சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, January 16, 2019

மரணத்தைத் தாண்டியும் விளைவுகளைத் தரும் முக்குணங்கள்!


பொதுவாக மனிதர்கள் மூன்று குணங்களில் ஒன்றை தங்களிடம் அதிகமாகவும், பிரதானமாகவும் வெளிப்படுத்தினாலும் சில சமயங்களில் அவர்களிடம் மற்ற இரு குணங்களும் கூட மாறி மாறி வெளிப்படுகின்றன என்பதைப் பார்த்தோம். மனிதனின் அந்த ஒரு தனித்தன்மையே மனிதன் விரும்பி முயன்றால் தன் குணங்களை உயர்நிலைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்துகிறது.
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

எப்போது உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஒளி உண்டாகிறதோ அப்போது சத்துவ குணமே மேலோங்கியுள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ரஜோ குணம் மேலோங்கியிருக்கும்போது பேராசை, உலகியல் கர்மங்களைத் தொடங்குதல், புலனடக்கமில்லாமை, நுகர்ச்சிப் பொருள்களில் ஆசை கியவை உண்டாகின்றன.

ஞானமின்மை, அசையாமை, அஜாக்கிரதை, மயக்கம் ஆகியவை தமோ குணம் மேலோங்கும் போது ஏற்படுகின்றன.

மனிதர்கள் எந்தக் குணத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டியதில்லை. அவர்களைக் கூர்ந்து கவனித்தாலே மூன்றில் எக்குணம் பிரதானமாக உள்ளது என்று சொல்லி விட முடியும்.

ஒரு சாத்வீகியின் உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஒளி வீசும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். தேஜஸுடன் இருப்பது சத்துவ குணம் மேலோங்கி இருக்கும் போதே ஒருவனுக்குச் சாத்தியமாகும். உயர்ந்த சிந்தனைகளும், மேலான விஷயங்களை விரும்புவதும், புரிந்து கொள்வதும், உணர்வதும், அந்த உயர்வழிகளிலேயே பயணிப்பதும் சாத்வீக குணம் இருப்பவனுக்கே முடியும். அப்படி மனம், சொல், செயல் எல்லாம் சாத்வீக நிலையில் இருப்பவனைப் பார்த்தாலே அவனுடைய தேஜஸால் சாத்வீகி என்பது தெரியும்.

ரஜோ குணத்தில் ஆசைவழிப் பயணங்களும், செயல்களுமே அதிகம். அதனால் என்னேரமும் பதற்றமும், சஞ்சலமும், மன அமைதியின்மையும் இருக்கும். ஓய்வில்லாத வேலைகளும் உழைப்பும் இருந்தாலும் அதில் அதிகம் அர்த்தம் இல்லாதவையாகவே இருக்கும். மகிழ்வைத் தான் ரஜோ குணமும் தேடுகிறது என்றாலும் அந்த மகிழ்வு எப்படிப்பட்ட செயல்கள் மூலமாக நிரந்தரமாகத் தனக்கு வாய்க்கும் என்ற உண்மையான புரிதல் இருப்பது அரிது. அது கிடைத்தால் சந்தோஷம், இது செய்தால் மகிழ்ச்சி என்று தானாக நினைத்துப் புதிது புதிதாக எதையாவது செய்ய முனையும் போக்கு பிரதானமாக இருக்கும். அப்படி அவற்றில் கிடைக்காத போதும் தன் முனைப்பில் தவறு இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றாது. மாறாக வேறு புதிய அதே வகைச் செயல்களில் ஈடுபடும்.

தமோ குணமோ ஜடமாகவும், சோம்பலாகவும் இருப்பதே சுகம் என்று இருக்கும். உழைப்பு கசக்கும். செய்ய வேண்டும் என்று உணர்வதையும் நாளை செய்யலாம் என்று நினைக்க வைக்கும். யாராவது செய்யட்டும் என்று இருக்க வைக்கும். உழைத்து ஓய்வெடுப்பதும் இளைப்பாறுவதும் சரியானது. ஆனால் உழைக்காமலேயே ஓய்வை விரும்பும் மனநிலை தமோ குணத்தின் இயல்பு. அதன் கூட்டணியாக அஜாக்கிரதையும், மயக்கமும் சேர்ந்திருக்கும்.

கால்பந்து பலரிடமும் உதை வாங்குவது போல மனிதன் வாழ்வும் ரஜோ, தமோ குணங்களினால் அடிபட்டு அல்லல்படுவதாக வினோபா அழகாகக் கூறுவார். உண்மையில் ரஜோ, தமோ குணங்கள் மனிதனை நிம்மதியின்றி அலைக்கழிப்பதாகவே இருக்கின்றன. ஆனால் மனிதன் ஒரு குணத்தில் இருந்து மற்ற குணங்களுக்கு மாற முடிந்தவனாக இருப்பதால் அவன் சத்துவ குணத்துக்கு மாறுவதே அவன் தன் வாழ்வில் அமைதியை மீட்பதற்கான வழி.

அப்படி அவன் வாழும் போது மீளா விட்டால் இறந்த பின்பும் அவனுக்குப் பிரச்சினை தான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அவர் கூறுகிறார்.

சத்துவ குணம் மேலோங்கியிருக்கும் போது மரணமடைபவன் உத்தமமான ஆத்ம தத்துவத்தை அறிந்தவர்கள் அடைந்துள்ள புண்ணிய லோகங்களை அடைகிறான்.

ரஜோ குணம் மேலோங்கியிருக்கும்போது மரணமடைபவன் கர்மங்களை அனுஷ்டிப்பவர்களின் குலத்தில் பிறக்கிறான். அப்படியே தமோ குணம் மேலோங்கியிருக்கும் போது மரணமடைபவன் மூடர்களின் குடும்பத்தில் பிறக்கிறான்.

சத்துவ குணமுள்ளவர்கள் மோட்சம் அடைவார்கள். ரஜோ குணமுள்ளவர்கள் மனித உலகில் தங்கி விடுவார்கள். தமோ குணம் உள்ளவர்கள் புழு, விலங்கு, பறவைகளாகத் தாழ்ந்த நிலையை அடைவார்கள்.

இது கர்ம பூமி. இங்கு பிறந்தவர்கள் தங்கள் கர்மங்களாலேயே பிறவிப் பெருங்கடலைக் கடக்க வேண்டியிருக்கிறது. கர்மங்களோ குணங்களை ஒட்டியே அமைகின்றன. அப்படி இருப்பதால் அவன் தன் குணங்களை மாற்றிக் கொண்டே கடைத்தேற வேண்டியிருக்கிறது. அவன் இந்த உலகில் வாழும் போது தன்னை மேலான குணத்திற்கு மாற்றிக் கொள்ளா விட்டால் மரணத்தின் பின் சென்றடையும் உலகமும் துக்கத்திற்குரியதாகவே இருக்கும்.

சத்துவ குணம் மேலோங்க வாழ்ந்து மரிப்பவன் மோட்சத்தை அடைகிறான். இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை பெறுகிறான். ஆனால் ரஜோ குணம் மேலோங்க வாழ்ந்து மரிப்பவன் பரிட்சையில் தோல்வி அடைந்து மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டியிருப்பவனைப் போல இந்த உலகத்தில் மீண்டும் மனிதனாகப் பிறக்கிறான். பழையபடி இன்ப துன்ப அனுபவங்களில் அவன் அலைக்கழிக்கப்பட வேண்டி வரும். தமோ குணம் மேலோங்க வாழ்ந்து  மரிப்பவன் மனிதனாகப் பிறப்பதே நிச்சயம் இல்லை என்கிறது பகவத் கீதை. அப்படிப் பிறந்தாலும் மூடர்கள் குடும்பத்தில் பிறந்து படாதபாடு படுவானாம். அதற்கும் லாயக்கில்லை என்றால் அவன்  விலங்கு, பறவை புழுவாகப் பிறப்பெடுக்க வேண்டி வருமாம்.

சோம்பிக் கிடந்து செயலே பாரம் என்று வாழ்பவன், நேரா நேரத்திற்கு சாப்பிட்டு ஜடமாகத் தன் காலத்தைக் கடத்துபவன் அதற்கேற்ற மாதிரி விலங்கினமாகப் பிறப்பெடுக்க நேர்வது அவன் தமோநிலையில் வாழ்ந்ததன் சம்பாத்தியமாகவே இருக்கிறது.

முக்குணங்கள் இந்தப் பிறவியை மட்டுமல்ல, இந்தப் பிறவிக்கு அடுத்ததையும் நிர்ணயம் செய்கின்றன என்பதால் தங்கள் குணங்களை உயர்த்திக் கொள்ள வேண்டியது மனிதனுக்கு மிக முக்கியமாகிறது. மனிதன் சோம்பி ஜடமாய் இருக்கப் பிறந்தவன் அல்ல. பொருளற்ற, தரமற்ற செயல்களில் தன்னை மறந்து ஈடுபட்டுக் கஷ்டப்படப் பிறந்தவனும் அல்ல. சிந்திக்கும் திறமை தரப்பட்டு மனிதனாக இங்கே அனுப்பப்படுபவன் அவன் என்பதால் அவன்  சிந்தித்து வாழ்ந்து தன் இயல்பையும், அதன் மூலம் செயல்களையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதைச் சரியாகச் செய்யா விட்டால் தனக்கு அளிக்கப்பட்ட அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுபவனாகி விடுகிறான். அவன் மறுபடி பிறப்பெடுக்க வேண்டி வரும். அது மனிதனாகவா விலங்காகவா என்பது அடுத்த கேள்வி.

இப்படி பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் மனோதத்துவ ரீதியில் முக்குணங்களையும், அவற்றின் அடையாளங்களையும், அவற்றின் பலன்களையும் சொன்னதோடு நிறுத்தாமல் வாழ்வின் முடிவுக்குப் பிந்தைய நிலைகளையும் அவை தீர்மானிப்பதைத் தெளிவாக விளக்குவதால் நாம் எந்தக் குணங்களில் அதிகமாக இருக்கிறோம் என்பதைக் கணக்கெடுத்து உயர்த்திக் கொள்வது அவசியமாகிறதல்லவா?

பாதை நீளும்….

என்.கணேசன்

1 comment:

  1. "முன்னேற நினைப்பவன் குணங்களை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.... அப்போது தான் மரணத்துக்கு பிந்தைய வாழ்வு கூட நன்றாக இருக்கும்...." அருமையான விளக்கம் ஐயா...நன்றிகள்...

    ReplyDelete