சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 24, 2023

யோகி 6

 

ல விதங்களில் யோசித்தும் அவர்களுக்கு திருப்திகரமான வழி எதுவும் புலப்படப்படவில்லை. கடைசியில் கிருஷ்ணமூர்த்திக்கு தன் நோயாளிகளில் ஒருவர் பிரபல வக்கீலாக இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அவரைத் தொடர்பு கொண்டார்.  அந்த வக்கீல் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ஹேபியஸ் கார்பஸ் என்று சொல்லப்படும் ஆள் கொணர்வு மனு பற்றிச் சொன்னார். நீதிமன்றத்தை அணுகி இந்த மனுவைத் தாக்கல் செய்யலாம் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டால், யோகாலயா சைத்ராவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்றும் அவர் விளக்கிச் சொன்னார். உடனே கிருஷ்ணமூர்த்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.

 

நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தபின் அந்த வழக்கு அவர்களுடைய தனிப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. பல பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் அது குறித்து கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரிக்க, படையெடுத்து வர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் அது ஒரு சாமானியனின் பிரச்சினையை நாடு முழுவதும் கொண்டு போய் நீதி கேட்கும் செயலாகத் தான் அவர்களுக்குத் தோன்றியது. அதை நல்ல விஷயமாகவும், வரவேற்கத் தக்கதாகவும் தான் அவர்கள் எண்ணினார்கள். ஆனால் போகப் போக ஊடகங்களின் இன்னொரு முகமும் அவர்களுக்குப் பரிச்சயமாக ஆரம்பித்தது.  

 

கிருஷ்ணமூர்த்தியிடமும், சேதுமாதவனிடமும் கேட்டு அறிந்தவற்றையும், பேட்டி எடுத்ததையும் சில பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் உள்ளபடியே வெளியிடவில்லை. சிலவற்றை வெட்டியும், சிலவற்றைச் சேர்த்தும், சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்து மாற்றியும் வெளியிட்டார்கள். சொல்லிய சில உண்மைகள் மறைக்கப்பட்டும், சொல்லாத சில விஷயங்கள் திணிக்கப்பட்டும் வெளியானதைப் படிக்கையிலும், பார்க்கையிலும் கிருஷ்ணமூர்த்தியும், சேதுமாதவனும் அதிர்ந்து போனார்கள்.  

 

அவர்களுடைய தனிப்பட்ட துக்கமும், பிரச்சினையும், பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் வியாபாரமாக இருப்பதை அவர்கள் மெள்ளப் புரிந்து கொண்டார்கள். உண்மைகளுக்குச் சுவை சேர்த்து, நிறம் மாற்றி தலைப்புச் செய்திகள் வந்தன. தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்தன. சிலர் யோகாலயத்துக்கு எதிரான செய்திகளை மிக ஆர்வமாக வெளியிட்டார்கள். சிலர் யோகாலயத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டார்கள். எதுவும் கூட்டாமல், குறைக்காமல், உள்ளதை உள்ளபடி நேர்மையாகச் சொன்னதாய் பெரும்பாலும் இருக்கவில்லை. அப்படி நேர்மையாக இருக்கும் ஊடகங்கள் மிக அபூர்வமாகவே இருந்தன. கிருஷ்ணமூர்த்திக்கும், சேதுமாதவனுக்கும் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.

 

இந்த வழக்கை மதத்திற்கு எதிரான வழக்காகச் சிலர் எடுத்துக் கொண்டார்கள். ஒருவர் கிருஷ்ணமூர்த்தியிடம் நேரடியாக வந்து சொன்னார். “நாமளே நம்ம மத அமைப்பு மேல கேஸ் போடலாமா? இதைத்தானே வேற மதத்துக்காரங்க எதிர்பார்க்கிறாங்க. அதனால் தானே அவங்க இதைப் பத்தி ஆர்வமா அதிகம் பேசறாங்க? வெறும் வாயை மெல்லறவனுக்கு அவல் கொடுத்த மாதிரி ஆயிடுச்சே

 

கிருஷ்ணமூர்த்திக்குக் கோபம் வந்து விட்டது. அந்த ஆளின் சட்டைப் பையிலிருந்து அவருடைய கைபேசியை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். அந்த ஆள் அதிர்ச்சியுடன் கேட்டார். “என்னங்க செய்றீங்க?”

 

பாருங்க. நீங்களும் நானும் ஒரே மதம் தானே. என் மேல புகார் எதுவும் சொல்லாம வீடு போய்ச் சேருங்களேன் பார்ப்போம்....”

 

அந்த ஆளுக்குத் தன் கைபேசியைத் திரும்பப் பெறும் வரை இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அவருடைய கைபேசியைத் திருப்பித் தந்து விட்டு கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “பத்தாயிரம் ரூபாய் போனை திருப்பி வாங்கறதுக்குள்ளே இப்படித் தவிச்சுப் போறீங்க:ளே. நான் என் மகள் உயிருக்காக எவ்வளவு தவிப்பேன்? யோசிச்சுப் பாருங்க. இந்தப் பிரச்சினைல மதம் எங்கே வந்துச்சு? அவனவன் இழப்பும், தவிப்பும் அவனவனுக்குத் தான் தெரியும். சும்மா லூஸுத்தனமாய் பேசாம போய்ட்டு வாங்க

 

அந்த ஆள் ஓட்டமும், நடையுமாய் அங்கிருந்து போனார்.

 

ஆனால் அந்த ஆள் சொன்னது போல வேறு மத ஆதிக்கம் அதிகம் இருக்கும் ஊடகங்களே இந்த விஷயத்தை மிகைப்படுத்திப் பேசியதையும் கூட அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களிடம் பேட்டி எடுக்க வந்தவர்களில் சிலரை பெயரை வைத்து அவர்களுடைய மத அடையாளத்தைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பொதுவான பெயர்களை வைத்துக் கொண்டிருந்த அவர்கள் யோகாலயம் குறித்து புகாராய்ச் சொல்ல முடிந்தவற்றை எல்லாம் துருவித் துருவி கேட்டார்கள். அவர்கள் வேற்று மத ஆட்களாக இருந்தது வேறுசிலரால் பின்னர் சுட்டிக் காட்டப்பட்டது.

 

அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அறிந்து பொங்கி எழுந்து வந்தவராகத் தன்னைக் காட்டிக் கொண்ட ஒருவர் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு முடிவில்உங்கள் மதத்தில் இது போன்றவர்களின் ஆதிக்கம் தான் அதிகமிருக்கிறது. எங்கள் மதத்தில் இணைந்து விடுங்கள். உங்களுடன் சேர்ந்து போராட எங்கள் அகில இந்திய அமைப்புகள் அத்தனையும் தயாராக இருக்கின்றனஎன்றார்.

 

ஏன்யா எல்லா பிரச்சனையிலும் புகுந்தும் உன் மதத்தைப் பரப்பித் தான் ஆகணுமா? போய் வேற இடம் பாருய்யாஎன்று கிருஷ்ணமூர்த்தி அந்த ஆளையும் விரட்டி விட்டார்.    

 

ஏன் இந்தத் தனிப்பட்ட விஷயம் மதம் என்னும் கோணத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது என்று புரியாமல் கிருஷ்ணமூர்த்தியும், சேதுமாதவனும் திகைத்தார்கள். அவர்களுடைய மனக்கசப்பும், வேதனையும் கூடியது.   இத்தனை வருட காலங்களில் அவர்கள் எதையும் மதம் என்கிற கோணத்தில் பார்த்ததே இல்லை. இதுவரை மைக்கேலையும், அமீர் பாயையும் சேதுமாதவனால் அன்னியர்களாக நினைக்க முடிந்ததில்லை. இன்றைய அவருடைய துக்கத்தில் அவர்கள் பங்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது சோதனை வருகையில் அவரும் கவலைப்பட்டிருக்கிறார்.  

 

நாட்கள் போகப் போக ஊடகங்களின் போக்கும், மத வியாபாரிகளின் போக்கும் அவர்களுக்குச் சித்திரவதையாகவே மாற ஆரம்பித்தது. வியாபார தந்திரங்களுடன் அவர்களைப் பேட்டி எடுக்க வந்தவர்களை நாகரிகமாகத் தவிர்க்க அவர்களால் முடியவில்லை. அச்சமயத்தில் மகன்களிடம் மளிகைக்கடை வியாபாரத்தை ஒப்படைத்து விட்டு அமீர் பாய் அவர்கள் வீட்டில் வந்து அமர்ந்து கொண்டு, நெறியற்ற. ஊடக ஆட்களைத் துரத்தும் வேலையைச் சிறப்பாகச் செய்தார்.

 

ஒருநாள் மைக்கேல் நாணயம், நேர்மை, மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளும் ஊடகங்களைப் பற்றி நீண்ட நேரம் பேசி வருத்தப்பட்டார். எப்படி சிலவற்றை பெரிதாக்குகிறார்கள், எப்படி சிலவற்றைக் கண்டுகொள்ளாமல் போகிறார்கள், எப்படி சில சமயங்களில் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள், உதாரணங்களுடன் பேராசிரியருக்கே உரித்தான வகையில் விளக்கினார்.

 

அமீர் பாய் வெறுப்புடன் ஒரே வார்த்தையில் சொன்னார். “சைத்தான்கள்.”

 

ஆனால் யோகாலயத்திடமிருந்து ஒரு பதில் பெற ஊடகங்களே அவசியமாகவும் இருந்தன. கிருஷ்ணமூர்த்தி எடுத்த நடவடிக்கைகளுக்கு யோகாலயத்திலிருந்து ஆரம்பத்தில் எந்த எதிர்வினையும் இருக்கவில்லை. அதற்கு அவசியமே இல்லை என்பது போலவே அவர்கள் அமைதி காத்தார்கள். ஆனால் போகப் போக அவர்கள் தொடர்ந்து அமைதி காக்க ஊடகங்கள் அனுமதிக்கவில்லை. யோகாலயத்துக்கு வெளியே தினமும் பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் கூட்டமாகக் குவிய  ஆரம்பித்தார்கள்.

 

ஒருநாள் யோகாலயத்தின் மூத்த துறவி ஒருவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் அலட்டிக் கொள்ளாத அமைதியுடன் சொன்னார். “கடுகை மலை ஆக்கும் முயற்சி தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.  எனக்கு இங்கே நடப்பதை எல்லாம் பார்க்கையில்தேநீர்க் கோப்பையில் புயல்உருவாக்க முயற்சி செய்யும் உவமானம் தான் நினைவுக்கு வருகிறது. பொழுது போகாத ஒரு ஆள் ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ ஒரு அபத்தத்தை எழுதிப் போட்டு இருக்கிறார். அதைப் படித்து விட்டு இன்னொருவர் தன் மகளுக்கு ஆபத்து என்று பயந்து போயிருக்கிறார். அவர் புகார் கொடுத்து ஒரு போலீஸ் அதிகாரி நேரடியாகவே எங்கள் ஆசிரமத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அந்தத் துறவியிடமே விசாரித்தும் இருக்கிறார். அந்தத் துறவி தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லியும் இருக்கிறார்இதற்கு மேல் இதில் சொல்ல என்ன இருக்கிறது?”

 

ஒரு நிருபர் புத்திசாலித்தனமாகக் கேட்டார். ”அந்தத் துறவி அந்தப் போலீஸ் அதிகாரியிடம் சொன்னதை, தன் அப்பாவிடமே ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாமே? கடுகு கடுகாகவே போயிருந்திருக்குமே?”

 

அந்தத் துறவி சொன்னார். “அதைத் தான் நாங்களும் ஆரம்பத்திலேயே சொன்னோம். ஆனால் அந்தத் துறவி தனக்காக ஆசிரமம் விதிகளைத் தளர்த்துவதை விரும்பவில்லை. அவரே மறுத்து விட்ட பிறகு அவரை வற்புறுத்துவதற்கு ஆசிரமமும் விரும்பவில்லை. இப்போது இது வழக்காக நீதிமன்றத்திற்குப் போய் விட்டது. அதனால் நீதிமன்றத்தின் கட்டளைப்படி நடந்து கொள்வோம் என்பதைத் தவிர இது குறித்து கூடுதலாகச் சொல்ல எதுவுமில்லை. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய நோய் இந்தியாவிலும் அங்கங்கே தலைகாட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் தயவு செய்து இப்படி பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிருங்கள்.”

 

அந்தத் துறவி சொன்னது போலவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்தது. ஊரடங்கு உத்தரவு சீக்கிரம் பிறப்பிக்கப்பட்டது. அதிஅத்தியாவசியங்களைத் தவிர மற்ற அனைத்தும் நிறுத்தப்பட்டன. 

 

முக்கியமாக, நீதிமன்றங்களும் மூடப்பட்டன.


(தொடரும்)

என்.கணேசன்




2 comments:

  1. Sad state of hour is nicely recorded. Media is acting as mafia without any modalities. Thanks for bringing out common man sufferings and feelings in your words. Bold work please continue

    ReplyDelete
  2. ஊடகங்கள் இப்படி வியாபார நோக்கத்தோடு செயல்படுவதை விட ஆன்மீக ஆசிரமங்கள் வியாபார நோக்கத்தோடும் அடாவடிதனத்தோடும் செயல்படுவது தான் வேதனையான விசயம்.

    ReplyDelete