சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 11, 2018

சத்ரபதி – 24


ரண்டு நாட்கள் கழித்து ஜீஜாபாயும், சிவாஜியும் பூனாவுக்குக் கிளம்பினார்கள். அதற்கு முந்தைய நாள் சிவாஜி பீஜாப்பூர் அரண்மனைக்குச் சென்று ஆதில்ஷாவிடம் விடைபெற்றான். ஆதில்ஷா வியப்புடன் கேட்டார். “பீஜாப்பூர் போன்ற செழிப்பான நகரத்திலிருந்து அங்கு ஏன் செல்கிறாய் சிவாஜி. அங்கு உன்னைப் போன்ற இளைஞனுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?”

சிவாஜி நெருங்கிய நண்பர்கள் நினைவும், ஆசிரியர் நினைவும் தனக்கு நிறைய வருவதாகச் சொல்லிச் சமாளித்து அவரிடமிருந்து விடைபெற்றான். மீர் ஜும்லா போன்ற தந்தையின் நண்பர்களிடமும், அவனிடம் அன்பு பாராட்டிய மனிதர்களிடமும் சென்று அவர்களிடமும் விடைபெற்றான். கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே அவனை விட்டுப் பிரிவதில் வருத்தத்தை உணர்ந்தார்கள்.

ஷாஹாஜி அவர்கள் கிளம்புவதற்கு முந்தைய தினம் ஜீஜாபாயிடம் மனம்விட்டுப் பேசினார். “நாம் தான் கனவுகளைத் தொலைத்து விட்டோம், அவனிடமாவது கனவுகள் தங்கட்டும் என்று சொன்னாய் ஜீஜா. நானும் அதையே தான் அவனுக்காக ஆசைப்படுகிறேன். ஆனால் அவன் கனவுகளில் வாழ்க்கையைத் தொலைத்து விடாமல் கவனமாக நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உன் கண்காணிப்பில் அவன் இருக்கிறான் என்பதே என் ஒரே ஆசுவாசம்…. நான் அவனிடம் ’நீ என்ன செய்யப் போகிறாய்’ என்று விரிவாகக் கேட்கவில்லை. எதுவாக இருந்தாலும் அவன் கனவைப் போலவே அது பிரம்மாண்டமானதாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அது பிரம்மாண்டமானதாக இருக்கும் பட்சத்தில் அதே அளவு ஆபத்தானதாகவும் இருக்கும் என்பதும் நிச்சயம் தான். அதையெல்லாம் தெரிந்து கொண்டு ஜீரணிக்கும் சக்தி எனக்கில்லை. அதனாலேயே கேட்காமல் விட்டு விட்டேன். புதிதாகச் சிந்திக்கவும், புரட்சிகரமாகச் செயல்படவும் வேண்டிய வயதையும், மனநிலையையும் நான் என்றோ தாண்டி விட்டேன் ஜீஜா. நம் சாம்பாஜிக்கும் இயல்பாகவே பெரிய பெரிய கனவுகள் இல்லை. குழந்தை வெங்கோஜிக்கும் அப்படி இருக்கும் என்று தோன்றவில்லை. அதனால் நம் வம்சத்தில் சிவாஜியாவது உயரங்களை அடைய வேண்டும் என்று இரகசியமாய் நானும் ஆசைப்படுகிறேன். அவன் அப்படி உயரங்களை எட்டினால் உனக்கு இணையாகப் பேரானந்தம் அடையும் இன்னொரு ஜீவன் நானாகத் தான் இருப்பேன்…..”

ஷாஹாஜி சிறு மௌனத்திற்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார். “ஆனால் ஒரு உண்மையையும் நான் சொல்லியே ஆக வேண்டும். அவன் ஏதாவது புரட்சிகரமாக செயல்படும் பட்சத்தில் நான் எந்த வகையிலும் அவனுக்கு உதவ முடியாது. காரணம் எனக்கு வேறிரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் நலனை நான் அலட்சியப்படுத்திவிட முடியாது. ஆபத்தான சூழ்நிலையில் நான் அவர்களையும் இழுத்துவிட முடியாது. அதனால் அவன் ஆபத்தான செயல்களில் இறங்கும் போது அவனை மட்டுமே நம்பி இறங்க வேண்டி வரும். அவன் நம்பும் ஆண்டவன் அவனுக்கு உதவலாம். ஆனால் அவன் தந்தையான நான் தள்ளியே தான் இருப்பேன். இதை அவன் புரிந்து கொள்வானோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் நீ புரிந்து கொள்வாய் என்று நான் நம்புகிறேன். அவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்ற நான்…..” ஷாஹாஜி லேசாகக் கண்கலங்கி, பேச முடியாமல் சிறிது தயங்கி, பின் தொடர்ந்தார். ”அவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்ற நான் இதை அவனிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். ஒவ்வொரு செயலிலும் அவனுடன் துணை நிற்க வேண்டியவன் தான் நான்…. ஆனால் வேறு இரண்டு பிள்ளைகளையும் பெற்றதால் விலகி நின்று அவர்களைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் நிற்கிறேன். என்றாவது ஒரு நாள் அவன் இதுவிஷயமாக என்னைக் குறைகூறினால் நான் மன்னிப்பு முன்னதாகவே கேட்டிருக்கிறேன் என்று நீ அவனுக்குத் தெரிவிக்க வேண்டும் ஜீஜா…”

ஷாஹாஜி உடைந்து போய் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு தன் துக்கத்தை மறைக்க முயற்சி செய்த போது ஜீஜாபாயும் கண்கலங்கினாள். அவர் கூறிய யதார்த்த நிலைகளை அவளும் உணர்ந்தே இருந்தாள். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் போது வாழ்வும் சாவும் உன்னோடு என்று பெற்றவர்கள் ஒரே பிள்ளையின் பின் நின்றுவிட முடியாது……

ஜீஜாபாய் கரகரத்த குரலில் சொன்னாள். “உங்கள் பிள்ளை உங்கள் மீது என்றுமே குறை சொல்ல மாட்டான். கவலைப்படாதீர்கள். தன் நிலைக்கும், தன் சூழலுக்கும் அவன் என்றுமே யாரையுமே குறை சொன்னதில்லை. நம் இருவரையும் பிரிந்து சத்யஜித்துடன் சகாயாத்திரி மலையில் கடுமையான சூழல்களில் வாழ்ந்த போது கூட சிறு பிள்ளையானாலும் அவன் ஒரு முறை கூட முகம் கூடச் சுளித்ததில்லை என்று சத்யஜித் என்னிடம் கூறினான். அறியாத பருவத்திலும் கூட அந்தத் திடமனநிலையை அவனுக்கு இறைவன் அளித்திருக்கிறார்…..”

அவன் காணும் கனவுகளுக்கு இன்னும் ஆயிரம் மடங்கு திடமனநிலை தேவைப்படும் என்று ஷாஹாஜி மனதினுள் எண்ணிக் கொண்டார். மறுநாள் மகன் அவரை வணங்கி விடைபெற்ற போது அவரால் எதுவும் பேச முடியவில்லை. கனத்த மனம் வாயிற்குப் பூட்டுப் போட்டது. சாம்பாஜி நகர எல்லை வரை சென்று தாயையும், தம்பியையும் விட்டு வரக் கிளம்பினான். அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற ஷாஹாஜிக்கு இனி எப்போதும் அவர்கள் நால்வரும் ஒரு குடும்பமாக ஒரு கூரையின் கீழ் வாழ வாய்ப்பில்லை என்று உள்ளுணர்வு சொன்னது. சோகம் மனதில் படர ஆரம்பித்தது.

சாம்பாஜி திரும்பி வந்த போது அவர் இருந்த நிலை கண்டு பாசத்துடன் அருகில் அமர்ந்தான். “தம்பிக்காகக் கவலைப்படுகிறீர்களா தந்தையே?”

அவர் மெல்லத் தலையசைத்தார். “அவன் புத்திசாலி தந்தையே. அவன் எதையும் சமாளிப்பான்” என்று சாம்பாஜி அவருக்குத் தைரியம் சொன்னான். ஷாஹாஜி தனக்கு மிகவும் பிரியமான மகனைப் பார்த்துச் சொன்னார். “அவன் திறமைகளைப் பற்றி எனக்குச் சந்தேகம் இல்லை சாம்பாஜி. ஆனால் எதற்கும் விதி ஒத்துழைக்க வேண்டுமே என்று தான் கவலைப்படுகிறேன்….”


பூனா நோக்கிப் போகும் போது ஜீஜாபாயும் அதே கவலையில் ஆழ்ந்திருந்தாள். பெற்றோரின் கவலை சிவாஜிக்குச் சிறிதும் இருக்கவில்லை. ஆனால் அவன் வழிநெடுக மௌனமாயிருந்தான். பீஜாப்பூர் அவனுக்குப் பல பாடங்கள் நடத்தியிருந்தது. பல உண்மைகளை உணர்த்தியிருந்தது. அதையெல்லாம் மறந்து கிடைக்கக்கூடிய ஒரு சௌகரியமான எதிர்காலத்தை அவன் விரும்பவில்லை.   அவன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்து விட்டான். ஆனால் ஷாஹாஜியின் அறிவுரையை அவன் அலட்சியப்படுத்த விரும்பவில்லை. தயார்நிலையில் இல்லாமல் எந்த ஆபத்திலும் அவன் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. இனி என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்யலாம் என்கிற எண்ணங்களே பூனா சென்றடையும் வரை அவன் மனதை ஆக்கிரமித்திருந்தன.

தன் சிஷ்யனிடம் பெரிய மாற்றம் ஏதாவது தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்த தாதாஜி கொண்டதேவுக்கு வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை. அவர் சொன்னதைக் கேட்டு ஷாஹாஜி அவனுக்குக் கண்டிப்பாக அறிவுரை வழங்கியிருந்திருப்பார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அது அவர் சிஷ்யனை எந்த அளவு மாற்றியிருக்கிறது என்பதைத் தான் அறிய அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் அழுத்தக்காரனான அவர் மாணவன் அவரை எதையும் அறிய விடவில்லை. அவன் அதிக நேரத்தை நண்பர்களுடன் கழித்தான். அவர்களுடன் சகாயாத்ரி மலைத்தொடருக்கு அதிகம் போனான்….

நண்பர்கள் பீஜாப்பூரைப் பற்றிக் கேட்டார்கள். அவர்களிடம் தன் பீஜாப்பூர் அனுபவங்களை சிவாஜி சொன்னான். அவர்கள் அவன் சொன்னதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள். அவன் அங்கு தைரியமாகவும், சாமர்த்தியத்துடனும் நடந்து கொண்ட விதத்தில் பெருமிதம் கொண்டார்கள். அந்தச் சமயத்தில் தான் சிவாஜி ஒரு பேருண்மையை உணர்ந்தான். அவர்களில் யாரும் பசுவதைக்காக அவன் அளவு ரத்தம் கொதித்து விடவில்லை. அவர்களைப் பொறுத்த வரை அது நடக்கக் கூடாத நிகழ்வு, ஆனாலும் நடக்கிறது, அதற்கு வருத்தம் இருக்கிறது அவ்வளவு தான். பீஜாப்பூரில் அவன் அண்ணனும், தந்தையும் காட்டிய அதே மனோபாவம்…. மனிதர்களுக்கு எதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது கூட பெரும்பாலும் தெரிவதில்லை. இந்த மண்ணின் பிரச்னையே இது தான். உணர்வுநிலையில் கூட அழுத்தம் இல்லை, ஆழமில்லை….. பின் எப்படிச் செயல்நிலையில் அழுத்தமும் ஆழமும் அவர்களுக்கிருக்க முடியும்?

முதலில் ஆழமாய் உணர இவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும், எது சரி எது சரியல்ல என்பதில் சமரசம் செய்து கொள்ளாத ஞானம் வேண்டும். அது வரும் வரை எதுவும் இந்த மண்ணில் மாறாது…… இந்த ஞானோதயம்  சகாயாத்திரி மலைத்தொடரில் அன்று சிவாஜிக்குக் கிடைத்தது.

தன் நண்பர்களிடம் அவன் பீஜாப்பூரில் உணர்ந்த உணர்வுகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். அடிமைத்தனம் எத்தனை தான் செல்வச்செழிப்பைத் தந்தாலும் அது எத்தனை கேவலம் என்று தன் உடலும் உள்ளமும், கூசியதைச் சொல்ல ஆரம்பித்தான். நம் சொந்த மண்ணில் அடுத்தவரைப் பயந்தும், அனுசரித்தும் வாழ்வது எத்தனை அவலம் என்று சொல்ல ஆரம்பித்தான்….. அவன் சொற்களில் வலிமை இருந்தது. அவன் சொன்ன விதம் நாடி நரம்புகளைத் துடிக்கச் செய்தது. அடிமைத்தனத்தின் கேவலத்தை அவர்களின் ஒவ்வொரு அணுவிலும் அவன் உணரச் செய்தான். முடிவில் ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற பெருநெருப்பை அவர்களின் உள்ளத்தில் பற்ற வைத்தான்.

“இதற்கு என்ன தீர்வு சிவாஜி?” என்று அவர்கள் கண்களில் அக்னி தெரியக் கேட்டார்கள்.

சிவாஜி சொன்னான். “சுயராஜ்ஜியம். நம்மை நாமே ஆள வேண்டும்”    

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Feelings of Shivaji are wonderfully picturized in your writings. Hats off sir!

    ReplyDelete
  2. சுஜாதாJune 11, 2018 at 6:32 PM

    சரித்திரத்தில் சம்பவங்களை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த உணர்வுகளைக் கொண்டு வருவது தான் சிறப்பு. உங்கள் எழுத்தில் அந்த உணர்வுகளை நாங்களும் உணர்கிறோம்.

    ReplyDelete
  3. ஷாஹாஜியின் உண்ரவுகளை கண்முன்னே கொண்டுவந்து எங்களையும் வருத்தபட வைத்து விட்டீர்கள் ஐயா... சிவாஜி உணர வைக்கும் விதம் அருமை...

    ReplyDelete
  4. அன்றைக்கு மக்கள் எந்த மாதிரியான உணர்வுகளும் , உத்வேகமும் கொண்டிருக்கவேண்டுமென்று சிவாஜி ஆதங்கமடைந்தாரோ ... அதே சூழல் தான் இன்றைக்கும் நிலவுகிறது ... இஃது ஒரு துரதிர்ஷ்டம் வாய்ந்த சூழல் தான்...

    ReplyDelete
  5. I second all the four comments seen above. You have brought out nicely the feelings of shivaji as to how a freedom fighter or rebel would feel.

    ReplyDelete
  6. மேலும் பல சரித்திர நாவல்களை எழுதுங்கள் சார்

    ReplyDelete