ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 20
அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து நிரந்தரமாகத் தங்கி தியோசபிகல் சொசைட்டி மூலமாக ஆன்மிகப் பணிகளை முழுமும்முரமாகச் செய்ய ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் தீர்மானித்து இந்தியாவுக்குப் பயணித்தார்கள். வரும் வழியில் இங்கிலாந்தில் திருமதி பில்லிங் என்பவர் வீட்டில் சில நாட்கள் தங்கினார்கள். அங்கும் ஒரு நாள் கர்னல் ஓல்காட் ஒரு மகாத்மாவைத் தரிசித்தார். அதிகாலையில் கர்னல் ஓல்காட் வேறு இரண்டு நண்பர்களுடன் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது கடும் பனிமூட்டத்திற்கிடையே ஒரு கணம் இந்தியாவைச் சேர்ந்த அந்த மகாத்மாவின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது. ஆன்மிகத்தில் உச்ச உயர்வு நிலை அடைந்தவர்களுக்கே வாய்க்கக்கூடிய தேஜஸ் அந்த மகாத்மாவை அவருக்குக் காட்டிக் கொடுத்தது. கர்னல் ஓல்காட் சூரியனுக்கு ஒருவிதமான தேஜஸ், சந்திரனுக்கு ஒருவிதமான தேஜஸ், ஞானிகளுக்கு ஒருவிதமான தேஜஸ் என்று சிலிர்ப்புடன் நினைத்துக் கொண்டார். (தேஜஸையும், ஆடம்பரமில்லாத எளிமையையும் வைத்தே ஞானிகளை அடையாளம் காண்பது அக்காலமாக இருந்தது. இன்று வெளிப்புற அடையாளங்கள், விளம்பரங்களை வைத்தே ஞானிகளாகச் சிலரை எண்ணும் எதிர்மாறான அவலநிலை இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயமே)
கர்னல் ஓல்காட் வீடு போய்ச் சேர்ந்த போது திருமதி பில்லிங் அவர் மகாத்மா ஒருவரைச் சந்தித்தது உண்மையா என்று கேட்டார். கர்னல் ஓல்காட் “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்ட போது திருமதி பில்லிங் பரபரப்புடன் தெரிவித்தது கர்னல் ஓல்காட்டை வியப்பில் ஆழ்த்தியது.
திருமதி பில்லிங் சொன்னார். “திடீரென்று வீட்டுக்குள்ளே ஒரு கம்பீரமான, உயரமான இந்தியர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து நான் திடுக்கிட்டேன். காரணம் நான் முன்கதவைப் பூட்டியிருந்தேன். பார்த்த போதும் அது பூட்டப்பட்டே இருந்தது. இவர் எப்படி உள்ளே வந்தார் என்று நான் திகைப்புடன் எனக்குள்ளே கேட்டுக் கொண்டிருந்த போது அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைப் பார்க்க வந்ததாகச் சொன்னார். நான் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் இருந்த அறைக்கு அவரை அழைத்துப் போனேன். அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் உங்களைத் தெருவில் பார்த்ததைச் சொன்னார். பின் அவர்கள் இருவரும் எனக்குப் புரியாத மொழியில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று முன் தான் போனார்”
பூட்டிய வீட்டுக்குள் அந்த மகாத்மா எப்படி வந்தார் என்பது திருமதி பில்லிங்கின் வியப்பாக இருந்தால், கர்னல் ஓல்காட்டுக்கு அவர் வருவதற்குள் அந்த மகாத்மா அந்த வீட்டுக்கு வந்திருந்து, சிறிது நேரம் பேசியிருந்து விட்டுச் சென்றுமிருப்பது அதிக வியப்பாக இருந்தது. காரணம் அவர் அந்த மகாத்மாவைத் தெருவில் பார்த்த பிறகு நேராக வீட்டுக்குத் தான் வந்திருக்கிறார். அவர் வர முடிந்த கால அளவுக்குள் இத்தனை வேலைகளை அந்த மகாத்மா முடித்திருப்பது ஆச்சரியமேயல்லவா? அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் பேசிய போது திருமதி பில்லிங் சொன்னதை உறுதிப்படுத்திய அம்மையார் இந்தியாவில் ஆற்ற வேண்டிய ஆன்மிகப் பணிகள் விஷயமாகத் தான் அந்த மகாத்மாவிடம் பேசிக் கொண்டிருந்ததாகச் சொன்னார்.
ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைச் சந்திக்க வந்த இரு நண்பர்களிடம் இது போன்ற அற்புதங்கள் குறித்து கர்னல் ஓல்காட் வியப்புடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அற்புத சக்திகள் ஒரு உயர் நிலையை அடைந்து விட்டவர்களுக்குச் சாத்தியமே என்று சொன்னது மட்டுமல்லாமல் ஒருவர் ஒரே சமயத்தில் விதவிதமாகத் தோற்றமளிக்க முடிவதும் சாத்தியமே என்றும் சொல்லி விட்டு அவர் கைகளை அவர்களுக்குக் காட்டினார். அவருடைய ஒரு கை இயற்கையான தோற்றத்திலேயே இருந்தது. அவருடைய இன்னொரு கையோ நீண்டு ஒரு ஆணின் உரமேறிய கையாகத் தோற்றமளித்தது. திகைப்புடன் அனைவரும் அவரைப் பார்த்த போது அவருடைய புருவங்களும் தலைமுடியும் கூட வழக்கமான நிறத்தை விடக் கூடுதல் கருப்பாக மாறி இருந்ததைக் கண்டு திகைத்தார்கள். இது மாயையே என்று கர்னல் ஓல்காட் உணர்ந்த போதிலும் எண்ணிய சமயத்தில் அந்த மாயையை ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு எப்படி நிகழ்த்த முடிகிறது என்பது விளங்கவில்லை.
அவர்கள் அங்கிருந்து கிளம்பி சில நாட்களில் மும்பை வந்து சேர்ந்தார்கள். அங்கு தங்க இடம் பார்ப்பது முதல் பல உதவிகள் செய்து தர ஹரிசந்த் என்ற இந்தியர் அவர்களுக்குக் கிடைத்தார். மும்பையில் அவர்கள் தங்கி இருந்த போது அவர்களைக் காண வந்த ஒரு ஆங்கில நண்பர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தார். என்ன தான் பலர் மூலம் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் செய்து காட்டிய அற்புதங்களைக் கேள்விப்பட்டிருந்தாலும் கூட அதில் எத்தனை முன்னமே ஏற்பாடு செய்து அரங்கேற்றப்பட்டவையாக இருக்கும் எத்தனை நிஜமாக இருக்கும் என்ற சந்தேகம் அவருக்கு இருந்து கொண்டிருந்தது.
அதனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சிறிதும் எதிர்பார்த்திராத ஏதாவது ஒரு கோரிக்கை விடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருந்தார்.
அது அவர் அங்கு வந்து அவர்களுடன் பேசிய பேச்சிலேயே தெரிந்தது. அதைப் புரிந்து கொண்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவரிடம் உங்களுக்கு என்ன செய்து காட்டினால் அற்புதசக்திகளை நம்புவீர்கள் என்று கேட்டார். வித்தியாசமாக எதாவது கேட்க வேண்டும் என்று யோசித்த அந்த ஆங்கிலேயர் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கையில் இருந்த கைக்குட்டையை வாங்கிப் பார்த்தார். கைக்குட்டையின் ஓரத்தில் ’ஹெலனா’ என்று அம்மையாரின் பெயர் எம்ப்ராய்டரி செய்யப் பட்டிருந்தது.
“இந்தப் பெயருக்குப் பதிலாக வேறு ஒரு பெயரை இந்தக் கைக்குட்டையில் வரவழைக்க வேண்டும்” என்று அந்த ஆங்கிலேயர் கேட்டுக் கொண்டார்.
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவரிடம் புன்னகையுடன் கேட்டார். “யார் பெயரை வரவழைக்க வேண்டும்?”
அந்த ஆங்கிலேயர் சற்று யோசித்தார். தன்னுடைய பெயரைச் சொல்வோம் என்று எண்ணி இந்த அம்மையார் கேட்கிறாரோ, அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து வைத்திருப்பாரோ என்ற சந்தேகமும் அவர் மனதில் ஏற்பட்டிருக்க வேண்டும். அவர் சுற்றிலும் பார்த்தார். இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஹரிசந்தைப் பார்த்து விட்டு “அந்தக் கைக்குட்டையில் ஹரிச்சந்த் பெயரை வரவழையுங்கள்” என்றார்.
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சம்மதித்தார். கைக்குட்டையின் ஒரு நுனியை அந்த ஆங்கிலேயரை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். இன்னொரு நுனியை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பிடித்துக் கொண்டார். ஒரு நிமிடம் கழித்து அந்த நுனியை விட்ட அம்மையார் அந்தக் கைக்குட்டையைப் பார்க்கச் சொன்னார். அந்தக் கைக்குட்டையில் ஹெலனா என்ற பெயர் மறைந்து ஹரிச்சந்த் பெயர் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தது. அந்த ஆங்கிலேயர் அடைந்த பிரமிப்புக்கு அளவே இல்லை. அவர் ”அற்புதம். அற்புதம். இதற்கு விஞ்ஞானத்தில் என்ன பதில் இருக்க முடியும்” என்று கூவினார்.
தொடர்ந்த நாட்களில் அவர்கள் செலவுக்கணக்கைச் சரிபார்த்த போது ஹரிச்சந்த் அவர்களைப் பல வகைகளில் ஏமாற்றி இருப்பது தெரிந்தது. பின் கோபம் அடைந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கடுமையாகத் திட்டி மிரட்டிய பிறகே அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முடிந்தது. சத்தியத்திற்குப் பெயர் போன ஹரிச்சந்திரன் பெயரை வைத்திருந்த அந்த நபர் அப்படி ஏமாற்றியதும், அபூர்வ சக்திகள் பெற்றிருந்த போதிலும் சந்தேகப்படாததால் அதை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாமல் போனதும் வேடிக்கை முரணாக கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது.
ஏமாற்றிய பணத்தைத் திரும்பக் கொடுக்க நேர்ந்ததால் கோபம் கொண்ட ஹரிச்சந்த் அவர்களைப் பற்றி பல அவதூறுகளைப் பரப்ப ஆரம்பித்தான். அதன் பிறகு ரஷ்யரான ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வெளிநாட்டு ஒற்றராக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் அப்போதைய ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட ஆரம்பித்தது. அரசுக் காவலர்கள் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மற்றும் கர்னல் ஓல்காட்டின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள். அதெல்லாம் அவர்களைச் சந்திக்க வந்த சிலரைப் பின்வாங்க வைத்தாலும் மற்ற ஆன்மிக ஆர்வலர்களைத் தடை செய்யவில்லை. அவர்கள் உற்சாகத்துடன் இருவரையும் வந்து சந்தித்தார்கள். அந்தச் சமயத்தில் தான் பலரை அசத்திய ஒரு அமானுஷ்ய சம்பவம் அங்கே நடந்தேறியது. அதை அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி : தினத்தந்தி 20.08.2019
அருமையாக உள்ளது... எப்போது அடுத்த வாரம் வரும்? என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
ReplyDelete