சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 22, 2018

இருவேறு உலகம் -71


ன்னிடம் கூட கற்றுக் கொள்ள க்ரிஷ் போன்ற ஜீனியஸ் தயாராக இருந்தது சுரேஷுக்கு வேடிக்கையாகவும் இருந்தது. “சூரியனிடமிருந்து பெற வேண்டியதை மெழுகுவர்த்தியிடமிருந்து ஒருவன் பெற்று விட முடியாது க்ரிஷ்.என்று சொன்னான்.

“சூரியன் இல்லாத போது மெழுகுவர்த்தி உபயோகப்படும்என்று சொல்லி க்ரிஷ் சிரித்தான்.

சூரியன் இல்லாத போது தான். சூரியன் மறைந்திருக்கும் போது அல்ல” என்று சொன்னவன் வேலை இருப்பதாகச் சொல்லி மெல்ல நழுவினான்.

க்ரிஷ் வரவேற்பறையில் இருந்த அலமாரியில் நிறைய புத்தகங்கள் இருப்பதைக் கவனித்தான். எழுந்து போய் அந்தப் புத்தகங்களைப் பார்த்தான். தத்துவ புத்தகங்களில் இருந்து க்வாண்டம் தியரி புத்தகங்கள் வரை பல வகை புத்தகங்கள் அங்கு இருந்தன. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தவன் அந்த நூலில் மூழ்கிப் போனான். அரை மணி நேரம் கழித்து உள்ளே வந்த சுரேஷை அவன் கவனிக்கவில்லை.

இது வரை இங்கு காத்திருந்தவர்கள் அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பதும், சுரேஷைப் பார்ப்பதுமாக இருப்பார்கள். அல்லது மாஸ்டர் அறைக்கதவையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். பொறுமையிழந்து அங்குமிங்கும் நடப்பார்கள். போனில் யாரிடமாவது பேசுவார்கள். மறுபடி கடிகாரத்தைப் பார்ப்பார்கள்…. க்ரிஷ் தான் முதல் விதிவிலக்காக இருந்தான். 

மேலும் ஒரு மணி நேரம் கழித்து மாஸ்டர் தியானத்திலிருந்து வெளி வந்தது கூட அவனுக்குத் தெரியவில்லை. மாஸ்டர் புன்னகையுடன் “ஜே. க்ரிஷ்ணமூர்த்தி என்ன சொல்றார்” என்று கேட்ட போது தான் அவன் தலை நிமிர்ந்தான். அவரைப் பார்த்து புன்னகை செய்து விட்டு மீண்டும் புத்தகத்திற்குப் பார்வையைத் திருப்பி, படித்துக் கொண்டிருந்த வாக்கியத்தை சில வினாடிகளில் முடித்து விட்டு, புத்தகத்தை மடித்து எழுந்து சென்று அலமாரியில் அதே இடத்தில் வைத்து விட்டு அவன் அவரருகே உட்கார்ந்தான்.

“ஜே. க்ரிஷ்ணமூர்த்தி நாம உலகத்தைப் பார்க்கிற விதமே தப்புங்கறார்”

“அப்புறம் எப்படிப் பார்க்கணுமாம்?”

“பழைய அனுமானங்களை ஒதுக்கி வச்சுட்டு பார்க்கணுமாம். இல்லாட்டி புதுசான விஷயங்களைக் கூடப் பழைய விதங்களுக்கு மாத்தித் தப்பா புரிஞ்சுக்குவோம்கிறார். ஒவ்வொரு கணமும் புதுசா குழந்தையோட பார்வைல உலகத்தைப் பார்க்கச் சொல்றார்….”

மாஸ்டர் புன்னகையோடு அவனைப் பார்த்தார். காத்திருந்த சலிப்போ, பொறுமையின்மையோ சுத்தமாய் அவனிடம் தெரியவில்லை. “சரி என்ன திடீர்னு…?” என்று கேட்டார்.

“நான் எப்போல இருந்து உங்க கிட்ட கத்துக்க வரலாம்னு கேட்டுட்டு போக வந்தேன்”

“புதன்கிழமை காலைல நாலு மணிக்கு ஆரம்பிக்கலாம்….. இதைப் போன்ல கேட்டிருக்கலாமே”

“வேறயும் சிலது கேட்க வேண்டியிருந்துச்சு அதான் நேர்லயே வந்தேன்…. மாஸ்டர் நீங்க உங்க யோகசக்திகளை எல்லாம் யார் கிட்ட இருந்து கத்துகிட்டீங்க?”

“என் குரு கிட்ட இருந்து…..”

“ஒரே குரு கிட்ட இருந்தா, இல்லை பல குருமார்கள் கிட்ட இருந்தா?”

“ஒரே குரு கிட்ட இருந்து தான்.”

“உங்க குரு கிட்ட இருந்து உங்க அளவுக்கு அல்லது உங்களை விட அதிகமா கத்துகிட்ட சிஷ்யர் யாராவது இருக்காங்களா?”

மாஸ்டருக்கு உண்மையே சொல்ல வேண்டி வந்தது. “அப்படி சொல்ற அளவுக்கு கத்துகிட்டவங்கள நான் கவனிச்சதில்லை. எனக்கு என் ஞானம் மாத்திரம் தான் முக்கியமா இருந்தது. மத்தவங்களைக் கவனிக்கற பழக்கமோ ஒப்பிட்டுப் பார்க்கற அவசியமோ இருக்கல”

                                                  
“உங்களையும் விட அதிகமாய் கத்துகிட்ட சக்தி வாய்ந்த ஆள்கள் இருந்தாங்கன்னா அவங்க யார் கிட்ட இருந்து கத்துகிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?”

”இதுக்குப் பதில் சொல்றது கஷ்டம். எத்தனையோ பேர்கள் கிட்ட இருந்து கத்துகிட்டிருக்கலாம்….. ஏன் இதைக் கேட்கிறாய்?”

“ஒரு ஆளைக் கண்டுபிடிக்கணும். அந்த ஆள் ரொம்பவே சக்தி வாய்ந்தவன்கிறதைத் தவிர எனக்கு வேற தகவல் எதுவும் தெரியாது. அந்த ஆள் யார் கிட்ட அந்த யோக சக்திகள் படிச்சிருக்கலாம்னு தெரிஞ்சா அந்தக் குரு மூலமா அந்த ஆளைக் கண்டுபிடிக்கலாம்னு யோசிக்கிறேன். இது கொஞ்சம் சுத்தி வளைச்சுட்டு பார்க்கிற வழி தான். ஆனா வேற வழி தெரியாததால தான் கேட்கறேன்….. உங்க குரு மாதிரி அல்லது அவரை விடவும் அதிகமா தெரிஞ்சு கத்துத் தர்ற குருமார்கள் சுமார் எத்தனை பேர் இருப்பாங்க?’”

“எனக்குத் தெரிஞ்சு நம்ம நாட்டில் சுமார் நாலைந்து பேர் இருப்பாங்க”

“அவங்கள பத்திச் சொல்லுங்க மாஸ்டர் நான் குறிச்சிக்கறேன்…..”

அவன் எதிரியை அறிய வேண்டித்தான் கேட்கிறான் என்று அவருக்குப் புரிந்தது. எதிரி அவனுடைய ஏலியன் நண்பன் தான் என்பதை உறுதியாக நம்பிக் கொண்டிருந்த அவர் அவனுடைய முயற்சி வீண் முயற்சி என்று தெரிவிக்க நினைத்தார். அவர் எப்படி எதிரி அவன் ஏலியன் நண்பன் என்று உறுதியாக நம்புகிறாரோ அதே போல் அவன் எதிரி வேறு யாரோ என்று உறுதியாக நம்புகிறான். அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள மாட்டான் என்பது புரிந்ததால் அவன் திருப்திக்கு, கேட்டதற்கான பதிலைச் சொல்லி விட நினைத்தார்.

“மவுண்ட் அபுல ஒரு யோகி இருக்கார். ரிஷிகேஷ்ல ஒரு குரு ஆசிரமம் நடத்திட்டு வர்றார். மவுண்ட் கைலாஸ்ல ஒரு தவசி இருக்கார். தார்ப் பாலைவனத்துல ஒரு பக்கிரி இருக்கார். திருவண்ணாமலைல மலை மேல் ஒரு சித்தர் சுத்திகிட்டிருக்கார். இவங்க எல்லாம் எனக்குத் தெரிஞ்சு நிறைய சக்திகள் படைச்சவங்க, அதை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறவங்க”

“அவங்கள சந்திக்க விலாசம் ஏதாவது தர முடியுமா?”

“மவுண்ட் கைலாஸ்ல இருக்கிற தவசிக்கும், திருவண்ணாமலை மேல் இருக்கிற சித்தருக்கும் நிரந்தரமான இடம் கிடையாது. சுத்திகிட்டே இருக்கறவங்க. தானா யார் கண்ணுக்கும் பட மாட்டாங்க. அவங்களா மனசு வெச்சா தான் கண்ணுக்கே தெரிவாங்க. பேசுவாங்க. மத்த மூணு பேரும் ஒரே இடத்துல தங்கி சிஷ்யர்களை ஏத்துக்கறவங்க. அவங்க விலாசம் சொல்றேன். எழுதிக்கோ”.

அவர் சொல்லச் சொல்ல அவன் எழுதிக் கொண்டான். பின் அந்தக் காகிதத்தை மடித்து சட்டைப் பையில் வைத்து விட்டுச் சொன்னான். “அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம்…”

“என்ன?”

“என் ஹரிணிக்கு உங்களை ஒரு தடவ பார்த்துப் பேசணுமாம்” சொல்லும் போதே அவன் குரல் மென்மையாகியது. ‘என் ஹரிணி’ என்று உரிமையோடும் காதலோடும் சொன்ன விதத்தைக் கவனித்த மாஸ்டர் புன்னகையை அடக்கிக் கொண்டார். “கூட்டிட்டு வாயேன்”

“அவளுக்கு நான் இல்லாமல் தனியா உங்களைப் பார்த்துப் பேசணுமாம்….”

“சரி நாளைக்கு காலைல பதினோரு மணிக்கு வரச் சொல்லு”

“நன்றி மாஸ்டர்….” என்றவன் சின்னத் தயக்கத்துடன் அவரைப் பார்த்தான்.

“இன்னும் என்ன என்பது போல அவர் அவனைப் பார்த்தார். அவன் தயக்கத்துடன் சொன்னான். “அவள் கொஞ்சம் வெளிப்படையாய் தைரியமாய் பேசற ரகம். சுத்தி வளைச்சிப் பேச மாட்டா. சரின்னு தோணினதை பட்டுன்னு உடைச்சி பேசறப்ப யார்கிட்ட பேசறோம்கிறது கூட சில சமயம் அவளுக்கு ஒரு பொருட்டா படாது. ஒருவேளை ஏதாவது தப்பா சொல்லிட்டா நீங்க எனக்காக அவளை மன்னிச்சிடணும்…..”

மாஸ்டருக்கு இப்போது புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. குறும்பாகச் சொன்னார் “சரி. அடிச்சா கூட கோவிச்சுக்க மாட்டேன்….. போதுமா”

“ஐயையோ அவ அப்படி மரியாதைக் குறைவா எல்லாம் நடந்துக்க மாட்டா….” என்று க்ரிஷ் வெகுளியாய் அவரிடம் அவசரமாய் சொன்ன போது அவர் வாய் விட்டுச் சிரித்தார்.


ர்ம மனிதன் எகிப்துக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் அத்தியாவசியம் என்று நினைத்தால் ஒழிய எந்த வேலைக்கும் நேரடியாகப் போவதில்லை. அவனுக்கு உலக நாடுகள் எங்கும் ஆட்கள் இருந்தார்கள். எல்லோரும் திறமையானவர்கள். தங்கள் வேலைகளைக் கச்சிதமாய் செய்யக்கூடியவர்கள். அவர்களுக்கு வேறெங்கும் கிடைக்க முடிந்த தொகையை விட மூன்று மடங்கு பணம் தருகிறான். அவனிடம் விசுவாசமும், வேலையில் கச்சிதத்தன்மையும் மட்டுமே அவன் எதிர்பார்த்தான். இந்த இரண்டுமே நூறு சதவீதம் இருக்கும் வரை அவன் அவர்கள் ராஜவாழ்க்கை வாழ்வதற்கான பணம் தருவான். இரண்டில் ஒன்றில் குறைபாடு வந்தாலும் மரணம் மட்டுமே அவர்களுக்கு அவனிடமிருந்து கிடைக்கும் கடைசிப் பரிசாக இருக்கும்…. அது அவனிடம் வேலை பார்க்கும் அனைவரும் நன்றாகவே அறிந்திருந்தார்கள். பணத்திலும், உயிரிலும் ஆசை இருந்ததால் மிகச்சரியாகவே நடந்து கொண்டார்கள்.

இப்போது போகும் வேலையையும் கச்சிதமாக எகிப்தில் உள்ள ஆள் செய்வான் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனால் சில முக்கியத் தகவல்கள் அவன் ஆட்களுக்குத் தெரிவதில் கூட அவனுக்கு விருப்பமில்லை. அதனால் தான் இந்த வேலைக்கு அவனே நேரில் போகிறான். அவன் சட்டைப் பையில் வாரணாசி காளி கோயிலில் இருந்து எடுத்த வரைபடம் பத்திரமாக இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Thrilling and thought provoking at the same time. Nice update.

    ReplyDelete
  2. சுதா கண்ணன்February 22, 2018 at 6:03 PM

    அன்பு கணேசன். தங்கள் நாவலை நேற்று தான் படித்து முடித்தேன். சுவாரசியமாக இருக்கிறது என்று அவசரப்பட்டு தங்கள் நாவலைப் புரட்டிக் கொண்டு போய் விட முடியாது. அவ்வளவு தகவல்களை அள்ளித்தந்திருக்கிறீர்கள். கடைசிவரை திக் திக் தான். வித்தியாசமான எதிர்பாராத முடிவு. அருமையான நாவல். நிதானமாக இன்னொரு முறை படிக்க வேண்டும். நன்றி.

    ReplyDelete
  3. க்ரிஷ் தன் எதிரி யார் என்று அறிய முற்படுகிறான்...ஹரிணி ,மாஸ்டர் சந்திப்பு முக்கியமானதாக இருக்குமா....?
    மர்ம மனிதன் எகிப்தில் என்ன அறிய செல்கிறான்,..? ஓரே மர்மாக இருக்கின்றது....

    ReplyDelete
  4. இப்ப தான் சூடு பிடிச்சிருக்கு ..,.

    ReplyDelete
  5. கிரிஷ் புத்தகத்த படிச்சி‌ முடித்த விதம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று....
    எகிப்து எதுக்கு மர்ம மனிதன் போறான்.? அவன் செயல் கூட மர்மமாகவே உள்ளது....
    ஹரிணி மாஸ்டர் சதிப்பு புதிய திருப்பமாக இருக்குமா..?

    ReplyDelete
  6. As usual nice episode

    ReplyDelete