சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 17, 2019

இருவேறு உலகம் - 119


ரிணியைக் கைது செய்ய உத்தரவு கிடைத்தவுடனேயே போலீஸ் அதிகாரி ஒருவர் ரகசியமாக கமலக்கண்ணனுக்குப் போன் செய்து அந்தத் தகவலைத் தெரிவித்தார். கமலக்கண்ணன் கோபத்தில் கொந்தளித்துப் போனார். அவரை அப்படியொரு கோபத்தில் இதுவரை பார்த்திராத உதய் என்ன என்று விசாரித்த போது மனைவியும், இளைய மகனும் அருகில் இல்லையல்லவா என்று ஒரு முறை பார்த்து விட்டு கடுங்கோபத்துடன் விஷயத்தைச் சொன்ன அவர் வேகமாகக் காரில் ஹரிணி வீட்டுக்கு விரைந்தார். உதய் அவசரமாக வந்து கிளம்பிய காருக்குள் குதிக்க வேண்டி இருந்தது. உதய் எதிரி அவன் ஆளை வெளிக்கொணர வைக்கும் முயற்சி இது என்பதை உணர்ந்தான். கமலக்கண்ணனுக்கு அவன் க்ரிஷின் எதிரி குறித்த தகவல்களைத் தெரிவித்திருக்கவில்லை. அவரும் செந்தில்நாதன் வந்து போய்க் கொண்டிருந்ததால் ஏதோ கூடிச் செய்கிறார்கள் என்று ஊகித்த போதும் அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைக் காட்டவில்லை. ராஜதுரையின் மரணம் ஒரு அன்பான மூத்த சகோதரனின் மரணமாகவே அவரைப் பாதித்திருந்ததால் விரக்தி வைராக்கியம் என்ற மனநிலையையே அவரிடம் ஏற்படுத்தி இருந்தது தான் காரணம்.

ஆனால் ஹரிணி கைது பற்றிக் கேள்விப்பட்டவுடன் பழைய கமலக்கண்ணனாக அவர் பொங்கி விட்டார். அவர் வீட்டுக்கு மருமகளாக வரவிருக்கும் பெண், முன்பே கடத்தப்பட்டு கஷ்டப்பட்ட பெண், மிக நல்லவனான அவரது இளைய மகன் காதலிப்பதாலேயே பத்தரைமாற்றுத் தங்கமாகத் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக அவர் நம்பும் பெண் கைது செய்யப்பட அனுமதித்தால் அரசியலில் இத்தனை நாள் இருந்ததில் அர்த்தம் இல்லை என்று நினைத்தார்.

கைதின் பின்னணி அறிந்த உதய் ஹரிணியைக் காப்பாற்ற எதிரியின் ஆளை விட்டுக் கொடுக்க வேண்டி வருமோ என்று கூட யோசிக்க ஆரம்பித்திருந்தான். சில காலமாக முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் மூத்த மகனைக் கலந்தாலோசிக்கும் வழக்கத்தை வைத்திருந்த கமலக்கண்ணன் இப்போது எந்தப் பேச்சும் பேசாமல் இந்த வேகத்தில் போவதைப் பார்த்து இவராக என்ன செய்கிறார் என்று பார்ப்போம். பிரச்சினை வருவது போல் இருந்தால் மட்டும் தலையிடுவோம் என்று கணக்குப் போட்டான்.

போலீசாருக்கு முன்னால் கமலக்கண்ணன் ஹரிணி வீட்டை அடைந்தார். கடத்தப்பட்ட ஹரிணி வீடு திரும்பியவுடன் ஒரு முறை அவர் அந்த வீட்டுக்கு வந்து ஐந்து நிமிடம் இருந்து போயிருக்கிறாரே ஒழிய மற்றவர்கள் போல் அடிக்கடி வருபவரல்ல. எனவே ஹரிணியும் கிரிஜாவும் ஆச்சரியப்பட்டார்கள். பின்னாலேயே வந்த உதயைப் பார்த்து என்ன விஷயம் என்று மெல்லச் சைகையில் ஹரிணி கேட்டாள். அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் ’பொறு’ என்று மட்டும் சைகை செய்தான்.

வரவேற்ற சம்பந்தியம்மாளிடமும், ஹரிணியிடமும் ”நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் உள்ளயே இருங்கம்மா. கூப்பிட்டா மட்டும் வந்தா போதும்” என்று சொல்லி உள்ளே அனுப்பியவர் அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார். உதயும் உட்கார்ந்தான்.

போலீஸ் வேன் வந்து நின்று போலீஸார் கும்பலாக திபு திபுவென்று படியேறி வந்தவர்கள் கமலக்கண்ணனையும் உதயையும் பார்த்து விட்டு சிறிது பின்வாங்கினார்கள். போலீஸாரை அழைத்து வந்த உயர் அதிகாரி மட்டும் பின் வாங்க முடியாமல் தயக்கத்துடன் அவர் முன் வந்து நின்று சல்யூட் அடித்தார்.  

கமலக்கண்ணன் உஷ்ணமாகக் கேட்டார். ”என்னய்யா?”

அந்த அதிகாரி எச்சிலை விழுங்கியபடி தயக்கத்துடன் சொன்னார். “போதை மருந்து இங்க பதுக்கி வச்சிருக்கறதா ஒரு தகவல் வந்திருக்கு….. அதான்…..”

“இனிமே தானய்யா நீங்களே இங்க வைக்கணும். உங்கள்ல எவன் கைல இருக்கு அது ?...”

அந்த அதிகாரி பேசாமல் தர்மசங்கடத்துடன் நின்றார். கமலக்கண்ணன் உஷ்ணம் குறையாமல் சொன்னார். “இந்த வீட்டுப் பொண்ணு என் மருமகளா வரப் போகிறவங்கறதுங்காகச் சொல்லல. ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணு மேல இப்படி ஒரு பொய்க் கேஸ் போட எவனோ சொன்னான்னு கிளம்பி வந்திருக்கியே. உனக்குப் பெண் குழந்தைகள் இருக்கா. உன் குடும்பத்துல இப்படி ஒரு கூட்டம் நுழைஞ்சா நீ சம்மதிப்பியாய்யா….”

அரசியல்வாதிகளுக்கு இடையில் நடக்கும் யுத்தத்தில் சிக்கிப் பதில் அளிக்க வேண்டி இருக்கிறதே என்ற நொந்ததையும் மீறி கமலக்கண்ணன் சொன்னது போல் தன் வீட்டுக்குள் கஞ்சாப் பொட்டலங்களோடு போலீஸ் உள்ளே நுழைந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில் அதிகம் நொந்து போன அந்த அதிகாரி “சி. எம் உத்தரவு சார்” என்று பலவீனமாகச் சொன்னார்.

“உன் சி எம் கிட்ட சொல்லு. இந்த வெச்சு எடுக்கற வேலையை எல்லாம் கமலக்கண்ணன் சம்பந்தி வீட்டுலயே நடத்துனா ஆட்சி கவுந்துடும்னு சொல்லு. என்னைத் தாண்டி எவனாவது உள்ளே போக நினைச்சா அடுத்த அஞ்சு நிமிஷத்துல கட்சிக்காரங்களையும், பத்திரிக்கைக்காரங்களையும், டிவிக்காரங்களையும் இங்கே வர வெச்சுடுவேன். இன்னைக்கு டிவி நியூஸ்லயும், நாளைக்கு காலைல பத்திருக்கைகள்லயும் உன் பேரு தான் அசிங்கப்படப் போகுது……உன் சி எம் நான் சொல்லவே இல்லை எனக்குத் தெரியவே தெரியாதுன்னு சொல்லி கழண்டுக்குவான்….”

உதய் தன் பங்குக்குச் சொன்னான். “க்ரிஷோட காலேஜ் பசங்களயும் கூடக் கூப்பிட்டடலாம்…..  சார் இளைஞர்கள் மத்தியிலயும் பிரபலமாவார்”

அந்தப் போலீஸ் அதிகாரி பின்வாங்கி வெளியே வந்து மாணிக்கத்துக்குப் போன் செய்து நிலவரத்தைச் சொல்லி என்ன செய்வதென்று கேட்டார்.

ஹரிணி கைதுக்குப் பின் விஷயம் தெரிந்து கமலக்கண்ணனும் உதயும் வருவார்கள் ஏதாவது கதை சொல்லி, ஆனது ஆகி விட்டது எதிரியின் ஆளை விடுவித்து விட்டு ஹரிணியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சமயோசிதமாய் சொல்லலாம் என்று எண்ணியிருந்த மாணிக்கம் போலீஸ் போகும் முன்பே அங்கு கமலக்கண்ணன் காத்திருப்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. பொதுவான சமயங்களில் சூட்சுமம் போதாது என்றாலும் சூடாகும் சமயங்களில் கமலக்கண்ணன் எரிமலை தான். வெற்று மிரட்டல் என்பது அவரிடம் இருந்ததில்லை. விளைவுகள் பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை….. மாணிக்கம் போலீஸ் அதிகாரியிடம் கமலக்கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டுத் திரும்பி வரச் சொல்லி விட்டார். அனுப்பி அசிங்கப்படுத்தி மன்னிப்பும் கேட்டுவரச் சொல்கிறாரே இந்த மனிதர் என்று மனம் நொந்தாலும் போலீஸ் அதிகாரி அப்படியே செய்து அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பிப் போனார்.

கிரிஜாவும், ஹரிணியும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹரிணிக்கு நிலவரம் ஓரளவு புரிந்தது. ஆனால் கிரிஜா எதையும் புரிந்து கொள்ள முடியாமல் இதயம் படபடக்க நின்றிருந்தாள் போலீஸார் போன பிறகு உதய் சொன்னான். ”இனிமே இவங்க இங்கயே தனியா இருக்கறது ஆபத்து தான்….”

கமலக்கண்ணன் கிரிஜாவிடம் சொன்னார். ”கொஞ்ச நாளைக்கு எங்க வீட்லயே வந்து இருங்க. அது தான் பாதுகாப்பு…..”

  
மாணிக்கம் வார்த்தைகளை மூன்று முறை மாற்றி அமைத்துப் பேசி நான்கு முறை மனதிலேயே ஒத்திகை பார்த்து விட்டு எதிரி தன்னிடம் பேசிய அதே எண்ணுக்குப் போன் செய்து பேசினார்.

நடந்ததை எல்லாம் சொல்லி விட்டு பிறகு சொன்னார். “உங்க பேச்சை அலட்சியம் பண்ணிட்டேன்னு மட்டும் தயவு செஞ்சு நினைச்சு கோபப்படாம யோசிச்சுப் பாருங்க. நான் என்ன செய்யறது? நிலைமை என் கை மீறிப் போயிடுச்சு. இதை நீங்க உங்க பாணிலயே ஏதாவது செய்தா புண்ணியமா போகும். அப்படிச் செய்யறதால நிர்வாகத்துல இருந்து உங்களுக்கு எந்த தொந்திரவும் வராம நான் பார்த்துக்கறேன். சத்தியம் பண்ணித் தர்றேன்….”

விஸ்வம் ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டான். மாணிக்கம் பல விதமான பயங்களில் ஒடுங்கிப் போனார்.



ன்றிரவு நவீன்சந்திர ஷா விஸ்வத்தின் ஓட்டல் அறைக்கு வந்தான். அன்று எல்லோருமே அவனைப் பற்றித் தான் பேசினார்கள் என்றும் சிலர் அவன் தான் ரகசியச் சுவடியில் சொல்லப்பட்டவனோ என்று சந்தேகப்படுவதாகவும் பரபரப்புடன் சொன்னான்.

அப்போது தான் அந்த ரகசியச் சுவடி பற்றிக் கேள்விப்படுவதாகக் காட்டிக் கொண்ட விஸ்வம் “என்ன ரகசியச் சுவடி?” என்று கேட்டான்.

நவீன்சந்திர ஷா சிகாகோ நகரில் இடிக்கப்பட்ட இல்லுமினாட்டி கோயிலில் அஸ்திவாரத்தில் இருந்த பழங்கால சுவடி பற்றியும் அதில் இந்தியாவில் இருந்து ஒருவன் இல்லுமினாட்டியின் போக்கை நிர்ணயிப்பான் என்று சொல்லி இருந்ததையும் தெரிவித்தான். “என்னை மன்னிச்சுடு நண்பா. நீ உன் கனவைப் பத்தி என்னிடம் சொன்னப்பவே நான் இதைச் சொல்லி இருக்கணும். ஆனா உன்னை உறுப்பினராக இங்கே அனுமதிக்காமல் நான் உன் கிட்ட சொல்றது இல்லுமினாட்டி விதிகளுக்கு எதிரானது. அதனால தான் வாயைத் திறக்கலை. இன்னைக்கு சிலர் அதை ஞாபகப்படுத்திகிட்டாங்க. நீ கனவுல பார்த்தபடியே அந்தச் சுவடில உன்னைப் பத்தின விவரங்கள் இருக்கு போல. அந்த விவரங்கள் உனக்கு ஒத்துப் போச்சுன்னா இல்லுமினாட்டில உன் அந்தஸ்தே வேறயா இருக்கும்”

“அந்தச்சுவடி எங்கே இருக்கு?” சாதாரண ஆர்வத்துடன் கேட்பது போல் விஸ்வம் கேட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்



5 comments:

  1. Kamalakannan is superbly picturized in this episode. The no-so-bright person's way of acting when occasion pierces his temper is natural. How is Viswam going to react? Eagerly waiting to know.

    ReplyDelete
  2. Ha ha..! Ippo enakku vishwatha nenacha paavama irukku.! I had a good respect on him until he asked to arrest Harini with a silly framed evidence. Hope, even when he fails, he will be a great person.

    ReplyDelete
  3. இந்த வாரம் வில்வம் டக் அவுட் ஆகி கமலக்கண்ணன் கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து வெற்றி

    ReplyDelete
  4. யானைக்கும் அடி சறுக்கும் .....விஸ்வத்தோட நிலை....
    ஓலைச்சுவடி இந்தியன் .....” இல்லுமினாட்டி...” கதை நாயகனா....?

    ReplyDelete
  5. கமலக்கண்ணன் உண்மையிலேயே ...எரிமலை தான்
    ... எதிரிகளின் திட்டத்தை பொசுக்கி விட்டார்... இனி மனோகரின் கதி????

    ReplyDelete