சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 22, 2019

சத்ரபதி 82


சிவாஜி பொறுத்திருக்கச் சொன்னதற்குக் காரணம் விரைவில் நெருங்கவிருந்த பெருமழைக்காலமே. அந்தப் பெருமழையில் அலி ஆதில்ஷாவின்  படை எங்கேயாவது ஒதுங்கியே ஆக வேண்டும். அல்லது பீஜாப்பூர் திரும்பியே ஆக வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அந்தப் பெருமழைக்காலம் நீடிக்கும் வரையில் தனக்குப் பாதுகாப்பு என்று சிவாஜி எண்ணினான். மேலும் அவன் படையினருக்கும் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் தான் பெரிதாக அவன் கவலைப்படவில்லை. பன்ஹாலா கோட்டையை இழந்தது தான் அவனுக்குப் பெரிய இழப்பே ஒழிய மற்ற சிறிய கோட்டைகளை இழந்தது அவனுக்குச் சில்லறை நஷ்டங்களாகவே இருந்தன. அவன் பெருமழைக்காகக் காத்திருந்தான்.

நான்கு கோட்டைகளைக் கைப்பற்றிய அலி ஆதில்ஷா அடுத்ததாக விஷால்கட், ரங்க்னா கோட்டைகளைக் கைப்பற்ற ஆயத்தமான போது அவனுடைய படைத்தலைவர்கள் அந்த இரண்டு கோட்டைகளும் சகாயாத்ரி மலைத் தொடரில் மலையுச்சிகளில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள். பெருமழைக்காலம் விரைவில் ஆரம்பித்து விடும் என்றும் அந்தப் பெருமழையில் சிவாஜியுடன் போர் செய்து வென்றாலும், இயற்கையுடன் போரிட்டு வெல்ல முடியாது என்றும் சொன்னார்கள். அலி ஆதில்ஷா இனி என்ன செய்வது என்று யோசித்தான். பீஜாப்பூர் திரும்பினால் மறுபடி இத்தனை தூரம் படையோடு வருவதில் பல சிரமங்கள் இருக்கின்றன என்று எண்ணியவன் பாதுகாப்பான இடத்தில் படையோடு தங்கத் தீர்மானித்தான். பல இடங்கள் குறித்து ஆராய்ந்து கடைசியில் கிருஷ்ணா நதிக்கரையில் சிமுல்கி என்ற நகரை அவன் தேர்ந்தெடுத்துத் தங்கினான்.

ஆனால் சிவாஜி ஓய்வில் இருக்க விதி அனுமதிக்கவிலை. பெருமழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே வாடி என்ற பகுதியின் சாவந்தர்கள் சிவாஜிக்கு எதிராக அவன் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊடுருவியும், சில பகுதிகளைக் கைப்பற்றியும் வரும் செய்தி சிவாஜிக்குக் கிடைத்தது. சாவந்தர்கள் மராட்டியர்கள். முன்பே சிவாஜியுடன் ஒரு ஒப்பந்தம் மூலம் நட்புக்கரம் கோர்த்திருந்தவர்கள். அந்த ஒப்பந்தப்படி அவர்கள் தங்கள் வரிவசூலில் பாதியை சிவாஜிக்குத் தர வேண்டும் என்பதும், எதிரிகள் அவர்களைத் தாக்க நேர்ந்தால் சிவாஜி அவர்களுக்குப் படை உதவி செய்ய வேண்டும் என்றும் முடிவாகி இருந்தது. சிதி ஜோஹர் படையெடுத்து வரும் சமயத்திலேயே  சாவந்தர்கள் பீஜாப்பூர் சுல்தானுடன் ரகசியமாய் கைகோர்த்து விட்டிருந்ததாக சிவாஜிக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் அவனுக்குச் செலுத்த வேண்டிய தொகையும் இந்த முறை வந்து சேரவில்லை. அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பீஜாப்பூர் சுல்தானிடம் மோதிக் கொண்டிருக்கையில் இந்தச் சில்லறை மனிதர்களிடமும் மோதி சக்தியை விரயமாக்க மனமில்லாமல் தான் சிவாஜி பொறுத்திருந்தான்.

சிவாஜியின் பொறுமையை சாவந்தர்கள் பலவீனமாக எடுத்துக் கொண்டார்கள். பீஜாப்பூர் சுல்தானிடம் சிவாஜி நான்கு கோட்டைகளை அடுத்தடுத்து இழந்ததை அவனுடைய இறங்குமுகமாகக் கணக்குப் போட்டார்கள். அதனால் தான் அவன் வழியில் தைரியமாகக் குறுக்கிடுகிறார்கள் என்பது சிவாஜிக்குப் புரிந்தது. நட்புக்கரம் நீட்டியவர்கள் அந்தக் கரத்தில் ஆயுதமும் ஏந்தித் தாக்கவும் ஆரம்பிப்பதை துரோகத்தின் உச்சமாகவே சிவாஜி நினைத்தான்.

இப்போது அலி ஆதில்ஷாவும் ஓய்வில் இருப்பதால் பெருமழைக்காலம் துவங்கும் முன் இந்த சில்லறைத் துரோகிகளை அடக்கி வைக்கலாம் என்று எண்ணியவனாக சிவாஜி தன் நண்பன் பாஜி பசல்கருக்கு, ஒரு படையோடு சென்று அவர்களை அடக்கி வைக்கும்படி, தகவல் அனுப்பினான்.

ஒரு நள்ளிரவில் அவசரச் செய்தியுடன் அவனுடைய வீரன் ஒருவன் விஷால்கட்டிற்கு வந்தான். உறக்கத்தில் இருந்து எழுப்பப்பட்ட சிவாஜியிடம் அவன் மன்னிப்பு கோரினான். “உங்களை உறக்கத்திலிருந்து எழுப்பும் படியாக இந்த அகால நேரத்தில் இங்கு வந்து சேர்ந்ததற்கு மன்னியுங்கள் மன்னா”

சிவாஜி பயணத்தில் களைத்து வந்திருந்த அந்த வீரனைப் பார்த்துப் புன்னகைத்தான். “உன் உறக்கத்தைத் துறந்து நீண்ட பயணம் செய்து இங்கு இந்த அகால வேளையில் உன்னால் வர முடியுமானால், உன் மன்னன் உறக்கத்தை சில நிமிடங்கள் துறப்பது பொருட்படுத்த வேண்டிய விஷயமே அல்ல. என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய் வீரனே?”

தயக்கத்துடன் துக்கம் தோய்ந்த குரலில் வீரன் சொன்னான். “மாவீரர் பாஜி பசல்கர் வீரமரணம் அடைந்து விட்டார் மன்னா”

சிவாஜி அதிர்ந்து போனான். அதிர்ச்சியிலிருந்து ஆழமான துக்கத்தில் மூழ்குவதற்கு முன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். “விவரமாகச் சொல் வீரனே. என்ன நடந்தது?”

வீரன் சுருக்கமாகச் சொன்னான். “ராஜாப்பூர் பகுதியில் சாவந்தர்களுடன் நம் படையும் வீரமாகப் போரிட்டது. போரில் அவர்கள் சேனாதிபதியும், மாவீரர் பாஜி பசல்கரும் தீவிரமாகப் போரிட்டார்கள். போரில் இருவருமே ஒருவர் கையால் மற்றவர் மரணமடைந்தார்கள்……”

சிவாஜி கண்கள் குளமாயின. பாஜி பசல்கர் அவனுடைய இளமைக்கால நண்பன். அவன் அனாமதேயமாக இருந்த போதே அவனுடன் கரம் கோர்த்தவன். அவனுடன் சேர்ந்து சுயராஜ்ஜியக் கனவு கண்டவன். ரோஹிதீஸ்வரர் கோயிலில் அவனுடன் சுயராஜ்ஜியம் அடைந்தே தீர வேண்டும் என்று சபதம் எடுத்தவன். ”அவனை இப்போது அனுப்பி வைத்தவன் நான்” என்கிற எண்ணம் சிவாஜியை அழுத்த ஆரம்பித்த போது வீரன் இன்னும் எதையோ சொல்லக் காத்திருப்பது தெரிந்தது.

குரல் கரகரக்க சிவாஜி சொன்னான். “இன்னும் என்ன செய்தி சொல் வீரனே”

வீரன் சொன்னான். “இந்தப் போரில் நாம் எதிர்பாராத இன்னொரு கரமும் நீண்டிருக்கிறது மன்னா”

சிவாஜி திகைத்தான். வீரன் தொடர்ந்தான். “ராஜாப்பூரில் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற சீமை நாட்டாரின் தொழிற்சாலை இருக்கிறது. அவர்கள் சாவந்தர்களுக்கு எறிகுண்டுகள் முதலான ஆயுதங்களை வினியோகித்திருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்திருக்கிறது….”

சிவாஜி கடுங்கோபத்தை உணர்ந்தான். ராஜாப்பூர் கடற்கரையோரமாக இருக்கிறது. அது சிறிய துறைமுக நகரம். வாணிபம் செய்ய உகந்த நகரம். சிவாஜி சந்தேகத்துடன் கேட்டான். “அவர்கள் தொழிற்சாலையே வெடிகுண்டுத் தொழிற்சாலையா என்ன?”

“இல்லை மன்னா. அது வெடிகுண்டுத் தொழிற்சாலை அல்ல. வேறெதோ தயாரிக்கிறார்கள். ஆனால் ரகசியமாக இந்த வினியோகமும் நடக்கிறது. பீஜாப்பூர் படைக்கும் அவர்கள் தான் எறிகுண்டுகள் வினியோகித்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது …. துறைமுகப்பகுதியில் இருப்பதால் அவர்கள் தங்கள் நாட்டிலிருந்தோ, வேறு நாடுகளில் இருந்தோ அவற்றை எளிதாகக் கொண்டு வந்து வினியோகிக்கிறார்கள் போலிருக்கிறது.”

சிவாஜி கடுங்கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாகச் சொன்னான். “நம் எதிரிகளுக்கெல்லாம் ஆயுதங்கள் வினியோகிக்கிறார்கள் என்றால் அவர்களை உடனடியாக நாம் கவனிக்காமல் இருப்பது அவர்களை அவமதிப்பது போன்ற செயல்…. நாளையே கவனிப்போம்..”

மறுநாள் அதிகாலையே சிவாஜி சிறுபடையுடன் ராஜாப்பூருக்குக் கிளம்பினான். சிவாஜி வருகிறான் என்று கேள்விப்பட்டவுடன் ராஜாப்பூரில் இருந்த ஒரு சில சாவந்தர்களும் ஓட்டமெடுத்தார்கள். பாஜி பசல்கரின் மரணத்திற்குப் பிறகு சிவாஜியைச் சந்திக்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை.  ஆனால் சிவாஜியைப் பற்றி அறியாத கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குத் தொழிற்சாலையை மூடிவிட்டு ஓடி மறையத் தோன்றவில்லை. அவர்கள் யாருக்கும் எதிரியல்ல. அவர்கள் யார் பக்கத்தைச் சார்ந்தவர்களும் அல்ல. அவர்கள் வணிகர்கள் மட்டுமே. அதனால் அவர்கள் பாதுகாப்பான நிலைமையில் இருப்பவர்கள்.

இந்தப் பாவனையோடு இருந்த ஆங்கிலேயர்கள் அன்று ராஜாப்பூரில் ஒரு மனித சூறாவளியைப் பார்த்தார்கள். படையுடன் வந்த சிவாஜி அந்தத் தொழிற்சாலையைத் துவம்சம் செய்தான். தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டப்பட்டார்கள். அதை நடத்தி வந்த நான்கு ஆங்கிலேயர்களை சிவாஜி சிறைப்படுத்தினான். அந்த நால்வரில் ஒருவராவது ஆயுதம் ஏந்திப் போரிட்டிருந்தால் அன்று அவன் வாளால் அறுபட்டு இறந்திருப்பார்கள். ஆயுதம் ஏந்திப் போராடாமல் அதிர்ச்சியுடனும், பிரமிப்புடனும் சிலையாக நின்றது அவர்களை உயிரிழக்காமல் காத்தது.

சிவாஜி சாவந்தர்களின் மன்னன் எங்கிருக்கிறான் என்று விசாரித்தான். அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் அந்த மன்னனையும் வெட்டிச் சாய்த்தால் தான் சிறிதாவது மனம் ஆறும் என்று அவனுக்குத் தோன்றியது. சாவந்தர்களின் மன்னன் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. வாடி பகுதியில் கூட அவன் இல்லை என்று சொன்னார்கள்.

ஆனாலும் மனதில் அவனை சிவாஜி குறித்து வைத்துக் கொண்டான். அவன் நண்பனின் மரணக்கணக்கு அது. காலம் எத்தனையானாலும் அதைத் தீர்க்காமல் அவன் ஓய மாட்டான்…..


(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. என்ன நடக்கும் என்று கணிக்கவே முடியவில்லை... சிவாஜியின் வீழ்ச்சி இப்படியே தொடருமா? இல்லை இதிலிருந்து மீண்டுவிடுவானா? எப்படி மீள்வான்?

    ReplyDelete
  2. சுஜாதாJuly 23, 2019 at 9:58 PM

    சிவாஜி என்ன செய்யப் போகிறான்? எப்படி சமாளிப்பான்? அறியும் ஆவலில் அடுத்த திங்கள் வரை.

    ReplyDelete
  3. குறிப்பிட தகுந்த நிகழ்ச்சிகளின் காலத்தையும் (வருடத்தை) சொன்னால் நன்றாக இருக்கும்

    ReplyDelete