுந்து போனால் அந்த இடத்தில் அமர்ந்து கொள்ள நிறைய பேர் நின்றபடிக் காத்திருந்தார்கள்.

 

காலை 11.02க்கு அங்கு நுழைந்த நடுத்தர வயது மனிதர் முகத்தில் உணர்ச்சிகளே இல்லாமல் அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் இருந்த கூட்டத்தைப் பார்வையிட்டார். பின் அவரைக் கடந்து சென்ற ஒரு நர்சை அழைத்துயார் ஆஸ்பத்திரி இன்சார்ஜ்?” என்று கேட்டார்.

 

அந்த மருத்துவமனைக்கு வந்து அவர் இந்தக் கேள்வியைக் கேட்டது அவள் முகத்தில் திகைப்பை வரவழைத்தது. அவள் அவரைக் கேள்விக்குறியுடன் பார்க்க அவர் தன்னுடைய விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினார்.  அவள் வாங்கிப் பார்த்தாள். “முரளிதரன், மத்திய அரசு சிறப்புத் தணிக்கை அதிகாரிஎன்றிருந்ததைப் படித்து விட்டு இடதுபுறக் கடைசி அறையைக் காண்பித்து விட்டு நகர்ந்தாள்.

 

முரளிதரன் இடதுபுறக் கடைசி அறைக்குள் நுழைந்த போது அங்கு கோட்டும் சூட்டுமாய் அமர்ந்திருந்தவர் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். வாசலில் நின்று அனுமதி வாங்காமல் முரளிதரன் அறைக்குள்  அலட்சியமாக வந்து அமர்ந்ததை அவர் ரசிக்கவில்லை. போனில்ஒரு நிமிஷம்என்று சொல்லி விட்டு அவர் முரளிதரனை எரிச்சலான முகபாவனையுடன்என்ன?’ என்பது போலப் பார்த்தார்.

 

முரளிதரன் அமைதியாகத் தன்னுடைய விசிட்டிங் கார்டை நீட்டினார். விசிட்டிங் கார்டைப் பார்த்த பிறகு மருத்துவமனை பொறுப்பாளர் முகம் மரியாதைக்கு மாறியது. போனில்நான் பிறகு பேசுகிறேன்என்று சொல்லிக் கீழே வைத்து விட்டு அவர் மிகுந்த மரியாதையுடன் சொன்னார். “சொல்லுங்கள் சார்.”

 

முரளிதரன் அமைதியாகச் சொன்னார். “கோவிட்ல இறந்த ஆட்கள் பத்தின ரிப்போர்ட்ஸ் எல்லாம் சரிதானான்னு செக் பண்ணச் சொல்லி என்னை அனுப்பியிருக்காங்க. நீங்க ரிக்கார்ட்ஸ் எல்லாம் சரியாய் வெச்சிட்டிருக்கீங்க அல்லவா?”

 

அந்த மனிதர் முகம் சிறிது களையிழந்தது. ஆனாலும் விரைவாகச் சமாளித்துக் கொண்டவராய் அவர் சொன்னார். “எங்க ரிக்கார்ட்ஸ் எல்லாம் பர்ஃபெக்டாய் இருக்கு சார்...”

 

நல்லது. அப்படின்னா பிரச்சனையே இல்ல. அந்த ரெக்கார்ட்ஸ நான் செக் பண்ண ஏற்பாடு செய்ங்க. அவங்க அட்மிட் ஆனதிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன வரைக்குமான எல்லா ரிப்போர்ட்ஸும் இருக்கட்டும்...”

 

(தொடரும்)

என்.கணேசன்



3 comments:

  1. விறுவிறுப்பான நாவல்..

    ReplyDelete
  2. கேட்டை தாண்டி உட்புறம் உள்ள துறவிகளை நினைத்தால் பாவமாக உள்ளது...அவர்களுக்கு உயர்ந்த ஆன்மீக அனுபவம் கிடைக்கப் போவதில்லை...மனக்குழப்பம் மட்டுமே கிடைக்கும்... இதை உணர்ந்தாலும் வெளியே வர முடியாது....

    ReplyDelete