என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, February 8, 2018

இருவேறு உலகம் - 69

ராஜதுரையின் மரணம் செந்தில்நாதனின் விசாரணை வேலையைக் கேள்விக்குறியாக்கியது. முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருந்த சிறப்பு காவல்துறைப் பிரிவில் தான் இந்த க்ரிஷ் வழக்குக்காக அவர் நியமிக்கப் பட்டிருந்தார். நடந்ததை எல்லாம் அவர் விளக்கி ராஜதுரையிடம் தெரிவித்த போது அவர் சங்கரமணி மற்றும் மாணிக்கம் பற்றி கடுமையான வார்த்தைகள் சொல்லியிருக்கா விட்டாலும் தொடர்ந்து சந்தேகப்படும்படி தோன்றும் எல்லாவற்றையும் கண்காணித்து வரும்படி சொல்லி இருந்தார். புதிதாக இந்த வழக்கில் எதை அறிய நேர்ந்தாலும் உடனடியாக அவர் கவனத்திற்குக் கொண்டு வரும்படி சொல்லியிருந்தார். மாணிக்கம் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் அதைத் தொடர விடமாட்டார் என்பதை செந்தில்நாதன் அறிவார். வேலை இடமாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்பதும் அது நல்ல சௌகரியமான இடமாற்றமாக இருக்காது என்பதும் அவருக்குத் தெரிந்தே இருந்தது. அந்த இடமாற்ற ஆணைக்காக அவர் காத்துக் கொண்டே இருந்தார்.

அவர் எதிர்பார்த்தபடி முதலமைச்சரின் உதவியாளர் அவருக்குப் போன் செய்து முதலமைச்சர் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் முதலமைச்சர் அலுவலகத்திற்குப் பதினோரு மணிக்கு வரச் சொன்னதாகவும் தெரிவித்தார். பதினோரு மணிக்குச் சென்ற செந்தில்நாதனுக்கு நீண்ட நேரம் மாணிக்கத்தைச் சந்திக்க முடியவில்லை. முதலமைச்சர் முக்கிய ஆலோசனை ஒன்றில் இருப்பதாகவும் காத்திருக்கும்படியும் உதவியாளர் சொன்னார். பதினொன்றரை மணிக்கு சங்கரமணி அதிகார மிடுக்குடன் அங்கே வந்தார். வெளியே அமர்ந்திருந்த செந்தில்நாதனைக் கவனிக்காத மாதிரியே நடித்து ஆனால் ஒன்றரைக் கண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே போனார். இதெல்லாம் செந்தில்நாதன் தன் சர்வீஸில் எத்தனையோ முறை அனுபவப்பட்ட விஷயம் என்பதால் அவர் பெரிதாக பாதிக்கப்பட்டு விடவில்லை.

பன்னிரண்டரை மணிக்கு உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. உள்ளே போன செந்தில்நாதன் முதலமைச்சருக்கு சல்யூட் அடித்து விட்டு நின்றார். பக்கவாட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டபடி அதிகார தோரணையில் அமர்ந்திருந்த சங்கரமணியை அவரும் கண்டு கொள்ளவில்லை.

மாணிக்கம் இயல்பாக இருந்தார். செந்தில்நாதனை எதிரே உட்காரச் சைகை செய்த அவர் மரியாதை தொனியிலேயே பேசினார். ”அண்ணனுக்கு உங்கள் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்துச்சு. அதனால தான் நாங்க க்ரிஷ் காணாம போனப்ப கண்டுபிடிக்க யாரையாவது திறமையான ஆளைப் போடணும்னு சொன்னப்ப அவர் உங்களைத் தேர்ந்தெடுத்தார். நல்ல வேளையா க்ரிஷ் ஆபத்தில்லாம வந்துட்டதால இதுல உங்களுக்கு வேலையில்லாமப் போயிடுச்சு. அதனால உங்களை போலீஸ் பயிற்சித்துறைக்கு மாத்தியிருக்கேன். புதுசா வர்ற போலீஸ்காரங்களுக்கு உங்க மாதிரி ஒரு முன்மாதிரி பயிற்சி தர்றது சிறப்பா இருக்கும்னு நினைக்கிறேன்…..” முதலிலேயே உறையில் போட்டு வைத்திருந்த ஆணையை மாணிக்கம் நீட்டினார்.

அலங்கார வார்த்தைகளில் மகிழ்ச்சியடையும் மனநிலையில் இல்லாத செந்தில்நாதன், அதை வாங்கிக் கொண்டு, உதட்டளவில் “நன்றி சார்” என்று சொன்னார். இடமாற்ற ஆணையை நேரில் அழைத்துத் தர வேண்டிய அவசியமில்லை என்ற போதும் இந்த ஆள் ஏன் வரவழைத்து, ஒன்றரை மணி நேரம் காக்க வைத்துத் தருகிறார் என்பது செந்தில்நாதனுக்குப் புரியவில்லை…. புரியாததும் நல்லதே என்று நினைத்தார். அரசியல்வாதிகளைப் புரிந்து கொண்டால் பைத்தியம் பிடித்து விடும்.

சங்கரமணி எகத்தாளத் தொனியில் சொன்னார். “சொல்லித்தர்றதை ஒழுங்கா சொல்லிக் கொடு. நடுராத்திரில எவனோ வெள்ளைமுடிக்காரனப் பார்த்தான்னு சொன்னவுடன அதை நானுன்னு முடிவு பண்ணிட்டு அவசரமா என்னை விசாரிக்க வந்தியே அப்படியெல்லாம் போலீஸ்காரன் அவசரப்பட்டு தப்பா முடிவு செஞ்சுடக்கூடாதுங்கறதையும் சரியா சொல்லிக்கொடு”

மருமகன் முதலமைச்சர் ஆகி விட்ட கர்வத்தில், மருமகன் முன்னிலையில் ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசினால் செந்தில்நாதன் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு தான் போவார் என்று சங்கரமணி தப்புக்கணக்கு போட்டு விட்டார். செந்தில்நாதன் குனிந்து போய் பழகாதவர். அவர் சங்கரமணியைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே சொன்னார். “அன்னைக்கு ராத்திரி அந்த ஆள் பார்த்தது உங்களைத்தான். எனக்கு அதில் சந்தேகமே இல்லை… சரியா தான் முடிவுக்கு வந்தேன்…..”

சங்கரமணி இதை எதிர்பார்க்கவில்லை. ’ஒன்றரை மணி நேரம் நாய் போல் காத்திருந்தும் இவனுக்குப் புத்தி வரலையே, டம்மி போஸ்ட்டுக்கு மாத்தினது மட்டும் போதாது. தூர எங்கயாவது தூக்கியடிச்சிருக்கணும்’ என்று கொதித்தார். அவர் முன்னாலேயே சிறிதும் தயக்கம் இல்லாமல் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் செந்தில்நாதன் பேசியது மாணிக்கத்தையும் கோபப்படுத்தியது. ஆனால் மாமன் மேல் தான் கூடுதல் கோபம் வந்தது. ’தடி கொடுத்து அடி வாங்க வேண்டிய அவசியம் தான் இவருக்கு என்ன?’

சங்கரமணி எகத்தாளமாகவே சொன்னார். “நல்ல வேளை நீ கஷ்டப்பட்டு தப்பா கண்டுபிடிச்சதைக் கேட்க ஆளேயில்லை…..”

“ஏன் இல்லை. போய்ச் சொன்னா உதயும், கமலக்கண்ணனும் கேட்பாங்க” செந்தில்நாதன் அமைதியாகச் சொன்னார்.

மாணிக்கம் பேரபாயத்தை உணர்ந்தார். மாமனை “கொஞ்சம் பேசாம இருங்க மாமா” என்று அதட்டி விட்டு செந்தில்நாதனிடம் அவர் சொன்னார். “யார் மனசுலயும் தப்பான ஒரு எண்ணத்தை சீக்கிரம் போட்டுடலாம். ஆனா அதை அந்த மனசுல இருந்து எடுக்கறது ரொம்பவே கஷ்டம்,  செந்தில்நாதன். அது உங்களை மாதிரி பொறுப்பான அதிகாரிக்குத் தெரியாததல்ல. அவர் சொல்றதை பொருட்படுத்தாதீங்க. அன்னைக்கு ராத்திரி அவர் அந்த இடத்துக்குப் போகலை. அது எனக்கு நல்லாத் தெரியும். இதோட இதை விட்டுடுங்க… உங்க புதிய பொறுப்பிலும் முத்திரை பதிக்க என் வாழ்த்துக்கள்”

”நன்றி சார்” என்ற செந்தில்நாதன் முதலமைச்சருக்கு சல்யூட் அடித்து விட்டு சங்கரமணியை அலட்சியப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.  சங்கரமணி கொதித்தபடி சொன்னார். “என்ன திமிர் பார்த்தியா அவனுக்கு?”

மாணிக்கம் சலிப்புடன் மாமனைக் கேட்டார். “மாமா இது தேவையா நமக்கு?”

சங்கரமணிக்கு மருமகன் தன்னை ஆதரிக்காதது வருத்தம் தந்தது. மாணிக்கம் சொன்னார். “மாமா நாம இக்கட்டான சூழ்நிலையில இருக்கோம். முதலமைச்சரா நான் ஆயிட்டாலும் ராஜதுரை மாதிரி சொந்தக் கால்ல என் நாற்காலி நிக்கல. நாம பணம் கொடுத்து வாங்கின ஆள்கள் எத்தனை நாள் அதோட திருப்திப்பட்டுட்டு உக்கார்ந்துக்குவாங்கன்னு தெரியல. அவனுக எப்பவுமே மதில் பூனைக தான். அடுத்ததா தேர்தல் வந்துதுன்னா மக்கள்லயும் எத்தனை பேரு நமக்கு ஓட்டுப் போடுவான், ஜெயிப்போமா, தோற்போமா எதுவும் தெரியல. இந்த நிலைமைல கமலக்கண்ணனையும், உதயும் பகைச்சுக்கறது புத்திசாலித்தனமில்ல. கமலக்கண்ணனையாவது சமாளிக்கலாம், அந்த உதய் பயல் இப்பவே கடுப்பா தான் இருக்கான். இந்த செந்தில்நாதன் எதாவது போய் போட்டுக் கொடுத்தா அப்பறம் நேரடியா மோத ஆரம்பிச்சுடுவான். கொஞ்சம் பொறுமையா இருங்க. நாம நம்மள ஸ்திரப்படுத்திட்டு அப்புறம் இவங்களை எல்லாம் கவனிச்சுக்கலாம்….”

சங்கரமணி பெருமூச்சு விட்டார். “நீ சொல்றதும் வாஸ்தவம் தான். ஆனா ஒன்னு இவனைப் பழி வாங்கலைன்னா இந்தக் கட்டை வேகாது சொல்லிட்டேன்….. எதுக்கும் இவன் மேல ஒரு கண்ணு எப்பவுமே வச்சிருக்கறது நல்லதுன்னு படுது”

மாணிக்கம் சொன்னார். “அதுக்கு நான் ஏற்பாடு முதல்லயே பண்ணிருக்கேன். இவர் போனையும், உதய் போனையும் கண்காணிப்புல வெக்கச் சொல்லிருக்கேன். ரெண்டு பேரும் போன்ல யார் கிட்ட என்ன பேசினாலும் நமக்குத் தெரியாம போகாது”

மருமகனின் முன் ஜாக்கிரதை திருப்தி  அளிக்க சங்கரமணி தன் அடுத்த கவலையைச் சொன்னார். “எனக்கு உன் மகன் முகத்தைப் பார்க்கச் சகிக்கல. எப்ப பார்த்தாலும் வாட்டமாவே இருக்கான்…..”

“அவனுக்கு நம்ம மாதிரி பல பிரச்னை இல்லை மாமா. அவனுக்கு ஒரே பிரச்ன க்ரிஷ் தான். க்ரிஷின் எதிரி ரொம்ப நாளைக்கு அவனை விட்டு வெக்க மாட்டான். க்ரிஷ் போயிட்டான்னா மணீஷோட பிரச்னை முடிஞ்சுதுன்னு அர்த்தம். அந்தப் பெண்ணை எப்படியும் சரிபண்ணிடலாம்…”


செந்தில்நாதன் தன் கீழ் வேலை செய்யும் போலீஸ்காரரின் செல்போனைக் கேட்டு வாங்கி உதயின் அடியாள் ஒருவனுக்குப் போன் செய்தார். அவர் முன்பு கைது செய்து வழக்கு பதிவு செய்த அடியாட்களில் அவன் முக்கியமானவன் என்பதால் அவன் செல்போன் எண் அவரிடம் இருந்தது.

“ஹலோ”

“முத்து. நான் செந்தில்நாதன் பேசறேன். உதய் கிட்ட போனைக் கொடு”

“சார் அண்ணன் தூங்கறார்”

“பரவாயில்லை எழுப்பு. இது முக்கியமான விஷயம்….”

“ஒரு நிமிஷம் சார்….”

இரண்டரை நிமிடம் கழித்து உதய் குரல் கேட்டது. “சொல்லுங்க சார். என்ன விஷயம்?”

“க்ரிஷ் வந்துட்டதால என்னை இந்தக் கேஸ்ல இருந்து எடுத்து ட்ரெய்னிங் காலேஜுக்கு மாத்திட்டாங்க. க்ரிஷுக்கு இருக்கற ஆபத்து முழுசும் நீங்கிடல. அன்னைக்கு உங்க எதிர்ல ப்ரேக் இல்லாம வந்த லாரி நம்பர்ப்ளேட் முதற்கொண்டு எல்லாம் போலி. அந்த டிரைவர் க்ளீனர் ரெண்டு பேரும் தலைமறைவாயிட்டாங்க. தெய்வாதீனமா தான் நீங்க எல்லாரும் தப்பிச்சிருக்கீங்க. குறி உங்க தம்பி தான்னு தெரியிது. ஆனாலும் எல்லாருமே எச்சரிக்கையா இருக்கறது நல்லது. நான் சொன்னது யாருக்கும் தெரிய வேண்டாம்….”

(தொடரும்)

என்.கணேசன்

9 comments:

 1. In this episode, three characters are depicted naturally and beautifully sir. Senthilnathan is rocking.

  ReplyDelete
 2. செந்தில்நாதன் அட்டகாசம்...கலக்குறாரு....
  சங்கரமணி...உண்மையிலே சகுனி போலவே செயல்படுறார்..

  ReplyDelete
 3. Replies
  1. Do you have any idea to introduce in Amazon kondle in the near future? Because it is not available in Sri Lanka. Any suggestions who can send outside of India?

   Delete
  2. At present we have no plan to introduce in amazon kindle. To buy outside India try marina books. link- http://www1.marinabooks.com/searchresult?book=&author=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&pub=&cat=&price1=&price2=&page=1&showby=list&sortby=

   Delete
  3. Or click the link at right side வெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல்கள் வாங்க

   Delete
 4. செந்தில் நாதனை இடமாற்றானாலும், தன் முக்கிய கண்டுபிடிப்பை உதயிடம்
  தெரிவித்து விட்டே செல்கிறார்.....superb narration G....

  ReplyDelete