சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 20, 2018

இருவேறு உலகம் – 115

ந்த இல்லுமினாட்டி உறுப்பினரின் பெயர் நவீன்சந்திர ஷா. பூர்விகம் குஜராத் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கிலாந்தில். உலக வங்கியில் வைஸ் பிரசிடெண்டாக இருக்கிறான். அவனுடைய உறவினர் ஒருவர் மூலம் அவனைப் பற்றி விஸ்வம் கேள்விப்பட்டான். அதிபுத்திசாலி என்றும் உலக நாடுகளில் எல்லாம் அவனுக்குச் செல்வாக்கு நிறைய இருக்கிறதென்றும் கேள்விப்பட்டு அவன் வரலாற்றை விஸ்வம் ஆராய்ந்தான். அவனுடைய வேகமான வளர்ச்சியும், செல்வாக்கும் அவன் ஒரு இல்லுமினாட்டியாக இருக்கலாம் என்று தோன்ற வைத்தது.  அகமதாபாத்தில் தன் பூர்விக சொத்தின் ஒரு பகுதி விற்பனைக்காக கிறிஸ்துமஸ் விடுமுறையில் வந்தவன் சில நாட்கள் இந்தியாவில் இருந்தான். ஹிந்துஸ்தானி இசையிலும் ஓஷோவின் கருத்துக்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் என்று அறிந்த விஸ்வம் அவன் புனேயில் ஓஷோ தியான நிலையத்தில் ஒரு வார தியான வகுப்பில் கலந்து கொண்ட போது தானும் கலந்து கொண்டான். அவனை நட்பாக்கிக் கொண்டான். இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள். அவனிடம் ஓஷோ பற்றி ஆழமாகப் பேசினான். ஹிந்துஸ்தானி இசையின் உன்னதத்தைப் பாராட்டினான். மூன்றாவது நாளில் ஆழ்நிலைத் தியானத்துக்குப் போய்க் காட்டினான். நவீன்சந்திர ஷா சந்தேகத்தோடு கேட்டான். “இவ்வளவு பாண்டித்தியம் பெற்ற நீ எதற்கு இந்த தியான வகுப்புக்கு வந்தாய்?”

“ஓஷோ சூழலில் ஒருவாரம் இருக்க ஆசைப்பட்டு தான்” என்றான் விஸ்வம்.

நவீன்சந்திரா ஷா புன்னகைத்தான். “ஆழ்நிலை தியானத்துக்குப் போகிற போது நீ எப்படி உணர்கிறாய்?” என்று கேட்டான்.

“அந்த நிலையில் பல விஷயங்கள் தெரிகின்றன. அது ஒரு பிரம்மாண்டமான உணர்வு. அந்த உணர்வில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அடுத்தவர்கள் மனதில் இருப்பது உட்பட….”

நவீன்சந்திர ஷா உடனடியாக அதுசரி தானா என்று பார்க்க எண்ணினான். “சரி நான் ஒன்றை நினைக்கிறேன். நீ கண்டுபிடித்துச் சொல்கிறாயா பார்ப்போம்…” என்றான்.

சில நிமிடங்களில் ஆழ்நிலை தியானத்திற்குப் போனதாய் காட்டிக் கொண்ட விஸ்வம் சொன்னான். “நீ உன் பூர்விக வீட்டில் இருக்கும் தாத்தாவைப் பற்றி நினைத்தாய்…. “

விஸ்வம் சொன்னதையே நினைத்திருந்த நவீன்சந்திர ஷா திகைத்தான். பின் மெல்லக் கேட்டான். “எல்லா ரகசியங்களையும் இப்படியே உன்னால் தெரிந்து கொள்ள முடியுமா?”

“பெரும்பாலும் மனிதர்கள் மனதில் உள்ளதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் பிரபஞ்சத்தில் எத்தனையோ ரகசியங்கள் இருக்கின்றன. அவை எல்லாம் உணர்வது கஷ்டம்” விஸ்வம் உண்மையையே சொன்னான். உதாரணத்துக்கு  அவனுடைய விதியிலேயே எல்லாம் பார்க்க முடிந்த ஜிப்ஸிக்கு ஒரு பகுதி மங்கலாகத் தான் தெரிந்திருக்கிறது. விஸ்வத்துக்கே ஏராளமான சக்திகள் இருந்தாலும் வசப்படாத சத்தியங்கள் எத்தனையோ இருக்கின்றனவே.

விஸ்வம் தொடர்ந்து மெல்லச் சொன்னான். “… இத்தனை தெரிந்த எனக்கே என் சம்பந்தப்பட்ட சிலதே புரிவதில்லை என்பதும் உண்மை. உதாரணத்துக்கு எனக்கு ஒரு கனவு அடிக்கடி வருகிறது. அதன் உண்மை என்ன, அந்தக் கனவு என்ன சொல்ல வருகிறது என்று என்னால் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை…..”

“என்ன கனவு?” நவீன்சந்திர ஷா ஆர்வத்துடன் கேட்டான்.

“ஏதோ ஒரு பெரிய பிரம்மாண்டமான கட்டிடம்…. அதன் அஸ்திவாரத்தில் ஒரு பெட்டி இருக்கிறது….. பெட்டியின் மீது ஒரு பிரமிடும் அதன் நடுவில் ஒரு கண்ணும் கொண்ட படம் தெரிகிறது. அந்தக்கட்டிடம் இடிக்கப்பட்டு சிலர் அந்தப் பெட்டியைக் கண்டுபிடித்துத் திறந்து பார்க்கிறார்கள். ஒரு பழங்காலச் சுவடி இருக்கிறது. யாரோ சொல்கிறார்கள். ”இதில் உன்னைப் பற்றிச் சொல்லி இருக்கிறது”. அதோடு நான் விழித்துக் கொள்கிறேன். எனக்கு இந்தக் கனவில் எதுவுமே புரியவில்லை. ஆனாலும் என் ஏழாவது வயதில் இருந்து வருடத்துக்கு ஒரு தடவையாவது இந்தக் கனவு வருகிறது….”

நவீன்சந்திர ஷா முகத்தில் இனம் புரியாத உணர்ச்சி வந்து போனது. அவன் நிறைய யோசிப்பது தெரிந்தது. ஆனால் அவன் அந்தக் கனவு பற்றி  ஒன்றும் சொல்லவில்லை. மாறாக விஸ்வத்தின் முழு வரலாறையும் கேட்டான். விஸ்வம் ஜிப்ஸி பற்றி சொல்லாமல் சிறு வயதில் இருந்தே தனக்கு அமானுஷ்ய சக்திகளின் மீது அளவற்ற ஆர்வம் என்று ஆரம்பித்து மற்றதை எல்லாம் ஓரளவு உண்மையாகவே சொன்னான். ஒவ்வொரு சக்தியையும் பெற்றது எப்படி என்று அவன் விவரித்த போது நவீன்சந்திர ஷா பிரமிப்புடன் அவனைப் பார்த்தான்.

விஸ்வம் ஏதோ ஒரு ரகசிய சக்தி இயக்கத்தில் சேர் என்று ஆழ்மனதில் ஒரு குரல் அடிக்கடிச் சொன்னதாகச் சொன்னான். அதனால் அவன் ஒரு ரகசிய ஆன்மிக இயக்கத்தில் சேர்ந்ததாகவும் அங்கு ஆன்மிக போதனைகளே மேல் ஓங்கி சக்தி, அதிகாரம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல் இயக்கத்தினர் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாகச் சொன்னான். ஆழ்மனதில் கேட்ட குரல் இந்த இயக்கம் பற்றி அல்லவோ என்று இப்போது தான் சந்தேகப்பட ஆரம்பித்திருப்பதாகச் சொன்னான். எல்லாமே நவீன்சந்திர ஷாவை நிறைய யோசிக்க வைத்தது. ஆனால் உடனே அவன் இல்லுமினாட்டி பற்றிச் சொல்லி விடவில்லை.  

விஸ்வம் சேர்த்த சக்திகளைச் சோதித்துப் பார்க்க விரும்பிய நவீன்சந்திர ஷாவுக்கு அந்த ஒருவாரத்திலேயே விஸ்வம் தன் சக்திகளை வெளிப்படுத்தியும் காட்டினான். தியான வகுப்பில் சொற்பொழிவாற்ற வந்த ஒருவரைப் பேச விடாமல் தடுத்துக் காட்டினான். அந்தப் பேச்சாளர் வாயைத் திறப்பதும் மூடுவதுமாகவுமே இருந்தாரே ஒழிய அவருக்குப் பேச்சு வரவில்லை. ஐந்து நிமிடம் கழித்து ‘இப்போது பேச விடு’ என்று நவீன்சந்திர ஷா ஒரு தாளில் எழுதிக்காட்டிய பிறகு தன் சக்தியை விஸ்வம் விலக்கிக் கொண்டான். “நண்பர்களே” என்று பேச ஆரம்பித்த அந்தப் பேச்சாளர் பேச்சு திரும்பவும் வந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனது இருவருக்கும் வேடிக்கையாக இருந்தது.

கடைசி நாளில் தியான அனுபவம் பற்றிப் பேச எழுந்த ஒரு இளைஞனை விஸ்வம் தியானத்துக்குப் பதிலாக அந்த இளைஞனின் காதல் அனுபவம் பற்றிப் பேச வைத்தான். எல்லோரும் தியானத்துக்கும் இவன் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்துக் கொண்டே இருந்த போது அவனைத் தியானம் பற்றிப் பேசாமலேயே விஸ்வம் பேச்சை முடிக்கவும் வைத்தான். நவீன்சந்திர ஷாவுக்கு அதைப் பார்க்கையில் பிரமிப்பு கூடியது.  ஆனால் அவன் இல்லுமினாட்டி பற்றி கடைசி வரை விஸ்வத்திடம் பேசவில்லை. மாறாக தொடர்பில் இருப்போம் என்று சொல்லி செல்போன் நம்பரை மட்டும் தந்து விட்டு நவீன்சந்திர ஷா பிரிந்தான்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒருநாள் லண்டனுக்கு வர முடியுமா என்று கேட்டு நவீன்சந்திர ஷா போன் செய்தான். அவன் காரணம் சொல்லா விட்டாலும் விஸ்வம் உடனே ஒத்துக் கொண்டான். அங்கு போன போது வேறு இரண்டு பேரை நவீன்சந்திர ஷா தன் நண்பர்களாக அறிமுகப்படுத்தினான். இருவரில் ஒருவர் ஸ்காட்லாண்டு யார்டில் பெரிய பதவியில் இருந்தார். இன்னொருவர் நாசாவில் விஞ்ஞானியாக இருந்தார். இருவரும் விஸ்வத்தின் கனவு, சிந்தனைகள் பற்றி ஆர்வத்துடன் கேட்டார்கள். அவர்களும் மனதில் சில வித்தியாசமான நினைவுகளை நினைத்து விட்டு அதைக் கண்டுபிடிக்க சொல்லிக் கேட்டார்கள். ஸ்காட்லாண்டு யார்டுக்காரர் நினைத்தது சிறுவயது கிரிக்கெட் விளையாட்டை என்று ஆரம்பித்த விஸ்வம் அவர் விளையாடியது எங்கே, கூட விளையாடிய நண்பர்கள் பெயர்கள் என்ன என்றெல்லாம் சொன்னான். நாசா விஞ்ஞானி நினைத்தது தாயின் மரணத்தை என்று ஆரம்பித்து அது எப்போது எப்படி நிகழ்ந்தது என்றும் சொன்னான். அவர்கள் பிரமித்துப் போனார்கள். அப்போது தான் இல்லுமினாட்டி பற்றியும், தாங்கள் அதன் அங்கத்தினர் என்றும் சொன்னார்கள்.

விஸ்வம் அந்த இயக்கம் இருப்பது உண்மை தானா என்று கேட்டு முறையான ஆச்சரியத்தைக் காட்டினான். அவர்கள் உனக்கு அதன் அங்கத்தினராக விருப்பமா என்று கேட்டார்கள். ”கண்டிப்பாக அது என் பாக்கியம்” என்று விஸ்வம் சொன்னான். உடனே அவனை லண்டனில் உள்ள ஒரு ரகசிய இல்லுமினாட்டி ஆலயத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கு மேலும் இரண்டு முதியவர்கள் இருந்தார்கள். இருவரின் பெயர்கள் மட்டும் சொல்லி நவீன்சந்திர ஷா விஸ்வத்துக்கு அறிமுகப்படுத்தினான். அவர்கள் அவனைப் பற்றிச் சொல்லச் சொன்னார்கள். விஸ்வம் உண்மையும் பொய்யுமாய் கலந்து சொன்னான். தன் சக்திகளின் அளவைப் பாதியாக்கிச் சொன்னான். அவர்கள் அவன் சக்தி வாய்ந்தவன் என்பதை உணர வேண்டுமே ஒழிய அவனுடைய சக்தியின் முழு அளவு அவர்களைப் பயப்படுத்தி  விடக்கூடாது என்று நினைத்தான். அப்படியே அவர்கள் கண்டுபிடித்தாலும் அதைத் தன்னடக்கமாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று கணக்குப் போட்டான். இப்போது இந்தியாவின் ரகசிய ஆன்மிக இயக்கத்தில் இருப்பதையும் அதன் அதிகப்படியான ஆன்மிகம் அலுத்து விட்டது என்றும் சொன்னான். அவர்கள் கண்டுபிடிக்க முடியாத விவரங்களை எல்லாம் மறைத்தான்.

“நீ இந்த இயக்கத்தில் சேர்ந்தால் இந்த இயக்கத்துக்கு என்ன லாபம்? என்ன தரப் போகிறாய்” என்று ஒரு முதியவர் கேட்டார்.

“என் சக்திகள் எல்லாம் இந்த இயக்கத்துக்கு சமர்ப்பணம். பணமாக இவ்வளவு அனுப்புகிறேன்” என்று மிகப்பெரிய தொகையைச் சொன்னான்.

ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி அன்று ம்யூனிக் நகருக்கு வரச் சொன்னார்கள். அன்று இல்லுமினாட்டியின் சக்தி வாய்ந்த செயற்குழு கூடும் என்றும் அங்கு அவர்கள் முன் அவன் பேச வேண்டும் என்றும் அதன் பின் அவனைச் சேர்த்துக் கொள்வது பற்றித் தீர்மானிப்பார்கள் என்றும் இன்னொரு முதியவர் சொன்னார்.

விஸ்வம் நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்தான். நவீன்சந்திர ஷா விஸ்வத்திடம் உற்சாகமாகச் சொன்னான். “உன்னைச் சேர்த்துக் கொள்ளும் உத்தேசம் இல்லை என்றால் இங்கே வரை கூட உன்னை வரவழைத்து இருக்க மாட்டார்கள். அது சம்பிரதாய நிகழ்வு மட்டுமே. உறுப்பினராக மட்டுமல்ல உன்னை செயற்குழு உறுப்பினராகக் கூட அவர்கள் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. தகுதி வாய்ந்த சக்தி வாய்ந்த ஆட்களை எப்போதுமே இல்லுமினாட்டி தவற விடுவதில்லை”…..

விஸ்வம் அதன் பின்னர் தான் ஆன்மீக இயக்கத்திலிருந்து மிகப்பெரிய தொகையை இல்லுமினாட்டிக்கு அனுப்பி வைத்தான்….. ஒரு இயக்கத்தில் இருந்து கழன்று கொண்டவன் உலக விதியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த இன்னொரு இயக்கத்தில் இணையப் போகிறான்.

விஸ்வத்தின் விமானம் ம்யூனிக் நகரை வந்தடைந்தது.

(தொடரும்)
என்.கணேசன்  

5 comments:

  1. This classic thriller has taken jet speed and intensity after the entrance of Illuminati. Visvam's classic approach is awesome and perfect. Readers like me are beginning to like Viswam also.What next?

    ReplyDelete
  2. What Vishwam is planning to achieve by joining illuminati waiting for that part :)

    ReplyDelete
  3. Very different from other writers. Such a nice story. Keep rocking sir.

    ReplyDelete
  4. இலுமினாட்டிகளை தன் ஆதிக்கத்தில் கொண்டு வருவதன் மூலம் ,
    உலகை ஆட்டி ஆள் நினைக்கிறானா...?

    ReplyDelete
  5. இப்போதுதான் விஸ்வம் இல்லுமினாட்டி குழுவில் சேர போகிறானா...?

    இல்லுமினாட்டி குழு என்பது என்ன? என்பதனை விஸ்வத்தின் மூலமாக அறிய காத்திருக்கிறேன்.

    விஸ்வம் இல்லுமினாட்டி குழுவில் இணைய எடுக்கும் முயற்ச்சி அருமை...

    ஒருவழியாக விஸ்வத்தின் கடந்த காலம் அனைத்தும் வெளிபட்டுவிட்டது.
    இன்னும்... 'மாஸ்டர் மற்றும் க்ரிஷின் முதல் சந்திப்பில் நடந்ததை விஸ்வம் எவ்வாறு கண்டறிந்தான்?' கூறவில்லை...ஐயா...

    ReplyDelete