சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 20, 2023

சாணக்கியன் 53


 மைனிகாவும் மற்ற தாசிகளும் தங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் மிகவும் கவனமாக இருந்தார்கள். அவர்கள் தினமும் உடலுறவு, கேளிக்கைகளுக்கு இடையே ஓரிரு கேள்விகள், சில நினைவூட்டல்கள் என்கிற அளவில் மட்டும் நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் அவை மிக முக்கியமான சமயங்களிலும், யவன வீரர்கள் மிக உணர்வுபூர்வமான மனநிலைகளில் இருக்கையிலும் கேட்கப்பட்டன, அல்லது சொல்லப்பட்டன. அதற்கு மேல் அவற்றைத் தொடரவோ, விரிவாகப் பேசவோ தாசிகள் முற்படவில்லை. ஆனால் பிறகு அவற்றை மறக்கவோ, கடந்து செல்லவோ யவன வீரர்களால் முடியவில்லை. தாயகமும், குடும்பமும் தொடர்ந்து நினைவுபடுத்தப்படவே யவன வீரர்கள் தங்களுக்குள்ளும் அதிகமாக அதுகுறித்து பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

 

தன் வீரர்கள் மனதில் துளிர் விட ஆரம்பித்த உணர்வு நிலைகளை அறியாத அலெக்ஸாண்டர் பாரதத்தின் உள் நோக்கி அவர்களை நடத்திச் சென்றான். சென்ற இடமெல்லாம் அவனுக்கு வெற்றி காத்திருந்தது. சில பகுதிகள் போர் இல்லாமலேயே சரணடைந்தன, சில பகுதிகள் போரிட்டு தோல்வி கண்டு சரணடைந்தன.

 

அலெக்ஸாண்டர் சிந்து மகாநதியின் கிளை நதியான ரவியைக் கடந்து வந்த போது கத் பகுதியைச் சேர்ந்த மாவீரர்கள் தங்கள் பகுதியைக் காத்துக் கொள்ள மிகுந்த மன உறுதியுடன் திறமையாகப் போராடினார்கள். அலெக்ஸாண்டரும் புருஷோத்தமனும் சேர்ந்து தங்கள் படைகளுடன் தீவிரமாகப் போராடிய பிறகே அவர்களால் அந்தப் பகுதியை வெல்ல முடிந்தது. இரண்டு பக்கமும் கடுமையான சேதம் ஏற்பட்டது. இரண்டு பக்கமும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் மரணமடைந்தார்கள். 


போர் முடிந்த பின்பு நள்ளிரவு தாண்டியும் பல இடங்களில் குவிக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை வேதனையோடு பார்த்துக் கொண்டு மைனிகா தொலைவில் நின்று கொண்டிருந்தாள். கத் மாவீரர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விடப் புகழையும், கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டு பிரகாசிப்பதாக அந்தச் சடலங்கள் எரிவதை மைனிகா பார்த்தாள். இப்போது அவளுக்கு கேகய வீரர்களை விட கத் வீரர்கள் சிறந்தவர்களாகத் தோன்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் இறந்தாலும் தங்களுக்கு இணையான எண்ணிக்கையில் எதிரிகளைக் கொன்று விட்டுத் தான் இறந்திருக்கிறார்கள்...

 

ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் கூறியது போல அன்னியர் ஆதிக்கத்தில் நம் மண்ணின் மக்களுக்கு நன்மை விளைய முடியாது என்பதை அவள் இப்போது அழுத்தமாக உணர்கிறாள். அலெக்ஸாண்டர் இப்போது அவளுக்கு எமதூதனாகவே தோன்றினாள். அவள் மாபெரும் வீரராக மனதில் ஆராதித்திருந்த புருஷோத்தமன் தனது தோல்விக்குப் பின் சரணடைந்து அலெக்ஸாண்டரை அனுசரித்துப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் தன் மண்ணின் மக்களுக்கே எதிராகச் செயல்பட ஆரம்பித்ததையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

 

தோல்வியுற்ற புருஷோத்தமனிடம் காண்பித்த பெருந்தன்மையை அலெக்ஸாண்டர் மற்ற யாரிடமும் காட்டவில்லை என்பதையும் அவள் கவனித்தாள். குறிப்பாக மஸ்காவதி என்ற சிற்றரசின் மன்னர் அலெக்ஸாண்டருடனான போரில் மரணமடையவே கைக்குழந்தையோடு இருந்த இளம் அரசி வேறு வழியில்லாமல் சரணடைந்தாள். அந்த அரசின் வீரர்களில் கணிசமான பகுதியினர் யவனப்படையுடன் இணைய மறுத்ததால் அவள் அலெக்ஸாண்டரிடம் ஒரே ஒரு கோரிக்கையை தான் வைத்தாள். இணைய விரும்பாத வீரர்கள் தங்கள் வழியில் செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.  அலெக்ஸாண்டர் அதற்குச் சம்மதித்து மறுநாள் அதிகாலைக்குள் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டுப் பின்னர் நகரை விட்டு சென்று விட வேண்டும் என்று ஆணையிட்டான்.

 

அவன் ஆணையிட்டபடியே நூற்றுக் கணக்கான வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் நகரை விட்டு வெளியேறினார்கள். சிறிது நேரம் கழித்து அவர்களைத் தொடர்ந்து சென்ற யவனப்படை அவர்களைக் கொன்று குவித்தது. அது அவனைப் போன்ற ஒரு சக்கரவர்த்திக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.  நம்பிக்கைத் துரோகம் வீரத்தில் சேர்ந்ததல்ல என்று அவள் அதை எண்ணி மனம் குமுறினாள்.  அன்று மஸ்காவதி வீரர்கள், இன்று கத் வீர்ர்கள், நாளை.. ? வீரமிகுந்த இம்மண்ணின் மைந்தர்கள் இப்படித்தான் மடிந்து தீர வேண்டுமா?        

 

மறுநாள் இரவு கொய்னஸிடம் சென்ற போது மைனிகா அவர்களது வெற்றியில் பெருமகிழ்ச்சி அடைந்தவளாகத் தன்னைக் காட்டிக் கொண்டாள். கொய்னஸை ஆரத்தழுவிக் கொண்டு சொன்னாள். “இங்கும் மகத்தான வெற்றி கண்டு விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்

 

கொய்னஸ் அவளை இறுக்கி அணைத்தபடி சொன்னான். “நன்றி மைனிகா. எங்களுக்கு வெற்றி புதிதல்ல. நாங்கள் சென்ற இடமெல்லாம் அதைத் தான் கண்டிருக்கிறோம்.”

 

ஆனால் இந்த முறை வெற்றி அத்தனை சுலபமாக கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்     

 

உண்மை தான் மைனிகா. நாங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைப் பறிகொடுக்க நேர்ந்து விட்டது. என்னுடைய படைப்பிரிவில் மிகநல்ல வீரர்கள் முப்பது பேரை இழந்து விட்டேன். கத் வீரர்கள் முட்டாள்கள். தோல்வி நிச்சயம் என்று தெளிவாகத் தெரிந்தும் போரிட்டு மடிந்து எங்கள் பக்கத்திலும் கடும் சேதம் விளைவித்து விட்டார்கள்...”

 

நீங்கள் முட்டாள்தனம் என்று சொல்வதை அவர்கள் வீரம் என்று நினைத்து இருக்கலாம்...”

 

கொய்னஸ் வாய்விட்டுச் சிரித்தான். “பெண்களை வாதத்தில் வெல்வது கஷ்டம் தான். ஆனால் நான் சொல்ல வந்தது என்னவென்றால் அலெக்ஸாண்டருடன் போர் என்றால் தோல்வி நிச்சயம் என்பது தான் வரலாறு. அப்படி இருந்தும் சரணடையாமல் போரிடத் துணிவது முட்டாள்தனம் அல்லவா?”

 

மைனிகா தலையசைத்தாள். அன்று அவர்களது கூடல் முடிந்த பின் கொய்னஸ் அலெக்ஸாண்டரைப் பற்றி பேசும் மனநிலையில் இருந்தான். கொய்னஸுக்கு அலெக்ஸாண்டர் மீதிருக்கும் பெருமதிப்பை அவள் அறிந்தே இருந்தாள். கொய்னஸைப் பொருத்த வரை அலெக்ஸாண்டர் கடவுள் போலத் தான். அலெக்ஸாண்டரால் முடியாதது எதுவுமே கிடையாது என்று அவன் உறுதியாக நம்பினான். அலெக்ஸாண்டரின் வீரமும், அறிவும், தைரியமும் வேறொரு மனிதனிடம் இருக்கவே முடியாது என்று கருதுபவன் அவன். அலெக்ஸாண்டர் உலகத்திலேயே மிகச் சிறந்த அறிவாளியான அரிஸ்டாட்டிலின் மாணவன் என்று அடிக்கடி கொய்னஸ் சொல்வான். அரிஸ்டாட்டில் என்ற பெயரையே மைனிகா அவன் மூலமாகத் தான் கேள்விப்படுகிறாள். அந்த அறிவாளி தன் மாணவனுக்கு இன்னமும் கற்றுத் தரவேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்று மைனிகா தனக்குள் நினைத்துக் கொள்வாள்.

 

அன்றும் அரிஸ்டாட்டிலின் பெயரை கொய்னஸ் சொன்னான். அவரால் தான் அலெக்ஸாண்டர் மெய்ஞானத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவனாக இருப்பதாக அவன் சொன்னான். “.... அந்த ஈடுபாடும், மரியாதையும் அலெக்ஸாண்டரிடம் இல்லாமல் இருந்திருந்தால் அவரை அவமதித்துப் பேசிய துறவி தண்டராயன் இன்னேரம் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை மைனிகா. யோசித்துப் பார். சர்வ வல்லமையுள்ள சக்கரவர்த்தியாக இருந்த போதும் அவமதிப்புக்குப் பிறகும் அந்தத் துறவியை மன்னித்து, ஆழமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க வேறொரு மனிதரால் முடிந்திருக்குமா?”

 

மைனிகா சொன்னாள். “உண்மை தான். நானும் அதை யோசித்து வியந்திருக்கிறேன். அது மட்டுமல்ல கேகய மன்னர் போரில் தோற்ற போதும்எப்படி நடத்த வேண்டும்?” என்று கேட்டுஒரு அரசன் இன்னொரு அரசனை எப்படி நடத்துவானோ அப்படியே நடத்த வேண்டும்என்று பதில் அளித்ததை அவமரியாதையாக எடுத்துக் கொள்ளாமல் சொன்னபடியே நடத்தி நண்பராக ஏற்றுக் கொண்டதையும் நினைத்துப் பார்த்து பிரமித்திருக்கிறேன்..... ஆனால் ஒரு விஷயம் தான் முரண்பாடாகத் தோன்றுகிறது.”

 

எந்த விஷயம்?” கொய்னஸ் கேட்டான்.

 

மஸ்காவதி வீரர்களிடம் ஆயுதங்கள் ஒப்படைத்து விட்டுத் தங்கள் வழியில் போகலாம் என்று அவர் அனுமதியளித்து விட்டு பின் தன் படையினரை அவர்கள் பின்னால் அனுப்பிக் கொன்று குவித்தது சரியாகப் படவில்லை. இந்தப் பேதை தவறாகச் சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள். மனதில் நினைத்ததை உங்களிடம் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.”

 

கொய்னஸ் அதிலும் அலெக்ஸாண்டரிடம் குற்றம் காண முடியாதவனாக இருந்தான். அவன் பொறுமையாக அவளிடம் சொன்னான். “மைனிகா. பிரிந்து செல்லும் வீரர்கள் எப்போது எதிராகத் திரும்புவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. தீயில் மிச்சம் வைப்பது போல பகைமையில் பாக்கி வைப்பதும் புத்திசாலித்தனம் அல்ல. அதனால் தான் அவர் அப்படி நடந்து கொண்டார். எதிரிகளிடம் வீரத்துக்கு இணையாக தந்திரத்தையும் பிரயோகப்படுத்த வேண்டும் என்பது தான் அரசியலில் முதல் பாடம்…”

 

அவள் பேருண்மையைக் கேட்டு உணர்ந்தவள் போல் முகபாவனை காட்டி மெல்லத் தலையாட்டினாள். சிறு மௌனத்திற்குப் பிறகு அவனிடம் அவள் மெல்லக் கேட்டாள். “உங்கள் மகளுக்கு எத்தனை வயதாகிறது?”

 

மகளைப் பற்றி அவள் கேட்டவுடன் அவன் முகம் மென்மையாகியது. மகள் பிறந்த வருடத்தை வைத்து மனதில் கணக்கிட்டு அவன் சொன்னான். அவள் பதினான்கு வயதை எட்டி விட்டாள்

 

அவள் பார்க்க சாயலில் உங்களைப் போலவா இல்லை உங்கள் மனைவியைப் போலவா?”


அவன் பெருமையோடு சொன்னான். “அவள் என் சாயல் தான்? அவள் சிறு குழந்தையாக இருக்கும் போது கிளம்பி வந்து விட்டேன். இப்போது வளர்ந்திருப்பாள்….”

 

சொல்லி முடித்த போது அவன் குரலில் மெல்லிய சோகம் இழையோடியது. அதற்கு மேல் அவள் ஒன்றும் அவனிடம் கேட்கவில்லை. அவள் உறங்க ஆரம்பித்து விட்டாள். அவன் உறங்காமல் நீண்ட நேரம் விழித்திருந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. எதிரிகளிடம் இருந்து பாரதத்தை காக்கும் வீரர்களில் முதல் வீரராக மைனிகா தெரிகிறாள்... அது தான் உண்மையும் கூட....

    ReplyDelete
  2. Chanakya is a great psychologist also.

    ReplyDelete