சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 8, 2021

யாரோ ஒருவன்? 22


ரத் அதிகாலை நடைப்பயிற்சியை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தான். கல்யாணின் வீட்டைக் கடக்கையில் அந்தப் பக்கத்து வீட்டை அவன் ஆர்வத்துடன் கவனித்தான். கல்யாண் அவனிடம் பக்கத்து வீட்டில் நாகசக்திகள் படைத்த நாகராஜ் என்ற ஆள் வந்திருக்கிறான், தினமும் இரவில் அவன் வீட்டில் பாம்புகள் சீறும் சத்தம் கேட்கிறது, அவன் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் சந்திக்க ஐந்து லட்சம் ரூபாய் வாங்குகிறான் என்ற தகவல்களைச் சொல்லியிருந்தான். அதனால் சரத்துக்கு ஒரு முறை நாகராஜைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கிளம்பியிருந்தது. ஆனால் நாகராஜோ அவன் வேலையாளோ வீட்டுக்கு வெளியே தென்படவில்லை. கல்யாண் வீட்டு வாட்ச்மேன் அவனைப் பார்த்து சல்யூட் அடித்தான்.  அவனைப் பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்து விட்டு நடையைத்  தொடர்ந்த சரத் பதினைந்து நிமிடங்களில் தன் வீட்டை அடைந்தான்.

வீட்டின் வெளி கேட்டில் இருந்த தபால் பெட்டியில் ஒரு உறை பாதி வெளியே எட்டிப் பார்த்தது. காலையில் கிளம்பும் போது அந்த உறை இருக்கவில்லை என்பது நிச்சயம். ஏனென்றால் சரத் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது அந்தப் பெட்டியைப் பார்த்திருந்தான். ஏதாவது விளம்பரமாகத் தான் இருக்க வேண்டும்.... என்று எண்ணியபடி அலட்சியமாக உறையை எடுத்துப் பார்த்தான். உறையில் அவன் பெயர் எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியத்துடன் உறையைத் திறந்து பார்த்தான்உள்ளே எதோ ஒரு வெள்ளைக் காகிதம் இருந்தது. அதை எடுத்துப் பிரித்தான். அதில் எழுதப்பட்டிருந்த்து.      

அன்றைய அந்த மரணம் இயற்கை அல்ல. அந்த ஆத்மா உன்னைத் தேடி வந்திருக்கிறது.”

படித்தவுடன் சரத் அப்படியே நின்று விட்டான். அவன் கைகள் லேசாக நடுங்கின. இதயம் வேகமாகப் படபடத்ததுஉடலெல்லாம் வியர்த்தது.

போர்ட்டிகோவில் சிலை போல நிற்கும் கணவனை ஜன்னல் வழியாகக் கவனித்த ரஞ்சனி பயந்து போனாள். “என்ன ஆச்சு இவருக்குஎன்று முணுமுணுத்தபடி வேகமாய் வெளியே வந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவசர அவசரமாக அந்தக் காகிதத்தை மடித்து, கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்ட சரத் அவளைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றான். புன்னகை வரவில்லை. மனைவியை அவன் வெறித்த பார்வை பார்த்தான்.

ரஞ்சனி திகைப்புடன் கேட்டாள். “என்ன ஆச்சு?”

சரத் கஷ்டப்பட்டுச் சொன்னான். “ஒன்னுமில்லையே

அந்தப் பேப்பர்ல இருக்கறதைப் படிச்சுட்டு அப்படியே அதிர்ந்து போய் நின்ன மாதிரி இருந்துச்சு. அதனால தான் பயந்து போய்க் கேட்டேன்

அது ஒரு பொருட்காட்சி விளம்பரம். அதைப் பார்க்கறப்ப தான் நேத்தே செஞ்சு முடிக்க வேண்டியிருந்த ஒரு முக்கியமான வேலை ஞாபகத்துக்கு வந்துச்சு. அதனால அப்படியே நின்னேன்….” நல்ல வேளையாக பொய் சரளமாய் வந்தது.

அவள் நிம்மதியடைந்து உள்ளே போனாள். பின்னாலேயே வீட்டுக்குள் நுழைந்த சரத் கேட்டான். “தீபக் எழுந்திருக்கலயா?”

ரெண்டு தடவை கூப்பிட்டாச்சு. அஞ்சு நிமிஷம்மா, அஞ்சு நிமிஷம்மான்னு சொல்லிட்டே தூங்கறான். நீங்களே எழுப்புங்க. ராத்திரி எல்லாம் முழிச்சுட்டு நெட்ல எதையோ பாத்துட்டிருக்க வேண்டியது. காலைல எழுந்திருக்க அவ்வளவு கஷ்டம்….” என்று சொல்லிக் கொண்டே அவள் சமையலறைக்குப் போக சரத், மனதில் உறுத்திய அந்தக் கடிதத்தை எண்ணியபடியே சோபாவில் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தான்.

அந்தக் கடிதத்தில் குறிப்பாக யார், என்ன என்றெல்லாம் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக ஏதோ ஒரு கிறுக்கன் எழுதிப் போட்டிருக்கிறான். அவ்வளவு தான். ஆனால் உறையில் அவன் பெயரிட்டுப் போட்டிருப்பது தான் நெருடலாக இருந்தது.   ’அந்த ஆத்மா உன்னைத் தேடி வந்திருக்கிறதுஎன்று வேறு எழுதியிருக்கிறான். யார் அந்த விஷமி?

தீபக்கை எழுப்பினீங்களா? நேரமாச்சுஎன்று சமையலறையிலிருந்து ரஞ்சனி சத்தமாகச் சொன்னாள்.

சரத் எழுந்து மகன் அறைக்குப் போனான். தீபக் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். “தீபக் எழுந்திருடா. நேரமாச்சு

தீபக் ஏதோ அரற்றினான். சரத் அவனை உலுக்கி எழுப்பினான். “டேய் காலேஜுக்குப் போக நேரமாச்சு

தீபக் எழுந்து உட்கார்ந்தான். “நல்ல வேளை எழுப்பினீங்க.” என்று கண்களைக் கைகளால் தேய்த்துக் கொண்டே சொன்னான்.

ஏன், என்னாச்சு?”

கனவுல யாரோ கிணத்துக்குள்ள இருந்துநான் இயற்கையா சாகலை. என்னைக் கொன்னுட்டாங்கன்னு சொல்ற மாதிரி கேட்குது. சுத்தி முத்திப் பார்த்தா யாருமே இல்லை. ஆனா மெல்லமா அந்தச் சத்தம் கேட்டுகிட்டே இருக்கு. என்னடா இதுன்னு ஒரே பேஜாரா போச்சு. நல்ல வேளையா நீங்க கூப்பிட்டீங்க

சரத் அப்படியே கட்டிலில் உட்கார்ந்து விட்டான். இதயம் வெடித்து விடும் போல வேகமாகத் துடித்தது. நல்ல வேளையாக தீபக் எழுந்து பாத்ரூம் போய் விட்டதால் அவனைப் பார்க்கவில்லை. சரத்துக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அந்த மொட்டைக் கடிதமாவது யாரோ ஒரு விஷமி எதையோ அரைகுறையாகக் கேள்விப்பட்டு எழுதியது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தீபக்கின் கனவில் இந்த மாதிரி அதுவும் இதே சமயத்தில் வருகிறதென்றால்….

சரத் கஷ்டப்பட்டு எழுந்து ஹாலுக்குப் போய் தினசரிப் பத்திரிக்கையைப் பிரித்தபடி சோபாவில் அமர்ந்தான். மனதில் பத்திரிக்கைச் செய்தி எதுவும் பதியவில்லை. அந்தக் கடிதமும், தீபக் கனவைப் பற்றிச் சொன்னதுமே மனதில் மாறி மாறி வந்தது. சிறிது நேரம் கழித்து சமையலறையில் தீபக் தாயிடம் அந்தக் கனவை விவரித்துக் கொண்டிருப்பது கேட்டது.  அவன் அவளிடம் சொல்வதைக் கேட்கையில் மாரடைப்பே வந்துவிடும் போல் சரத் உணர்ந்தான்.

ரஞ்சனி சொன்னாள். “ராத்திரியெல்லாம் துப்பறியும் சீரியல்கள் பாத்துட்டு இருந்தால் அப்படித்தான் கனவு வரும். ஒன்னா பாம்பு வீடியோவா பார்க்கறே. இல்லாட்டி திகில் சீரியல், படமா பார்க்கிறே. ரெண்டுமே ராத்திரி பார்க்கறது நல்லதல்ல….”

சும்மா சொல்லாதம்மா. நான் எத்தனை வருஷமா அதையெல்லாம் பார்க்கறேன். இத்தனை நாளா அந்த மாதிரி கனவு வந்துதா. இன்னைக்குத் தானே வந்திருக்கு….   நான் மட்டும் டாக்டருக்குப் படிக்காமல் இருந்திருந்தா ஒரு துப்பறியும் நிபுணராவோ, பாம்பு ஆராய்ச்சியாளனாவோ மாறியிருப்பேன். அது டாக்டராகறதை விட த்ரில்லிங்கா இருந்திருக்கும் என்னம்மா சொல்றே

ரஞ்சனி மகனைத் திட்டினாள். “சீக்கிரம் குளிச்சு சாப்பிட வாடா. காலேஜுக்கு நேரமாச்சுடா…”

நல்ல வேளையாக தீபக் குளித்து விட்டுச் சாப்பிட வந்த போது பழைய பேச்சே தொடரவில்லை. அவனுடைய கல்லூரி நண்பர்கள் பற்றி பேச்சு வந்தது. சரத்தும் தொடர்ந்து அது சம்பந்தமான கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தான். தப்பித் தவறிப் பேச்சு அந்தக் கனவுப்பக்கம் திரும்பி விடாமல் பார்த்துக் கொண்ட அவன் சாப்பிட்டு முடித்தவுடன் அவசரமாக வேலைக்குக் கிளம்பினான். காரில் செல்லும் போதும் மனமெல்லாம் பழைய நினைவுகளே நிறைந்திருந்தன. எதையெல்லாம் அவன் நினைக்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அதெல்லாம் படையெடுத்துக் கிளம்பி வந்தன. அந்த நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே போவது போல் காரில் தன்னையறியாமல் வேகமாகப் போனான். ஆனால் மனோவேகத்துக்குக் கார் வேகம் போதவில்லை….  

சரத் தன் நண்பன் கல்யாணின் கம்பெனியில் தான் ஜெனரல் மானேஜராக இருந்தான். அவன் கம்பெனி கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திய போது கல்யாணின் கார் முன்பே வந்திருப்பதைக் கவனித்தான். கல்யாண் சீக்கிரம் வந்திருப்பது நல்லதாயிற்று

கம்பெனிக்குள் நுழைந்தவன் கல்யாணின் செகரட்டரியிடம் கேட்டான். “சார் கிட்ட யாராவது பேசிகிட்டிருக்காங்களா?”

இல்லை சார்…”

மானேஜிங் டைரக்டர் என்று தங்க எழுத்துக்களில் எழுந்தியிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு சரத் நண்பனின் அறைக்குள் நுழைந்தான். “குட்மார்னிங்என்று சொல்லி அவன் எதிரே உட்கார்ந்தவன் சட்டைப்பையிலிருந்து அந்த வெள்ளைத் தாளை எடுத்தான்.

கல்யாண் திகைப்புடன் அதை வாங்கிப் படித்து விட்டு மவுனமாகத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்ட சரத் கண்கள் விரிய அதை வாங்கிப் படித்தான். இரண்டிலும் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் ஒன்றாகவே இருந்தன. கையெழுத்தும் கூடத் தான்.

எங்க வீட்டில் இது மட்டுமல்ல. தீபக்குக்கு இன்னைக்குக் காலைல ஒரு கனவும் வந்திருக்கு…” என்று ஆரம்பித்து அந்தக் கனவையும் சரத் சொன்ன போது கல்யாண் ஒருவித அமானுஷ்யத்தை உணர்ந்தான். கடிதத்தை எழுதியது எவனோ அதிகப்பிரசங்கி என்று சொல்லலாம். ஆனால் கனவும் அந்த வகையிலேயே வருவதை எப்படி விளக்க  முடியும்?

                                                     


(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Mystery is deepening. I doubt that both are killers. Somebody is a witness. Now he is blackmailing him. But as Kalyan doubts how can we explain the dream? Waiting for next Monday.

    ReplyDelete
  2. ஏதோ ஒரு சம்பவத்தை சுற்றியே அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது.... ஆனால் அது "என்ன சம்பவம்..?" என்று கணிக்கக் கூட முடியவில்லை.... செம்ம திரிலிங் ஐயா...👌👌👌

    ReplyDelete