சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, February 7, 2018

இறைவனை அடையும் வழிகள்!


கீதை காட்டும் பாதை 49

றைவனை அடைவது என்பது இறந்தவுடன் வைகுண்டம் போய் சேர்வதல்ல. வாழும் போதே இறைநிலையுடன் வாழ்வது. இறைவனுடன் ஐக்கியமாகி இறைத்துளியாகி வாழ்வது. இந்த நிலையில் சாதாரண மனிதர்களின் சங்கடங்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லை. துக்கங்கள் இல்லை. அப்படியே இருப்பது போல வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றினாலும் உள்ளே துளியளவும் பாதிக்கப்பட்டு விடாமல் சச்சிதானந்த நிலையுடன் வாழ்க்கையை நகர்த்தும் நிலை.

இப்படிப்பட்ட நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார்:

அர்ஜுனா! யார் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பித்து, என்னையே குறிக்கோளாகக் கொண்டு வேறெந்த நினைவுமின்றி என்னைத் தியானம் செய்து உபாசிக்கிறார்களோ அப்படி என்னிடமே மனதை ஈடுபடுத்தியவர்களை ஜனனம், மரணம் என்ற பிறவிப் பெருங்கடலிலிருந்து கரைசேர்த்து விடுவேன்.

உன் மனதை என்னிடமே வைத்து விடு. உன் புத்தியை என்னிடமே செலுத்தி விடு. அதற்குப் பிறகு நீ என்னிடமே தங்கி விடுவாய். இதில் சந்தேகமில்லை.

மனம், புத்தி, இரண்டும் இறைமயமானால் செயலும் இறைத் தன்மையோடு தான் இருக்கும்.  வேறெந்த நினைவுகளும் உள்ளே நுழையாமல் இருந்தால், அவன் நினைவாகவே இருக்கவும் முடிந்தால் அது உச்சக்கட்ட ஆன்மீக நிலை. அந்த நிலையில் பிறக்கும் கர்மங்களில் தனிமனிதனின் மனக்கசடுகள் இருக்க வாய்ப்பில்லை. அவனுடைய தனி லாப நஷ்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. கர்மங்களும் இறைவனைச் சார்ந்தவை. இறைவனே குறிக்கோள். இறைநிலையே குறிக்கோள் என்ற நிலையில் வாழ்பவனை இருள்சேர் இருவினையும் சேர வாய்ப்பில்லை. அதனால் பிறப்பு இறப்பு என்ற பந்தத்திலிருந்து ஒருவன் விடுபடுகிறான். இறைவனிடமே, இறைநிலையிலேயே மரணம் வரையில் மட்டுமல்ல, மரணத்திற்கப்பாலும் தங்கி விடுவான். அதனால் இதில் சந்தேகம் தேவையில்லை என்கிறார் பகவான்.

ஆனால் மனதை அப்படி இறைவனிடமே நிலைநிறுத்துவது எல்லோருக்கும் முடிகிற காரியமா என்ன! ஒரு நிமிடம் தியானத்தில் அமர்ந்தால் ஓராயிரம் வேறு எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கிறதே என்ன செய்ய? அப்படியானால் இறைவனை அடையவே முடியாதா?

முடியும் என்கிற பகவான் இப்படிச் சொல்கிறார்:

அப்படி ஒரு வேளை உன் மனதை என்னிடமே நிலை நிறுத்த முடியா விடில் அப்யாச யோகம் என்ற பயிற்சி முறைகளினால் என்னை அடைய விரும்புவாயாக.

அத்தகைய அப்யாச யோகமும் செய்ய முடியவில்லை என்றால் எனக்காகக் கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவாயாக. எனக்காகக் கர்மங்களைச் செய்தாலும் சித்தியடையவாய்.

அதையும் செய்ய முடியா விட்டால் நான் சொல்லிய கர்மயோக முறையைப் பின்பற்றி மனதைக் கட்டுப்படுத்தி சகல கர்ம பலன்களையும் தியாகம் செய்.

அப்யாச யோகம் என்பது வழிபாட்டுப் பயிற்சிகளில் முழுமனதாக ஈடுபட்டு இறைநிலையை மனதில் இருத்திக் கொள்வது. திரும்பத்திரும்ப இறைவனின் திருநாமத்தை உச்சரித்தல், சேவித்தல், பூஜித்தல் போன்ற வழிபாட்டு முறைகளில் பக்தியுடன் ஈடுபடும் போது மனம் சுலபமாக இறைவனிடம் ஒட்டிக் கொள்ளும்.

அது முடியாவிட்டால் இறைவனின் பிரதிநிதியாக எல்லாக் கர்மங்களிலும் ஈடுபடச் சொல்கிறார்.  எதுவுமே நமக்காகச் செய்வதில்லை, எந்த லாப நஷ்டமுமே தனிப்பட்ட முறையில் நமக்கில்லை இறைவனுக்காக, அவன் பிரதிநிதியாக இயங்குகிறோம் என்றால் நான் என்பது மறைந்து போய் நம்மில் இறை குடிகொண்டு விடும்.

அதுவும் முடியவில்லை என்றால் எந்தப் பலனிலும் பற்று வைக்காமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் கர்ம யோக முறைப்படி நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைச் செய்ய பகவான் உபதேசிக்கிறார். அப்படிச் செய்யும் போதும் இறைநிலையில் இருப்பவர்களாகி விடுவோம்.

ஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருக்கும் இந்த வழிகளுக்கு இராமாயணத்தின் கதாபாத்திரங்களையே உதாரணமாகச் சொல்லலாம்.

இறைவனையே குறிக்கோளாக வைத்துக் கொண்டு, மனம், புத்தி எல்லாம் அவனிடமே வைத்து வாழும் நிலைக்கு இலக்குவன் ஒரு நல்ல உதாரணம். அவனுக்கென்று எதுவும் இல்லை. எல்லாம் இராமனே என்று வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இராமனைப் பின் தொடர்ந்து நிழலாக வாழ்ந்தவன் அவன்.

இறைவனுக்காக செயல் புரிபவன், இறைவனின் பிரதிநிதியாகச் செயல்புரிபவன் என்கிற நிலைக்கு பரதன் சிறந்த உதாரணம். இராமன் கட்டளைப்படி இராமனுக்காக ஆட்சி செய்து வாழ்ந்தவன் பரதன். இராமனின் பாதுகையை அரியணையில் வைத்து, இராமனின் பெயரில் ஆட்சி செய்தவன். அரசன் அவனல்ல, ஆட்சியும் அவனுடையதல்ல. எல்லாம் இராமனுக்காக என்று வாழ்ந்தவன் அவன்.

விருப்பு வெறுப்பு இல்லாமல், பலனில் பற்று வைக்காமல் கடமையைச் செய்து வாழும் நிலைக்கு ஜனகரை உதாரணம் சொல்லலாம். இங்கு இறைவன் கூடக் கணக்கில் இல்லை. விதிக்கப்பட்டிருக்கும் கடமையை, விருப்பு வெறுப்பின்றி சரியாக, சிறப்பாக, தர்மநெறிப்படி ஆட்சி செய்த ஜனகரும் இராமனைச் சாராமல் இருந்த போதிலும் இறைநிலை பெற்றவர் தான்.

பகவான் சொன்ன இந்த வழிகளை ஆராய்ந்தோமானால் அவை “நான், எனது” என்ற எண்ணம் மேலோங்காத நிலைகள் என்பது புரியும். நான், எனது, என்ற நிலைகள் இருக்கும் வரை தனிமனிதனே வெளிப்படுவான். அவை போய் விடும் போது தவறுகளுக்கோ, குறைபாடுகளுக்கோ வாய்ப்பில்லை. இறைவனை நினைத்தாலும் சரி, நினைக்கா விட்டாலும் சரி, அந்தத் தூய நிலையில் இறைவன் குடி கொண்டிருப்பான், இறைநிலை கைகூடும் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

பாதை நீளும்…..

என்.கணேசன்

4 comments:

  1. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்..‌‌ இந்த தொடர்‌ வருவது மகிழ்ச்சி...

    ReplyDelete
  2. Hi Ganeshan,
    I am also one of the big follower for your writings. I am going to share something which i red and heard.

    ReplyDelete
  3. Recently got a chance to hear about dr shalini speech in youtube.
    She was clearly explaining about religion. She mentioned based on time nature created so many things to survey in life. God concept also like that only.
    if you have time please listen below one and share your comments
    https://www.youtube.com/watch?v=KmXxEJy8-Jc

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு

    ReplyDelete