சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 8, 2022

யாரோ ஒருவன்? 97


தன்லால் ஜனார்தன் த்ரிவேதியிடம் கேட்டான். “சஞ்சயை நீங்க பார்க்கலையா தலைவரே?”

ஜனார்தன் த்ரிவேதி சலிப்புடன் சொன்னார். “பார்த்துப் பேசிட்டு தான் வந்தேன். ஆனா அவன் தெளிவில்லாம பைத்தியம் மாதிரி பேசறான்.”

மதன்லால் திடீரென்று ஆவேசத்தோடு சொன்னான். “அவன் கூட கொஞ்ச நாள் ஒருத்தன் இருந்தால் போதும் தலைவரே எவனானாலும் சரி  பைத்தியமாயிடுவான்

என்ன ஆச்சு மதன்லால்?” ஜனார்தன் த்ரிவேதி குழப்பத்துடன் கேட்டார்.

அவன் பயந்து நடுங்கறது மட்டுமில்லாம அடுத்த ஆளையும் பயமுறுத்தறதுல அவன் கெட்டிக்காரன். எனக்கும் அவனுக்கும் என்ன வயசு வித்தியாசம் இருக்கும்னு நினைக்கிறீங்க. ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ இருக்கலாம். அவன் என்னை மதன்லால் அண்ணா, மதன்லால் அண்ணான்னு கூப்பிட்டே சித்திரவதை பண்ணிட்டான்.”

ஜனார்தன் த்ரிவேதி திகைத்தார். இதெல்லாம் ஒரு விஷயம் என்று இவன் சொல்கிறானே என்று நினைத்தவராக அவர் மெள்ள பேச்சை மாற்றினார். “அவனுக்கு ஒழுங்கா பேச வராது. முட்டாள். அவனை விடு. நரேந்திரன் உன்னைக் கடத்திட்டு, எவனோ ஒரு கடத்தல்காரன் தான் கடத்தினான்னு காண்பிச்சுக்க உன் மனைவிக்கு போன் பண்ணி ஐம்பது லட்ச ரூபாய் பணம் கேட்டிருக்கான். அது தெரியுமா உனக்கு?”.

மதன்லால் தெரியும் என்று தலையசைத்து விட்டுச் சொன்னான். “அந்தப்பணத்தை தந்திருந்தா அதை அபராதமா எடுத்துகிட்டு என்னை அவன் விட்டிருப்பான்னு அந்த தடியன் சொன்னான். என் மனைவி பேர்ல நான் சேர்த்தியிருக்கற சொத்து அஞ்சு கோடிக்கும் அதிகமாய் தான் இருக்கும். அதுல எதுவும் அவ அப்பன் வீட்டுல இருந்து சீதனமாய் கொண்டு வந்ததல்ல. அப்படி இருக்கைல நான் சேர்த்துக் கொடுத்த பணத்துல பத்துல ஒரு பாகத்தைக் குடுத்து என்னை மீட்க அவளுக்கு மனம் வரலை. அந்தப் பேயோட நான் இனிமேலும் வாழணுமா தலைவரே நீங்களே சொல்லுங்க…..”

உன் மன வருத்தம் எனக்குப் புரியுது மதன்லால். அதை விட்டுத்தள்ளு.” என்று சொல்லி ஜனார்தன் த்ரிவேதி முக்கியமான மற்ற விஷயங்களைக் கேட்க நினைத்தார்.

எப்படித் தலைவரே விட்டுத்தள்ள முடியும்? விட்டுத்தள்ள முடிஞ்ச விஷயமா இது? சில பேர் புருஷனுக்காக உயிரைக்கூடக் கொடுக்கிறாங்க. இந்த சனியன் என்னடான்னா புருஷன் காசையே புருஷனுக்காகக் கொடுக்க மாட்டேன்கிறா.”

இப்படியும் சில ஜந்துக்கள் இருக்கு. என்ன பண்றது?” என்று இரண்டு வினாடிகள் முகத்தில் சோகம் காட்டி விட்டு ஜனார்தன் த்ரிவேதி அவனிடம் ஆர்வத்துடன் கேட்டார். “நரேந்திரன் என்னவெல்லாம் உன்னைக் கேட்டான். நீ என்னவெல்லாம் சொல்லியிருக்கிறாய்

எல்லாத்தையும் சொல்லச் சொல்லி கேட்டான். க்யான் சந்தையும் அவன் கடத்தி எங்கயோ வெச்சிருக்கானாம். என்னையே கடத்த முடிஞ்சவனுக்கு க்யான் சந்தக் கடத்தறது பெரிய விஷயமா என்ன. எல்லாத்தையும் அவன் கிட்ட க்யான் சந்த் உளறிட்டான் போலருக்கு. அதனால நான் க்யான் சந்துக்கு என்னவெல்லாம் தெரியுமோ அது வரைக்கும் அவனுக்கு சொல்லிருக்கேன்

ஜனார்தன் த்ரிவேதி திகைப்புடன் அவனைப் பார்த்தார். ”அவன் நீ சொன்னதை எல்லாம் கண்டிப்பாய் ரிகார்ட் பண்ணி வெச்சிருப்பானே

மதன்லால் அலட்சியமாய் சொன்னான். “சித்திரவதை பண்ணி அந்த வாக்குமூலத்தை அவன் வாங்கிருக்கான்னு சொல்லிட்டா போச்சு. தலைவரே. அவன் நம்மள என்ன பண்ண முடியும் தலைவரே. ஆமாடா அப்படி தான் உன் அப்பனைக் கொன்னோம். முடிஞ்சதை செஞ்சுக்கோடான்னு அவனை அடுத்த தடவை பாக்கறப்ப சொல்லிடப்போறேன். இவ்வளவு தூரம் அவன் போனதுக்கப்பறம் நான் அவனை விடறதாயில்லை... அவனை புடிச்சு வெச்சு அணு அணுவா சித்திரவதை செய்யணும் தலைவரே. அவனை மட்டுமில்ல தலைவரே. அந்த தடியனையும் தான். பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தன் ரொம்ப திமிரா என் கிட்ட நடந்துகிட்டான். மங்கல் பாண்டேன்னு பேரு. அவனை நான் சும்மா விடலையே. அணு அணுவா சித்திரவதை செஞ்சு கொன்னு அதை தற்கொலையாய் மாத்திட்டேன்...”

ஜனார்தன் த்ரிவேதி தாழ்ந்த குரலில் சொன்னார். “மெல்லப் பேசு. பழைய கதை எல்லாம் எதுக்கு இப்போ?”

யாருக்கு பயப்படணும் தலைவரே. நான் யாருக்குப் பயப்படணும். என்னைக்கானாலும் சரி அவன் சாவு என் கைல தான். குறிச்சு வெச்சுக்கோங்க

அவருக்குத் தெரிந்து மதன்லால் திமிர் பிடித்தவனேயொழிய முட்டாள் அல்ல. எப்போதுமே கவனமாகத் தான் வெளியிடங்களில்  பேசக்கூடியவன். அப்படி நெருங்கியவர்களிடம் ஏதாவது ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வதென்றாலும் மெல்லிய குரலில் பேசக்கூடியவன். இப்படி சத்தமாய் பேச மாட்டான்.

ஜனார்தன் த்ரிவேதி பேச்சை மாற்றினார். “பாம்பு எப்படி அங்கே வந்துச்சு? யார் அதைக் கொண்டு வந்து விட்டாங்க தெரியுமா?”

மதன்லால் முகம் திடீரென்று மாறியது. நிஜமாகவே பாம்பு அங்கே வந்திருப்பதைப் போல அவன் பயந்து போனான். “பாம்பா? எங்கே?” என்று பீதியுடன் கேட்டவன் கட்டிலிலேயே எழுந்து நின்று கொண்டான். இப்போது இங்கே பாம்பு எதுவும் வரவில்லை, தான் கேட்டது அன்று பாம்பு எப்படி அங்கே வந்தது, அன்று யார் அந்த பாம்பைக் கொண்டு வந்தது என்பதைப் பற்றி என்று சொல்ல அவர் முயற்சித்தது எதுவும் அவனுக்குப் புரியவில்லை. “ஐயோ பாம்பு, பாம்பு” என்று அவன் அலற ஆரம்பித்தான்.

அந்தச் சத்தம் பக்கத்து அறையிலிருந்த சஞ்சய் ஷர்மாவையும் பதற வைத்து அவன் அவனது அறையிலிருந்து வேகமாக வெளியே ஓடினான். அவன் போகும் போது. ”மதன்லால் அண்ணா ஓடிடுங்க. பாம்பு....” என்று கத்த, மதன்லால் கட்டிலில் இருந்து தாவிக் குதித்து தானும் வெளியே ஓடினான். ஆஸ்பத்திரி அட்டெண்டர்கள், நர்ஸ்கள், டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து கூட அவர்களைப் பிடித்து விட முடியவில்லை. அஜீம் அகமதின் ஆட்களும், ஜனார்தன் த்ரிவேதியின் ஆட்களும் கூட அவர்களுடன் சேர்ந்த பின்பே அவர்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த முடிந்தது. மயக்க ஊசி போட்டு இருவரையும் உறங்க வைப்பதற்குள் முழு ஆஸ்பத்திரியும் பரபரப்பாக மாறி விட்டது. ஜனார்தன் த்ரிவேதி இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போனார்.  

அவரைத் தனதறைக்கு அழைத்துக் கொண்டு போன டாக்டர் இருவரின் மூளை ஸ்கேன்களையும் காட்டி அதில் உள்ள நுணுக்கமான பாதிப்புகளைக் காட்டி விட்டு விளக்கினார். “இந்தப் பிரச்னைகள் இருக்கிறதால, பெரும்பாலும் இவங்க ரெண்டு பேரும் சாதாரணமாவே இருந்தாலும் திடீர் திடீர்னு மாறுவாங்க. சம்பந்தமில்லாம பேசுவாங்க. பயப்படுவாங்க. அந்தரங்க விஷயங்களையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசுவாங்க. மொத்தத்துல இவங்க செயல்கள்ல இவங்களுக்குக் கட்டுப்பாடு இருக்காது. ஆனா அது எப்ப நடக்கும்னு நம்மளால திட்டவட்டமா சொல்ல முடியாது. மத்தபடி சாதாரணமாவே இருப்பாங்க. இயல்பாய் பேசுவாங்க. எந்தெந்த வார்த்தைகள், விஷயங்கள் அவங்களைப் பாதிக்குதுன்னு புரிஞ்சுகிட்டு நாம தான் ஜாக்கிரதையாய் அதைத் தவிர்க்கணும்.

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “இதைச் சரி செய்ய முடியாதா?”

“சில சிகிச்சை முறைகள் இருந்தாலும் மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல எதையும் நிச்சயமாய் சொல்ல முடியாது. மற்ற உறுப்புகள் சம்பந்தமாய் நாம இது சரியாக, குணமாக இத்தனை காலம் தேவைப்படும்னு சொல்ல முடியும். ஆனா மூளை சம்பந்தமான சிகிச்சைகள்ல அப்படிச் சொல்ல முடியாது. முயற்சி செய்து பார்ப்போம்…”

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “இப்படி ஆகக் காரணம் என்ன?”

டாக்டர் சொன்னார். “பாம்புக் கடி விஷம் தான் இந்த பாதிப்புகளுக்குக் காரணம். பொதுவா இந்த மாதிரி விஷப்பாம்புகள் காட்டுப் பகுதிகள்ல தான் இருக்கும்னு சொல்றாங்க. காடுகளுக்குள்ளே வேட்டைக்குப் போகிறவங்களுக்குத் தான் இந்த மாதிரி பாம்புகள் கடிக்க வாய்ப்பு அதிகம். நகர்ப்புறங்கள்ல இது வரைக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் நடந்ததில்லை. அதனால இது ஆச்சர்யமாய் இருக்கு”  

என்னென்ன சிகிச்சைகள் உண்டோ அதையெல்லாம் செய்யச் சொல்லி விட்டு ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பிய ஜனார்தன் த்ரிவேதிக்கு, இதற்கெல்லாம் விளக்கமும், தீர்வும் காளிங்க சுவாமியிடம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று தோன்றியது. மனதில் ஒரு நம்பிக்கைக் கீற்று உதயமானது.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

3 comments:

  1. Couldn't control my laughter. Super sir.

    ReplyDelete
  2. அவர்களுக்கு நல்ல ஆப்பு...
    திருடனுக்கு தேள் கொட்டியது போல்... அவர்கள் சொல்லும் உண்மையை நிரூபிக்க வெளியே கொண்டுவந்து அவர்களை பேச வைக்க முடியாது.

    ReplyDelete