சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 14, 2019

சத்ரபதி – 55

(இனிய பொங்கல் வாழ்த்துக்கள்)

முஸ்தபாகான் சொன்னான். இந்தக் கோட்டை எனக்கே சொந்தமானது சாம்பாஜி. இதில் உன் தந்தைக்கு எந்த உரிமையுமில்லை. உங்கள் படை பலத்தை என்னிடம் காட்டாதீர்கள். நான் என் உயிரைக் கொடுத்தாவது இதைக் காப்பேன்” முஸ்தபா கான் உறுதியாக சாம்பாஜியிடம் சொன்னான்.
              
முக்கிய விஷயம் சொல்வதாகக் கோட்டைக்கு வெளியே பேச்சு வார்த்தைக்கு வந்து பைத்தியக்காரனைப் போல உரிமை கொண்டாடும் முஸ்தபாகானைப் பார்க்க சாம்பாஜிக்கு வேடிக்கையாக இருந்தது. ”உனக்கு இந்தக் கோட்டையில் உரிமை உள்ளது என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று சாம்பாஜி கேட்டான்.

முஸ்தபா கான் சொன்னான். “என் மூதாதையருக்கு இது சொந்தமாக இருந்தது. அது குறித்த ஆதாரங்களை நான் சேகரித்து வைத்திருக்கிறேன்”

சாம்பாஜி சொன்னான். “நல்லது. அப்படியானால் நீ அதை சுல்தானிடம் சமர்ப்பித்து அவர் ஒப்புதல் அளித்தால் இந்தக் கோட்டையை வைத்துக் கொள். அதை விட்டு விட்டு இப்படி நீயாக எடுத்துக் கொள்வதை  அனுமதிக்க முடியாது….”

“நல்லது அப்படியானால் நான் ஆதாரங்களுடன் சுல்தான் அவர்களிடமே பேசிக் கொள்கிறேன்…. நானே பீஜாப்பூர் சென்று அவரைச் சந்திக்கிறேன்…..”

சாம்பாஜி சொன்னான். “சரி அதற்கு முன் கோட்டையை எங்களிடமே ஒப்படைத்து விட்டுப் போ. சுல்தானின் ஆணையுடன் வந்தால் மறுபேச்சு பேசாமல் நாங்கள் கோட்டையைத் திருப்பித் தருகிறோம்….”

முஸ்தபா கான் யோசித்து விட்டுச் சொன்னான். “நான் என் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விட்டு சிறிது நேரத்தில் தெரிவிக்கிறேன்….”

சாம்பாஜி சம்மதித்தான். முஸ்தபா கான் தன் பாதுகாவலர்களுடன் கோட்டையை நோக்கித் திரும்பிச் செல்ல சாம்பாஜியும் தன் பாதுகாவலர்களுடன் தன் படையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். சில அடிகள் சாம்பாஜி சென்றிருப்பான். கோட்டையிலிருந்த பீரங்கியிலிருந்து வெடித்த குண்டு அவன் முதுகைத் துளைத்துச் சென்றது……

சாம்பாஜி வீழ்ந்தான்…..


சாம்பாஜியின் மரணச் செய்தி ஷாஹாஜியின் இதயத்தையும் துளைத்து விட்டது. அவருக்கு மிகப் பிரியமான மகன், அவரை அப்பா என்று முதல் முதலில் அழைத்து ஆனந்தப்படுத்திய அன்பு மகன், எப்போதும் அவரைச் சுற்றியே இருந்து அவரையே சார்ந்திருந்த மகன் இன்று அவரிடம் சொல்லாமல் பிரிந்து சென்று விட்டான். வீரமகன் போர்க்களத்தில் இறந்திருந்தால் குலமே பெருமையடைந்திருக்கும். ஆனால் வஞ்சிக்கப்பட்டு பேச்சு வார்த்தையின் போதே கொல்லப்பட்டு விட்டான். மனமுடைந்து உடல் தளர்ந்து சில கணங்கள் சிலையாய் இருந்து விட்டு ஷாஹாஜி கனககிரிக்கு உடனடியாகக் கிளம்பினார்.

புயலாய் அவர் படை கனககிரியைத் தாக்கியது. நீதி தேவனாய், எமனாய் படையுடன் வந்து கோர தாண்டவம் ஆடிய அவரிடம் முஸ்தபாகானால் நிறைய நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சரணாகதி அடைந்து மண்டியிட்டு உயிர்ப் பிச்சை வேண்டினான். “தலைவரே. மன்னித்து விடுங்கள். வேண்டும் என்று நான் உங்கள் மகனைத் தாக்கவில்லை. உண்மையில் அது விபத்து தான். தயார்நிலையில் பீரங்கியை வைக்கச் சொல்லி இருந்தேன். அப்படித் தான் வைத்திருந்தார்கள். தவறுதலாக கை பட்டு பீரங்கி வெடித்து விட்டது. அதில் சாம்பாஜி பலியாவார் என்று சத்தியமாய் நான் நினைக்கவில்லை.”

அவனை வெட்ட வாளை உயர்த்தியிருந்த ஷாஹாஜி முஸ்தபா கானை சாக்கடைப் புழுவைப் போல அருவருப்புடன் பார்த்தார். உண்மையிலேயே இவன் முதுகெலும்பில்லாத, வீரமும் இல்லாத நீச்சப் புழு தான்…. ஆனால் புழுவும் வாழவே விரும்புகிறது…..

முஸ்தபா கானின் கண்ணில் எல்லையில்லாத பீதி தெரிந்தது. ஷாஹாஜிக்கு இந்தப் புழுவை வெட்டி வாளின் பெருமையைக் களங்கப் படுத்தப் பிடிக்கவில்லை. ”கைது செய்யுங்கள் இவனை” என்று தன் வீரர்களிடம் ஆணையிட்டு விட்டு வாளை உறையில் வைத்தார். முஸ்தபா கான் நம்ப முடியாமல் அவரைத் திகைப்புடன் பார்த்தான். வீரர்கள் சங்கிலியால் அவனைப் பிணைத்து அழைத்துக் கொண்டு போனார்கள்.

அவருடைய தளபதி ஒருவன் அவர் அருகே வந்து சொன்னார். “தலைவரே. பீஜாப்பூர் வீரன் ஒருவன் இந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாகச் சுற்றிக் கொண்டிருந்தான். விசாரித்ததில் அவன் அப்சல்கானின் படைவீரன் என்று தெரிந்தது. சித்திரவதைக்குத் தயார்ப்படுத்தியவுடனேயே அவன் உண்மையைக் கக்கி விட்டான். அப்சல்கானிடம் இருந்து இரண்டு நாள் முன்பு நடுநிசியில் ஒரு ஓலையை முஸ்தபாகானிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். படித்து முடிந்து அந்த ஓலையை முஸ்தபா கான் எரிப்பதைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளும்படியும், பின் இங்கு நடப்பதை எல்லாம் பார்த்து வந்து சொல்லும்படியும் அப்சல்கான் அவனிடம் சொல்லியனுப்பியிருக்கிறான்….”

புழுவுக்குத் தைரியம் மட்டுமல்ல தந்திரம் செய்யும் அறிவும் கிடையாது. இரண்டும் யார் கொடுத்தது என்பது இப்போது சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிகிறது. அப்சல்கான்! ஷாஹாஜி அடிவயிற்றிலிருந்து ஆக்ரோஷத்தை உணர்ந்தார். ஆனால் அப்சல்கான் பாதுகாப்பான இடத்தில் பரமசிவன் கழுத்துப் பாம்பாய் இருக்கிறான். பீஜாப்பூர் சுல்தானின் சக்தி வாய்ந்த படைத்தலைவன் அவன். அவன் தான் இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியவன் என்பதை நிரூபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. சந்தேகத்தின் பேரில் தண்டிக்க ஆதில்ஷா கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்……..

“அப்சல்கானின் அந்த வீரனை என்ன செய்வது தலைவரே?” தளபதி கேட்டார்.   

“விட்டு விடுங்கள் அவனை” ஷாஹாஜி விரக்தியுடன் சொன்னார். ”அவனாக நம்மிடம் உண்மையைக் கக்கியதை அப்சல்கானிடம் சொல்ல மாட்டான். சொன்னால் உயிர் பிழைக்க மாட்டான். நமக்கு உண்மை தெரிந்து விட்டது என்பது அப்சல்கானுக்குத் தெரிய வேண்டாம்….”


பெங்களூர் திரும்பிய ஷாஹாஜி தன் மகன் சிவாஜிக்கு கனககிரியில் நடந்த சம்பவங்களை விரிவாகவே  தெரிவித்து விட்டு உருக்கமாக எழுதினார்.

”…..மரணத்தின் வாயிலில் இருந்த என்னை உன் சாமர்த்தியத்தினால் நீ காப்பாற்றினாய். ஆனால் உன் அண்ணனை என் சாமர்த்தியத்தினால் நான் காப்பாற்ற முடியவில்லை. விதிக்கு முன் எவர் சாமர்த்தியமும் வீண் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் மனம் வெடித்து உணர்கிறேன் மகனே!

விதி சமீப காலமாக என் பாதையில் வஞ்சகர்களையே அனுப்பி வைக்கிறது. பாஜி கோர்ப்படே என்னைக் கைது செய்த விதத்தை நீ அறிவாய். ஆனால் சுல்தான் ஆதில்ஷா அவனை நான் பழி வாங்கக் கூடாதென்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீற முடியாதவனாய் அவனைப் பொறுத்துக் கொண்டேன்.

உன் அண்ணனை வீழ்த்திய ஈனப்பிறவியைக் கொல்வது என் வாளுக்கே அகௌரவம் என்றும் விட்டு விட்டேன். உண்மையில் அவன் அம்பு மட்டுமே. அவனை எய்தியவனையும் பழிவாங்கும் நிலையில் நான் இல்லை. அம்பை எய்தியவன் நான் தொட முடியாத உயரத்தில் உட்கார்ந்திருக்கிறான். என்ன செய்வது மகனே, உன் தந்தையை விதி செயலற்றவனாகவே வைத்திருக்கிறது.

மகனே நீ உனக்கு தெய்வம் துணையிருக்கிறது என்று மிக ஆழமாய் நம்பி வருகிறாய். நம்பிய உன்னைத் தெய்வமும் கைவிடவில்லை என்பதை நானும் கண்டு வருகிறேன். ஆனால் உன் நம்பிக்கையில் கால் பகுதியும் எனக்கு தெய்வத்தின் துணை மீது இருக்கவில்லை. அதனால் தானோ என்னவோ தெய்வம் எனக்குத் துணை வந்ததில்லை.

உன் அண்ணனின் மரணத்தில் நான் பாதி மரித்து விட்டேன் மகனே. நான் அவனைப் போல யாரையும் நேசித்ததில்லை. பிள்ளைகள் மேல் இருந்த நேசத்தில் நான் பாரபட்சம் காட்டியதாலோ என்னவோ இறைவன் என்னிடமிருந்து நான் அளவுக்கதிகமாக நேசித்த அவனைப் பிரித்து விட்டான்.

வஞ்சித்தவர்களுக்கு நீதிதேவனாய், மாவீரனாய் தண்டனை வழங்கும் சக்தியற்ற நிலையில் நான் இருந்தாலும், சக்தி வாய்ந்தவனாய் நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில் நான் மனசமாதானம் கொள்கிறேன். அதுவே என் மீதி உயிரை இன்னமும் தக்க வைத்திருக்கிறது.

உன் தாயிடம் உன் அண்ணனின் மரணச் செய்தியைப் பக்குவமாய்ச் சொல். ஷிவ்நேரிக் கோட்டையில் இருந்து அவளிடம் பிரித்துச் சென்ற அவள் மூத்த குழந்தையைப் பின் அவளிடம் நான் சேர்க்கவில்லை. ஆனால் அவன் தூரத்திலாவது நலமாய் இருக்கிறான் என்பதால் அவள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. இப்போது அவனைப் பறிகொடுத்து விட்டு நிற்கும் அவளது கையாலாகாத கணவனை முடிந்தால் மன்னிக்கச் சொல்….”



(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. I believe that Most of us did not know that Sivaji had a elder brother named Sambahaji and his death was tragic and caused by AfzalKhan. From your novel only we came to know. Feel very sad especially after reading Shahaji's letter.

    ReplyDelete
  2. ஐயோ சாம்பாஜி மரணத்திற்கு உங்களை திட்டவும் முடியவில்லை. வரலாறு ஆகி விட்டது. ஷாஹாஜியின் கடிதம் கண்ணீர் வரவழைத்து விட்டது. இனி சிவாஜி என்ன செய்வான் என்று காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. Your books teaching us great things in simple way. Happily bought chatrapathi, amanushya anmigam and magasakthi manithargal at Chennai book fair. Thanks sir.

    ReplyDelete
  4. ஷாஹாஜிக்கு உண்மையிலே விதி எதிராகவே இருக்கிறது... தனக்கு சூழச்சி செய்தவர்களை பழி வாங்க முடியாத நிலை...

    ReplyDelete