சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 1, 2021

யாரோ ஒருவன்? 21


ல்யாண் அவசர அவசரமாகக் கீழே இறங்கித் தந்தையின் அறைக்குப் போனான். இருட்டில் ஜன்னலருகே நின்றிருந்த அவர் தாழ்ந்த குரலில் சொன்னார். “அங்கே விளக்கு பத்த வெச்சு ஏதோ பூஜை நடக்கற மாதிரியிருக்கு.”

அவர் சொல்வதை மெய்ப்பிப்பது போல ஊதுபத்தி மணம் அந்த நள்ளிரவில் அங்கிருந்து வந்தது. ஜன்னல் வழியே மெல்லிய விளக்கொளியும் தெரிந்தது. பக்கத்து வீட்டு ஜன்னலில் கீழ்பாதி மூடியிருந்தது. மேல்பாதி மட்டும் தான் திறந்திருந்தது. இங்கிருந்து நின்றபடி பார்க்கையில் சரியாகப் பார்க்க முடியவில்லை என்பதால் வேலாயுதம் அவசரமாய் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு மகனை அதில் ஏறிப் பார்க்கச் சொல்லி சைகை காட்டினார்.

கல்யாண் அதில் ஏறிப் பார்த்தான். அந்த மேல்பாதி ஜன்னல் வழியே தெரிந்த அறையும் பாதி தான் தெரிந்தது. அதைத் தாண்டித் தெரிந்த ஹாலில் இருந்து வந்த விளக்கு வெளிச்சத்தில் அந்தப் பாதி அறையும் காலியாகத் தான் தெரிந்தது. ஹாலில் தெரிந்த வெளிச்சம் மின்விளக்கு ஒளியல்ல. தீப விளக்கொளி தான். திறந்திருந்த அறைக்கதவு வழியாகத் தெரிந்த அளவில் ஹாலில் ஒரு பகுதி தெரிந்தது. அங்கும் ஆட்கள் யாரும் தெரியவில்லை. சத்தம் எதாவது கேட்கிறதா என்று காதைக் கூர்மைப்படுத்தி கல்யாண் கேட்டான்இன்னதென்று அடையாளப்படுத்த முடியாத ஏதோ மெல்லிய ரீங்கார ஒலி கேட்பது போல் இருந்தது.

திடீரென்று ஒரு பெரிய பாம்பு ஹாலில் அந்தப் பகுதியைத் தாண்டிச் சென்றது. கல்யாண் தன்னையுமறியாமல் நாற்காலியில் இருந்து கீழே குதித்தான். அவன் இதயத் துடிப்புகள் சம்மட்டி அடிகளாக மாறின.

வேலாயுதம் மகனைக் கேட்டார். “என்ன ஆச்சு?”

கல்யாணுக்கு உடனடியாகப் பேச வரவில்லை. ஒரு நிமிடம் கழித்து மெல்லச் சொன்னான். “பாம்பு

வேலாயுதம் ஆவலுடன் கேட்டார். “எத்தனை பெரிய பாம்பு?”

கல்யாண் விவரிக்க வார்த்தை வராமல் இரண்டு கைகளையும் மிக அகலமாய் விரித்து அளவைக் காட்டினான்.

வேலாயுதம் அந்தச் சைகை பதிலில் திருப்தியடையாமல் தானே அந்த நாற்காலியில் கஷ்டப்பட்டு ஏற முயன்றார். கல்யாணுக்கு அந்த அதிர்ச்சி நிலைமையிலும் தந்தையின் குறையாத ஆர்வம் சிரிப்பை வரவழைத்தது. அவர் கீழே விழுந்து விட்டால் கஷ்டம் என்று எண்ணிய கல்யாண் அவரைத் தள்ளி நிறுத்தி விட்டு மறுபடி தானே நாற்காலியில் ஏறினான். ஆனால் அவன் ஏறிப்பார்த்த போது அறைக்கதவு சாத்தப்பட்டு விட்டிருந்தது. அதனால் அறையில் இருட்டு நிலவியதோடு ஹால் பகுதியும் தெரியவில்லை.   

கீழே இறங்கிய கல்யாண் தந்தையிடம் தான் கண்ட காட்சியை விளக்கினான். வேலாயுதம் கேட்டு விட்டுத் திகைப்புடன் சொன்னார். “பாம்போடு எப்படிடா இவங்களுக்கு அந்த வீட்டில் நிம்மதியாய் இருக்க முடியுது. அங்கே நீ அதைப் பாத்தேன்னு சொன்னதுக்கப்புறம் எனக்கு வழக்கமா வர்ற கொஞ்சம் தூக்கமும் இனி வருமான்னு தெரியலயே. ஏன்டா அந்தப் பாம்பு இடம் மாறி இங்கே வந்துடாது இல்லையா?”

கல்யாண் யோசனையுடன் சொன்னான். “எதுக்கும் ஜன்னலைச் சாத்தியே படுங்க.”

ஆனால் ஜன்னலைச் சாத்திப் படுத்தும் வேலாயுதத்திற்கு உறக்கம் சீக்கிரம் வர மறுத்தது. நேரம் கழித்து உறக்கம் வந்த போதும்  பாம்பு கனவாக வந்தது. அந்தக் கனவில் பக்கத்து வீடும் சேர்ந்து வந்தது. அவர் அந்தப் பக்கத்து வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் மெல்ல நுழைகிறார். நாகராஜனோ, சுதர்ஷனோ காணோம். ஒரு அறை மட்டும் பூட்டி இருக்கிறது. அந்த அறையின் ஜன்னல் மட்டும் திறந்திருக்கிறது. உள்ளே எட்டிப் பார்க்கிறார். உள்ளே நிறைய பாம்புகள் இருந்தன. அவர் பார்க்கப் பார்க்க ஒவ்வொரு பாம்பும் ரத்தினக்கல்களை உமிழ்கின்றன. எல்லாக் கல்களும் சேர்ந்தாற்போல் ஒளிவீசுகின்றன…. அந்தப் பேரொளியைப் பார்க்க முடியாமல் அவர் கண்கள் கூசுகின்றன. கண்களைக் கசக்கிக் கொண்ட போது விழிப்பு வந்து விட்டது. அந்த நேரத்தில் பக்கத்து வீட்டிலிருந்து பாம்பு சீறும் சத்தம் லேசாகக் கேட்டது.  

எழுந்து படுக்கையில் அமர்ந்தவர் கடிகாரத்தைப் பார்த்தார். மணி மூன்று. வேகமாக எழுந்து போய் சத்தமில்லாமல் ஜன்னலைத் திறந்தார். உண்மையாகவே பக்கத்து வீட்டின் ஜன்னலில் மின்னல் போல பச்சையும், நீலமுமாய் கலந்த பேரொளி ஒன்று தோன்றியது. அவர் நாற்காலியை மறுபடி இழுத்துப் போட்ட போது பக்கத்து வீட்டில் அந்த அறைக் கதவைச் சாத்தும் சத்தம் மெல்லக் கேட்டது. அந்த ஒளி மறைந்து விட்டது. நாற்காலியில் ஏறிப் பார்த்த போது பக்கத்து வீட்டின் அந்த அறையில் இருட்டைத் தான் பார்க்க முடிந்தது. சற்று முன் பார்த்த அந்தப் பேரொளியும் அதற்கு முன் கண்ட கனவையும் எண்ணிப் பார்த்த போது அவர்  உடல் ஏனோ சிலிர்த்தது. என்ன நடக்கிறது பக்கத்து வீட்டில் என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் மண்டை வெடித்து விடும் போல் தோன்றியது.

அவர் ஆறு மணி வரை படுக்கையில் பல யோசனைகளுடன் புரண்டு கொண்டிருந்து விட்டு எழுந்தார். அவர் வாசற்கதவைத் திறந்து வெளியே வந்த போது அவரைப் பார்த்து விட்டு கூர்க்கா வாட்ச்மேன் ஓடி வந்தான். அவன் கையில் ஒரு உறை இருந்தது. “ஐயா போஸ்ட் பாக்ஸ்ல யாரோ போட்டுட்டுப் போயிருக்காங்க. இப்ப தான் கவனிச்சேன்என்றான்.

வேலாயுதம் சுவாரசியம் இல்லாமல் அதை வாங்கினார். பக்கத்து வீட்டு விஷயங்களைத் தவிர வேறெதுவும் அவருக்கு இப்போது முக்கியமாகப் படுவதில்லை…. அந்த உறையின் மீது கல்யாண் என்று எழுதியிருந்தது. தபால்தலையோ, தபால் முத்திரையோ இல்லை. உறையில் விலாசமும் இல்லை

பின்னாலிருந்து கல்யாணின் குரல் கேட்டது. ”என்ன கவர் அது?”

வேலாயுதம் எதுவும் சொல்லாமல் அந்த உறையை அவனிடம் நீட்டினார்.  அவன் அதை வாங்கிப் பார்த்தான். திரு, ஸ்ரீ அல்லது மிஸ்டர் என்ற எந்த மரியாதையும் இல்லாமல் வெறுமனே கல்யாண் என்று எழுதியிருந்ததைப் பார்த்து அவன் முகம் சுளித்தான். மரியாதை தெரியாத மனிதர்கள்.

வேலாயுதம் சொன்னார். “ஏதாவது கோயில் திருவிழா நோட்டீஸாய் இருக்கும். அதை விடு. நேத்து ராத்திரி எனக்கு வந்த கனவையும், பிறகு நான் பார்த்ததையும் கேளு

கல்யாண் வாட்ச்மேனைப் பார்த்து நீ போகலாம் என்ற பாவனையோடு தலையசைத்தான்.  வாட்ச்மேன் போன பிறகு தந்தையைப் பார்த்தான். அவர் பரபரப்புடன் கனவில் பார்த்ததையும் பின் நிஜத்தில் பார்த்ததையும் சொன்னார். கல்யாணும் திகைத்தான். கனவில் கண்டதையே சில நிமிடங்களில் நிஜத்திலும் அவரால் பார்க்க முடிந்தது அபூர்வமான தற்செயல் தானா? இல்லை சதா அவர் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் இப்படிக் கனவு கண்டிருக்கிறாரா?

யோசித்தபடியே கல்யாண் அந்த உறையைப் பிரித்தான். உள்ளே ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஏதோ எழுதியிருந்தது. அப்பா சொன்னது போல இது கோயில் திருவிழா நோட்டீஸ் அல்ல. மரியாதையில்லாமல் வெறுமனே கல்யாண் என்று எழுதி இருக்கும் அதிகப்பிரசங்கி யார் என்றறிந்து கொள்ள அந்த காகிதத்தில் எழுதி இருந்ததை அவன் படித்தான்

அன்றைய அந்த மரணம் இயற்கை அல்ல. அந்த ஆத்மா உன்னைத் தேடி வந்திருக்கிறது.”

கல்யாண் முகம் திடீரென்று வெளுத்ததைப் பார்த்து திகைத்த வேலாயுதம்என்னடா?” என்று கேட்டார்.

அவன் சுதாரிக்க இரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டன. பின் அவன் அந்தக் காகிதத்தை மெள்ள நீட்டினான். அவர் அதை வாங்கிப் படித்தார். அவரும் அதிர்ந்து போனார்.  தந்தையும் மகனும் பார்த்துக் கொண்டார்கள்.

சிறிது நேரம் கழித்து வேலாயுதம் மெல்லச் சொன்னார். “மொட்டையா தான் சொல்லியிருக்கு. எப்படி வேணும்னாலும் இதை எடுத்துக்கற மாதிரி எவனோ ஒரு அதிகப்பிரசங்கி எழுதியிருக்கான்….”

இருவரும் வாட்ச்மேனை அழைத்து விசாரித்தார்கள். அரை மணி நேரத்திற்கு முன்பு தான் திடீரென்று தபால் பெட்டியில் ஏதோ ஒரு உறை எட்டிப்பார்த்ததைக் கவனித்ததாக அவன் சொன்னான். அதிகாலையில் யாரோ தபால் பெட்டியில் போட்டு விட்டுப் போயிருக்க வேண்டும். வேலாயுதம் சொன்னது போல எந்த மரணம், யாருடைய மரணம், என்றைய மரணம் என்ற தகவல்கள் எல்லாம் இல்லாமல் மொட்டையாகத் தான் எழுதியிருக்கிறதுஅதனால் அது பெரிய விஷயமில்லை தான் என்றாலும் அந்த ஆத்மா தேடி வந்திருக்கிறது என்ற வாக்கியத்தை கல்யாண் ரசிக்கவில்லை.


(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Thrilling. Whose athma it is? Mahendran or Madhavan? Who has written the anonymous letter? Eagerly waiting to know.

    ReplyDelete
  2. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் ப்ளாக் ஹோல் பப்ளிஷிங் அரங்கம் அமைக்கவில்லையா. அது பற்றிய தகவல் எதுவும் தாங்கள் இன்னும் இங்கே தரவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை பதிப்பாளர் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளவில்லை.

      Delete
  3. மணாலியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் அனைவரும் சம்பந்தப்ட்டிருக்கிறார்கள் போல.... பயங்கர மர்மமாக உள்ளது...தொடர் அருமை👌👌👌

    ReplyDelete