சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 27, 2018

இருவேறு உலகம் – 116



காலையில் கிளம்புவதற்கு முன்னும் சிசிடிவி கேமராவில் மனோகர் சிறிது நேரம் வெளிப்புறத்தை ஆராய்ந்தான்.  வெளிப்புறம் வழக்கம் போல் அமைதியாகவே இருந்தது. நிம்மதியடைந்தவனாகக் கிளம்பினான். அவன் கீழ்க்கதவைக் கிறீச்சிட்டுத் திறந்து பைக்கை வெளியே கொண்டு வந்த போது ஸ்கூட்டரில் காத்திருந்த அவனது சகா ஸ்கூட்டருடன் உள்ளே போனான்.

மின்னல் வேகத்தில்  இரண்டு பைக்குகளில் அங்கு வந்த நான்கு பேர் மனோகர் மீது பாய்ந்தார்கள். அவன் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன் இரண்டு பேர் அவனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு குடோனுக்குள் நுழைந்து விட்டார்கள். சாவகாசமாக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வெளியே என்ன சத்தம் என்று பார்க்க வெளியே வர முற்பட்ட மனோகரின் சகாவை மற்ற இரண்டு பேர்  தாக்கி மயக்கமடையச் செய்தார்கள்.

மேலும் இரண்டு பேர் ஒரு வேனிலும், இருவர் ஒரு காரிலும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களும் உள்ளே நுழைந்தவுடன் குடோன் கதவு மறுபடி சாத்தப்பட்டது.  எல்லாம் மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்து வெளிப்புறம் பழைய அமைதிக்கு மாறியது. மனோகருக்கு அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்ற உண்மை விளங்கவில்லை. அவன் மனதில் பெரும்பயம் குடி கொண்டது. போலீஸ்காரர்களை நினைத்து அல்ல. விஸ்வத்தை நினைத்து தான். அருமையான இடம், கச்சிதமான திட்டம், அளவான ஆட்களை வைத்து யார் கவனத்தையும் அதிகமாய் ஈர்க்காதபடி அவன் போட்ட திட்டம் எப்படி தோற்றுப் போனது?....

செந்தில்நாதன் “எங்கே ஹரிணி?” என்று கேட்டார். அவன் பதில் பேசவில்லை. அவனை உறுதியாக இருவர் பிடித்துக் கொள்ள மூன்றாவது ஆள் அவன் உடைகளைச் சோதித்து ஒரு சின்னத் துப்பாக்கி, இரண்டு சாவிக் கொத்துகள் ஆகியவற்றை எடுத்து செந்தில்நாதனிடம் நீட்ட அவர் எடுத்துக் கொண்டார். ஹரிணியை அழைத்துக் கொண்டே மாடி ஏறினார்.

ஹரிணிக்குக் கீழே கேட்ட அசாதாரணமான சில சத்தங்கள் தன்னைக் காப்பாற்றும் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் செந்தில்நாதன் அழைத்த குரல் கேட்ட பின் தான் முழுதாக நம்ப முடிந்தது. “நான் இங்கே இருக்கேன்” என்று கத்தியபடியே தானிருந்த அறையின் கதவைத் தட்டினாள்.

மனோகரிடம் இருந்து எடுத்த சாவிக் கொத்தில் ஒரு சாவி அந்த அறைக்கதவுக்குப் பொருந்தியது. உள்ளே இருந்து வெளி வந்த ஹரிணி பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதைக் கவனித்த செந்தில்நாதன் அவளது தைரியத்தை மனதிற்குள் மெச்சினார்.

ஹரிணி ஈரக் கண்களுடன் உணர்ச்சி வயப்பட்டு ”ரொம்ப நன்றி சார்” என்றாள். புன்னகையுடன் தலையசைத்த செந்தில்நாதன் முதலில் அவளை இருவருடன் காரில் பத்திரமாக அனுப்பித்து வைத்தார்.

மனோகர் அவரிடம் அமைதியாகச் சொன்னான். “எனக்கு முதலமைச்சர் கிட்ட பேசணும்”

இது செந்தில்நாதன் எதிர்பார்த்தது தான். “சரி என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லித் தலையசைக்க மூன்று பேர் சேர்ந்து மனோகர், மயங்கிக் கிடந்த அவன் சகா இருவர் வாயிலும் துணியை அடைத்து கைகால்களைக் கட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் அடைத்து அவர்களைக் கொண்டு போய் வேனில் போட்டார்கள். வெளியே அவர்கள் சாதாரணமாகப் பரபரப்பில்லாமல் நடந்து கொண்டார்கள்.  சரக்கை ஏற்றும் இயல்பான வேலை நடப்பது போல தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களுக்குத் தோன்றியது. அவர்களைக் கொண்டு போன பிறகு குடோனில் இருந்தவர்களில் இருவர் சிசிடிவி கேமராவில் ஆன பதிவுகளைப் பார்த்து கவனமாக அப்புறப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டார்கள். பின் செந்தில்நாதனும் மற்றவர்களும் குடோன் கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பி விட்டார்கள். முப்பத்தைந்து நிமிடங்களுக்குள் அவர்களுடைய வேலை முடிந்து விட்டது.


ரிணியின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. க்ரிஷ், உதய், பத்மாவதி மூவரும் அங்கு இருந்தார்கள். கிரிஜா மகளைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்து பேரழுகை அழுது மீண்டு இப்போது பெரும் சந்தோஷத்தில் இருந்தாள். யார் கடத்தினார்கள், எதற்குக் கடத்தினார்கள் என்பதெல்லாம் தெரியாது என்றும் செந்தில்நாதன் வந்து மீட்டார் என்றும் சுருக்கமாய் பொதுவாய் சொன்ன ஹரிணி தனியாக க்ரிஷிடம் ஆரம்பத்திலிருந்து நடந்ததை விவரமாகவே சொன்னாள். கிரிஜா விருந்தாளிகளுடன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள கேசரி செய்ய சமையலறைக்குப் போக பத்மாவதி உதயிடம் சொன்னாள். “ஏண்டா, நான் மஞ்சள் துணியை மூணா கிழிச்சதைக் கிண்டல் செஞ்சியே. இப்ப என்னடா சொல்றே. கடவுள் அருள் வேலை செஞ்சுதா இல்லயா?”

உதய் தாயிடம் மெல்லச் சொன்னான். “நான் செந்தில்நாதன் தான் வேலை செஞ்சாருன்னுல்ல நினைச்சேன்”

“கடவுள் மனுசன் மூலமா தான் எதையும் செய்வாருன்னு அன்னைக்கே சொன்னேனேடா. அவர் மேல நம்பிக்கை முக்கியம்.”

உதய் குரலை மேலும் தாழ்த்தி தாயிடம் ரகசியமாய் கேட்டான். “ஆனா கடைசில நீ கடவுளுக்கு பதில் கோடியைத் தானே நம்பினே. உண்மையச் சொல்லு”

பத்மாவதி மகனை முறைத்தாள். “சம்பந்தி வீடுன்னு பாக்க மாட்டேன் தடியா. ஓங்கி அறைஞ்சுடுவேன். கடவுள் சித்தம் காசு கொடுத்து தான் ஆகணும்னு இருந்தா அதுக்கும் தயங்காதேன்னு தானடா சொன்னேன். அந்தக் காசு நீ என்ன கஷ்டப்பட்டு சம்பாதிச்சதா?”

“கிழவி, நானும் சம்பந்தி வீடுன்னு பார்க்க மாட்டேன். எங்க அரசியல் பத்திப் பேசுனா உன் கழுத்தை நெரிச்சுடுவேன்….” உதயும் மிரட்டினான்.

கிரிஜா வந்து கேட்டாள். “என்ன அம்மாவும் பிள்ளையும் ரகசியம் பேசிக்கிறீங்க?”

பத்மாவதி வாயெல்லாம் புன்னகைக்கு மாறினாள். “கடவுள் தயவுல எல்லாம் நல்லாச்சுல்லன்னு பேசிகிட்டிருந்தோம். அவ்வளவு தான்.”

கிரிஜா ஆத்மார்த்தமாய் சொன்னாள். “நீங்க அன்னிக்கு மஞ்சள் துணில காசு முடிஞ்சு வைக்கச் சொன்னப்ப இப்படி நல்லது நடக்கும்னு உங்க அளவுக்கு நான் நம்பலை. ஆனாலும் உங்க அளவு திடமான நம்பிக்கை யாருக்கும் வராது….”

உதய் சொன்னான். “அதெல்லாம் ’கோடி’ல ஒருத்தருக்கு தான் வரும் ஆண்ட்டி”. மகன் கோடிக்குக் கொடுத்த பிரத்தியேக அழுத்தம் பார்த்து ரகசியமாய் மகனைக் கிள்ளினாள் பத்மாவதி.

க்ரிஷ் தனியாக வெளியே போய் மாஸ்டருக்குப் போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னான். ஹரிணி மீட்கப்பட்டதில் மகிழ்ந்த மாஸ்டர் விஸ்வம் ஆறாவதாக அனுப்பிய பணம் இல்லுமினாட்டிக்கு என்பதில் அதிர்ந்தார். கடத்தியவனை செந்தில்நாதன் தனியாக ஓரிடத்தில் அடைத்து வைத்திருக்கிறார், அவனிடம் விஸ்வம் குறித்த ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமா என்று முயற்சி செய்கிறார் என்று க்ரிஷ் சொன்ன போது சொன்னார். “க்ரிஷ், அவன் மூலமா அவர் விஸ்வத்தைக் கண்டுபிடிக்கறது இருக்கட்டும். அவன் மூலமா விஸ்வம் அவரைக் கண்டுபிடிச்சுடாம பார்த்துக்கச் சொல்….”

அது வரை அந்தக் கோணத்தில் யோசிக்காத க்ரிஷ் திகைத்தான். சக்தி அலைகள் பற்றி விஸ்வத்திற்கு இணையாக ஓரளவாவது அறிந்தவர் மாஸ்டர் மட்டுமே. க்ரிஷ் கவலையுடன் கேட்டான். “அதுக்கு என்ன செய்யலாம் மாஸ்டர்”

“இருட்டறைல அவனோட கண்களைக் கட்டி வைக்கச் சொல். அவன் கிட்ட எந்த விசாரணையும் வேண்டாம். பேச்சும் வேண்டாம். சாப்பிட மட்டும் ஏதாவது வேற ஆள் மூலமா அவனுக்குத் தரச் சொல். எந்தக் காரணத்தைக் கொண்டும் செந்தில் நாதன் அவன் பக்கத்துலக் கூட போக வேண்டாம். உடனடியா சொல்……”

உடனே க்ரிஷ் மாஸ்டர் சொன்னதை செந்தில்நாதனுக்குப் போன் செய்து சொன்னான். செந்தில்நாதன் மாஸ்டர் அதைச் சொல்லாமல் வேறு யார் அதைச் சொல்லி இருந்தாலும் மறுத்திருப்பார். ஆனால் அவர் மாஸ்டரை அறிவார். வட இந்தியாவில் விசாரித்ததில் எதிரியைப் பற்றியும் நன்றாகவே அறிவார். அவர் ஆபத்தை விலைக்கு வாங்க விரும்பவில்லை. மாஸ்டர் சொன்னபடியே மனோகரைக் கவனித்துக் கொள்ள சில ஆட்களை நியமித்து விட்டு, அமைதியாக முதலிலேயே உதய் அவருக்காக ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குப் போய் அடைக்கலமானார்.  


மாணிக்கத்திற்கு ஹரிணி  காப்பாற்றப்பட்ட செய்தி சற்று தாமதமாகத் தான் வந்து சேர்ந்தது. மணீஷிடம் அவர் சொன்னவுடன் அவன் முகத்தில் பல காலம் கழித்து சின்ன சந்தோஷம் தெரிந்தது. அவன் பெரிய மனபாரம் நீங்கியவனாய் அவளைப் பார்க்க விரைந்தான்.

சங்கரமணி மாணிக்கத்திடம் சொன்னார். “எதிரி எவ்வளவு பலசாலி. அப்படி இருக்கைல அவன் கிட்ட மாட்டின பொண்ணை செந்தில்நாதன் எப்படிடா மீட்டான்?’

அதைத் தெரிந்து கொள்ள மாணிக்கம் போலீஸ் டிபார்ட்மெண்டில் தொடர்பு கொண்ட போது அவர்கள் அறிந்திருக்கவில்லை. “உதய் கிட்ட தான் கேட்கணும். அவன் தான் செந்தில்நாதன் கூட இதுல நெருக்கமா இருந்தவன்” என்ற மாணிக்கம் உதய்க்குப் போன் செய்தார். “உதய். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பெரிய நிம்மதி. மணீஷ் முகத்துல ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் சிரிப்பையே பார்த்தேன். சரி எப்படி செந்தில்நாதன் கண்டுபிடிச்சார். கடத்துனது யாரு? ஏன் கடத்தினானாம். அவனைக் கைது செய்தாச்சா?”

“கடத்தினவன் தன்னை எக்ஸ்ன்னு தான் ஹரிணி கிட்ட அறிமுகப்படுத்தியிருக்கான். கடத்தினது எதுக்காகன்னு சொல்லலையாம். செந்தில்நாதன் அவளை பாதுகாப்பா அனுப்பிச்சுருக்கார். கடத்தினவனைக் கைது செய்துட்டு போலீஸ் ஸ்டேஷன் போறதா சொல்லி இருக்கார். ஆனா அப்பறமா அவர் கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை. போன் போட்டா ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்கு. என்ன ஏதுன்னு ஒன்னும் தெரியல”

மாணிக்கம் ஆபத்தை உணர்ந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்  

14 comments:

  1. ஆறாவது பாரவின் ஆரம்பத்தில்... "விஸ்வத்திடம்" இருந்து எடுத்த சாவிக் கொத்தில் ஒரு சாவி அந்த அறைக்கதவுக்குப் பொருந்தியது.///விஸ்வமா? மனோகரா???

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும். மனோகர் தான். மாற்றி விட்டேன்.

      Delete
  2. நல்லவர்கள் அணி...எதிரிக்கு பதிலடி கொடுப்பதை பார்க்கும் போது...சந்தோஷமாக உள்ளது...

    இந்த நேரத்தில் திரும்பி வர முடியாத முக்கிய வேலைக்கு ...விஸ்வம் சென்றிருக்கிறான்... இது தான் விதியோ..??

    விஸ்வம் திரும்புவதறக்குள்.. மாஸ்டர் அணியில்..இன்னும் என்ன என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  3. Very interesting. Uday- Padmavathi interactions are superb!

    ReplyDelete
  4. New year Bonus ஆ ஒரு Episode extra கொடுங்க sir

    ReplyDelete
    Replies
    1. போனஸ் தீபாவளிக்கு மட்டுமே!

      Delete
  5. At last happy to see Harini back home

    What Vishwam will do

    ReplyDelete
  6. செந்தில்நாதன் “எங்கே ஹரிணி?” என்று கேட்டார். அவன் பதில் பேசவில்லை. அவனை உறுதியாக இருவர் பிடித்துக் கொள்ள மூன்றாவது ஆள் அவன் உடைகளைச் சோதித்து ஒரு சின்னத் துப்பாக்கி, இரண்டு சாவிக் கொத்துகள் ஆகியவற்றை எடுத்து செந்தில்நாதனிடம் நீட்ட அவர் எடுத்துக் கொண்டார். ஹரிணியை அழைத்துக் கொண்டே மாடி ஏறினார்.
    - சார் இரண்டு சாவிக்கொத்துகளை எடுத்த செந்தில்நாதன்.மானோகரை அழைத்து தானே மாடிக்கு செல்வார்கள். எதற்கு ஹரிணி?
    தெளிவுபடுத்துங்க சார்

    ReplyDelete
    Replies
    1. ஹரிணி ஹரிணி என்று கூப்பிட்டுக் கொண்டே என்று பொருள் காண்க. அடுத்த பாராவில் செந்தில்நாதன் அழைத்த குரல் கேட்ட ஹரிணி நான் இங்கே இருக்கேன் என்று பதில் சொல்வதைக் கவனியுங்கள்.

      Delete
  7. நன்றி, சார்
    தங்களின் விளக்கத்திற்கு.

    ReplyDelete
  8. Harini safely returned ....
    Now what’ll Vishwam do, in the absence of Manohar...?

    ReplyDelete