சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 17, 2018

சத்ரபதி – 51


ஷாஹாஜி பயந்து கொண்டிருந்த விஷயத்தில் சிவாஜி தெளிவாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தான். ஷாஜஹானை இன்னொரு ஆதில்ஷாவாக அவன் அலட்சியமாய் நினைத்து விடவில்லை. அவன் சற்று அலட்சியமாக ஆதில்ஷா விஷயத்தில் இருந்ததே ஷாஹாஜிக்கு அபாயத்தை ஏற்படுத்தி பெரியதொரு படிப்பினையைத் தந்துவிட்டிருந்தபடியால் ஆதில்ஷாவை விட ஆயிரம் மடங்கு எச்சரிக்கையுடன் ஷாஜஹானிடம் இருக்க அவன் முடிவெடுத்திருந்தான்.

ஷாஜஹானைப் போன்ற பெரும் நிலப்பரப்பை ஆளும் சக்கரவர்த்திக்குப் பல பக்கங்களில் இருந்தும் தினசரி பல பிரச்னைகள் வந்து கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது. அதில் பலதும் உடனடியாக அவர் கவனிக்க வேண்டியதாக இருக்கும். அப்படி இருக்கையில் அத்தனை அவசரமில்லாத, ஆபத்தில்லாத விஷயங்களை அவர் அமைதியான காலங்களிலேயே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். அவன் விஷயமும் அப்படிப்பட்ட குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இப்போது இருப்பதால் அவர் உடனடியாக எதுவும் கேட்க மாட்டார் என்று சிவாஜி கணக்குப் போட்டான்.

அவன் கணக்கு சரியாகவே இருந்தது. ஷாஜஹானின் பிள்ளைகளுக்குள் ஒற்றுமை இருக்கவில்லை. மகன்கள் அவ்வப்போது பிரிவதும் சேர்வதுமாக இருந்தார்கள். ஷாஜஹானின் மகள்கள் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு சகோதரனுடன் சேர்ந்து கொண்டு தங்கள் பங்குக்கு தாங்களும் அரசியல் காய்களை நகர்த்தினார்கள். வயதான ஷாஜஹானுக்கு குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கவே அதிக நேரம் தேவைப்பட்டது. அத்துடன் பல இடங்களில் எல்லைப் பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. இத்தனை விஷயங்களைக் கவனிக்க வேண்டி இருக்கையில் சிவாஜி முகலாயர் சேவையில் இணைவதை உறுதிப்படுத்த எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.

ஆறு மாதங்கள் கழித்து தான் ஷாஜஹான் தக்காணப்பீடபூமியின் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த இளவரசர் முராத் மூலமாக சிவாஜி முன்பு சொன்ன விஷயமாக என்ன உத்தேசித்திருக்கிறான் என்று கேட்டு ஒரு மடல் வந்தது. சிவாஜி முடிவைச் சொல்வதற்கு முன்பு,  ஒரு காலத்தில் அவன் தந்தை வசம் இருந்த அகமதுநகர் பகுதிகளின் நிர்வாகத்தைத் திருப்பித் தருமாறு சாமர்த்தியமாக வேண்டிக் கொண்டு ஒரு மடலை இளவரசர் முராத்துக்கு அனுப்பினான். அந்த மடலை முராத் ஷாஜஹானுக்கு அனுப்பி வைத்தான். ஷாஜஹான் ஷாஹாஜியின் பழைய உரிமைகளைத் திருப்பித் தர ஆர்வம் காட்டவில்லை. சிவாஜி முகலாயர் சேவையில் இணைய வருகையில் இது குறித்து ஆதாரங்களுடன் தன் பங்கு நியாயத்தைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அப்போது அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஷாஜஹான் பதில் சொல்ல அந்த விஷயம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

சிவாஜி ஆசைப்பட்டதும் அதைத்தான். இப்போதைய இக்கட்டான நிலைமையில் பாதுகாப்பாக இருக்க அமைதி காப்பது முக்கியம் என்று கணக்குப் போட்ட சிவாஜி பீஜாப்பூர் சுல்தானிடமோ, முகலாயர்களிடமோ எந்தப் பிரச்னைக்கும் போகாதது மட்டுமல்ல, இருக்கும் இடம் தெரியாதபடி அமைதி காத்தான். தன் முழுக்கவனத்தையும் நிர்வாகத்திலும் கோட்டைகளின் முறையான பராமரிப்பிலும் சிவாஜி கவனம் செலுத்த ஆரம்பித்தான்.



ரு நாள் மாலை மாளிகையில் அவன் இளைப்பாறிக் கொண்டிருந்த போது ஒரு யாத்ரீகன் தெருவில் பாடிக் கொண்டு போனான்:

”அனைவரிடத்திலும் ஆண்டவன் குடியிருக்கிறான்.
அதனால் அனைவரும் வணங்கத்தக்கவரே!
ஆனால் அவர்களது பண்புகளையும் ஆசைகளையும்
அரவணைத்துக் கொள்ளலாகாது!
தீ மூட்டிக் குளிர் விலகும் என்றாலும் யாரும்
தீயைத் துணியில் முடிந்து கொள்வதில்லை.
அதனால் துகா சொல்கிறான்:
“தேளிலும் பாம்பிலும் விட்டலன் இருந்தாலும்
தொட்டு வணங்காமல் தூரத்தில் வணங்கலாமே!”

பாடலைக் கேட்டவுடன் சிவாஜிக்கு அவன் ஆசிரியர் நினைவுக்கு வந்தார்.  பெரிய பெரிய தத்துவங்களை எளிய வார்த்தைகளில் சொல்லிப் புரிய வைப்பதில் தாதாஜி கொண்டதேவ் அதிசமர்த்தர். இந்தப் பாடலிலும், எளிமையிலும் அடங்கி நின்ற தத்துவத்தின் ஆழம் அவனை வியக்க வைத்தது. சிவாஜி ஒரு வீரனை அனுப்பி அந்த யாத்திரிகனை வரவழைத்தான்.

தெருவில் சத்தமாகப் பாடிச் சென்றது அரசனைத் தொந்தரவு செய்து விட்டதோ என்ற சந்தேகப் பதட்டத்துடன் அந்த யாத்திரிகன் சிவாஜி முன் வந்து நின்றான். அவன் குற்ற உணர்ச்சி தோற்றத்தில் தெரிய சிவாஜி புன்னகைத்தான்.

“மிக அருமையான, கருத்தாழம் மிக்க பாட்டைப் பாடினீர்கள் அன்பரே” என்று சொல்லி சிவாஜி அந்த யாத்திரிகனை இயல்பு நிலைக்கு மாற்றினான்.

அந்த யாத்திரிகனின் முகம் முதலில் நிம்மதியைக் காட்டிப் பின் பரவசத்திற்கு மாறியது. “துகாராம் அவர்களின் பாடல் அது அரசே. இறைவனை நெருங்கச் செய்யும் பாடல்களில் ஆழமும், சிறப்பும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.”

சிவாஜி துகாராமைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் அவரைச் சந்தித்ததில்லை….

சிவாஜி கேட்டான். “அவருடைய பாடல்கள் அனைத்தையும் அறிவீரா யாத்திரிகரே”

“சிலவற்றை அறிவேன் அரசே. அவற்றைப் பாடிக் கொண்டே போகையில் போகுமிடம் நெருங்குவது மட்டுமல்லாமல் இறைவனையும் நெருங்குவது போல் உணர்வு ஏற்படுகிறது என்பதால் பயணத்தின் பிரயாசை தெரியாமல் இருக்க பாடிக் கொண்டே செல்கிறேன்”

சிவாஜி அந்த யாத்திரிகனை மேலும் சில துகாராம் பாடல்களைப் பாடச் சொன்னான். தயக்கமில்லாமல் அந்த யாத்திரிகன் சில பாடல்களைப் பாடப் பாட சிவாஜி மானசீகமாக வேறு உலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தான்.
                                            
“உன்னையே வணங்கி நிற்கும் என்னை
உன்னவனாக ஆக்கிக் கொள் இறைவா.
உன் நினைவில் இருக்கிறேன், உன்னை நம்பி இருக்கிறேன்
இது போதும் எனக்கு, இனி ஒன்றும் நான் வேண்டேன்.
கவனத்தைச் சிதற வைக்கப் பல உண்டு இவ்வுலகில்
காண்பதெல்லாம் வேண்டுமென்று பிடித்துக்கொள்ளும்
கோமாளிகளாகவே அனைவரும் இருக்கிறார்கள்.
அவர்கள் சொத்து என்று சேர்ப்பதை எல்லாம்
குப்பையாகவே நான் நினைக்கின்றேன்.
மரணம் வரை விதி விரிக்கும் வலையில்
சிந்திக்காமல் சிக்கிச் சீரழிக்கிறார்களே மக்கள்!”

அந்த யாத்திரிகனுக்கு உணவும், பரிசுப் பொருள்களும் தந்து கௌரவித்து சிவாஜி அனுப்பி வைத்தான். ஆனால் அந்தப் பாடல்கள் அவனிடம் தங்கி விட்டன. ஏதோ ஒரு தவிப்பை அவன் ஆத்மா உணர ஆரம்பித்தது. ’மரணம் வரை விதி விரிக்கும் வலையில் சிந்திக்காமல் சிக்கிச் சீரழியும் மனிதர்களில் நானும் ஒருவன் அல்லவா?’ என்று தோன்ற ஆரம்பித்தது.

துகாராம் எங்கு வசிக்கிறார் என்று சிவாஜி விசாரித்தான். பாண்டுரங்க விட்டலனின் கோயில்கள் வாசலில் தான் அவர் அதிகம் இருப்பார் என்றும், மற்ற சமயங்களில் விட்டலனைப் பற்றிப் பாடிக் கொண்டே கால் போன போக்கில் போய்க் கொண்டிருப்பார் என்றும் சொன்னார்கள். சிவாஜி துகாராமை அழைத்து வந்து தன் அரண்மனையிலேயே இருத்திக் கொள்ள ஆசைப்பட்டான். அரண்மனைக்கு வந்து தங்கியருளும்படி மடல் எழுதி, அதைப் பொற்காசுகள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள், பல்லக்குடன் அவருக்கு அனுப்பி வைத்தான்.

ந்த யாத்திரிகன் சொன்னது போலவே துகாராமை சிவாஜியின் வீரர்கள் பாண்டுரங்க விட்டலனின் கோயில் ஒன்றின் வாசலில் கண்டுபிடித்தார்கள். கந்தல் உடையில் மெலிந்த உருவத்திலிருந்த  துகாராம் பல்லக்கை எடுத்துக் கொண்டு வந்த வீரர்கள் அரசகுடும்பத்து ஆட்களை கோயிலில் வழிபடுவதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் செல்ல வழிவிட்டு ஓரமாக உட்கார்ந்து கொண்டார்.

பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை. வீரர்களும் கோயிலுக்குள் நுழையாமல் அவரிடம் வந்து பழங்கள், பொற்காசுகள், பட்டு வஸ்திரங்கள் எல்லாம் முன் வைத்து வணங்கினார்கள். வணக்கத்திற்குப் பின் அவர்கள் சிவாஜியின் மடலையும் நீட்டியதும் துகாராம் அதைத் திகைப்புடன் வாங்கிக் கொண்டார். பிரித்துப் படித்தபின் அடக்க முடியாத பெருஞ்சிரிப்பு சிரித்த துகாராம் உள்ளே கருவறையில் நின்றிருந்த விட்டலனை எட்டிப் பார்த்தார்.

“விட்டலா. உன்னை நான் அவ்வளவு தொந்தரவு செய்கிறேனா என்ன? என்னை இங்கிருந்து துரத்தப் பட்டும், பொன்னும், பல்லக்கும் வைத்து ஆசை காட்டுகிறாயே இது நியாயமா? இதற்கெல்லாம் மசிபவனா நான்? என்னைச் சோதித்துப் பார்ப்பதை நீ இன்னும் நிறுத்தவில்லையா?....” என்று விட்டலனிடம் பேச ஆரம்பித்த துகாராமை வீரர்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

(தொடரும்)

என்.கணேசன்

6 comments:

  1. Calculation and understanding of Sivaji about Shahjahan shows his great intelligence and his interest in Tukaram's songs shows his real spiritual longing. What next? I am waiting.

    ReplyDelete
  2. சிவாஜியின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டி இருக்கிறீர்கள். துகாராம் கடைசியில் கடவுளிடம் பேசுவது சூப்பர். இதில் கூட அடுத்து என்ன என்று சின்னதாய் சஸ்பென்ஸ் வைக்கிறீர்களே சார்.

    ReplyDelete
  3. "அனைவரிடத்திலும் ஆண்டவன் இருக்கிறார்"....என்ற தத்தவத்தில் உள்ள குழப்பம் துகாராம் பாடலின் மூலம் தெளிவடைந்தது...
    அடுத்தப் பாடலும் அருமை... இறுதியில் இறைவனுடன் பேசும் விதமும் சிறப்பு...

    சிவாஜி ஆன்மீகப் பாதையில் செல்லப் போகிறானா?

    ReplyDelete