சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 13, 2023

சாணக்கியன் 52

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “நான் உன்னிடம் கேட்கவிருப்பதை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை மைனிகா. நீ  அலெக்ஸாண்டரை நெருங்குவது கூட உனக்கு ஆபத்து. அவனை நீ நேரடியாக எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனை உன்வசப்படுத்த நான் உன் உதவி கேட்கவில்லை.  சக்கரவர்த்தியே ஆனாலும் அவனும் தன் படைகளைக் கொண்டே போரிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன். அவன் படை வீரர்கள் போரில் உற்சாகம் காட்டவில்லை என்றால், அவர்கள் போரிட மறுத்தால் அவனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி போரில் ஈடுபட வைக்க முடியாது. அவர்கள் மனமாற்றத்திற்கு நான் உன் உதவியைக் கேட்கிறேன்….”

 

மைனிகா குழப்பத்தோடு கேட்டாள். “அவர்கள் மனமாற்றத்திற்கு நான் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஏன் போரில் உற்சாகம் இழந்து போரிட மறுக்கப் போகிறார்கள்? வெற்றி பெறுபவர்களுக்கு அந்த வெற்றியே அடுத்த முயற்சிகளுக்கு உந்துசக்தியாக இருக்குமே ஆச்சாரியரே? அவர்களை உற்சாகம் இழக்க வைப்பதெப்படி?”

 

விஷ்ணுகுப்தர் அமைதியாகச் சொன்னார். “உண்மை. ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு. அவர்கள் தங்கள் நாட்டை விட்டும், குடும்பத்தை விட்டும் வந்து காலம் பல ஆகி விட்டது. அவர்கள் வீரர்கள் மட்டுமல்ல. அதற்கும் முன்பு அவர்கள் மனிதர்கள். அவர்களுக்குத் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும், அவர்களுடன் இணைய வேண்டும் என்று தோன்றுவது இயற்கை. அப்படி அவர்களாக அப்படி எண்ணா விட்டாலும், உன்னைப் போன்றவர்கள் முயற்சி செய்தால் அவர்கள் எண்ண ஓட்டத்தை அந்த வழியில் எளிதாகத் திருப்ப முடியும். சிலர் அதை நினைக்க ஆரம்பித்தால் மற்றவர்களிடமும் தங்கள் எண்ணத்தைச் சொல்வார்கள். மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் தோன்றும். பெரும்பாலானவர்களிடம் அந்த எண்ணம் வலுப்பட ஆரம்பித்தால் அது அலெக்ஸாண்டரைக் கண்டிப்பாகப் பின்வாங்க வைக்கும்…”

 

இது வரை இந்தக் கோணத்தில் யாரும் சிந்தித்திருக்கவும் மாட்டார்கள் என்று அவளுக்குத் தோன்றினாலும் ஆச்சாரியர் சொல்வது போல் நடப்பது சாத்தியமா என்ற கேள்வியும் அவள் மனதில் எழுந்தது. மேலும் அவள் தொழில் மற்றவர்களது குடும்பத்தை மறக்க வைக்கவும், அலட்சியப்படுத்தவும் தூண்டுவதாகவே இருந்து வருவதால் குடும்பத்தை நினைவுபடுத்துவதற்கு அவள் உதவியை அவர் நாடுவது தவறான ஆளிடம் கேட்கும் உதவியாகவே அவளுக்குத் தோன்றியது.

 

அவள் மனதில் ஓடும் சிந்தனைகளை புரிந்து கொண்டவராக அவர், அவள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார். அவர் பேசப் பேச அவர் மனித மனதைப் புரிந்து கொண்டிருக்கும் ஆழம் அவளைப் பிரமிக்க வைத்தது. அதோடு அவர் சின்னச் சின்ன விஷயங்களையும் யோசித்து வைத்திருந்து பேசியது ஒருவர் இந்த அளவு நுணுக்கமாகத் திட்டமிட முடியுமா என்ற பேராச்சரியத்தையும் அவளிடம் ஏற்படுத்தியது. எல்லாம் பேசி முடித்த பின் ஒரு பொன்முடிச்சையும் அவர் அவளிடம் நீட்டினார்.

 

“நீ செய்யப் போகும் சேவைக்கு விலை மதிப்பில்லை என்ற போதும் நீ மற்ற தாசிகளையும் அழைத்துப் போக வேண்டியிருப்பதால் அவர்களுக்குத் தருவதற்காக இந்தச் சிறிய சன்மானத்தை ஏற்றுக் கொள் மைனிகா,”

 

அவள் அதை வாங்கிக் கொள்ள மறுத்து சொன்னாள். “எங்கள் கேகயம் வென்றால் அலெக்ஸாண்டர் இந்த எல்லையிலிருந்தே துரத்தப்படுவான் ஆச்சாரியரே. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அது நடக்கா விட்டால், எங்கள் கேகயத்தைத் தோற்கடித்ததற்குப் பழி வாங்கும் விதமாக நான் கண்டிப்பாக உங்களது திட்டத்தில் பங்கேற்கிறேன். அப்படி நடக்கும் நேரத்தில் நான் இதைப் பெற்றுக் கொள்வது தான் சரியாக இருக்கும்.”

 

“நீ இதில் ஈடுபடும்படியாகவே நிகழ்வுகள் நடந்தேறும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லாததாலும், அந்தச் சமயத்தில் நான் உன்னை இங்கு வந்து சந்திப்பது உசிதமல்ல என்பதாலும் இப்போதே இதைப் பெற்றுக் கொள் மைனிகா. அப்படி ஒரு வேளை கேகயம் வென்று இங்கிருந்தே அலெக்ஸாண்டர் துரத்தப்படுவானேயானால் மகிழ்ச்சியே. அப்படி நடந்தால் என் தவறான யூகத்தை உன்னிடம் சொன்னதற்கு நான் மகிழ்ச்சியுடன் செலுத்தும் அபராதத் தொகையாக இது இருக்கட்டும்”

 

மைனிகா தயக்கத்துடன் தான் அவர் நீட்டிய பொன்முடிச்சை வாங்கினாள். அவர் கிளம்பும் போது சொன்னார். “இந்தக் குலத்தில் பிறந்ததற்காகவும், இந்தத் தொழிலைச் செய்வதற்காகவும் நீ கண்டிப்பாக சில சமயங்களில் வருத்தப் பட்டிருப்பாய் மைனிகா. நீ இந்தத் திட்டத்தில் வெற்றியடைந்து அலெக்ஸாண்டர் இந்தப் புனித மண்ணிலிருந்து வெளியேறும் போது உன்னைப் பெற்றதற்காக இந்த பாரதம் கண்டிப்பாகப் பெருமை கொள்ளும். சரித்திரத்தில் உன் பெயர் எழுதப்படா விட்டாலும் உன் சேவையை இந்த மண் என்றென்றும் நினைவு வைத்திருக்கும்”

 

அவர் சொன்னபடியே கேகயம் தோற்றதை அவளுக்கு நம்ப முடியவில்லை. மகன்களைப் பறி கொடுத்த பின்னும் அலெக்ஸாண்டருக்கு கேகய மன்னர் அடிபணிந்து போனதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. கேகயம் தோற்றதும் ஆச்சாரியரின் திட்டத்தை நிறைவேற்ற அவளும் அவள் தேர்ந்தெடுத்த மற்ற தாசிகளும் உடனடியாகக் கிளம்பினார்கள். போர் வீரர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் தாசிகளுடன் பழகுவது அந்தக் காலத்தில் தவறாகக் கருதப்படவில்லை. மாறாக வீரர்களின் யதார்த்த தேவையைக் கருதி அது ஊக்குவிக்கவும் பட்டது.  

 

இயல்பாகவே அறிவுகூர்மை படைத்த மைனிகாவுக்கு ஆச்சாரியர் சொன்னபடி நடந்து கொள்வதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை. அவர் அவளைப் பொறுத்த வரை அலெக்ஸாண்டரின் எந்தப் படைத்தளபதியுடன் பழக வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். தட்சசீலத்தில் அமர்ந்து கொண்டு அலெக்ஸாண்டரின் படைத்தளபதிகள் குறித்து கூட விஷ்ணுகுப்தர் விரிவாக அறிந்து வைத்திருந்ததையே அது காட்டியது.  மற்ற தாசிகள் எப்படிப்பட்ட ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார். அப்படியே அவர்கள் வீரர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகவும் ஆரம்பித்தார்கள். அலெக்ஸாண்டரின் படை பாரதத்தின் உட்பகுதியை நோக்கி முன்னேற முன்னேற அவர்களும் சேர்ந்து சென்றார்கள்.

 

இது போன்ற சந்தர்ப்பங்களில் தாசிகள் தங்கள் எல்லையை மீறி ஒற்று வேலை செய்வது தெரிந்தால் விசாரணை எதுவும் இல்லாமல் கொல்லப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வாக இருந்ததால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தார்கள். எங்கும், எப்போதும் பிரச்சினைக்குரிய இடங்களுக்குப் போவதைத் தவிர்த்தார்கள். சந்தேகத்தை ஏற்படுத்தும்படியாக அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை.  விஷ்ணுகுப்தரின் திட்டப்படி அதற்கு அவசியமும் இருக்கவில்லை. அவர் வேவு பார்க்கும் வேலையை அவர்களுக்குத் தரவும் இல்லை.    

 

மைனிகா அலெக்ஸாண்டரின் படைத்தளபதிகளின் முக்கியமானவனாகக் கருதப்படும் கொய்னஸ் என்பவனின் காமுகியாக மாறியிருந்தாள். மாவீரனான கொய்னஸ் போர்க்களத்தில் அலெக்ஸாண்டரே பாராட்டும் வகையில் போரிடுபவனாக இருந்தான். கொய்னஸ் அவளிடம் நடந்து கொள்ளும் வகையில் சிறிது சின்ஹரனை அவளுக்கு நினைவுபடுத்தினான். உடலுறவைத் தாண்டி பேசிக் கொள்வதில் அவர்களுக்கு மொழி ஒரு தடையாக ஆரம்பத்தில் இருந்தாலும் மைனிகா அவனிடமிருந்து யவன மொழியை வேகமாகக் கற்றுக் கொண்டு விட்டிருந்தாள். அவளுடைய புத்திசாலித்தனம், நளினம், பழகுவதில் அவள் காட்டிய உயர்ரகப் பண்புகள், நாசுக்கு எல்லாம் சேர்ந்து வெறும் காமுகி என்ற நிலையைக் கடந்து ஒரு தோழி என்று கொய்னஸ் நினைக்கும் முன்னேற்றத்தை மைனிகா சீக்கிரமே எட்டி விட்டிருந்தாள். அதனால் அவனும் சில சமயங்களில் அவளிடம் மனம் விட்டுப் பேசுவான். அவள் அவனைப் பேச வைப்பாள்…

 

ஒரு நாள் உடலுறவு முடிந்து படுத்துக் கிடக்கையில் அவள் ஏதோ யோசனையாக இருப்பதைப் பார்த்து கொய்னஸ் கேட்டான். “என்ன யோசிக்கிறாய் மைனிகா?”

 

“உன் மனைவியை நினைத்துப் பார்த்தேன். அவள் உன் பிரிவை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பாள் என்று யோசித்துப் பார்த்தேன்… உன் குழந்தைகள் உன்னை நினைவுபடுத்திக் கேட்கையில் அவர்களிடம் என்ன பதில் சொல்லிச் சமாளிப்பாள் என்று யோசித்தேன்…”

 

கொய்னஸ் முகம் மென்மையாகியது. “எந்த தாசியும் ஒருவனுடைய மனைவி குழந்தைகளை நினைவுபடுத்துவதில்லை. நீ வித்தியாசமானவள் மைனிகா”

 

மைனிகா மெலிதாகப் புன்னகைத்தாள். பின் மெல்லக் கேட்டாள். “உனக்கு அவர்கள் நினைவு வராதா தளபதி”

 

கொய்னஸ் சொன்னான். “அவ்வப்போது வரும். ஆனால் என்ன செய்வது மைனிகா. போர் வீரர்களின் தலைவிதி அது. நாங்கள் குடும்பத்துடனேயே உட்கார்ந்திருக்க முடியாதல்லவா?”

 

மைனிகா விட்டத்தைப் பார்த்துக் கொண்டு யோசனையுடன் சொன்னாள். “உண்மை தான் தளபதி. ஒரு போருக்குச் செல்வதும், வென்று திரும்பி வந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கூடுவதும் இயற்கை தான். ஆனால் போர் முடிந்து தாயகம் திரும்பாமல் இப்படித் தொடர்ந்து போரிட்டுப் போய்க் கொண்டே இருந்தால், குடும்பத்துடன் கூடுவது என்பது தள்ளிக் கொண்டே போனால் இதற்கு முடிவு தான் என்ன? உன் மனைவி குழந்தைகள் உன்னைப் பார்ப்பது தான் எப்போது?”

 

அவன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகப் படுத்திருக்க அவள் அவன் மார்பில் தலை வைத்தபடி சொன்னாள். “இந்தப் பேதையின் கேள்விகள் உன்னைப் போன்ற படைத்தலைவனுக்கு முட்டாள்தனமாய் தான் தெரியும். என்னை மன்னித்து விடு.  உன் மனைவி குழந்தைகள் கோணத்தில் இருந்து என்னால் இதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை.”

 

அவள் சற்று நேரத்தில் அப்படியே உறங்கி விட்டாள். அவனால் உறங்க முடியவில்லை…

 

(தொடரும்)

என்.கணேசன்

3 comments:

  1. Chanakyan's brilliance is astonishing. Glad that you could bring this in Tamil. Thanks sir.

    ReplyDelete
  2. ஒரு நாட்டின் அரசியலில் தாசியின் பங்கு முக்கியமானது என்று சாணக்கியர் சொன்னது...ஏன் என்பதை இந்த காட்சியில் உணர முடிகிறது....

    ReplyDelete
  3. Tamil New year ku oru episode podalame Sir!!!!

    ReplyDelete