சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 18, 2018

சத்ரபதி – 25



ம்மை நாமே ஆளும் சுயராஜ்ஜியம் என்பது எட்டமுடியாத கனவாகவே சிவாஜியின் நண்பர்களுக்கு, அவன் வார்த்தைகளில் பெரும் உற்சாகம் பெற்றிருந்த நிலையிலும் தோன்றியது. ஒரு நண்பன் அதை வாய்விட்டே சொன்னான். “சிவாஜி நான் சொல்வதை நீ தவறாக எடுத்துக் கொள்ளாதே. கேட்க மிக இனிமையாகத்தான் இருக்கிறது என்றாலும் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் இருப்பதாகவும் கூடத் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை”

சிவாஜி கேட்டான். “ஏன் முடியாது?”

”செய்து முடிக்க நம்மிடம் என்ன இருக்கிறது?”

தந்தையிடம் “என்னுடன் இறைவன் இருக்கிறான்” என்று கூறிய பதிலை சிவாஜி நண்பனிடம் கூறவில்லை. அமைதியாகச் சொன்னான். “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று சொல்வார்கள். நமக்குப் புல் அல்ல. இந்த சகாயாத்திரி மலையே இருக்கிறது. இந்த மலையை நாம் அறிந்தது போல முகலாயர்களோ, பீஜாப்பூர் படையினரோ அறிய மாட்டார்கள். இங்கு அவர்கள் வந்தால் நாம் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவே அவர்களுக்கு மாதக்கணக்காகும். அப்படிக் கண்டுபிடித்து நெருங்குவதற்குள் நாம் அவர்கள் அறியாமல் வேறிடம் போய்விட முடியும். மறுபடி கண்டுபிடிக்கப் பலகாலம் ஆகும். இப்படி நாம் இந்த மலையில் இருக்கும் வரை அவர்கள் வெல்லவே முடியாது”

இன்னொரு நண்பன் கேட்டான். “நாம் எல்லா நேரங்களிலும் இந்த மலையிலேயே இருந்து விட முடியுமா?”

“முடியாது தான். நமக்காவது நினைக்கும் நேரத்தில் இந்த மலையிலிருந்து இறங்கி நம் இடத்திற்குப் போய்விட முடியும். ஆனால் நம் எதிரிகளுக்கு அதுவும் முடியாததால் அவர்கள் இங்கு எக்காரணத்தைக் கொண்டும் வரவே மாட்டார்கள்.”

”சரி நாம் வசிக்கும் பூனா பிரதேசம்?” ஒரு நண்பன் கேட்டான்.

“அதுவும் நமக்குச் சாதகமான இடத்திலேயே இருக்கிறது. முகலாயர்கள் தலைநகருக்கு அது மிகத் தொலைவான இடம். பீஜாப்பூருக்கும் இது அருகாமை இடமல்ல. நாம் என்ன செய்தாலும் படையெடுத்து அவர்கள் இங்கு வருவதற்கு காலம் அதிகமாகும். இப்போதைக்கு அவர்கள் படையெடுத்து வந்து தாக்கும் அளவுக்கு நாம் பெரிய ஆட்கள் அல்ல.  நமது இப்போதைய இந்த ஆரம்ப நிலையும் இந்த விதத்தில் சாதகமே. அருகில் உள்ள  கோட்டைகளில் கூட பெரிய படை எதுவும் இல்லை. படைபலத்தில் மட்டுமல்ல அறிவிலும் கூட நம்மை பயமுறுத்துகிற கூர்மையை அக்கம் பக்கத்தில் என்னால் பார்க்க முடியவில்லை. இந்த சாதகங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளா விட்டால் நாம் என்றென்றைக்குமே அடிமையாக இருக்க வேண்டியவர்கள் தான்…”

அவர்களுக்கு அவன் சொல்வதை எல்லாம் யோசிக்கையில் சரி என்றே தோன்றியது. அவர்கள் கண்களின் அக்னியைக் குறைத்திருந்த சந்தேக மேகங்கள் விலகி மறுபடி அக்னி ஜொலித்தது. சிவாஜி சொன்னான். “தயக்கத்துடனேயே இருப்பவர்கள் தாழ்ந்த நிலைகளிலேயே தங்கி விடுகிறார்கள். சிந்தித்து தயார்ப்படுத்திக் கொண்டு முன்னேறுபவனுக்கே விதி கூட சாதகமாகச் செயல்படுகிறது. நம்முடைய எல்லாப் பற்றாக்குறைகளுக்கும் அடிப்படை மனப்பற்றாக்குறையே. அதை இன்று நாம் விட்டொழிக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?”

அவன் வார்த்தைகளால் எழுச்சி பெற்ற இதயங்களுடன் அவர்கள் சொன்னார்கள். “என்ன செய்ய வேண்டுமென்று சொல் சிவாஜி. நாங்கள் தயார்”

அருகிலிருந்த ரோஹிதேஸ்வரர் கோயிலிற்கு சிவாஜி அவர்களை அழைத்துச் சென்றான். அந்த மலைப்பகுதிச் சிறுகோயிலில் சிவலிங்கம் இருந்தது. அதன் முன் நின்று சிவாஜி தீப்பிழம்பாய் சொன்னான். “இறைவன் ஆசி இருந்து மனிதன் முழு மனதுடன் இறங்கினால் முடியாதது எதுவுமில்லை.  வாருங்கள் இறைவனை வணங்கி சபதம் எடுப்போம்….”

ரோஹிதீஸ்வரரை  வணங்கி எழுந்த சிவாஜி தன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்துத் தன் கட்டை விரலைக் கீறி சிவலிங்கத்தை இரத்தத்தால் நனைத்தபடி சபதம் செய்தான். ”சுயராஜ்ஜியமே எனது குறிக்கோள். அதை அமைக்கும் வரை நான் ஓய மாட்டேன். இறைவா உன் மேல் ஆணை!”

அவன் நண்பர்களும் அப்படியே சபதம் செய்தார்கள். பாரத தேசத்தின் அந்த மலைக்கோயிலில் ஒரு பெருங்கனவுக்கான விதை விதைக்கப்பட்டது!

ன்றிரவு தாதாஜி கொண்டதேவ் பகவத்கீதையைப் படிக்க ஆரம்பித்திருந்ததால் அவரும் சிவாஜியும் மட்டுமே அங்கிருந்தார்கள். புராணக்கதைகள் கேட்பதில் இருக்கும் ஆர்வம் தத்துவார்த்த சிந்தனைகளைக் கேட்பதில் மாணவர்களுக்கு இருப்பதில்லை என்பதில் தாதாஜி கொண்டதேவுக்கு எப்போதும் வருத்தமே. ஆனால் நல்ல வேளையாக சிவாஜிக்கு தத்துவங்கள் கசப்பதில்லை. அவன் விரும்பிக் கேட்பதுடன் அது குறித்து விவாதங்களும் செய்வான். கர்மயோக சுலோகங்களைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிக் கொண்டே வந்த போது தான் சிவாஜியின் கட்டை விரலில் இருக்கும் காயத்தை தாதாஜி கொண்டதேவ் கவனித்தார். ”விரலில் என்ன காயம்?”

சிவாஜி உண்மையைச் சொன்னான். தாதாஜி கொண்டதேவ் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தார். ”சிவாஜி உன் தந்தை உனக்கு அறிவுரை எதுவும் கூறவில்லையா?”

”கூறினார். அதை ஏன் என்னால் ஏற்க முடியாது என்று விளக்கினேன்” என்று சிவாஜி அமைதியாகச் சொன்னான்.

“அதைக் கேட்டு என்ன சொன்னார்?”

“ஆசி வழங்கினார்….”

தாதாஜி கொண்டதேவ் வாயடைத்துப் போனார். அவர் முகத்தில் வேதனை வெளிப்படையாகத் தெரிந்தது. சிவாஜி அவருக்கு வேதனை ஏற்படுத்தியதற்காக வருத்தப்பட்டான். இன்று அவன் கற்றிருந்த எத்தனையோ விஷயங்கள் அவர் போட்ட அறிவுப் பிச்சை. அவர் காட்டிய அன்புக்கு அவன் கைம்மாறு எதுவும் செய்ய முடியாது. மிக நல்ல மனிதர். ஆனால் அவரால் ஒரு வட்டத்தைத் தாண்டி சிந்திக்க முடியாது. அது அவர் பிழையல்ல. அவர் வாழ்ந்த காலத்தின் பிழை. சூழலின் பிழை. அதைத் தாண்டி சிந்திப்பது கூடத் தவறு என்று போதிக்கப்பட்டு அதை உறுதியாக நம்புபவர். அந்த விஷயத்தில் அவனை அவர் மாற்ற முடியாதது போலவே அவரை அவன் மாற்றவும் முடியாது.

சிவாஜி பணிவுடன் மென்மையாக அவரிடம் பேசினான். “உங்களை வேதனைப்படுத்தியதற்கு என்னை மன்னித்து விடுங்கள் ஆசிரியரே. கர்மயோகத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். க்ஷத்திரிய தர்மம் என்னவென்று அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் சொன்ன உபதேசம் எனக்கும் பொருந்தும் என்றே நான் கருதுகிறேன். நானும் க்ஷத்திரியனே. அடிமைத்தளையிலிருந்து விடுபடாமல் இருப்பதும், போராடாமல் இருப்பதும் எனக்கும் அவமானமே. உங்களிடமிருந்து கற்ற கீதையும், வரலாறும் எனக்கு அதையே உணர்த்துகிறது. ஏதோ பழங்கதையாய் கேட்டு வாழ்க்கைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளாமல் நகர்வது நான் கற்ற கல்விக்கு நான் ஏற்படுத்தும் அவமரியாதை என்றே நான் நினைக்கிறேன்….. நான் எனது தர்மத்தைக் கடைபிடிக்க அனுமதியளியுங்கள் ஆசிரியரே!”

தாதாஜி கொண்டதேவ் பெரும் மனக்கொந்தளிப்பில் இருந்தார். மெல்லச் சொன்னார். “ஆனால் என் தர்மம் அதை அனுமதிக்க மறுக்கிறதே சிவாஜி! இந்த மண்ணை ஆள்கிற சுல்தானுக்கும், நான் கூலி வாங்கும் உன் தந்தைக்கும் செய்கிற துரோகமாக எனக்குத் தோன்றுகிறதே!”

“சரி. உங்கள் தர்மத்தை மீற நான் உங்களை வற்புறுத்தவில்லை. என் அந்தச்செயல்களில் உங்களைப் பங்கு கொள்ள அழைக்க மாட்டேன். ஆனால் என் தந்தையைப் போல நீங்களும் எனக்கு ஆசி வழங்குங்கள் ஆசிரியரே அது போதும்….”

அவர் அதற்கும் தயங்கினார். அவன் சொன்னான். “மாதா, பிதா, குரு, தெய்வம் ஆசியில்லாமல் எதுவும் வெற்றியடையாது என்பார்கள். நான் எடுத்துக் கொண்ட இந்தப் பணியில் என் தாயின் ஆசியை நான் என்றுமே உணர்ந்திருக்கிறேன் ஆசிரியரே. தந்தையும் அனுமதிக்கா விட்டாலும் ஆசிவழங்கியிருக்கிறார். இறைவனிடமும் ஆசி வாங்கி விட்டேன். உங்கள் ஆசி மட்டும் தான் மீதமிருக்கிறது. அது கிடைக்காமல் என் பணி பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. என் தர்மத்தின் பாதையில் நான் போக வேண்டும் என்று போதித்த நீங்கள் அப்படிப் போவதில் வெற்றியடைய ஆசி வழங்குவது தவறு என்று எந்த நீதியும் சொல்லாது. என்னை ஆசிர்வதியுங்கள் ஆசிரியரே!”

அவன் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்து வணங்கினான். அவர் பேரன்புடன் அவனைப் பார்த்து விட்டு கண்களை மூடி மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார். ”இறைவன் உனக்குத் துணையிருந்து வெற்றி அடைய வைக்கட்டும்!”

சிவாஜி புது சக்திப் பிரவாகத்துடன் எழுந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. சுஜாதாJune 18, 2018 at 7:10 PM

    சிவாஜி ஆசிரியரிடம் சாமர்த்தியமாக பேசி ஆசிகள் வாங்குவதை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. சுஜாதாJune 18, 2018 at 7:12 PM

    Sivaji's arguments show his depth and leadership qualities. How he wins others is superbly shown step by step.

    ReplyDelete
  3. Excellent episode sir. Very inspirational.

    ReplyDelete
  4. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அனைவரின் ஆசியும் எவ்வளவு முக்கியம் என்பதை அழகாக எடுத்து கூறியதற்கு நன்றி.

    ReplyDelete
  5. சிவாஜி நண்பர்களுடனும் ஆசிரியருடனும் சாமர்த்தியமாக பேசும் விதம் அருமை...

    சிவாஜி அனைத்து திட்டங்களும் அருமை...

    ReplyDelete
  6. கண்கள் பணிக்கின்றன. என்னே ஓர் உணர்ச்சி பிழம்பு !

    ReplyDelete