சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 29, 2021

யாரோ ஒருவன்? 25



ணாலி போலீஸ் ஸ்டேஷனில் இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முந்தைய ஆட்கள் யாருமே இப்போது இல்லை. இப்போதிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் ரெகார்டுகளைத் தேடி எடுத்து அப்போதிருந்தவர்கள் பற்றிய தகவல்களைச் சொன்னார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஓய்வு பெற்று தற்போது மணாலியிலேயே புறநகர்ப் பகுதியில் இருப்பது தெரிந்தது. அப்போது சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் இப்போது சிம்லாவில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் என்பதும் தெரிந்ததுநரேந்திரன் இருவரையும் சந்திப்பதற்கு முன் அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துப் படித்து விடுவது நல்லதென்று எண்ணினான்.

ஓய்வு பெற்ற அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லவர் என்றும் மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர் என்றும் பெயர் எடுத்திருந்தார். பொதுமக்கள் அவரைத் தங்களுக்குள் ஒருவராகப் பார்த்தார்கள் என்று குறிப்புகள் கூறின. ஆனால் அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் மீது நல்ல அபிப்பிராயங்கள் யாருக்கும் இருக்கவில்லை.  இதுவரை  நான்கு முறை சஸ்பெண்ட் ஆகி இருப்பது தெரிந்தது. அந்த மாதிரி ஆளிடம் உபயோகமான தகவல்கள் சுலபமாக வர வாய்ப்பில்லை.

முதலில் மணாலியில் இருக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியையே  பார்ப்பது என்று முடிவெடுத்த நரேந்திரன் அவரைச் சந்திக்கச் சென்றான். அவன் யாரென்று அறிந்ததும் அவர் மிகுந்த மரியாதையுடன் அவனை வரவேற்றார். அவன் போய் ஐந்து நிமிடங்களில் அவர் மனைவி அவனுக்குச் சுடச்சுட டீயும், சமோசாவும் கொண்டு வந்து தந்தாள். அந்த உபசரிப்பில் நெருக்கமான உறவுக்காரர்கள் வீட்டுக்குப் போனது போல் நரேந்திரன் உணர்ந்தான்.

தான் வந்த விஷயத்தை நரேந்திரன் அவரிடம் தெரிவித்த போது அவர் வருத்தத்துடன் சொன்னார். “அந்தச் சமயத்தில் எனக்கு ஒரு விபத்து ஆகி நான் ஒரு மாதம் விடுமுறையில் இருந்தேன்.  அதனால் சப் இன்ஸ்பெக்டர் மதன்லால் தான் ஸ்டேஷன் இன் சார்ஜாக இருந்தார். என் சகாவைப் பற்றி நானே தவறாகச் சொல்லக்கூடாது. ஆனால் உங்களிடம் என்னால் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் பணத்திற்காகத் தாயையும் விற்கக்கூடிய மனிதர். நான் அந்த ஆளுடன் நிறைய சிரமப்பட்டு விட்டேன். மேலதிகாரிகளிடம் புகார் செய்தது எதுவும் எடுபடவில்லை. காரணம் அவருக்கு அரசியல்வாதிகளிடம் செல்வாக்கு நிறைய இருந்தது. சஸ்பெண்ட் ஆனாலும் எப்படியாவது திரும்ப வந்து பெரிய உபத்திரவமாக இருந்தார்….”

உள்ளூர் போலீஸ் மகேந்திரனுக்குச் சரியாக உதவவில்லை என்பதற்கு இப்போது காரணம் புரிந்தது.   மோசமான அதிகாரிகளும், மோசமான அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்தால் சட்டம் ஒழுங்கு எல்லாம் சீரழிந்து எத்தனை அநியாயங்கள் நடக்கின்றன! நரேந்திரனுக்கு இயலாமையுடன் கூடிய கோபம் வந்ததை அவர் கவனித்துக் கனிவாகச் சொன்னார். “எனக்கு உங்கள் மனநிலை புரிகிறது. நானும் இந்த இயலாமையை உணர்ந்து வேதனைப்பட்டவன். என்ன செய்வது?...”

நரேந்திரன் கேட்டான். “அந்தச் சமயத்துல என் அப்பா சம்பந்தமாகவும், அஜீம் அகமது சம்பந்தமாகவும் ஏதாவது கூடுதல் தகவல்கள் கேள்விப்பட்டீர்களா? காலம் நிறைய கழிந்து விட்டது என்பதால் அதிகமாக நினைவுபடுத்திக் கொள்ள முடியாது என்று தெரியும். ஆனாலும் நினைவுக்கு வந்ததைச் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்….”

அவர் சொன்னார். “நான் விடுமுறை முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு உங்கள் ரா தலைவர் என்னிடம் போனில் பேசினார். அவரிடம் நான் அந்தச் சமயத்தில் விடுமுறையில் இருந்ததைச் சொன்னேன். அவர் விரிவான விசாரணை செய்ய ஒரு அதிகாரியை அனுப்பியும் வைத்தார். அந்த அதிகாரி எல்லாரையும் விசாரணை செய்து விட்டுத் தான் போனார். அவருடைய விசாரணை விவரங்கள் உங்கள் ரா-வில் இருக்குமே….”

நரேந்திரன் திகைத்தான். அவனுக்கு இது புதிய தகவல். அவன் தந்தையைப் பற்றி ரா பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வழக்கை சரிவர விசாரிக்காமல் பாதியில் அம்போ என்று விட்டு விட்டார்கள், ஃபைலை மூடி விட்டார்கள் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.  அதற்கு ஏற்ற மாதிரி இவர் சொல்லும் அந்த விசாரணை பற்றிய விவரங்கள் ரா வின் ஃபைலில் இருக்கவில்லையே.  

நரேந்திரன் கேட்டான். “அப்போது வந்த அதிகாரியின் பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?”

அவர் யோசித்து விட்டுச் சொன்னார். “இல்லையே..... ஆனால் அஜீம் அகமது வழக்கை உங்கள் தந்தையுடன் சேர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கும் அதிகாரி என்று ரா தலைவர் சொன்னதாக ஞாபகம்

சஞ்சய் ஷர்மா! இப்போது நரேந்திரனுக்கு மனதில் குழப்பிக் கொண்டிருந்த விஷயங்கள் மெல்லத் தெளிவாகின. மகேந்திரன் வரவில்லை என்றான பிறகு, உள்ளூர் போலீஸார் மீதும் சந்தேகம் வந்த பிறகு அப்போதைய ரா தலைவர் சஞ்சய் ஷர்மாவை விசாரிக்க அனுப்பி இருக்கிறார். சஞ்சய் ஷர்மா வந்து விசாரித்து விட்டுப் போயிருக்கிறான். ஆனால் விசாரணையில் தெரிந்த எதையும் அவன் ரா விற்குச் சரியாகத் தெரிவிக்கவில்லை. எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டிருக்க வேண்டும். அதன் பின் தான் அப்போதைய ரா தலைவருக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும். உடன் வேலை செய்த மேலதிகாரி விஷயத்திலேயே நம்பிக்கை துரோகம் அவன் செய்திருப்பது அவருக்கு எப்படியாவது தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவனை இனி ரா வில் வைத்திருக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார் அவர். தன் ராஜினாமாவைத் தரும் அளவுக்கு தீவிரமாக அவர் இருந்ததும், அப்போதைய பிரதமர் வளைந்து கொடுத்ததும் அவன் எதிரியின் ஆளாகச் செயல்பட்டிருக்கிறான் என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப் பட்டதால் தான் இருக்க வேண்டும்….

அவரிடம் நன்றி சொல்லி விட்டு நரேந்திரன் கிளம்பினான்.


ஞ்சய்  ஷர்மாவுக்குக் கை கால் முட்டிகள் எல்லாம் வலியெடுக்க ஆரம்பித்திருந்தன.  ஒவ்வொரு இரவும் குளிர் தாங்க முடியாமல் அடிக்கடி விழிப்பு வந்து விடுகிறது. ஒரு முறை விழிப்பு வந்து விட்டால் மறுபடியும் உறக்கம் வர குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகிறது.  நரேந்திரன் திரும்பி வரவேயில்லை. அதனால் அவன் மூலம் இந்த இடத்தைக் கண்டுபிடிக்க ஜனார்தன் த்ரிவேதியாலோ, அந்தத் தீவிரவாதிகளாலோ முடியாது. தினமும் தன் முயற்சியில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல அவன் அந்தத் தடியனிடம் ஏதேதோ சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு முறை பாய், ஒரு முறை போர்வை, ஒரு முறை கூடுதல் சப்பாத்திகள், ஒரு முறை விடுதலை என்று அவன் கேட்பதற்கெல்லாம் தடியன் அசைந்து கொடுப்பதாயில்லை.

இடையிடையே எல்லா உண்மைகளையும் கண்டிப்பாக நரேந்திரனிடம் சொல்லிவிடத் தயாராக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஒரே ஒரு தடவை நரேந்திரன் நேரில் வந்தால் அவனிடம் ரகசியமாய்ச் சொல்ல முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்றும் கூடச் சொல்லிப் பார்த்து விட்டான். அது தடியனின் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை.

கடைசியாக அவனைத் தப்பிக்க வைத்தால் பத்து லட்சம் வரை தருவதாகக்கூட சஞ்சய் சொல்லிப் பார்த்து விட்டான். அதற்காவது ஆசைப்படுகிறானா என்று பார்த்தால் தடியன் அதையும் கண்டுகொள்ளவில்லை. பத்திலிருந்து பதினைந்து சொல்லி இருபது வரை உயர்த்திப் பார்க்க வேண்டும் என்று இப்போது சஞ்சய் முடிவெடுத்திருக்கிறான். தடியனைப் பார்த்தால் பணக்காரனாய் தெரியவில்லை. அவன் உடைகள் எல்லாம் மிகச் சாதாரணமாகத் தான் இருந்தன. அதனால் சிறிய தொகைக்கு விலை போகாவிட்டாலும் பெருந்தொகைக்கு விலைபோகும் வாய்ப்பு இருக்கிறது.

அதிசயமாக சப்பாத்தி தரும் நேரமல்லாத மாலை ஏழு மணிக்கு தடியன் வந்தான். அவன் கையில் ஒரு பெரிய பக்கெட் இருந்தது. அதில் ஐஸ்கட்டிகள் நிறைந்திருந்தன.    அதைப் பார்த்த சஞ்சய் திகிலுடன் கேட்டான். “இது எதற்கு?”

நீ தானே குளிக்கணும்னு சொன்னாய். சார் ராத்திரி உன்னைக் குளிப்பாட்டச் சொல்லிட்டார்…  ஆனா ஒன்னு உடம்பைத் துவட்டிக்க துணி எதுவும் தர வேண்டாம். ட்ரஸ் எல்லாம் உடம்பு சூட்டுல தானா காய்ஞ்சுக்கும்னு சொல்லிட்டார்

சஞ்சயின் முகத்தில் பீதி உச்சத்தில் தெரிந்தது.  தடியன் எமதூதனாகத் தெரிந்தான்.  ”டேய் இதைச் சொல்லிப் பயமுறுத்தி தாண்டா அன்னைக்கு என் கிட்ட உண்மையைச் சொல்ல வெச்சீங்க. இப்ப என்னடா மறுபடியும்என்று பரிதாபமாக அவன் கேட்டான்.

நீ முக்கியமான உண்மை எதையும் இது வரைக்கும் சொல்லலையாம்”    
  
(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. You maintain the suspense very well. What happened 22 years ago at Manali? Will Sanjay sharma spill the beans? Going Interesting.

    ReplyDelete
  2. நரேந்திரனுக்கு சஞ்சய் பற்றிய கூடுதல் உண்மை தெரிந்து விட்டது... இனி சஞ்சயின் பாடு திண்டாட்டம் தான்... கொடுமைகள் இரட்டிப்பாகப் போகிறது...

    ReplyDelete