சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 26, 2020

யாரோ ஒருவன்? – 3


ரந்தாமன் முன்பே அவனை நினைவுபடுத்திக் கொண்டது போல் சொல்லி விட்டிருந்தபடியால் மறுபடியும் நினைவுக்கு வரவில்லை என்று சொல்ல முடியாமல் தவித்தார். திடீர் என்று இருபத்தியிரண்டு வருடம் கழிந்து வந்திருக்கும் இவனைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொள்ள விரும்பிக் கேட்டார்.  “நீங்க இங்கே இருந்தப்ப எங்கே குடியிருந்தீங்க தம்பி?”

நாகராஜ் சொன்னான். “முனிசிபல் ஆபிஸ் பக்கத்துல தான் குடியிருந்தோம் அங்கிள். நான் டெல்லி போன பிறகு எனக்கும் மாதவனுக்கும் ஷேர்ஸ்னால தான் தொடர்பு இருந்துகிட்டிருந்துச்சு. அவன் கடைசியா இங்கிருந்து மணாலிக்கு போனப்ப கூட நான் சொன்னேன்னு என் வீட்டுல இருந்து ஷிரடி பாபாவோட சின்ன விக்கிரகம் ஒன்னை  எனக்காக எடுத்துகிட்டு வந்தான். நான் டெல்லி ரயில்வே ஸ்டேஷன்ல அவனைச் சந்திச்சு வாங்கிட்டுப் போகிறதா இருந்துச்சு. ஆனா அந்தச் சமயத்துல போக முடியல. சரி நீ திரும்பிப் போறப்ப வாங்கிக்கறேன்னு சொன்னேன். ஆனா அவன் திரும்பி வர்றதுக்குள்ள அந்த விபத்து நடந்துடுச்சு. அந்த விக்கிரகம் கூட அவனோட மத்த உடைமைகளோட இங்கே திரும்ப வந்துச்சா இல்லையான்னு தெரியல...”

அவனாக அந்த விஷயத்தைச் சொன்ன விதத்தைப் பார்க்கையில் ஒருவேளை அந்த விக்கிரகத்திற்காகத் தான் இங்கே வந்திருக்கிறானோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. மகன் இறந்த பிறகு அவன் உடமைகளை சூட்கேஸில் திணித்துக் கொண்டு வந்து அவன் நண்பர்கள் அவரிடம் தந்திருந்தார்கள். அவர் அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்றுகூடப் பார்க்கவில்லை. அதனால் அவர் சொன்னார். “அவனோட சூட்கேஸை அப்படியே பரண்ல வெச்சிருக்கோம்எதையும் எடுக்கலை. நீங்க வேணும்னா அந்த விக்கிரகம் அதுக்குள்ளே இருக்கான்னு பாத்துக்கலாம்....” 

நாகராஜ் சிறிது தயக்கம் காண்பித்தான். “பரவாயில்ல அங்கிள். அது ஒன்னும் தங்கமோ வைரமோ அல்ல... அது வெறும் பீங்கான் தான். இங்கே இருக்கறப்ப என் மேஜைல வெச்சு தினம் கும்பிட்டுகிட்டிருந்த விக்ரகம்கிறதால தான் அதுல கூடுதல் ஈடுபாடு. நான் அதுக்குப் பதிலா வேற ஒரு விக்கிரகம் வாங்கிட்டேன்...”

பரந்தாமன் சொன்னார். “அதனாலென்ன என்ன தம்பி. எதுக்கும் அந்த சூட்கேஸ்ல பார்த்துக்கோங்க. கும்பிட்டுகிட்டிருந்த விக்கிரகம்னு வேற சொல்றீங்க....”. அவர் எழுந்து நிற்க தயக்கத்துடன் நாகராஜ்  மெல்ல எழுந்தான்.

அவர் அவனை உள்ளே அழைத்துக் கொண்டு போனார். உள்ளே மாதவன் புகைப்படம் சந்தன மாலையுடன் தொங்கிக் கொண்டிருந்தது. நாகராஜ் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபடி சில வினாடிகள் நின்றான். நாகராஜ் முகத்தில் லேசாகச் சோகம் தெரிந்தது போலிருந்தது.

பரந்தாமன் சொன்னார். “அவனோட சூட்கேஸ் பரண்ல இருக்கு…”

அவன் மெல்லத் திரும்பிச் சொன்னான். “அதை வீணா கீழே இறக்க வேண்டாம் அங்கிள்.… நானே ஏணி ஏறிப் பார்த்துக்கறேன்.”

ஏணி பக்கத்திலேயே இருந்தது. அந்த ஏணியை எடுத்து வைத்து அதில் ஏறி நின்றபடி அவன் அந்த சூட்கேஸைத் திறந்து பார்த்தான். அதனுள்ளே மாதவனுடைய துணிமணிகள் இருந்தன. சில ட்ரெக்கிங் பொருள்கள் இருந்தன. ஒரு தோல் பை இருந்தது. அதையும் அவன் திறந்து பார்த்தான். அதில் சில பழைய ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதில் எப்போதோ காலாவதியான ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கூட இருந்தது. அங்கிருந்து வந்த சூட்கேஸை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்…. பாவம்!

அவன் எதிர்பார்த்தபடி அவன் தேடி வந்த பொருள் அதில் இருக்கவில்லை. சில வினாடிகள் அவன் கண்களை மூடி நின்று விட்டு அவன் அந்த சூட்கேஸை மூடி விட்டுக் கீழே இறங்கினான்.

இருந்ததா?” பரந்தாமன் ஆவலுடன் கேட்டார்.

இல்லை அங்கிள். அது அங்கேயே எங்கயாவது தவறி விழுந்திருக்கும். பரவாயில்லை. அதுக்குப் பதிலா நான் வேற வாங்கிட்டேன்னு சொன்னேன் இல்லையா. எதுவுமே நம்ம கிட்ட எத்தனை காலம் இருக்கணுமோ அத்தனை காலம் தான் இருக்கும். அதுக்கு மேல ஒரு வினாடி கூட எதையும் நாம வெச்சுக்க முடியாது…” கடைசி வார்த்தைகளை அவன் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னது போல் இருந்தது.

அவனுக்கு அவன் பொருள் கிடைக்காமல் போனது பரந்தாமனுக்கு வருத்தமாக இருந்தது. அவன் அந்த விக்கிரகத்தை நினைத்துச் சொன்னது போலிருந்தாலும் அந்த வார்த்தைகள் அவர் மகன் விஷயத்துக்கும் பொருந்துவதாக எண்ணி வேதனைப்பட்டார். அவராலும் அவர் மகனைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே!

. “சரி அங்கிள் நான் கிளம்பறேன்…” என்றான்.

அலமேலு அவசரமாகச் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். “காபி கலக்கட்டுமா. இல்லை சாப்பாடு சாப்பிட்டுட்டே போறியா?”

அவன் அவள் அன்பாகவும் உரிமையுடனும் கேட்டுக் கொண்டதில் நெகிழ்ந்து போன மாதிரித் தெரிந்தது. ”என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமே சமையல் ஆயிடுச்சா ஆண்ட்டி?” என்று கேட்டான்.

அலமேலு சொன்னாள். “இன்னைக்கு மாதவன் இறந்த நாள். அதனால தான் சீக்கிரம் சமையல். நீ சாப்பிட்டுட்டுப் போனா உன் நண்பனுக்கு திருப்தியாய் இருக்கும்…”

அதற்கு மேல் அவன் தயங்கவோ, மறுக்கவோ இல்லை. தலையசைத்தான். வாழையிலை போட்டு அவனுக்குப் பரிமாறுகையில் அலமேலுக்குப் பரம திருப்தியாக இருந்தது. ’அதிதி தேவோ பவஎன்பார்கள். விருந்தாளி இறைவனுக்குச் சமானம். அன்று மகனுக்குப் பிடித்ததை எல்லாம் சமைத்திருந்தாள். மகன் இறந்த நாளான இன்று அவன் நண்பன் என்று சொல்லி ஒருவன் வந்திருப்பதும், சாப்பிடுவதும் மகனே வந்து சாப்பிட்டது போல அவளுக்கு நிறைவாக இருந்தது.

சாப்பிட்டு விட்டு நாகராஜ் சொன்னான். “சமையல் சூப்பர் ஆண்ட்டி

அலமேலுவும் பரந்தாமனும் லேசாகக் கண்கலங்கினார்கள். மாதவனும் அவனுக்குப் பிடித்த மாதிரி சமையல் இருந்தால்சமையல் சூப்பர் அம்மாஎன்று அதே வார்த்தையைத் தான் பயன்படுத்துவான்.

சாப்பிட்டுக் கைகழுவியவன், பின் உட்காரவில்லை. நேரமாகி விட்டது என்று சொல்லிக் கிளம்பினான்.

சத்தி வந்தால் கண்டிப்பா வந்துட்டு போப்பாஎன்றாள் அலமேலு. பரந்தாமனின் நண்பர் நாதமுனி தவிர அவர்களைத் தேடி வரும் ஆட்கள் யாருமில்லை. பார்த்த நினைவே வராவிட்டாலும் மாதவனின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்த நாகராஜ் மேல் ஒருவித பாசம் அவன் சாப்பிட்டு முடித்த பின் அவளுக்கு வந்திருந்தது. அவன் சாப்பிட்ட முறையும் மாதவன் சாப்பிட்டது போலவே இருந்ததுவும் ஒரு காரணமாக இருந்தது.

அவன் தலையசைத்தபடி அவர்களிடமிருந்து விடைபெற்றான். அவனை வழியனுப்ப இருவரும் வெளி கேட் வரைக்கும் வந்தார்கள்.

அவன் கார் ஏறி மறுபடி ஒரு முறை அவர்களைப் பார்த்துத் தலையசைத்து விட்டுக் காரைக் கிளப்பினான். கார் கிளம்பும் போது தான் பின் சீட்டில் ஒரு பெரிய நாகப்பாம்பு படமெடுத்து நின்றதை ஜன்னல் கண்ணாடி வழியே அவர்கள் இருவரும் பார்த்தார்கள். உடனே இருவரும் கத்தி அவனை எச்சரிக்க நினைத்தார்கள். ஆனால் அதிர்ச்சியில் அவர்கள் வாயிலிருந்து சத்தம் வரவில்லை.


அவன் உதடுகள் அசைந்தன. ஏதோ சொன்னது போலிருந்தது. ஆனால் அவன் அவர்களைப் பார்க்காததால் பேசினது அவர்களிடமில்லை என்பது போல் இருந்தது. திடீரென்று நாகப்பாம்பு தலையைத் தாழ்த்திக் கொண்டு அவர்கள் பார்வையிலிருந்து மறைந்தது. எதுவும் புரியாமல் அவர்கள் அதிர்ந்து போய் நிற்க, அவன் கார் வேகமாக அங்கிருந்து கிளம்பிப் போனது.


 (தொடரும்)
என்.கணேசன்

9 comments:

  1. Who is he? What is his intention? Whether the novel's title is about him? So many questions rise in my mind. Very interesting.

    ReplyDelete
  2. வந்த மர்ம மனிதன் நல்லவனா இல்லை கெட்டவனா? இப்பவே மண்டை வெடிச்சிடும் போல இருக்கே கணேசன் சார். பாம்பை வேற கொண்டு வந்துட்டீங்க. அடுத்த திங்கட்கிழமைக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  3. வந்தவன் தான் மாதவனோ?

    ReplyDelete
  4. Book epo publish aagum??? Date sollirunga pls ...

    ReplyDelete
  5. Omg semma intresting..book publishing date sir

    ReplyDelete
  6. Book will be released in November or December 2020.

    ReplyDelete
    Replies
    1. Ok sir good news....suspense thanga mudila....

      Delete
  7. நாக பாம்பு ...அவன் பெயர் வேற நாகராஜ்... என்ன ஒரே குழப்பமா இருக்கே...🤔🤔🤔

    ReplyDelete