சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 8, 2020

இல்லுமினாட்டி 70




வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளே வெறுப்பைக் கக்கிக் கொண்டிருந்த சிந்து அவளையே க்ரிஷ் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். அவன் அவளுடைய எண்ணங்களைப் படிக்க முயல்வது போலிருந்தது.  எச்சரிக்கையுடன் தன் வெறுப்பு எண்ண ஓட்டத்தை நிறுத்தினாள். எப்படி, எதனால் என்று தெரியாவிட்டாலும் விஸ்வத்தின் எதிரி கண்டிப்பாக க்ரிஷாகவே இருக்க வேண்டும் என்று அந்தக் கணத்தில் அவளுக்கு உறுதியாகியது. அவர்களது கலகலப்பான பேச்சு தொடர்ந்தது. அவர்களுடைய அன்னியோன்னியமும், கலகலப்பும் கசந்த போதும் முழுவதுமாக ரசித்து அதில் பங்கு கொள்வது போலக் காட்டிக் கொண்டாள். இரவு ஒன்பது மணிக்கு கடிகாரத்தைப் பார்த்து தனக்கு நேரமாகி விட்டதைச் சொன்னாள்.  உதயே அவளைத் தன் காரில் அழைத்துச் சென்று விட்டு விட்டு வரக் கிளம்பினான்.

கிளம்பும் போது சிந்து அனைவரையும் கண்கலங்கப் பார்த்து விட்டுஇந்தச் சில மணி நேரங்களை என் வாழ்க்கையில் கண்டிப்பாக மறக்க மாட்டேன். ஒவ்வொரு கணத்தையும் மனதில் பத்திரப்படுத்திக் கொள்வேன்என்றாள்.

பத்மாவதி சிந்துவைப் பாசத்துடன் அணைத்துக் கொண்டாள். உதய்க்கு சிந்துவும் அவர்களுடன் கலகலவென்று கலந்து கொண்டதில் மிகுந்த சந்தோஷம். அவளை அவன் குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக் கொண்டதில் அவனுக்குப் பரம திருப்தி.

காரில் போகும் போது சிந்து தயக்கத்துடன் உதயிடம் கேட்டாள். “என்னை உங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்திருக்குமா?”

அதிலென்ன சந்தேகம்?” உதய் கேட்டான்.

சிந்து உடனடியாக எதுவும் சொல்லாமல் பின் மெல்லச் சொன்னாள். “உங்கள் தம்பி ஏதோ யோசனையுடன் என்னைப் பார்த்த மாதிரி இருந்தது.    அதனால் தான் கேட்டேன்

உதய் சிரித்து விட்டான். “என் தம்பிக்கு யோசிக்க ஆயிரம் விஷயம், ஆயிரம் சப்ஜெக்ட் இருக்கும் நம்மிடம் பேசப் பேசவே அவன் அந்த விஷயங்களுக்குப் போய் விடுவான். அவனிடம் ஆரம்பத்திலிருந்தே அந்தப் பிரச்னை உண்டு...”

சிந்து நிம்மதியடைபவள் போலக் காட்டிக் கொண்டாலும் வேண்டுமென்றே சொன்னாள். “நல்ல வேளை அவருக்கு என்னைப் பிடிக்காமல் தான் சந்தேகத்துடன் அவர் அப்படிப் பார்க்கிறாரோ என்று நினைத்து நான் பயந்து விட்டேன்.”

அதற்கு அவன் என்ன சொல்கிறான் என்று அவள் கூர்ந்து கவனித்தாள். உதய் மறுபடியும் சிரித்து விட்டுச் சொன்னான். “உலகத்திலேயே அவனால் யாரையும் வெறுக்க முடியது சிந்து. அவனுக்குப் பிடிக்காதவர்கள் என்று கூட யாருமில்லை. மற்றவர்களைப் பற்றித் தவறாக நினைப்பது கூடத் தவறு என்று திடமாக நம்புபவன் அவன். நான் சொன்ன மாதிரி நம்முடன் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென்று அவனுக்கு ஆராய்ச்சி செய்யும் விஷயம் எதாவது ஞாபகம் வந்திருக்கும். அதை நினைத்துக் கொண்டிருந்திருப்பான்....”

அவள் நிம்மதி காட்டித் தலையசைத்தாள். ஒருவிஷயம் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவனால் இவன் தம்பியைப் பற்றித் தப்பாக நினைக்க முடியாது. இவனுக்கு இவன் தம்பி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன்...”

உதய் பின் மெல்ல திருமணத்திற்குப் பெற்றோர் அவசரப்பட்டாலும் அப்பாவிற்குத் தெரிந்த நாமக்கல் ஜோதிடர் இரண்டு மாதங்களுக்குள் திருமணம் பற்றிப் பேசினால் இருவரில் ஒருவரின் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடும் என்று எச்சரித்ததால்  இரண்டு மாதங்கள் பேச வேண்டாம் என்று வீட்டில் முடிவெடுத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தான்.

சிந்துஎன்னவொரு மூட நம்பிக்கைஎன்று உள்ளுக்குள் ஏளனமாகச் சொல்லிக் கொண்டாலும் அதை மறைத்துக் கொண்டுபெரியவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அது நம் நல்லதற்காகத் தானாக இருக்கும்என்று சொன்னாள்.

அவள் மனம் மறுபடி க்ரிஷ் மேல் நிலைத்தது. அவள் மிகவும் கவனமாகத் தான் அவனைக் கையாள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவனும் அவளிடம் எச்சரிக்கையாகத் தான் இருப்பான் போலிருக்கிறது. ஒருவேளை அவனா, அவளா என்ற நிலைமை வந்தால் உதய் யார் பக்கம் இருப்பான், உதயை எந்த அளவு மாற்ற முடியும் என்ற கேள்விகள் அவள் மனதில் எழுந்தன. விடை கிடைக்கவில்லை. ஆனால் ஒருவன் மனதில் ஒரு உறுதியான இடம் பிடித்து விட்டால் பிறகு ஒரு பெண்ணால் அவன் மூலமாக முடியாதது எதுவும் இருக்க முடியாது என்று நம்பினாள்.


விஸ்வம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனையே பார்த்தபடி ஜிப்ஸி சற்று தள்ளி அமர்ந்திருந்தான். சரியாக மூன்று மணி நேரம் தான் விஸ்வம் உறங்குவான். பிறகு தானாக விழித்துக் கொள்வான். பின் ப்ராணாயாமம், தியானம், மற்ற பயிற்சிகள் என்று அவனுடைய தினசரி வாழ்க்கை ஒரு கோடு போட்டது போல அதன் வழியே போகும். ஆரம்பத்தில் அவன் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய டேனியலின் உடல் இப்போது அடங்கி அவன் சொன்னபடி கேட்க ஆரம்பித்திருக்கிறது.  அளவுக்கு மீறி நைந்து போயிருந்த நரம்பு மண்டலம் ஓரளவு பலம் பெற ஆரம்பித்திருக்கிறது. அந்தச் சக்தியை விஸ்வம் பார்த்துப் பார்த்து, யோசித்து யோசித்துச் செலவு செய்கிறான்...

“என்ன பார்க்கிறாய்?” விஸ்வம் திடீரென்று கண்விழித்துக் கேட்டான்.

“நீ எழுந்திருக்கும் நேரம் ஆகி விட்டதே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நீ மிகச்சரியாக எழுந்திருந்து விட்டாய்” என்று ஜிப்ஸி சொன்னான்.

அவன் யோசித்ததைத் தான் சொல்கிறானா இல்லை வேறு எதையாவது சொல்கிறானா என்று அறிந்து கொள்ளும் நிலைமையில் விஸ்வம் இல்லை. கண்டுபிடிக்க அவன் சேமித்திருக்கும் சக்தியைச் சற்று அதிகமாகவே செலவு செய்ய வேண்டும். அப்படிச் செய்து பார்த்தாலும் அவனால் கண்டுபிடிக்க முடியுமா, முன்பு போல பனிமூட்டமும், ஒரு நட்சத்திரமும் தான் தெரியுமா என்று தெரியவில்லை. கண்டுபிடித்தும் அவன் செய்யப் போவது இப்போதைக்கு ஒன்றுமில்லை.

விஸ்வம் தன் சக்தியில் சிறு பகுதியைச் சில நாட்களுக்கு முன் தான் உதய்க்காகச் செலவு செய்தான். சிந்துவை அனுப்புவது என்று தீர்மானித்தவுடன் அவளைப் பார்த்தவுடன் அவள் மீது உதய்க்கு அதிக ஈர்ப்பு ஏற்பட அவன் உதயை எண்ணி அவனை ஆக்கிரமித்து ஒரு வசிய மண்டலத்தை அவன் மீது ஏற்படுத்தியிருந்தான். இன்னேரம் சிந்து அவன் மனதில் கண்டிப்பாக இடம் பிடித்திருப்பாள். மீதியை உதயின் வயதும், சிந்துவின் சாமர்த்தியமும் பார்த்துக் கொள்ளும்...

இந்த முயற்சியில் இழந்த சக்திக்கு இரட்டிப்பு சக்தியைச் சேர்த்துக் கொள்ளாமல் விஸ்வம் அடுத்த முயற்சி எதிலும் ஈடுபட மாட்டான். இரண்டு மூன்று நாட்களில் அந்தச் சக்தி இலக்கை எட்டி விடுவான். அடுத்த முயற்சிக்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று மனோகர். அவன் நிலைமை என்ன என்று பார்க்க வேண்டும். இன்னொன்று அமானுஷ்யன் அக்‌ஷய். அவனை அவன் உணர்வு பூர்வமாக அறிய வேண்டும்.

இது வரை அக்‌ஷயைப் பார்த்திருக்காததால் அவனை அறிவது சுலபமல்ல. ஒரு முறையாவது நேரில் பார்த்து மனதில் பதிந்திருக்கும் மனிதர்களைச் சக்தியால் ஆக்கிரமிப்பது சுலபம். கண்ணால் பார்த்திராத மனிதர்களை ஆக்கிரமிப்பது சுலபமல்ல. அக்‌ஷய் இன்னும் சில மணி நேரங்களில் ம்யூனிக் வந்து சேர்கிறான்.

விஸ்வம் ஜிப்ஸியிடம் கேட்டான். “அக்‌ஷய் வந்தால் அவன் என்னேரமும் எர்னெஸ்டோ அருகிலேயே இருப்பானா?”

“தெரியவில்லை. பெரும்பாலும் அவர் வெளியே எங்காவது போகும் போது தான் அவன் அருகில் இருப்பது அவசியம் என்று நினைப்பார்கள் என்று நம்புகிறேன்”

“அப்படி அவன் கூடவே இருந்தால் அவர் யார் யாரை எல்லாம் சந்திக்கிறார், என்னவெல்லாம் பேசுகிறார் என்பது அக்‌ஷய்க்குத் தெரிந்து விடுமே. இல்லுமினாட்டி போன்ற ஒரு ரகசிய இயக்கத்தில் உறுப்பினரோ, ஊழியனோ அல்லாத ஒருவனை அப்படித் தெரிந்து கொள்ள எப்படி அனுமதிக்கிறார்கள்?”

“தீர்மானிப்பது இல்லுமினாட்டி அல்ல. எர்னெஸ்டோ தான். எர்னென்ஸ்டோ அமானுஷ்யன் என்றைக்குமே பிரச்சினை ஆகலாம் என்று சந்தேகப் படவில்லை போல் இருக்கிறது. அல்லது அவனுக்கும் தெரிய வேண்டாம் என்று அவர் நினைக்கிற அதிரகசிய விஷயங்களை மட்டும் அவன் இல்லாத போது செய்து கொள்வார்களோ என்னவோ?”

“அமானுஷ்யனின் ஒரு புகைப்படம் இருந்தால் எனக்குக் கொடு. நான் பார்க்க வேண்டும்”

ஜிப்ஸி யோசிக்காமல் சட்டைப் பையிலிருந்து ஒரு புகைப்படம் எடுத்து விஸ்வத்திடம் நீட்டினான்.

விஸ்வம் ஆர்வத்துடன் அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தான். ஒரு புத்த பிக்கு விமான நிலையத்தில் நடந்து வருவது போன்ற புகைப்படம் அது. அந்தப் பிக்கு அமைதியின் அவதாரமாகத் தெரிந்தார்.  தலைகுனிந்திருந்தார்.

“அவன் என்ன புத்த பிக்குவா?”
.
“இல்லை. இது அவனுடைய ஒரு வேடம். லாஸா விமான நிலையத்தில் சீன உளவுத்துறைக் காமிராவில் விழுந்த படம் அது. ஒரு வேடம் போட்டால் அந்த வேடமாகவே மாறிவிடுவான் என்கிறார்கள்...”

உண்மை தான். அதில் ஒரு அமைதியான புத்தபிக்குவாகவே அவன் தெரிந்தான். விஸ்வத்திற்கு அவனுடைய கண்களை அந்தப் புகைப்படத்தில் பார்க்க முடியாதது ஒரு குறையாகத் தோன்றியது. அவனுடைய கண்கள் மூலமாக அவனை முழுமையாக அறிய வேண்டும். பின் அவனைக் கையாள வேண்டும்.... வெல்ல வேண்டும்....

விஸ்வம் சொன்னான். “அவன் ம்யூனிக் விமானநிலையத்தில் வந்திறங்கும் போது அவனை ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுக்க முடியுமா நண்பா. அவனுடைய இப்போதைய கோலத்தைப் பார்க்க வேண்டும்...”

ஒருசில வினாடிகள் தயங்கிய ஜிப்ஸி பின் சம்மதித்தான்.



(தொடரும்)
என்.கணேசன்




4 comments:

  1. Very interesting. Eager to know how Krish plans to stop Sindhu's cunning schemes. Akshay is going to meet gypsy before meeting Viswam. Coming events will be more thrilling.

    ReplyDelete
  2. Interesting update and very happy to see new novel announcement!

    ReplyDelete
  3. Sir, Great that you are moving ahead with new novels. I am so inspired by the dedication you have for the writing. May the God bless you Sir and let me get a fraction of this dedication for my life as well by reading your blog. Thank you very much sir:-)

    ReplyDelete
  4. விஸ்வம் சக்திகளை கையாளும் விதம் அருமை... அக்ஷய் மற்றும் விஸ்வம் இருவரும் முறையான ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல... இனி தான் களைகட்ட போகின்றது...

    ReplyDelete