சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 19, 2020

யாரோ ஒருவன்? – 2

ந்த அதிகாலை நேரத்திலும் கருப்புக் கண்ணாடியை அணிந்திருந்த ஆள், இரண்டாவது முறையாகத் தன் காரை அந்தப் பழைய வீட்டின் முன் நிறுத்தினான். அந்த வரிசையிலேயே முன்னால் நிறைய இடம் விட்டுப் பின்பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறிய வீடு அது ஒன்று தான். முன்னால் இருந்த காலி இடத்தில் ஒரு பழைய கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருந்ததுஅரை மணி நேரத்திற்கு முன் அவன் வந்து பார்த்த போது அந்தக் கயிற்றுக் கட்டிலில் முதியவர் பரந்தாமன் உறங்கிக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக அவர் இப்போது எழுந்து உள்ளே போயிருந்தார். வீட்டு வாசலில் ஒரு பெரிய கோலம் போடப்பட்டிருந்தது.   

அதைப் பார்த்து நிம்மதியடைந்த அவன் காரிலிருந்து ஒரு பழப்பையோடு இறங்கி வீட்டு வெளிகேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனான். அப்போதும் அவன் தன் கருப்புக் கண்ணாடியைக் கழட்டவில்லை. கேட் திறக்கப்படும் சத்தம் கேட்டு அலமேலு வெளியே வந்து பார்த்தாள். தலைக்குக் குளித்து, தும்பைப் பூவாய் நரைத்த கூந்தலுக்கு முடிச்சுப் போட்டிருந்தாள். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு இருந்தது.

அவன் அவளைப் பார்த்தவுடனேஹாய் ஆண்ட்டி. என்னை அடையாளம் தெரியுதா?” என்றான். அவன் குரல் கனத்து கம்பீரமாய் இருந்தது. அலமேலுவுக்கு அவனை அடையாளம் தெரியவில்லைகுரலும் அவளுக்குப் பரிச்சயமானதல்ல.

நான் மாதவனோட நண்பன் நாகராஜ், ஆண்ட்டி

சாதாரணமாக அலமேலு ஒரு முறை பார்த்துப் பேசிய ஆட்களை மறப்பதில்லை. ஆனால் இந்த நாகராஜை அவளால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.  இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போயிருந்த அவள் மகன் மாதவனின் இறந்த நாள் இன்று.  இந்த நாளில் அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு வந்திருக்கும் இந்த ஆளை நினைவுக்கு வரவில்லை என்று சொல்ல முடியாமல்…. ஞாபகம் இருக்குவாப்பாஎன்றாள்.

சாரி ஆண்ட்டி. இந்த அதிகாலை நேரத்துல வந்து தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்…. ஒரு அவசர வேலையா சத்தியமங்கலம் வந்தேன். கொஞ்ச நேரத்துல கோயமுத்தூர் கிளம்பணும். அதுக்குள்ள அப்படியே உங்களையும் அங்கிளையும் பார்த்துட்டு போலாம்னு நினைச்சேன். அங்கிள் இல்லையா ஆண்ட்டி?…”

அவள் பதில் சொல்வதற்குள் பரந்தாமன் வெளியே வந்தார். முதுமை அவர் உடலிலும் அழுத்தமாகத் தெரிந்தது. “யார் நீங்க?” என்று அவர் அவனைக் கேட்டார்.

அவன் சொன்னான். “மாதவன் நண்பன் நாகராஜ்…. அங்கிள்

அலமேலு கணவருக்காவது அவனை நினைவு வருகிறதா என்று அவரைப் பார்த்தாள். அவருக்கும் நினைவு வரவில்லை என்பது பார்க்கும் போதே தெரிந்தது. அவன் சொன்னான். “நான் கருப்புக் கண்ணாடி போட்டுருக்கறதால ஞாபகம் வரலைன்னு நினைக்கிறேன். எனக்குக் கண் ஆபரேஷன் ஆகி ரெண்டு நாள் தான் ஆச்சு. டாக்டர் மூணு நாளைக்கு இந்தக் கருப்புக் கண்ணாடியைக் கழட்டக்கூடாதுன்னு சொன்னதால தான் போட்டுருக்கேன்….”

வாங்க தம்பிஉள்ளே வாங்கஎன்றார். மகன் இறந்த நாளில் அவன் நண்பன் என்று சொல்லி வந்தவனை வெளியிலேயே நிறுத்திப் பேசுவது சரியல்ல என்று அவருக்குத் தோன்றியது.

உள்ளே நுழைந்த நாகராஜ் பழப்பையை அவரிடம் நீட்டஇதெல்லாம் என்னத்துக்குத் தம்பி…” என்றபடியே வாங்கிக் கொண்ட பரந்தாமன் அவனை உட்காரச் சொன்னார். அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் அவன் உட்கார்ந்தவுடன் கேட்டார். ”கண் ஆபரேஷன் எங்கே தம்பி பண்ணிகிட்டீங்க?”

கோயமுத்தூர் அரவிந்த் ஆஸ்பத்திரில….”

நீங்க இருக்கறதே கோயமுத்தூர் தானா?”

இல்லை டெல்லில . காலேஜ் முடிஞ்சவுடனேயே டெல்லி போனவன் அங்கேயே செட்டில் ஆயிட்டேன். போன வாரம் தான் கோயமுத்தூர் வந்தேன்.. சத்தி வந்தால் பழைய ஆளுக யாருமே இல்லை. நல்ல வேளையா நீங்களாவது இங்கேயே இருக்கீங்க…”

மத்தவங்க குழந்தைகளோட வேலை தொழில் வெளியூர்கள்ல அமைஞ்சு ஊரை விட்டுப் போயிட்டாங்க. மாதவனும் இறந்த பிறகு எங்களுக்கு எங்கயும் போகற அவசியமில்லாமல் போயிடுச்சு…”

இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வட இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் போன மாதவன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தான். அதற்குப் பின் இருண்ட அந்த முதியவர்களின் உலகத்தில் இன்று வரை விடியல் இல்லை.  அவர்களைச் சுற்றி உலகம் பலவிதமாக மாறியும் முன்னேறியும் இருக்கிறது. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் எந்த விதமான மாற்றமுமில்லை. அலமேலு கண்களைத் துடைத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள்வருடாவருடம் மகன் நினைவுநாளில் அதிகாலையில் சமைத்துக் காக்காய்க்குச் சாதம் வைத்து அது சாப்பிட்ட பிறகு தான் அவளும் பரந்தாமனும் தண்ணீர் கூடக் குடிப்பார்கள். இன்றும் அவள் அதிகாலையிலேயே சமையல் வேலையை ஆரம்பித்து விட்டாள்

அவர்கள் வலியை உணர்ந்தது போல அவன் ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டுப் பின் சொன்னான். “உண்மையில் நான் இங்கே வந்தது ஒரு பழைய கணக்கைச் செட்டில் பண்ணத் தான். மாதவனோட கொஞ்ச பணம் என் கிட்டே இருக்கு…”

பரந்தாமன் வருத்தத்துடன் சொன்னார். “இருக்கட்டும் தம்பி. அவனே போயிட்டான்….”

மாதவன் சாகும் போது படித்து முடித்து ஒரு சின்ன வேலையில் சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தன. அதனால் அவன் பெரிய தொகை எதையும் நாகராஜுக்குக் கொடுத்திருக்க வழியில்லை. அதனால் அதைச் சொல்லிக் கொண்டு இத்தனை வருடங்கள் கழித்து இவன் வந்திருப்பதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

அந்தக் காலத்துல அது சின்னத் தொகை தான் அங்கிள். ஆனா இப்போ அதோட மதிப்பு அதிகம் தான்…”

அவர் புரியாமல் அவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். 

அவன் சொன்னான். “நானும் அவனும் சேர்ந்து ஷேர்ஸ்ல அப்ளை செய்துகிட்டு இருந்தோம். யாருக்கு அலாட் ஆனாலும் பாதிப் பாதின்னு பிரிச்சுப்போம். அப்ப ரிலையன்ஸ்ல என் பேர்ல அப்ளை பண்ணின ஷேர்ஸ் அலாட் ஆச்சு. அதுல பாதியை நான் அவனுக்குத் தர வேண்டியிருந்துச்சு. நியாயமா அவன் இறந்தவுடனே வந்து தந்திருக்கணும். அப்ப முடியாத சூழ்நிலை. ஒரு செலவு முடிஞ்சா இன்னொரு செலவுன்னு வந்துகிட்டே இருந்துச்சு. சமீபத்துல தான் எங்க பூர்வீக இடம் விற்பனை ஆச்சு. பணம் வந்தவுடனே மாதவன் பங்கை முதல் வேலையா உங்களுக்குக் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டே வந்தேன். உங்க அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் சொன்னா நான் அனுப்பி வைக்கிறேன், அங்கிள்.”

பரந்தாமனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  அவர் தன் வங்கிக் கணக்கு விவரங்களைச் சொல்லச் சொல்ல அவன் அலைபேசியில் அதைச் சேமித்துக் கொண்டான்.

அவர் மகன் புதிய ஷேர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தது அவருக்கு நினைவு இருக்கிறது.  ஒரு காலத்தில் மிகப் பெரிய பணக்காரனாக ஆவோம் என்ற நம்பிக்கை அவனுக்குள் ஆழமாக இருந்தது. பெற்றோரை அரச வாழ்க்கை வாழ வைப்பேன் என்று அடிக்கடி அவன் சொல்வான். அல்பாயுசில் இறந்து போகப்போகிறவனின் கனவு அதுவென்று அவர்களும் அப்போது நினைத்திருக்கவில்லை. பரந்தாமனின் மனம் கனத்தது.  

அவன் கேட்டான். “அவனோட நெருங்கிய நண்பர்கள் எல்லாம் இப்போ எங்கே இருக்காங்க. . சரத், கல்யாண், ரஞ்சனி இவங்க எல்லாம்...”

அவங்க எல்லாம் கோயமுத்தூர்ல இருக்காங்க. சரத்தும் ரஞ்சனியும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க....”

இப்பவும் அவங்கல்லாம் இங்கே வர்றதுண்டா?”

இல்லை…. ரஞ்சனி மட்டும் வந்து கல்யாணப் பத்திரிக்கை குடுத்துட்டுப் போனாள். எங்களுக்குக் கல்யாணத்துக்குப் போக முடியல.... அப்பறம் அவங்களும் கோயமுத்தூர்ல செட்டில் ஆனதுக்கப்பறம் யாரையும் பார்க்க முடியல...”

உண்மையில் எல்லோரும் மாதவன் மரணத்திற்குத் துக்கம் விசாரித்து விட்டுப் போனவர்கள் தான். ரஞ்சனி ஒருத்தி மட்டும் தான் பிறகு கல்யாண அழைப்பிதழ் கொடுக்கவும் வந்தாள். அதன் பின் இன்று வரை அவர் மகன் பெயரைச் சொல்லிக் கொண்டு அவள் உட்பட  யாருமே இங்கே வந்ததில்லை. இத்தனை வருடங்கள் கழித்து அபூர்வமாய் இவன் தான் வந்திருக்கிறான். மாதவனின் நெருங்கிய நண்பர்கள் பெயரைச் சொல்கிறான். மாதவனுடன் சேர்ந்து ஷேர்களுக்கு விண்ணப்பித்ததாய்ச் சொல்கிறான். வீட்டு விலாசத்தையும் சரியாகக் கண்டுபிடித்து வந்திருக்கிறான். ஆனாலும்  என்ன முயன்றும் இவனை அவரால் இப்போதும் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை என்பது தான் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை இவன் வந்த உள்நோக்கம் வேறெதாவதாக இருக்குமோ என்ற சந்தேகமும் அவருக்கு வந்தது.
  
(தொடரும்)
என்.கணேசன்   

5 comments:

  1. இன்னொரு மர்மம். இது நரேந்திரன் கண்டுபிடிக்கப் போகும் கேஸ் சம்பந்தமாக இருக்குமோ? யார் அந்த ஆள்? டென்ஷன் ஏத்தறீங்களே கணேசன் சார்

    ReplyDelete
  2. Start ayduchuuuuu .. dhool kilapa porarar Namma sir....

    ReplyDelete
  3. தலையும் புரியல... வாலும் புரியல... ஆனால் நன்றாக உள்ளது...

    ReplyDelete