என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, June 4, 2018

சத்ரபதி 23


ஜீஜாபாயின் வார்த்தைகள் ஷாஹாஜியின் மன ஆழத்தில் இருந்த காயங்களைப் புதுப்பித்தன. இழந்த கனவுகளையும், பெற்ற வலிகளையும் எண்ணுகையில் மனதில் கனம் கூடியது. அவர் இழந்த கனவுகளுக்குக் காரணம் இன்றைய அரசியல் சூழல்கள் தான். எத்தனையோ போராடியும் முடியாமல் போய் தான் இப்போதைய பாதுகாப்பான நிலையில் தங்கி விட்டிருக்கிறார். இந்த அரசியல் சூழல்கள் மாறவில்லை. இன்று அவர் இளைய மகன் கனவுகளுடன் கிளம்பியிருக்கிறான். ஜீஜாபாய் சொல்வது போல அவன் கனவுகளாவது பலித்தால் அவருக்கு மகிழ்ச்சியே! ஆனாலும் அவனும் அடிபட்டு வேதனையடைந்தால் அவனை விட அவருக்கே அது அதிகம் வலிக்கும். காரணம் அவன் வலிகளோடு அவர் வலிகளும் சேர்ந்து கொள்ளும். அடிகளோடு நின்று விட்டால் பரவாயில்லை, அவன் தீவிரத்தைப் பார்த்தால் சில சமயங்களில் அழிவையும் கூட நாடிக் கொள்வான் என்ற பயம் அவர் மனதை அரித்தது. இதையெல்லாம் அவர் ஜீஜாபாயிடம் சொல்ல முடியாமல் தவித்தார். அவள் பயத்தையும் அதிகப்படுத்துவதில் அர்த்தமில்லை.

அன்றிரவு சிவாஜியை அழைத்து பேரன்புடன் பேசினார். “சிவாஜி இப்போதைக்கு உன்னை அமைதிப்படுத்திக் கொள்ள பூனாவிற்கே திரும்பவும் அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன். ஆனால் உன் எதிர்காலம் குறித்து ஒரு முடிவுக்கு நீ வர வேண்டும். ஒன்றோ இரண்டோ வருடங்கள் கழித்தாவது நீ என்ன செய்யப் போகிறாய் என்பதை முடிவு செய்ய வேண்டும். எனக்குத் தெரிந்து உன் சிறப்பான எதிர்காலத்திற்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று பீஜாப்பூர் படையில் சேர்வது. இரண்டாவது முகலாயப் பெரும்படையில் சேர்வது. இரண்டிலும் சேராமல் நீ நம் பூனா பகுதியிலேயே இருந்து விடுவது உன் எதிர்காலத்தைக் குறுக்கி விடும். எத்தனையோ கோட்டைத் தலைவர்களின் பிள்ளைகள் அப்படியே அந்தப் பகுதிகளில் சிறப்பில்லாமல் வாழ்ந்து முடிவதைப் பார்த்திருக்கிறேன்…. அப்படி சிறுத்துப் போகும்  அளவு நீ எதிலும் எந்த விதத்திலும் குறைந்தவன் அல்ல… …..  …. நீ உன் முடிவைச் சொல்”

“தந்தையே பீஜாப்பூர் படையிலும், முகலாயர் படையிலும் இணைய எனக்கு விருப்பம் இல்லை” சிவாஜி உறுதியாகச் சொன்னான். சற்று தள்ளி அமர்ந்திருந்த ஜீஜாபாய் தந்தை மகனுக்கிடையே ஒரு பெரிய வாக்குவாதத்தைக் கேட்க வருத்தத்துடன் தயாரானாள்.

ஷாஹாஜி சற்றுக் கடுமையாகவே சொன்னார். “சிவாஜி இந்த முடிவில் பசு வதை இடம் பெறுவதை நான் எதிர்க்கிறேன்….”

“என் முடிவுக்கு பசுவதை காரணம் அல்ல தந்தையே” சிவாஜி அமைதியிழக்காமல் சொன்னான்.

“பின் என்ன காரணம்?”

“பீஜாப்பூர் இராஜ்ஜியம் இப்போதைய சுல்தான் ஆதில்ஷாவின் ஆட்சியில் சிறப்பாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பாக பீஜாப்பூர் இராஜ்ஜியம் சின்னா பின்னமாகவே போகும். அதனாலேயே அதில் இணைய எனக்கு விருப்பமில்லை….”

ஷாஹாஜி மட்டுமல்லாமல் ஜீஜாபாயும் இந்தப் பதிலில் திகைத்துப் போனாள். ஷாஹாஜி திகைப்புடனே கேட்டார். “ஏன் அப்படிச் சொல்கிறாய் மகனே”

“ஆதில்ஷா வீரத்துடன் அறிவும், சமயோசிதமும் கொண்டவர். அவர் ஆரோக்கியத்துடன் இருந்து ஆட்சி செய்யும் வரை தான் பீஜாப்பூர் ராஜ்ஜியம் சிறப்பிலிருக்கும். ஆனால் அவருக்குப் பின் இந்தச் சிறப்பும் வலிமையும் இருக்காது. அவரது மகன் அவருக்கு இணையானவன் அல்ல.…..”

ஷாஹாஜி திகைத்தார். ஆதில்ஷாவின் மகன் சிறுவன். சிவாஜியையும் விட பல வருடங்கள் இளையவன். “மகனே, அவன் சிறியவன். அவனைப் பற்றி இப்போதே முடிவு செய்ய முடியாது….”

“விளையும் பயிர் முளையிலேயே தெரியும் தந்தையே. இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். காத்திருந்து பாருங்கள். அழிந்து கொண்டிருக்கும் ராஜ்ஜியத்தில் பங்கு பெற நான் விரும்பவில்லை…..” சிவாஜி தெளிவாகச் சொன்னான்.

ஷாஹாஜி மகனின் புதிய பரிமாணத்தை முதல் முறையாக உணர்ந்தார். வந்த சில நாட்களில் பாரசீகக் குதிரைகளையும், பசுவதையையும் மட்டுமல்லாமல் ராஜ்ஜியத்தின் இளவரசனையும் கூட அவர் மகன் கூர்ந்து கவனித்திருக்கிறான்…. திகைப்பிலிருந்து மீண்டவராக அவர் கேட்டார். “சரி முகலாயப் படையில் சேர ஏன் மறுக்கிறாய். உன் தாய்வழிப் பாட்டனார் படை இன்றும் முகலாயர்களுடன் இணைந்தே இருக்கிறது. அவர்கள் செல்வத்துக்கும், செல்வாக்குக்கும் குறையில்லை. ஷாஜஹானின் மகன்கள் பலவீனமானவர்கள் இல்லை. அதனால் முகலாயர்களின் எதிர்காலத்தில் நீ சந்தேகம் கொள்ளத் தேவையில்லை”

“முகலாயர்களிடம் செல்வத்துக்கும், செல்வாக்குக்கும் குறையிருக்காது என்பது உண்மை தான் தந்தையே. ஆனால் அது அவர்களுக்கு அடங்கி இருக்கும் வரை மட்டுமே நமக்கு வாய்க்கும். தனித்துச் சுதந்திரமாய் இயங்க அவர்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள். அடங்கி, பணிந்து நடக்கவோ என்னால் முடியாது….”

ஷாஹாஜி கவலையுடன் சொன்னார். “அப்படியானால் சில மைல்கள் பரப்பில் இருக்கும் பூனா பகுதியில் சுதந்திரம் என்ற பெயரில் உன் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளப் போகிறாயா சிவாஜி?  அது கூட முழுமையாக நம்முடையது அல்லவே. அதை ஆண்டு அனுபவிக்கும் உரிமையைத் தான் ஆதில்ஷா தந்திருக்கிறாரே ஒழிய நமக்கே என்று எழுதிக் கொடுத்து விடவில்லை. நினைவிருக்கட்டும்…”   

சிவாஜி அசாதாரண உறுதியுடன் அமைதியாகச் சொன்னான். “தந்தையே அது நம் பூமி. என்றும் நம்முடையதாய் தான் இருக்கும்…”

ஷாஹாஜி அதிர்ச்சியுடன் தன் மகனைப் பார்த்தார். தாதாஜி கொண்டதேவ் சொன்னது சரிதான். இது விளையாட்டுச் சிறுவனின் வேடிக்கைப் பிரகடனமாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால் காலப்போக்கில் சரியாகி விடும் என்று எண்ணி விட்டிருப்பார்….. ஆதங்கத்துடன் அவர் கேட்டார். “மகனே அதை அனுமதிப்பார்களா? அப்படியே அனுமதித்தாலும் அது போதுமா?....”

“நம் பூமியை நாம் ஆள யார் அனுமதியும் தேவையில்லை தந்தையே. மராட்டியர்களான நம் அதிகாரம் அந்தப் பூமியோடு நின்று விடப்போவதில்லை தந்தையே. அது வளரும். வளர்ந்து கொண்டே போகும்”

அதிர்ச்சியின் எல்லைக்கே போன ஷாஹாஜி ஜீஜாபாயைப் பார்த்தார். அவளும் மகனின் அந்தப் பிரகடனத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகபாவனையிலேயே தெரிந்தது. ஆனால் அவருடைய அதிர்ச்சியும், பயமும் அவள் முகத்தில் இல்லை. அவள் முகம் பிரகாசித்தது.  ஷாஹாஜி இந்தத் தாய், மகன் போக்கில் பேரபாயத்தைக் கண்டார்.

ஷாஹாஜி மகன் சிவாஜியின் கைகளைப் பற்றிக் கொண்டார். ”மகனே உன் உடலில் ஓடும் வீரவம்சங்களின் இரத்தம் உன்னை இப்படிப் பேச வைக்கிறது, கனவு காண வைக்கிறது என்று உணர்கிறேன். அதில் பெருமையும் கொள்கிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களில் இருந்து உன் பார்வை என்றும் விலகிப் போய்விடக்கூடாது. அது என்றும் கசப்பையே நமக்குத் தரும். யோசித்துப் பார் தனியாக நீ என்ன செய்வாய்?”

“தந்தையே நான் தனியாக இருக்கிறேன் என்று யார் சொன்னது?”

ஷாஹாஜி பெருமூச்சு விட்டபடி சொன்னார். “மகனே சிறு படையையும், சில நூறு வீரர்களையும், சகாயாத்ரி மலைத்தொடர் இளைஞர்களையும் நம்பி நீ பீஜாப்பூர், முகலாய மலைகளோடு மோத முடியாது. முக்கியமாய் வடக்கில் முகலாயர்கள் அசுரபலத்துடன் இருக்கிறார்கள் சிவாஜி….”

சிவாஜி புன்னகையுடன் சொன்னான். “நான் தனியாக இல்லை என்று சொன்னது பூனாவில் இருக்கும், சிறுபடைகளையும், வீரர்களையும் வைத்து அல்ல தந்தையே. என்னுடன் இறைவன் இருக்கிறான் என்பதையே அப்படிச் சொன்னேன். நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் என்னுடன் இறைவனை உணர்ந்து வருகிறேன். இப்போது இருக்கும் படைகளும் வீரர்களும் பெருகவும் கூடும், விலகவும் கூடும். ஆனால் என்னிடமிருந்து இறைவனை யாரும் விலக்கி விட முடியாது. அவனையே அசைக்க முடியாத வழித்துணையாக நம்பி நான் என் பாதையைத் தீர்மானிக்கிறேன். ஆசி மட்டும் வழங்குங்கள் தந்தையே. எனக்கு அது போதும்.”

காலில் விழுந்து வணங்கிய இளைய மகனை ஷாஹாஜி பிரமிப்புடன் பார்த்தார். பின் மனைவியைப் பார்த்தார். ஜீஜாபாய் கண்களில் இருந்து பெருகிய நீரை புடவைத்தலைப்பால் துடைத்துக் கொண்டிருந்தாள்.  ஷாஹாஜியின் உள்ளத்தில் பலவித உணர்ச்சிகள் அலைமோதின. அவர் தந்தையும் தாயும் நினைவுக்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் இறைவன் மீது அசைக்க முடியாத பக்தி கொண்டவர்கள். அந்த அளவு ஷாஹாஜி பக்திமானாக இருக்கவில்லை. எல்லோரையும் போல இறைவனை வணங்குவார். அவ்வளவு தான். ’அதனால் தான் அரசர்கள் கைவிட்ட போது நான் பலமிழந்து போனேனோ? இவன் என்னைப் போல் அல்லாமல் அரசர்களையும், படைகளையும் நம்பாமல் இறைவனை மட்டும் நம்பிக் கனவு காண்கிறான். இவன் கனவுகள் பலிக்கலாம். பலிக்க வேண்டும்……’

ஷாஹாஜி மனதாரச் சொன்னார். ”மகனே இறைவனின் ஆசி இருப்பவருக்கு மற்றவர்களின் ஆசி அவசியமில்லை. ஆனாலும் நீ நம்பும் இறைவனை நானும் வணங்கி உனக்கு ஆசி வழங்குகிறேன். வெற்றி மேல் வெற்றி வந்து உன்னைச் சேரட்டும். நம் குலம் உன்னால் பெருமையடையட்டும்…”

தந்தையின் ஆசியில் மனம்நிறைந்து எழுந்த மகனைத் தழுவிய ஷாஹாஜி மகனிடம் சொன்னார். “எனக்கு ஒரே ஒரு வாக்கு மட்டும் கொடு சிவாஜி. கடுங்கோபம் இருக்கும் இடத்தில் கடவுளும் கூட இருக்காமல் விலகி விடுவார் என்பதால் உன் நலனில் அக்கறையோடு கேட்கிறேன்.    உன் கோபத்தை இன்று நகர எல்லையில் காட்டியது போல் நீ இனி என்றும் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் காட்டக்கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடு….”

சிவாஜி ஒரு கணம் கண்களை மூடித் திறந்து சத்தியம் செய்தான். “என் தாய் மீது ஆணையாகச் சொல்கிறேன் தந்தையே. என்றும், எந்த சந்தர்ப்பத்திலும் விளைவுகளைக் கணக்கிடாமல் கோபத்தினால் நான் இனி செயல்பட மாட்டேன்…..”

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

 1. Sivaji's story is beautifully unfolding in front of our eyes. Great work sir.

  ReplyDelete
 2. சுஜாதாJune 4, 2018 at 6:42 PM

  தந்தையும் மகனும் பேசிக் கொள்வது மிக அருமை. பெற்றோர் பிள்ளைகள் கருத்து வித்தியாசப்படுவது அக்காலத்திலேயே நடந்து இருக்கிறது என்றால் இக்காலத்தில் சொல்ல வேண்டியதே இல்லை.

  ReplyDelete
 3. அருமையான, ஆக்கப்பூர்வமான விவாதம்.

  இன்றைய தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டிய தொடர்..

  ReplyDelete
 4. தந்தை மகனுக்கிடைய நடந்த விவாவதமும்....‌‌‌சிவாஜி தன் கொள்கையில் உறுதியாக இருந்து மாற்றுவது அருமை....

  சிவாஜி "என்னுடன் இறைவன் இருக்கிறான்"..என்று சொன்ன இடம் அட்டகாசம்...

  ReplyDelete
 5. மிக மிக அருமை. ஒரு தலைவனுக்கான குணங்களை மிக அருமையாக சிவாஜியின் வாயிலாக சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete